Friday, October 13, 2017

ஒரு ''த்ரீ இன் ஒன் '' குரு'

உத்தவ கீதை: 2 - J.K. SIVAN
'' ஒரு ''த்ரீ இன் ஒன் '' குரு'

கிருஷ்ண அவதாரத்தின் நோக்கம் முடிந்து விட்டது.

யாதவகுல ஆண்கள் குடும்பத்தோடு சோமநாதபுரம் கடற்கரையில் உள்ள பிரபாச நகருக்கு புறப்படுவதை உத்தவர் அறிகிறார். நேராக கிருஷ்ணனிடம் வருகிறார். கிருஷ்ணன் தியானத்தில் இருக்கிறானா? எதையோ யோசிக்கிறானா? அருகே வந்து ''கிருஷ்ணா '' என்று மனமார கூப்பிட்டு வணங்குகிறார் உத்தவர்.

''வா உத்தவா நான் உன்னை எதிர்பார்த்தேன்''

'' கிருஷ்ணா, துர்வாசர் முதலான ரிஷிக்களின் சாபத்திற்கு உள்ளாகி யதுகுலம் முற்றிலும் அழியும் என்று உனக்கு தெரியுமே, அதை தடுக்கும் சக்தியும் உனக்கு உண்டே, எதற்கு அவர்களை அழியச் செய்து விட்டு நீ வைகுண்டம் செல்ல உத்தேசித்தாய். முடிவெடுத்தாய்? எனக்கு காரணம் வேண்டாம். ஆனால் தயவு செய்து என்னையும் உன்னுடன் அழைத்து செல்வாயா கிருஷ்ணா?''

'' இல்லை உத்தவா நீ இன்னும் பூமியில் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. உனக்கு நான் ஆத்ம உபதேசம் செய்வேன். நான் இங்கிருந்து சென்றபின் இந்த பூமியில் கலியின் பிடி அதிகரிக்கும். இந்த உலகில் மனம் வாக்கு காயம் என்று ஐம்புலன்களால் அடையப்படும் எதுவுமே சாஸ்வதம் இல்லை, அழியும் தன்மை கொண்டது என்பதை நீ உணர்ந்து மற்றவர்க்கும் உபதேசம் செய்யும் பணி உன்னால் நிறைபெறவேண்டும்.

இப்படித்தான் கௌரவ பாண்டவ குல வம்ச மஹாராஜா, யயாதியின் மகன் யது அவதூதர் ரிஷி தத்தாத்ரேயரை ஒரு காட்டில் சந்தித்து அவரிடமிருந்து உலகில் தனக்கு யார் யாரெல்லாம் குரு என்று 24 குருமார்களை அடையாளம் காட்டுகிறார். யது முடிவில் மனம் தெளிந்து உபதேசம் பெற்றான்.

''அவதூதர் தத்தாத்ரேயர் பற்றி உன் வாயால் கேட்க வேண்டும் கிருஷ்ணா ''
கிருஷ்ணன் உத்தவருக்கு சொன்ன அந்த அவதூதர் ரிஷி தத்தாத்த்ரேயரை பற்றி அறிந்து கொள்வோம்:

த்ரி மூர்த்திகளான ப்ரம்மா விஷ்ணு சிவன் சேர்ந்த ஒரு அவதாரம் தத்தாத்ரேயர். ரிஷி அத்ரிக்கும் ரிஷி பத்னி அனசூயாவுக்கும் பிள்ளையாக தோன்றியவர். ''தத்தா'' என்றால் ''தந்தவர்'' '' த்ரேயர்'' திரி ''மூர்த்திகள்'' மும்மூர்த்திகளும் தங்களை ஒரு சிசுவாக தந்து ரிஷி தம்பதிகளுக்கு தத்தாத்ரேயராக அவதரித்தவர். ஆத்ரேயருக்கு இன்னொரு அர்த்தம் ''அத்ரி வம்சத்தை சேர்ந்தவர்'' அத்ரி மகன் ஆத்ரேயன்.
தத்தாத்ரேயன்.

ஆதி குரு, ஆதிநாத், யோகாச்சார்யன் என்று கோடானுகோடி ஹிந்துக்கள் வழிபடும் குரு தத்தாத்ரேயர். சிறுவயதிலேயே துறவியாக வெளியே கிளம்பி மஹாராஷ்ட்ரா, குஜராத், வட கன்னட பகுதிகளில் தேசாந்திரியாக காணப்பட்டார். கந்தமாதன சிகரத்தில் தவம் செய்தார் என்கிறார்கள். கிர்னார் மலைமேல் அவர் காலடி சுவடு இருக்கிறதாம். இவர் பரசுராமரின் குரு. ஓரிடத்தில் தங்காத அவதூதர்.

அவரது ''அவதூத கீதை '' விவேகானந்தர் விரும்பி படித்து பேசிய ஒரு தத்துவ பொக்கிஷம். பாகவத புராணத்தில் தத்தாத்ரேயரின் 24 குருமார்களை பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது.

தத்தாத்ரேயர் படம் பார்த்திருக்கிறீர்களா? மூன்று தலை மும்மூர்த்திகள். ஜாக்கிரதை, ஸ்வப்னா, ஸுஷுப்தி நிலைகள். கையில் பிடித்திருக்கும் நான்கு நாய்கள் நாலு வேதங்கள். நினைத்ததை அளிக்கும் கருணை வாய்ந்ததால் காமதேனு மாதிரி ஒரு பசு. அதன் கன்றுக்குட்டி. பசு தான் பூமாதேவி. கையில் உள்ள திரிசூலம் முக்குணத்தையும் வென்றதன் குறி.

மும்மூர்த்திகளும் கற்புக்கரசி அனசூயையின் பெருமையை நிலைநாட்ட ஒரு நாடகமாடினர். அதிதிகளாக அனசூயை ஆஸ்ரமம் வந்து பசிக்கிறது என்றார்கள். அத்ரி வெளியே எங்கோ போய்விட்டார். '' இருங்கள் இதோ இதோ உணவு தயார் பண்ணுகிறேன்'' என்று அனசூயை உணவு தயாரித்தாள் . உணவு ரெடியாகிவிட்டது.
இலையின் முன்னே அமர்ந்த மும்மூர்த்திகள் ''அனசுயா, சொல்ல மறந்துவிட்டோம், நாங்கள் பரிசுத்தமாக உணவருந்துபவர்கள். எனவே நீ எந்த வித ஆடையுமின்றி எங்களுக்கு உணவு பரிமாறு '' என்றபோது அனசூயை திடுக்கிட்டாள். அவளுக்கு உடனே தெரிந்து விட்டது. வந்தவர்கள் வெறும் சாதாரண அதிதிகள் இல்லையோ? தன்னை சோதிக்க வந்தவர்களோ?. அதிதிகள் வார்த்தையை தட்டுவதோ, அவர்களை அவமதிப்பதோ, பாபம் ஆச்சே.

''ஆஹா அப்படியே செய்கிறேன் அதிதி ஸ்வாமிகளே''

ஆடையின்றி வருமுன் அனசூயா தனது கையிலிருந்த பூஜா பாத்திரத்தின் தீர்த்தத்தால் அவர்களை சிறு குழந்தைகளாக மாற்றிவிட்டாள். மூன்று சிறு குழந்தைகள் உட்கார்ந்து நன்றாக சாப்பிட்டன!

வெளியே இருந்து திரும்பிய அத்ரி தனது மனைவி அனுசூயா மூன்று சிறு குழந்தைகளோடு விளையாடுவதை கண்டு அதிசயித்தார். தனது ஞான திரிஷ்டியால் நடந்ததை அறிந்தார். திரிமூர்த்திகளை வணங்க அவர்கள் தம் உருக்கொண்டு அவரை ஆசிர்வதித்து அனசூயையின் பக்தி, கற்பை சிலாகித்து போற்றி அருள் பாலித்தார்கள். அவர்கள் வேண்டுதல் படியே மூவரும் ரிஷி தம்பதிகளின் குழந்தைகளானார்கள். மூவரும் ஒரே உடலுடன் தத்தாத்ரேயராக பிறந்தனர்.

வடக்கே ஸ்ரீ ஷீர்டி ஸாயீ பாபா தத்தாத்ரேயரின் அம்சம் என்கிறார்கள்.

இந்த தத்த்ராத்ரேயருக்கு 24 விசேஷ குருமார்கள். ரொம்ப ஆச்சர்யமான குருமார்கள். அவர்களை இனி தெரிந்து கொள்வோமா?



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...