Saturday, October 28, 2017

தாமோதர நெய் தீபம்

























தாமோதர நெய் தீபம் - J.K. SIVAN

கிரிகோரியன் காலண்டர் படி ஜனவரி பிப்ரவரி.... என 12 மாதங்களாக ஒரு வருஷத்தை பிரித்தது போல் விஷ்ணுவின் பேரில் பன்னிரண்டு மாதங்கள், கேசவ மாதவ தாமோதர என்று. 4.10.17 முதல் 3.11.17 வரை இந்த வருஷம் கிருஷ்ண காலண்டரில் தாமோதர மாதம். தாமோதர மாதத்தில் தான் கிருஷ்ணன் கோவர்தன மலையை இடது சுண்டுவிரலால் ஏழு நாட்கள் தூக்கி பிருந்தாவன குடிமக்களை காத்தான். குழந்தையாக அம்மா யசோதையிடம் வெண்ணை திருடிய விஷமத்துக்காக இடுப்பில் தாம்புக்கயிற்றால் (தாமம்: கயிறு, உதரம்: வயிறு) உரலோடு சேர்த்து கட்டப்பட்டான். இந்த மாதத்தில் நெய் தீபம் ஏற்றி செய்யவேண்டியது பெரிதாக ஒன்றும் இல்லை. மனம் அவனை நினைந்தவாறு நெய்த்தீபத்தை எதிரில் அவன் உரலில் கட்டப்பட்டு நிற்கும் தாமோதரன் படத்தில் அவன் பாதங்களுக்கு நான்கு தடவை, இடுப்பில் கயிறு கட்டப்பட்டிருப்பதில் ரெண்டு முறை , அவன் முகத்திற்கு மூன்று தடவை பிறகு மொத்தமாக 7 முறை சுற்றி காட்டிவிட்டு, மேலே தேவர்களுக்கு ஒரு தடவை தீபத்தை தூக்கி காட்டிவிட்டு வணங்கவேண்டியது. இதனால் பல ஜென்ம பாபங்கள் நீங்குவதாக குப்பு சாமி சுப்புசாமி சொல்லவில்லை. ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது. மகா ரிஷிகள் சொல்கிறார்கள். நம்மிடமே பணம் வாங்கிக்கொண்டு கசப்பு மருந்து கொடுக்கும் டாக்டரை நம்பும்போது நாராயணனை நம்பக்கூடாதா?

இன்றைய (28.10.17) ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா சங்க சார்பில் நம்பர் 20 முதல் பிரதானவீதி, ராம்நகர், நங்கநல்லூர், குருவாயூரப்பன் கோவில் எதிரே பக்தர்கள் கூடினோம். அனைவரும் நெய் தீபம் காட்டினார்கள். வழிபட்டார்கள். தாமோதர அஷ்டகம் சொன்னோம். தாமோதரனின் லீலைகளை சிறிது நேரம் பேசினோம். பிரசாதம் சாப்பிட்டோம் முடிந்தால் வீட்டுக்கும் கொண்டு போனோம். சுடசுட கேசரி, சர்க்கரை சுண்டல், கரம் சுண்டல். (வெங்காயம் கிடையாது ஸார் ).

ISKCON மடிப்பாக்கம் குழு ஸ்ரீ ஸ்ரீனிவாசன் குடும்பம் பங்கேற்றது. அவர் பாட எல்லோரும் பின் பாட்டு பாடி கிருஷ்ணனை போற்றி மகிழ்ந்தோம். எல்லோரும் நெய் தீபம் காட்டினோம். ஆர்த்தி காட்டினேன். ரெண்டு மணி நேரம் சந்தோஷமாக மனம் குளிர்ந்தது. ரோட்டரியன் சூரியநாராயணன் தம்பதிகள் எப்போதும் போல் உபசரித்து, இடம் அளித்து, பிரசாதங்கள் கொடுத்தார்கள் . சூரியநாராயணன் பொட்டுக்கள் எடுக்க தவறுவதில்லை. அவர் எடுத்த படங்கள் தான் பார்க்கிறீர்கள்.



இன்னும் சில நாள் 3.11.17 வரை இருக்கிறது பாபம் தொலைய விரும்புபவர்கள் ஒரு சுலப வழி உடனே பின்பற்றுங்கள். தாமோதரன் படத்தை பிடித்து பூஜை அறையில் கட்டிப்போட்டு நெய் தீபம் நான் மேலே சொல்லியவாறு காட்ட ஐந்து நிமிஷங்கள் ஆகாது. ஆனால் அந்த ஐந்து நிமிஷங்கள் இடுப்பில் கட்டப்பட்ட தாமோதரனை நினைக்க உங்கள் மனதை முதலில் கட்டிப்போட வேண்டும். டிவி த்யானம் நினைப்பு வேண்டாம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...