நாதோபாசனை - J.K. SIVAN
பக்திக்கு வித்து பஜனை, நாம சங்கீர்த்தனம், நாமாவளி, சங்கீதம் என்று சொல்லலாம். நானறிந்த முதல் பஜனை பாடல் திருப்புகழ் பஜனை. இளம் வயதில் திருப்புகழ் மணி அவர்கள் மனம் உருகி பாடுவதை கேட்டிருக்கிறேன். பின்னர் ஒரு முஸ்லீம், நெற்றியில் பட்டை பட்டையாக விபூதி இடுப்பில் வேஷ்டியில் விபூதி சுருக்குப்பை. கணீர் என்ற விஸ்தாரமான குரல். தேஜஸ் முருக பக்தியோடு ஒளிரும் பளிச் முகம். கல்லிடைக்குறிச்சி முஸ்லீம் மஜீத். எங்கள் வீட்டுக்கு 1970 களில் வந்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முருகன் பாடல்கள் பாடினார். வருஷாவருஷம் டிசம்பர் 31ம் நாள் இரவு திருத்தணி படி உத்சவத்தில் இரவைப் பகலாக்கி ஒவ்வொரு படிக்கும் ஒரு திருப்புகழ் கணீரென்று பாடுவார்.
சங்கீதம் பரிமளிப்பது இறைவனைப் பற்றிய பாடல்களை பாடும்போது. ராகம், தாளம், ஆலாபனை, ஸ்வரம் இதெல்லாம் பாடலுக்கோ, பாசுரத்துக்கோ, உதவுகிற உபகரணங்கள். பாடல் பாசுரம் ஸ்லோகம் ஆகியவற்றின் ஆழமான கருத்தும், பக்தி பாவம்,இவற்றால் கூடி கேட்போரை மயங்கச் செய்து மனதை அப்படியே தூக்கிக் கொண்டு ''அவனிடத்தில்'' சேர்த்து விடுகிறதே. தூக்கிக் கொண்டு போக ஒரு ஆள் வேண்டாமா? அவர் தான் பாடும் வித்வான். அவர் முதலில் தன்னையே அலாக்காக தூக்கிகொண்டு தான் நம்மை பறக்கச் செய்பவர். குரல் வளம் மட்டும் இருந்தால் போதாது. பக்தி உணர்ச்சி தன்னை இழந்து அவரிடம் வெளிப்பட வேண்டும். அப்போது தான் பாடல் பிரயோகம் செழிப்பாக சுவை கூட்டும்.
முருகன் பாடல்கள் பாடுவதில் எனக்கு பிடித்த அப்படிப்பட்ட ஒருவர் மதுரை சோமு. ஒரே பாட்டை எத்தனையோ பேர் பாடி ஒரு காது வழியாக நுழைந்து கேண்டீனில் வடை சாப்பிடுவதற்குள் மறு காது வழியாக சென்று இருக்கிறது.
வேதாந்த உபநிஷத்தில் த்ரி புடி என்றால் மூன்றும் ஒன்றாவது.
உதாரணமாக பாடுபவர், கேட்பவர்,பாடப்படும் பாடல் மூன்றும் தனித்வம் இழந்து ஒன்றாக உணரப் பட்டால் மட்டும் இந்த சுகானுபவம் கிட்டும். ''சார் மகாராஜபுரம் பாடினார், அப்படியே என்னை இழந்துட்டேன்,''
''சோமு சார், நீங்கள் பாடும்போது நான் உங்களைக் கேட்கலே, அந்த முருகனை தான் பார்த்தேன் அவன் பேசறதை தான் கேட்டேன்.'' அவனை அவர் பக்தி பூர்வமாக பாடும்போது தன்னை இழக்கதாவர்கள் அவுரங்கசீப் வாரிசுகள்
''இந்த பாட்டை நான் பாடும்போது என்னை மறந்து அதோடு ஒன்றி விட்டேன் என்று வித்வான்களும் சொல்வார்கள்''
எத்தனையோ பாட்டு இருந்தாலும் இந்த ஒன்றை கேட்டு விட்டு சொல்லுங்கள் என் சாய்ஸ் சரியா என்று? இதன் பொருள், அதை எழுதியவரும் ''தன்னை இழந்து'', நீலமணி ராகத்தில் இழையும் சோமு, அந்த ராகத்தின் பொருத்தம். எல்லாம் ஒன்றே என அனுபவித்தேனே.
முருகன் பாலன். விளையாட்டுப்பிள்ளை அவனை என்ன கவி பாடினாலும் அந்த குமரன் மனம் இர ங்க வில்லையே. உன் தந்தையிடம் (மகா தேவன்) சொல்லலாமென்றால் அவன் ஒரு மௌனி. த்யானத்தில் இருப்பவன். நினைக்கவே மாட்டான். சரி உன் தாயாரிடம்(பார்வதி தேவி) சொல்லலாமென்றால் லோக சம்ரக்ஷணத்தில் எத்தனை கோடானு கோடி ஜனங்களை கவனிக்கவேண்டும். என்னை எங்கே கூட்டத்தில் அறிவாள்? உன் மாமனைக்(விஷ்ணு) கண்டு கேட்போமென்றால் அவன் செவிகொடுத்து கேட்டால் தானே. உன் மாமி (மஹாலக்ஷ்மி)யாவது ஒரு கடைக்கண் பார்வை அருள்வாளா என்றால் ஹுஹும் துளியும் அதிர்ஷ்டம் எனக்கில்லை. இதோ பார் முருகா, என் பாட்டை யார் கேட்டு அந்த காலத்தில் போஜ ராஜன் ஒவ்வொரு அக்ஷரத்துக்கும் லக்ஷம் பொன் கொடுத்ததுபோல் என்னை கவுரவிக்க போகிறார்கள்? வாப்பா உட்கார் பாடு உன் பாடலை நான் கேட்கிறேன் என்று பரிவுடன் அழைத்து என்னை ரக்ஷிக்க எவர் இருக்கிறார் சொல்?
நீ என்ன செயகிறாய் முருகா, இந்த க்ஷணமே உன் நீல மயில் மேல் ஏறி ஞாலம் வலம் வந்து என்னை ரக்ஷிக்கவேண்டும். இதில் அலட்சியம் காட்டாதே. எனது லட்சியமே நீ வரவேண்டும் என்பது தான். அப்படி நீ வரவில்லை என்றால் தப்பித்து விடலாம் என்ற எண்ணம் மட்டும் வேண்டாம் தம்பி. உன்னை நான் விட மாட்டேன். உன் திருவடிகளை கெட்டியாக பிடித்துக்கொள்வேன். அப்புறம் நீ என்னை விட்டு ஓடிபோக முடியுமா? முடியுமா?
மதுரை சோமசுந்தரத்தின் இந்த முருகன் பாடலை நான் அடிக்கடி விரும்பி கேட்டு பாடுவேன்.
கொஞ்சமாவது முருகன் எனக்கும் அருளமாட்டானா? https://www.youtube.com/watch?v=ZiiDf-HmkCE&feature=sharehttps://www.youtube.com/watch?v=ZiiDf-HmkCE&feature=share
No comments:
Post a Comment