Monday, October 23, 2017

பேசும் தெய்வம்: -

பேசும் தெய்வம்: - J.K. SIVAN

கடவுளை அறிவது எப்படி?

மகா பெரியவா என்னை பார்த்த பார்வையிலேயே வந்துட்டியா கேள்வியோடு? என்கிறமாதிரி தோணித்து.

ஆமாம் பெரியவா உங்களை விட்டா யாரு இதெல்லாம் சொல்லித்தருவா?

ஓஹோ!

பழம்பழுத்திருக்கிற மரத்திலே தானே அணில், பறவைகள் கும்பலாக சேரும். அது தான் நீங்கள். ஞானப் பழம் வேண்டுமானா உங்க கிட்டே தானே நான் வரணும்.

பெரியவா சரி என்ன கேக்கப்போறே. கேளேன்''.

பகவானை எப்படி அவர் இருக்கார்னு நினைச்சு பார்க்கறது?

பெ: ''ஒரு வீட்டைப் பார்த்தால் அதைக் கட்டியவன் என்று ஒருவன் இருக்கணும் .இன்ன எஞ்சினீயர் அதைக் கட்டினார் என தெரியறது. ஒரு வண்டியைப் பார்த்தால் அதைச் செய்தவன் ஒருத்தன் இருக்கணும். விசாரித்து ஓஹோ இதை இன்ன தச்சன் செய்தான் என்று அறிகிறோம். ஒரு வீடு அல்லது ஒரு வண்டி என்றால் அதில் பல விஷயங்கள் ஒன்றுக்கொன்று இசைவாக சேர்ந்திருக்கின்றது. ஏதோ ஒரு பிரயோ ஜனத்தை உத்தேசித்து அவற்றை உருவாக்கியிருப்பது புரிகிறது அல்லவா?

'இந்த வீடு, இந்த வண்டி ஏதோ தானாகவே அகஸ்மாத்தாக (accidental) உண்டாகி விடவில்லை; ஏதோ ஒரு உத்தேசத்தோடு ஓர் அறிவு இது உண்டாக காரணமாக இருக்கிறது. ஏதோ ஒரு ஒழுங்குக்குக் கட்டுப்பட்டுப் பல வஸ்துக்களைப் சேர்த்து உண்டாக்கி யிருக்கிற எதைப் பார்த்தாலும் அதைச் செய்தவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று நாம் ஊகிக்கிறோம்.

இப்போ யோசித்து பார். எத்தனையோ ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்டிருக்கும் இந்தப் பிரபஞ்சத்தைச் செய்தவன் ஒருவன் இருக்கதானே வேண்டும்?

எத்தனையோ வேறு வேறு விதமான வஸ்துக்களைப் பலவிதங்களில் சேர்த்து வைத்து, பலவிதமான பிரயோஜனங்களை உண்டாக்கிக் கொண்டிருக்கிற இயற்கையை, லோக வாழ்க்கையைப் பார்க்கிறபோது, இவைகளை எல்லாம் இந்த உத்தேசத்துக்காகவே உண்டாக்கி, இவற்றை நடத்தி வருகிற ஒரு மகா பெரிய சக்தி இருக்கத்தான் வேண்டும் என்று நிச்சயமாகத் தெரிகிறது இல்லையா?

நாம் உட்கார்ந்திருக்கும் இந்தக் கொட்ட கையை யார் போட்டார்கள் என்று அறிகிறோம். இந்த வாழை மரத்தை யார் செய்தார்கள்? கண்ணில் காட்டும்படியாக அதைச் செய்தவனைச் சொல்லத் தெரிய வில்லை. ஆனாலும் ஒருவன் அதைச் செய்திருக்கிறான். அதனால்தான் இப்படி பட்டை பட்டையாகக் கணக்குப் பிசகாமல் உள்ளுக்குள்ளே அடுக்கிக்கொண்டே இந்த வாழை உண்டாகியிருக்கிறது. எந்த ஆயுதத்தை வைத்துக் கொண்டு அந்த ஒருவன் இத்தனை அழகாகப் பட்டைகளை அடுக்கினான் என்றால் அது தெரியவில்லை. இப்படியே அந்த மலையை, இதோ மேலே உள்ள நக்ஷத்திரங்களை, சந்திரனைச் செய்தவனை நம்மால் காட்ட முடியவில்லை. இவையெல்லாம் எத்தனையோ காலம் முன்னால் உண்டானவை. செய்தவனை எப்படிக் காட்டுவது, என்று கேட்கலாம்.

''ஆஹா அற்புதம் பெரியவா. மேலே சொல்லுங்கோ ''

பெ: 'சரி, இந்த ரோஜாப் புஷ்பம் இருக்கிறதே, இது அந்த வாழையை விடச் சமீபத்தில் உண்டானதுதான். முந்தாநாள் சிறு மொட்டாக இருந்தது. இப்போது அழகிய பூவாகியிருக்கிறது. இதில் நூற்றுக்கணக்கான இதழ்கள், ஒவ்வொன்றிலும் நுண்ணிய நரம்புகள், வாசனை எல்லாம் வந்திருக்கின்றன. நம் கண்முன்னமே இது மலர்ந்தது. ஆனாலும் மலர்த்தினவனை நமக்குத் தெரியலையே!

மனிதன் எல்லாம் தெரிந்த கெட்டிக்காரன்னு நினைக்கிறோம். ஆனால் ஒரு காட்டு மிருகம் சென்னைப் பட்டணத்தைச் சுற்றி வந்தால் எதுவுமே தனக்குத் தெரியவில்லை என்று எப்படி ஆச்சரியப்பட்டுப் பார்க்குமோ, அப்படித்தான் இந்தப் பிரபஞ்சத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். மனிதனைவிடக் கெட்டிக்காரனாக ஒருவன் அவனை இப்படி வைத்திருக்கிறான்.

''கடவுள் என்கிற பேரறிவு தான் இதற்கெல்லாம் காரணம் இல்லையா பெரியவா?''

பெ: ''அத்தனை ரோஜாப் பூக்களும் ஒரே தர்மத்தில் மலர்வதால், அத்தனை மலைகளும் ஒரே தர்மத்தில் நிலைத்து இருப்பதால், அத்தனை நக்ஷத்திரங்களும் ஒரே தர்மத்தில் சுற்றுவதால், இந்தச் சகலத்தையும் செய்தவன் ஒரே எஞ்சிநீயர் என்று தெரிகிறது. ஒரே ரீதியில், காரண காரிய விதியில், பிரபஞ்சம் முழுதும் கட்டுப்பட்டிருப்பதால், இதைச் செய்தது ஒரே அறிவு எனத் தெரிகிறது.

மனிதன் தான் தான் கெட்டிக்காரன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். இத்தனையையும் இவனையும் சேர்த்தே உண்டு பண்ணிய அந்த மகா கெட்டிக்காரனைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், அவன் மகா கெட்டிக்காரன் மட்டுமல்ல, மகா நல்லவனுங்கூட. இத்தனையையம் திட்டமிட்டுப் படைத்த பேரறிவு. , இத்தனையையும் ரக்ஷிக்கும் பெரும் கருணையும் அவன். நமது கெட்டிக்காரத்தனம் அவன் தந்ததே என்று தெரிந்துகொண்டு அவனிடம் பிரார்த்தித்து கொண்டால் நமக்கு அவன் நல்லது செய்வான்.
அவன்தான் ஸ்வாமி, பகவான் கடவுள் என்பவன்.

இந்த நமது கெட்டிக்காரத்தனமே அவனுக்கு ஓர் அடையாளம்தான். கள்ளனைக் கண்டுபிடிக்க மண்ணில் பதித்த காலடிச் சுவடு இருக்கிறதுபோல், உள்ளம் கவர் 'கள்வ'னான ஸ்வாமியின் காலடி, பிரபஞ்சத்தின் எல்லா இடத்திலும் பதித்து கிடைக்கிறது. நம் கெட்டிக்காரத்தனமும் அவனது காலடி அடையாளம்தான். இந்தக் கெட்டிக்காரத்தனத்துக்கெல்லாம் ஓர் ஆதாரம் இருக்க வேண்டும் என்று அது காட்டிக் கொடுப்பதால் அதுவே காலடியாகிறது.

பெரியவா அப்படி மகா உன்னத படைப்பாளியான கடவுள் இருக்கிறன் என்பதற்கு என்ன அடையாளம் சொல்லலாம்?''

பெ: ''சிருஷ்டிகார்த்தனாக ஒரு ஸ்வாமி இருப்பதற்கு நாமே தான் அடையாளம். நாம் ஒவ்வொருவர் உள்ளங்கையிலும் அவன் தினுசு தினுசாகப் போட்டுள்ள ரேகை மாதிரி நம்மால் போட முடியுமா சொல்லு ?

இந்தப் பட்டணம் முழுவதிலும் அநேகம் மனிதர்களின் கெட்டிக்காரத்தனத்தால் செய்துள்ள காரியங்களைவிட அதிகமாக ஒரு சிறு இலையில் போட்டிருக்கிற ரேகைகளில் விசித்திரம் செய்திருக்கிறான் அவன்.

பிரபஞ்ச வஸ்து எல்லாமே அந்த மகா திருடனின் ரேகை அடையாளம்தான், திருடன் பதுங்கியிருப்பதுபோல் இவனும் பதுங்கியிருப்பவன்தான். அவன் குகைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்றே வேதம் திரும்பித் திரும்பித் சொல்லும்.

நம் இதயம்தான் அந்தக் குகை. நமக்குள்ளேயே ஒளிந்து கொண்டு நமக்கு வெளியே இத்தனை அற்புதங்களைச் செய்து, நம்மை ஆச்சரியப்படுத்தித் தன்னை தேட வைக்கிறான் ஸ்வாமி. அப்படி அவனைத் தேடுகிறதுதான் பக்தி .''



மஹா பெரியவாளை நமஸ்காரம் செய்து எதிரே மௌனமாக மெழுகுவஸ்துவாக அருள் பாலித்த, காட்சியளித்த தெய்வத்தை வணங்கி என் நெஞ்சில் அவர் நிரப்பிய இந்த செய்தியோடு உங்களை வந்தடை ந்திருக்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...