கடுவெளிச்சித்தரும் சிங்கராஜ் சித்தரும்
J.K. SIVAN
ஒருமுறை பாண்டிச்சேரி சென்றபோது கடுவெளி சித்தர் இருந்த பீடம் ஒன்று மணக்குள விநாயகர் கோவில் பின்புறம் குளத்தை தாண்டி ஒரு மரத்தடி மேடைக்கு சென்றேன். அமைதியாக இருந்தது. வயதான ஒரு மரம். காற்று சுகமாக வீச சற்று நேரம் அந்த மேடையில் கண்மூடி தியானித்தேன். மனது குதூகலமாகியது.
அப்புறம் தான் ஆபத்தை வரவழைத்துக் கொண்டேன். எதிரே மணக்குள விநாயகர் கோவில் குளம். அதன் படிகளில் காலை வைத்து தண்ணீரில் ஒரு படி இறங்கினேன். முதலில் கால் வழுக்கவில்லை. குனிந்து வலது உள்ளங்கையில் ஜலம் எடுத்து ப்ரோக்ஷித்துக்கொண்டு திரும்பியபோது இடது கால் சற்று திசை மாறியது. படி ஓரத்தில் படர்ந்திருந்த பாசி பண்ணிய வேலை. ஒருவழியாக சுதாரித்துக்கொண்டு படியேறி வந்து வெளியே நடக்கும்போது தான் இடது பதம் தூக்கி ஆடும் சிவனானேன்.
ஒரு சில மாதங்கள் அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக வலியை பொறுத்துக்கொண்டு தான் நடமாட்டம். உட்கார எழுந்திருக்க கஷ்டம். முட்டிக்குள் பளக் பளக் கிலு கிலுப்பை வேறு.
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு சில மாதங்களில் சில நண்பர்கள் என்னை கோவிந்தபுரம் கும்பகோணம் அழைத்து சென்றார்கள். போகும் வழியில் ஆச்சாள் புரம் வந்தது. அங்கு என் கூட வந்த நண்பர் ஒரு சாமியார் மருத்துவ சக்தி வாய்ந்த சித்தராக இருக்கிறார். தரிசிக்கலாமா என்கிறார்
சரி என்றேன். எய்யலூர் என்ற கிராமம், ஆச்சாள்புரத்தை சேர்ந்தது. அணைக்கரை பாலத்தில் இருந்து 7 கி.மீ. தூரத்தில். அங்கே ஒரு சிறு குடிசை போன்ற ஆஸ்ரமம். உள்ளே நாராயணி அம்மன் சித்தர் 75வயதுக்காரர் சித்தர் தன்வந்தரி சிங்கராஜ் ஸ்வாமிகள் என்று அருகிலிருந்தோர் சொல்ல தருமபுர ஆதின மடாலய தம்பிரான் மாதிரி சடைமுடி, தாடி காவி தலைப்பாகையோடு அவர் என்னைப் பார்த்து சிரித்தார். பல நாள் பழகியவர்கள் போல் நாங்கள் இருவரும் மனதால் நினைத்தோம்.
என்னை அருகே அழைத்தார். விஷயம் எல்லாம் என்னைப் பற்றி கேட்டவர் உங்கள் காலில் என்ன ஆயிற்று என்று கேட்டதும் தான் இடது கால் வலி விருத்தாந்தம் சொன்னேன். என்னை அருகே அழைத்து மந்திரங்கள் ஏதோ சொல்லி ஒரு பத்து நிமிட நேரம் உருவி விட்டார். தடவி விட்டார். பலர் குணமடைந்திருக்கிறார்கள். காசு கேட்பதில்லை. நாம் கொடுக்க விரும்பும் காணிக்கையை அம்பாள் எதிரே தட்டில் போட்டுவிடலாம்.
பிறகு அவ்வளவாக இடது கால் முட்டியை நினைக்க நேரமில்லை. இப்போது காணோம். வருடம் ரெண்டுக்கு மேலாகி விட்டது. இன்று பழைய படம் ஒன்றை பார்த்தேன். அவருடன் இருந்த சில நிமிஷங்களை நினைவூட்டியது.
பிறகு வெளிநாட்டுக்கு யாரு கூட்டிப்போக சென்னை விமான நிலையம் வந்தபோது என்னைப் பார்க்க விரும்பி என் வீட்டுக்கு வந்தபோது நான் வானில் பறந்தேன்.
No comments:
Post a Comment