Monday, October 23, 2017

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிசாலி

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிசாலி ..
J.K. SIVAN ...
அவன் ஒரு பண ஆசை பிடித்த பிசாசு. லேவாதேவிக்காரன். வட்டியில் மற்றவரை வாட்டி எடுப்பவன். மனம் இடத்தில் ஒரு இரும்பு பெட்டி .அதில் மனத்திற்கு பதிலாக பணம் பணம் பணம். யாருக்காவது அவனை பிடிக்குமா? அவனுக்கு அந்தஊரில் இருந்த ஒரு நல்ல இளம் வியாபாரியை பிடிக்காது. காரணம். இளம் வியாபாரி நல்லவன் பணக்காரன். ஏழை எளியவர் கடன் கேட்டால் உதவுவான். அசலைக் கொடுத்தால் போதுமே. வட்டி வேண்டாம் என்பான். இளம் வியாபாரிக்கு ஒரு நண்பன். உயிரைக் கொடுக்கும் அன்பான உண்மை நண்பன்.வாழ்க்கையில் வியாபாரத்தில் நஷ்டம் வந்துவிட்டது.

''எனக்கு 3000 பொற்காசு கொடு நண்பா. ஒரு பணக்காரியை நான் நேசிக்கிறேன் அவளுக்கு நான் பொருத்தமான பணக்காரனாக காட்டிக்கொள்ளவேண்டும். கொஞ்சமாவது எனக்கு அந்தஸ்து இருக்கவேண்டாமா.?

இள வியாபாரியின் கப்பல்கள் இன்னும் கரை திரும்பவில்லை. அவை வந்தால் பொருள்களை விட்டு பணம் கையில் நிற்கும். இப்போது இல்லையே எப்படி உதவுவது?

லேவாதேவிக்காரன் ஞாபகம் வந்தது. நண்பனுக்கு உதவ 3000 பொற்காசுகள் கடன் கேட்டான். லேவாதேவி தயங்கினான்.

''என் கப்பல்கள் சிலநாளில் கரை சேரும். அதில் உள்ள பொருள்களை விற்று உன் பணம் நீ கேட்கும் வட்டியோடு திரும்பும் சந்தேகமா உனக்கு? என்றான் வியாபாரி.

''நீ தான் என்னை எப்போதும் கேலி செய்பவனாச்சே. வட்டி வாங்குபவன் என்று ஏசி கேலி செய்பவன். ஆகவே ஏதோ என்னிடம் விளையாடுகிறாயோ என்று பயந்தேன்.''

''இல்லை. என் நண்பனுக்கு உதவ தான் உன்னிடம் கடன் கேட்டு வந்திருக்கிறேன் தருவாயா இல்லையா சொல்?''

வட்டி உன்னிடம் வாங்க மாட்டேன். வா என்னுடைய வக்கீலிடம் போவோம். ஒரு வேடிக்கையான ஒப்பந்தம் செய்து இருவரும் கையெழுத்திடுவோம். அது போதும். அதன் படி உனக்கு கடன் தருகிறேன் சரியா ?" என்றான் லேவாதேவி. சரி என்று தலையாட்டினான் வியாபாரி.

வக்கீலிடம் சென்றார்கள். ஒப்பந்தத்தின் படி குறித்த காலத்தில் வியாபாரி லேவாதேவிக்கு அவனிடம் வாங்கிய 3000 பொற்காசுகளை திருப்பிதரவேண்டும். அப்படி கொடுக்க தவறினால். வியாபாரியின் உடலிலிருந்து ஏதாவது ஒரு பாகத்திலிருந்து ஒரு கிலோ சதையை மட்டும் வெட்டித்தந்தால் போதும். கடன் பைசலாகிவிடும்''

ஒப்பந்தந்தை படித்த வியாபாரி சிரித்தான். முட்டாள் இப்படியெல்லாமா புத்தி போகும் ''

''ஸ்நேகிதா, எனக்கு உதவ இதில் நீ கையெழுத்து விடவேண்டாம். உன் உயிருக்கே ஆபத்தான விஷயம் இது '' என தடுத்தான் நண்பன்.

''முட்டாளே, பயப்படாதே. அடுத்த வாரமே என் கப்பல்கள் வந்துவிடும் . பணத்தை இவன் முகத்தில் தூக்கி எறி வேன். பயப்படாதே. பணத்தை வாங்கிக்கொண்டு நீ போய் திருமணம் செய்துகொள்'' என்றான் நல்ல வியாபாரி.

கையெழுத்து சாட்சியோடு இட்டார்கள். பணம் கைமாறியது. நண்பனுக்கு சந்தோஷம். ''ஆஹா என் திருமணத்துக்கு எவ்வளவு நல்ல உள்ளத்தோடு தன் உயிரையே பணயம் வைத்து நண்பன் பண உதவி செய்தான்''.

நண்பன் ஊருக்கு பணத்தோடு போனான். சீர்கள் கொடுத்தான். பணக்கார பெண் அவனை மணந்தாள் .

''எது இவ்வளவு பணம் என்ற மனைவிக்கு விஷயம் சொன்னான் நண்பன். வியாபாரியின் நல்ல குணம் அந்த பெண்ணுக்கு பிடித்து அவன் மேல் தனி கௌரவம் வந்தது அவளுக்கு. புது மண தம்பதிகள் சந்தோஷமாக ஒரு சில நாட்களை ஒட்டிக்கொண்டிருந்தபோது ஒரு செயதியை ஒருவன் கொண்டுவந்தான்.

''அன்பு நண்பா, விதி விளையாடுகிறது என்பார்களே அது என் விஷயத்தில் நிஜமாகி விட்டது. நடுக்கடலில் பெரும் புயலில் என் கப்பல்கள் மூழ்கிவிட்டன. என் செல்வம் அத்தனையும் போய் விட்டது. ஒரே இரவில் நான் பிச்சைக்காரன். கடன்காரன். லேவாதேவிக்காரன் சொன்ன கெடு முடிந்துவிட்டது. என்னை சிறையில் அடை த்திருக்கிறார்கள். என் உடம்பில் ஒரு கிலோ சதை அறுத்து தர அவன் முறையிட்டு அதன் தீர்ப்பு ரெண்டு மூணு நாளில் நிறைவேறும். நான் பிழைப்பது குதிரைக் கொம்பு. நீ வரவேண்டாம். எனக்காக பிரார்த்தனை செய். அடுத்த ஜென்மத்தில் முடிந்தால் சந்திப்போம் ''

நண்பன் திகைத்தான். அப்போதே வேண்டாமென்று சொன்னேனே அவன் கேட்கவில்லையே. அலறினான். மனைவியுடன் ஓடிவந்தான். உண்மையான நேசம் கொண்ட மனம் ஏதாவது ஒரு வழியை காட்டும். நண்பனின் மனைவி நல்ல பெண். கெட்டிக்காரி. இரவும் பகலும் எந்த விதத்தில் கணவனின் இந்த நல்ல நண்பன் உயிரை காப்பது?. திரும்ப திரும்ப யோசித்தாள். கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தால் கேள்வியிலேயே பதில் தலை தூக்குமே.

லேவாதேவிக்காரனை சந்தித்து கெஞ்சினாள். கருணை காட்ட சொன்னாள். கல் நெஞ்சன் மசியவில்லை. கணவன் யார் யாராரிடமோ பணம் கேட்டு கடனை அடைக்க முயன்றான்.

''என் கடனை என் ஒப்பந்தப்படி தான் அடைக்க வேண்டும். வேறு யார் பணமும் எனக்கு வேண்டாம் '' என்றான் அந்த பிடிவாதக்காரன். வியாபாரி சாக வேண்டும் என்பதே அவன் எண்ணம் ஆரம்பம் முதல்.

மத்தியஸ்தம் எதுவும் வேண்டாம். ஒப்பந்தத்தை நிறைவேற்று ஒரு எழுதது விடாமல் என்று கத்தினான் லேவாதேவி.

நண்பன் மனைவி புத்திசாலி. அவளுக்கு ஒரு பொறி தட்டியது. ஒரு வக்கீலாக வேஷமணிந்து வாதாட வந்தாள் நீதி மன்றத்துக்கு.

''எல்லோரும் கேளுங்கள். கடன் கொடுத்தவர் அவர் கையெழுத்திட்ட ஒப்பந்தப்படி தான் கடன் பைசல் பண்ண வேண்டும். ஒரு கிலோ சதையை இந்த வியாபாரியின் உடம்பின் எந்த பாகத்திலாவது வெட்டி எடுக்க வேண்டும்'' வேறு எதற்கும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்கிறார்.

''ஆம் வியாபாரியின் இதயம் அருகே இருந்து வெட்டி ஒரு கிலோ சதையை கேட்கிறேன் கொடுங்கள்'' அது தான் பாக்கி கடனை தீர்க்க'' என்று கத்தினான் லேவாதேவி.

''ஆம் அது தான் சரி. பணம் தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டாரே '' என்றாள் அந்த வக்கீல் வேஷக்காரி.

''என்ன அய்யா பிரதிவாதி. நீங்கள் இதற்கு ஒப்புக்கொள்கிறீரா?''

வியாபாரி கண்களில் நீரோடு '' எனக்கு வேறு வழியில்லை. நான் சாவதற்கு தயார். என் சதையை வெட்டி எடுக்கட்டும். கடன் தீரட்டும்.'' என்றான் விரக்தியாக

கத்தியை நீட்டிக்கொண்டு, நீட்டிக்கொண்டு லேவாதேவி வந்துவிட்டான் ''வெட்ட. நேரமாகிறது. சீக்கிரம்'' என்றான்.

''அய்யா நீங்கள் இப்படி எல்லாம் அவரை வெட்ட கூடாது. ஒரு நல்ல அறுவை சிகிச்சை நிபுணரை கூட்டி வாருங்கள். கண்டபடி எல்லாம் ஒருவர் உடலை வெட்ட முடியாது. ரத்த சேதம் ரொம்ப ஆகுமே.'' என்றாள் வக்கீல் பெண்மணி

''ஆமாம் அவன் ரத்தம் கொட்டி சாகட்டுமே எனக்கென்ன'' என்றான் லேவாதேவி.

''அப்படி இல்லையே அப்பனே உன் ஒப்பந்தம். சரியாகப் படி ''

''ஏன் என் ஒப்பந்தத்தில் என்ன குறை?''

' நீ எழுதிக் கொடுத்து கேட்டிருப்பது ஒரு கிலோ சதையை மட்டும் ? சரியா ?'

''ஆமாம் . அதை தான் என் ஒப்பந்தம் சொல்கிறது.''

''இந்த நீதி மன்றத்தில் எல்லோர் முன்னிலையில் நீ ஒரு கிலோ சதையை மட்டும் வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.. அவன் ரத்தம் ஒரு சொட்டு கூட வீணாக கூடாது. அது உனக்கு சொந்தமில்லை. அதற்கு நீ நஷ்ட ஈடு எப்படி கொடுப்பாய்?''

எல்லோரும் சரியான தீர்ப்பு என்கிறார்கள். லேவாதேவி ஏமாற்றத்தில் தலை குனிந்தான்.

''சரி பணம் கொடுங்கள் நான் திருப்ப போகிறேன். ஒரு கிலோ சதை வேண்டாம் எனக்கு'' என்றான்.

''நீ பணம் கொடுக்கும்போது அது வேண்டாம். சதை மட்டும் தான் வேண்டும் என்றதால் பணம் கிடையாது போ''

என்கிறார் நீதிபதி. தலையை சொரிந்துகொண்டு விதியை நொந்துகொண்டு லேவாதேவி போகிறான்.

இது ஏதோ நாட்டுப்புற கதை இல்லை. மஹாகவி ஷேக்ஸ்பியர் எழுதிய வெனிஸ் வணிகன் கதை. வியாபாரி தான் அந்தோனியோ, நண்பன் பஸ்ஸானியோ, அவன் மனைவி போர்ஷியா. லேவாதேவி தான் ஷைலக். உலக மகா புகழ் கஞ்சன்.



இந்தியாவில் இப்போது கடன் கொடுத்தவர்கள் இன்னும் அவஸ்தைப்படுகிறார்கள். எத்தனை பாங்குகள் ''திரும்பி வாரா கடன்கள் '' எத்தனை சைபர்களோடு நமக்கு காட்டுகின்றன. வக்கீல்கள் நல்லவர்களாக அந்த பெண் போல் இல்லாமல் கடன் பெற்றவனை காப்பாற்றுவது தான் ஷேக்ஸ்பியருக்கு தெரியாத விஷயம். தெரிந்தால் வேறு மாதிரி ஒரு கதை எழுதியிருப்பாரோ?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...