Sunday, October 15, 2017

காலம் மாறிப்போச்சு

காலம் மாறிப்போச்சு J.K. SIVAN

தீபாவளி நெருங்கிவிட்டது என்பதை பட்டாசு சப்தம் நாய்கள் வெறிகொண்டு பீதியுடன் ஓடுவதிலிருந்து புரிகிறது. இனிமையான குரலில் சப்திக்கும் கண்ணுக்கு தெரியாத பறவைகள் கப் சிப். மழையைக் காணோம். ஏதோ சாஸ்திரத்துக்கு ரெண்டு மூன்று தூத்தல். எங்கும் மன நிறைவில்லாத மனிதர்கள். கண்களில் ஏதோ ஒரு ஏமாற்றம் தெரியும் தூர பார்வை. எங்களுக்கு இந்த வருஷம் தீபாவளி இல்லை. இருந்தபோது மட்டும் என்ன சிறப்பாக இப்போதெல்லாம் கொண்டாடுகிறேன். இன்னுமொரு நாள். அவ்வளவு தானே. புதிதாக ஆடைகள் வாங்கிக்கொள்ளும் எண்ணம் எப்போது மறைந்தது? எத்தனை வருஷங்களாக? நினைவில்லை. ஒரு துண்டு, ஒரு வேஷ்டி நிச்சயம்.

​​எங்கும் எதிலும் டிஜிட்டல். தீபாவளி மலர்கள் பேச்சையே காணோம்.​ புத்தகங்கள் படிக்கும் பழக்கமே நின்றுவிட்டது. மொபைலில் வாட்சாப் கம்பியூட்டர் கூட இன்னும் கொஞ்ச நாளில் பழங்கால வஸ்துவாகிவிடும் போல் இருக்கிறது. ​ ​ இந்த லக்ஷணத்தில் ​வாசலில் குடுகுடுப்பாண்டி யின் ''நல்ல காலம் பொறக்குது'' குடுகுடுப்பை ஒலிக்க தோளில் நிறைய பழைய துணிகள் போர்த்திக்கொண்டு தலையில் தலைப்பாகையோடு சொல்லியது நின்று போய் எத்தனையோ நல்ல காலம் ஆகிவிட்டதே. பூம் பூம் மாடு ​இனி என்று வரப்போகிறது. அபஸ்வரமாக நாதஸ்வரம் அந்த மாட்டுக்கு மட்டும் பழக்கமாகி இருந்த காலம் இப்போது நினைத்தாலும் கிடைக்காது. தெருவில் கோவிந்தா கோவிந்தா என்று புரட்டாசி மாசம் தினமும் ரோட்டில் புரண்டு புரண்டு தலைக்கு மேல் மஞ்சள் துணி வாயைக்கட்டிய நாமம் போட்ட சொம்பை வீட்டுக்கு வாசலில் யார் நீட்டப்போகிறார்கள். சனிக்கிழமைகள் நிறைய கோவிந்தா காரர்கள் கண்ட காலம் போய்விட்டது. தலையில் நீண்ட முடி, தாடி, ''மலைக்கு போய் முடி இறக்க '' வளர்த்தவர்கள் மோக்ஷம் அடைந்து விட்டார்களே.

தினமும் சட்டியில் மோர் விற்பவள், புளி ,நெய், விற்றவள் வழி மறந்து விட்டாளோ? ஆஞ்சநேயர் ராமர் வேஷதாரிகள் வாசலில் இனி நிற்கப்போவதில்லை. எங்கோ சில இடங்களில் இன்னும் அத்திப்பூக்களாகி விட்டார்கள்.

தென்னந்தோப்புகள், பனைமரக்கூட்டங்கள், அதற்கடியில் சாயந்திரம் தெருக்கூத்துக்கு வேஷம் போட்டுக்கொண்டு இரவெல்லாம் ஆடிப் பாடிய கூத்தாடிகள் பட்டணத்தை விட்டு சென்றுவிட்டார்கள் எங்காவது கல்யாணம் என்றால் தெருவெல்லாம் கோன் ஸ்பீக்கர் காதை பிளக்கும். எந்த கல்யாணம் விசேஷம் என்றாலும் சிவாஜியின் மனோகரா பராசக்தி வசனம் கேட்டது இப்போது சிரிப்பை வரவழைக்கிறது. கல்யாண வீட்டு வாசலில் நின்று பழை பாடல்களை காதை செவிடாக்கும் ஒலி பெருக்கியில் கேட்க நின்றிருக்கிறேன். அதிகம் தெருவில் சைக்கிள் மட்டுமே ஓடிய காலம் அது. குதிரை வண்டி கை ரிஸ்கா, ஏன் பின்னால் வந்த சைக்கிள் ரிக்ஷா மணிஅடித்துக்கொண்டு மிதித்து ஒட்டியது நின்று போய் மோட்டார் சைக்கிள் ரிக்ஷா வந்து அதுவும் மறைந்து போய் விட்டது. மாட்டு வண்டி பற்றி பேசுவதில் அர்த்தமே இல்லை. கூண்டு வண்டியில் ஊருக்கு சென்ற சுகம் இனி எந்த ஜென்மத்திலோ.

வாசலில் யார் புலி வேஷம் போட்டுக்கொண்டு ஆடப் போகிறான் இனிமேல். ஆட தான் ரோட்டில் இடம் இருக்கிறதா இப்போது? புலியை ஏதாவது ஒரு வேகமான வண்டி அரைத்துவிடும்.

எந்த தெருவிலும் பட்டாசு வெடிக்கவேண்டாம். நிறைய இப்போதெல்லாம் எல்லார் வீட்டிலும் மோட்டார் கார்கள் வீட்டில் நிறுத்த இடமில்லாமல் தெருவில் வரிசையாக ரெண்டு பக்கமும். பெட்ரோல் வண்டிகள். ஜாக்கிரதை. நடுரோட்டில் தான் வேகமாக பறக்கும் வண்டிகளுடன் நடக்கவேண்டும். காது கண் சரியில்லாத பெருசுகளுக்கு பெரும் சோதனை.

​ஒருவருக்கு அருகில் இன்னொருவர் வசிக்க flat முறை system வந்துவிட்டால் கூட அதிசயமாக சுவருக்கு அடுத்த பக்கம் வசிக்கும் குடும்பம் வெகு தூரத்தில் மனதளவில் வாழ்கிறதே. ​

காலம் மட்டுமா மாறுதல் கொண்டது. மனிதன் மனமும் அதைவிட வேகமாக மாறுகிறது ஆச்சர்யமாக இருக்கிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...