Friday, October 6, 2017

பார் போற்றும் பரமஹம்சர்



பார் போற்றும் பரமஹம்சர் - J.K. SIVAN

புனித யாத்திரை

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் அடிக்கடி புத்தர் தெய்வீகமானவர் அவர் உபதேசங்கள் எல்லாம் உபநிஷத் வாக்கியங்களாக இருக்கிறது என்பார். ஜைன மத தீர்த்தங்கரர்கள், சீக்கியர்களின் குருக்கள் தத்வம் எல்லாமே ஒன்று போல் இணைந்திருக்கிறது என்பார். மஹா வீரரை ஜனக மஹாராஜ ரிஷியைப் போன்றவர் என சொல்லி அவரது பதுமை ஒன்றை தனது அறையில் தக்ஷிணேஸ்வரத்தில் வைத்திருந்தார். எல்லா மத கோட்பாடுகளும் அவருக்கு அத்துபடியாகி விட்டது. அந்த அறையில் இயேசு நாதர் படம் தொங்கியது. அதற்கு மெழுகு வர்த்தி விடாமல் கொளுத்தி வணங்கினார்.

மதம் ஒரு பெரிய ஏரி . அதற்கு எத்தனையோ படித்துறைகள். ஒவ்வொன்றும் தான் வெவ்வேறு வழிபாட்டு வகைகள். ஒன்றையே வேறாக பார்ப்பது. ஒருவன் ஜலம் என்பதை மற்றவன் பானி , வாட்டர், என்கிறான் எல்லாம் ஒன்றே தான். வேறு பெயர் என்பதால் வேறாகிவிடுமா?

1867ல் ராமகிருஷ்ணர் கமர்புக்கூர் திரும்பும்போது கிராமத்தில் கிராமத்தில் பழைய இளம் வயது நண்பர்களையும் மற்ற கிராமத்தாரையும் பார்க்கிறார். அவர் திரும்பியதில் அனைவருக்கும் மகிழ்ச்சி என்றாலும் கல்கத்தா நகர வாழ்க்கை அவரை மாற்றிவிட்டதே என்று அதிசயித்தனர். அவர் மனைவி சாரதாவுக்கு வயது 14. அவருக்கு பணிவிடை செய்ய வந்தாள். அவளுக்கும் குருவாக அவர் உபதேசித்தார்.

1868 மாதுர் பாபுவோடு யாத்திரை. வடக்கே பல க்ஷேத்ரங்கள் சென்றார்கள். பல ஊர்களில் ஏழைகளின் துயரங்களை கண்ணால் கண்ட ராமகிருஷ்ணர் அவர்களோடு தங்கிவிடுவதாக சொல்கிறார். பரம ஏழைகளின் கடன்களை மாதுர் பாபுவின் உதவியோடு தீர்க்கிறார். ஜன சேவா ஜனார்த்தன சேவா என்று புரிய வைக்கிறார்.

கங்கையில் படகில் செல்லும்போது காசி எனும் சிவ க்ஷேத்ரம் அவரை காந்தமாக கவர்கிறது. எத்தனை யுகங்கள். எத்தனை ரிஷிகள், மஹான்கள் காலடி பட்ட இடம். எவ்வளவு புண்யம் பொங்கி வழியும் இடம்
எத்தனை கோடி ஜென்மங்கள் பாப விமோசனம் பெறும் வேதங்கள் போற்றும் இடம். மணிகர்ணிகா ஸ்மஸான கட்டத்தில் ராமகிருஷ்ணர் வெண்ணீறணிந்த ஜடாமகுட சிவ பெருமான் ஸ்மஸானத்தில் ஒவ்வொரு சடலத்தின் வலது காதிலும் மோக்ஷ மந்திரம் உபதேசிக்கும் தரிசனம் பெறுகிறார். அருகி அவரோடு இருக்கும் பார்வதி தேவி அந்த ஜீவனுக்கு பந்தங்களை விலக்கி கைலாச பதவி தருகிறதையும் பார்க்கிறார். நமக்கு நினைத்து பார்க்க கூட முடியாத அனுபவம் இல்லையா இது?

அந்த யாத்திரையில் தான் ராமகிருஷ்ணர் த்ரைலிங்க ஸ்வாமிகளை சந்திக்கிறார். இவரைபற்றி நான் குழந்தையானந்த ஸ்வாமிகள் என்று எழுதியிருந்தேனே, ஞாபகம் வருகிறதா?
அலஹாபாத் திரிவேணி சங்கமம் செல்கிறார். அங்கிருந்து மதுரா, பிருந்தாவனம், யமுனா நதி தீரம் எல்லாம் சென்று கோபியர்கள் கிருஷ்ணனை நேரில் கண்டு அனுபவித்த இன்பத்தை தானும் பெறுகிறார்.
கிருஷ்ணா எல்லாமே நீ இருந்த காலத்தில் இருந்ததை போலவே எனக்கு காண்கிறது ஆனால் உன்னை தான் காணவில்லை'' என்று ஆடுகிறார் பாடுகிறார்.

ஒரு ஆச்சர்யமான விஷயம். பிருந்தாவனத்தில் கங்காமாயி என்கிற அறுபது வயது முதிய கிருஷ்ண பக்தையை சந்தித்து வணங்குகிறார். கங்காமாயிக்கு அடிக்கடி தன்னை மறந்த இறைவனோடு ஒன்றிய நிலை, சமாதி நிலை, வரும். அவர் ராமகிருஷ்ணரை பார்த்தபோது இந்த நிலை அடைந்து ''ராமகிருஷ்ணா, நீ ராதையின் அவதாரம்'' என்கிறாள். அந்த இடத்தை விட்டு மனமின்றி திரும்புகிறார்.
பிரிந்தாவனத்திலிருந்து திரும்பும்போது ஒரு கைப்பிடி புனித மண் எடுத்து வருகிறார். தக்ஷிணேஸ்வரத்தில் தான் வசித்த பஞ்சவடி ஆஸ்ரமத்தில் அதை எங்கும் தெளிக்கிறார்.சிறிது புதைத்து வைக்கிறார். ''இனி இந்த பஞ்சவடி பிருந்தாவனம்'' என்று மகிழ்கிறார்.

1870ல் ஸ்ரீ சைதன்யர் அவதரித்த நாதியா கிராமம் செல்கிறார். படகு அந்த மணல் மிகுந்த நதிக்கரை அடைந்தபோது சைதன்யரையும் அவரோடு இணைபிரியாத நித்யானந்தரையும் மனக்கண்ணால் தரிசிக்கிறார். தங்க நிற அவர்கள் மேனி கண்ணில் பட்டதும் '' அதோ அதோ வந்துவிட்டார்கள் '' என்று உரக்க கத்துகிறார். ஒரு தங்கநிற ஒளி அந்த இருவர் மேனியிலிருந்து தன் உடலில் புகுவதை உணர்கிறார்.அடுத்த கணமே சமாதி நிலையடைகிறார்.



தொடரும்....

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...