எப்போது தீபாவளி வரும் என்று சில மாதங்களுக்கு முன்பே ஒரு ஆர்வம் இருந்த காலம். பள்ளிக்கூடத்தில் மரத்தடியில் பக்கத்தில் தரையில் அமர்ந்து கொண்டிருக்கும் மற்ற மாணவர்களோடு கூடி பேசுவோம்.
''எங்கப்பா எங்களுக்கு தீபாவளிக்கு புது துணி வாங்கியாச்சு''
''உனக்கு என்ன?''
''இந்த வருஷம் தான் எனக்கு ஒரு முழுக்கை சட்டை தைக்கறதாக அப்பா ஓத்துண்டிருக்கார். அதுவும் அம்மா சண்டை போட்டு எனக்காக சிபாரிசு பண்ணினதாலே.
''உங்கப்பா அரைக்கை சட்டை தான் தைக்க சொல்லுவார் னு சொல்லுவியே''
பின்னி பாக்டரிலே யாரையோ பிடிச்சு குறைச்ச விலைலே 10 கஜம் பச்சை கலர் காட்டன் துணி பிடிச்சுண்டு வந்துட்டார் கந்தசாமி. அவரைப் பொருத்தவரை எத்தனை சட்டை தைக்க முடியுமோ டைலர் சத்தார் கிட்டே அவ்வளவு சமாளிக்க சொல்லுவார். அதனாலே கோவிந்தன் அவன் தம்பி குப்புராஜ், பெரியண்ணன் ஆகியோருக்கும் போக கந்தசாமி முடிந்தால் மீதி இருந்தால் தனக்கும் ஒரு அரைக்கை சட்டை. ரெண்டு தலைகாணி உறை கூட கேட்பார் . சத்தார் அவர் கொடுத்த துணியை திருடி கொஞ்சம் வேறு யாருக்கோ சட்டை தைத்துவிடுவார் என்று இனம் புரியாத பயம் கந்தசாமிக்கு. துணியை கொடுத்ததிலிருந்து அடிக்கடி சத்தார் வீட்டை சுற்றி சுற்றி வருவார்.
சட்டை நீளம் ரொம்ப வேண்டாம். வயிறுக்கு கீழே மூன்று நாலு அங்குலம் போதும். ஒரு பாக்கேட் சின்னதா. மொட்டை கழுத்து போதும். காலர் வேண்டாம் என்று துணி சிக்கனம் பிடித்து நாலு பேருக்கும் சட்டைகள் வந்து விடும்.
குறைந்தாச்சு ஐந்து ஆறு தடவை சத்தார் வீட்டுக்கு நடக்கவேண்டும். இதோ இன்னிக்கு, நாளைக்கு, சாயந்திரம் என்று டைம் சொல்லுவார் பாய். ஆனால் தீபாவளிக்கு முதல் நாள் கிடைத்தால் அதிருஷ்டம். தெரிந்து தான் மணி என்கிற கருப்பு வெளுப்பு நாயை வளர்த்தார் சத்தார் பாய். அவர் வீட்டு தெருவுக்கு வந்தாலே குலைக்கும் கடிக்க வரும். கண்களில் கோபம் காட்டும். அதற்கு சில ஜெம் பிஸ்கட்கள் வாங்கி வைத்திருப்பேன்.
ஜெம் பிஸ்கட் தான் விலை குறைவு. மரக்கடை ராமண்ணா அதற்கு பக்கத்திலே பூவரசம் மரத்தடியில் ஓர் பெட்டிக்கடை வைத்திருந்தார். மரத்தில் செய்த ஒரே கதவு கொண்ட சின்ன பெட்டி கடை. அவர் குனிந்து உள்ளே போய் ஒரு சின்ன மணைப்பலகை மேல் அமர்ந்து, எதிரே ஒரு தரஸ்ஸு தொங்கும். சுற்றி சில பாட்டில்களில் பிஸ்கெட், சூடு பெப்பர்மென்ட், கமர்கட், சிகப்பு பச்சை நீலம் வெள்ளை மஞ்சள் என்று சின்னதாக உருண்டை மிட்டாய்கள். ஒரு அணாவுக்கு இத்தனை என்று ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மாதிரி குறைத்து கூட்டி கொடுப்பார். ஒரு தட்டில் பச்சை வெற்றிலை அதற்கு மேல் ஈரத்துணி. ஒரு ஜாடியில் பட்டணம் பொடி . அதனுள் நீண்ட ஒரு உலோக கரண்டி. எத்தனை சிட்டிகை என்று கணக்கு உண்டு. காய்ந்த உரித்த வாழை பட்டையில் மூக்குப் பொடி வாங்கி போவார்கள். பேப்பரில் மடித்துக் கொடுக்கும் பழக்கம் இல்லை.கவர்னர் ருஸ்தும் பீடிகள் நிறைய வியாபாரம் ஆகும்.
தீபாவளிக்கு சில புஸ்தகங்கள் கொண்டு வந்து விற்பார். ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், அமுதசுரபி, தான் பிரபலம். பழைய வருஷ தீபாவளி மலர்கள் வாடகைக்கு படிக்க்க விடுவார். படங்கள் கிழித்திருக்கிறதா என்று எண்ணி பார்த்து தான் வாங்குவார் கொடுப்பார். படிக்க தெரியாது.
மாலி, கோபுலு படங்கள் ஆனந்தவிகடனில், மணியம் படங்கள் கல்கியிலும் அட்டைப்படத்தில் மினுக்கும். ரொம்ப காக்காய் பிடித்து ராமண்ணாவின் தம்பி எப்போதாவது பார்த்து விட்டு கொடுக்க அனுமதிப்பான். நிச்சயம் ராமண்ணா அனுமதிக்க மாட்டார். கெட்ட வார்த்தையில் திட்டுவார்.
கோடம்பாக்கம் ஸ்கூல் வாத்யார் ராமநாதன் என்னை ராமண்ணா கடையில் ஒவொருவாரமும் கல்கி வாங்கி வர சொல்வார். சூளைமேடு ஆற்காட் ரோடு வரை ஓடிப்போய் வாங்கி வந்து அவர் வீட்டு மாமி இடம் கொடுப்பேன். எந்த வேலையில் இருந்தாலும் அதை அப்படியே விட்டுவிட்டு பொன்னியின் செல்வன் முதலில் படித்து விட்டு என்னிடம் கொடுப்பாள். வீட்டுக்கு எடுத்து சென்று என் அம்மாவிடம் கொடுப்பேன். ஒரு மணி நேரத்தில் திருப்பி கொண்டுவா என்று ராமநாதன் வீடு மாமி டைம் சொல்லுவாள்.
ஆனந்த விகடனில் சில்பியின் கலர் படம் ஏதாவது ஒரு கோவில் சுவாமி படமாக பெரியவா படமாக இருக்கும். நேரில் பார்ப்பது போல் இருக்கும். ஐந்து ஆறுவயதிலேயே என் மனத்தில் சில்பி மூலமாக கோவில் படம், பெரியவா படம் இடம் பிடித்து விட்டது ஆச்சர்யம்.
No comments:
Post a Comment