உடல் உள்ள நலம் -- நங்கநல்லூர் J K SIVAN
என் அருமை, என் போன்ற, வயதான சகோதர சகோதரிகளே,
''என்போன்ற'' என்று சொல்லும்போது எனது 82-83ஐ நான் மனதில் கொள்ளவில்லை 60க்கு மேல் எல்லோருமே என்று எடுத்துக் கொள்ளலா
ம். ஏன் என்றால் உத்யோகத்திலிருந்து விடுப்பு பெற்றவர்களாக இருக்கலாம். கொஞ்ச நேரம், தினமும் கிடைக்குமே. அவர்களுக்கு இது:
குறைந்த அளவு தூக்கம் வரப்பிரசாதம்.
தினமும் ஒரு மணி நேரமாவது ஒதுக்கி நம்மை உயர்த்திக்கொள்ளலாம்.
தியானம், இன்று என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு தீர்மானம், என்னென்ன படித்துத் தெரிந்து கொள்ளலாம்,
இத்தனை காலம் அறிந்து கொள்ளாமல் விட்டு விட்டவை எவையோ அவற்றை அறிய முற்படுவது,
நல்ல சங்கீதம் கேட்கலாம், மனதிற்கு இதமான இசைக்கு ஒரு தனி சக்தி உண்டு.
இப்படி எதிலாவது நம்மை புதுப்பித்துக் கொள்ளலாமே.
ஒரு ஐந்து நிமிஷமாவது சிரிப்போம். சிரிப்பது ஒரு தனிக் கலை . உடம்புக்கு அவ்வளவு நல்லது. நண்பர்கள் இதற்குப் பெரிதும் உதவலாம். ஒரு நான்கு வயது குழந்தை குறைந்தது 500 தடவை யாவது ஒரு நாளைக்கு சிரிக்கும் என்று எண்ணிப் பார்த்து எழுதியிருக்கிறார்கள் சில ஆராய்ச்சி யாளர்கள். வளர்ந்த நாம் 15 முறையாவது ஒவ்வொரு நாளும் சிரிப்பது ரொம்ப நல்லது என்கிறார்கள்.
சிரிப்பாய் சிரிக்க நமக்கு இருக்கவே இருக்கி றார்கள், NSK , சார்லி சாப்ளின், சோ, வடிவேலு விவேக் மாதிரி சிரிப்பு டாக்டர்கள். தினமும் ஏதாவது நல்ல காமெடிகளை பார்த்தாவது சிரிக்கலாம், அல்லது சிரிப்பு புஸ்தகங்கள், ஜோக்குகள் கேட்டு சிரிக்கலாம். வாட்ஸாப்பில், கொள்ளை கொள்ளையாக யூ ட்யூபில்வருகிறதே.
வாரம் ஒருமுறையோ, ஞாயிறோ, குடும்பத்தில் எல்லோரும் ஒன்று சேர்ந்து மாலையிலோ, எப்போதோ ஒரு மணி நேரமாவது கூடிப் பேசி மகிழலாம். வெள்ளைக்காரர்களிடம் இந்த நல்ல பழக்கம் இருக்கிறது.
மாடிப்படி ஏறும்போது படிகளை எண்ணிக் கொண்டே ஏறலாம். வாக்கிங் போகும்போது நடக்கும் போது எவ்வளவு காலடிகள் என்று எண்ணலாம், இதனால் concentration சக்தி அதிக ரிக்கும். நான் தினமும் பேப்பரில் வரும் sudoku சுடோகு crosswords குறுக்கெழுத்து போடுகிறேன். என் நண்பர் ஸ்ரீ சித்தானந்தம் எனும் ரிசர்வ் பாங்க்கில் ஒய்வு பெற்ற அதிகாரி புதிர், விடுகதைகள் தினமும் ரெண்டு கொடுப்பார். ரொம்ப யோசிக்க வைக்கும்.
அதெல்லாம் விட எனக்கு நேரமே கிடையாதே. குறைந்தது 18 - 20 மணி நேரமாவது படித்து எழுத கம்ப் யூட்டர் முன் உட்காருகிறேனே. நேரம் போவதே தெரியவில்லையே. ஆயிரக்கணக்கான வாசக நண்பர்க ளோடு உறவாடுவது சுகமான அனுபவமாக இருக்கிறது. துரதிர்ஷ்ட வசமாக நிறைய நண்பர்களை சமீபத்தில் கொரோனா கொண்டு போய்விட்டது.
பாரதி சொன்ன ''மனதில் உறுதி'' வேண்டும். மனதை அலைய விடக்கூடாது. கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். பசித்து சாப்பிட வேண்டும். பார்ப்பதையெல்லாம் விழுங்க இச்சைப் படக் கூடாது. சாப்பிட எதையாவது தேடக் கூடாது. சாப்பிடும்போது இன்னும் கொஞ்சம் வேண்டும் என்ற எண்ணம் வரும்போது எழுந்து கை கழுவிட வேண்டும்.
ஒரு முக்கிய கஷ்டமான வேலையில் ஈடுபடும் போது ஒரு எண்ணம் இதை விட்டுவிட்டு போய் புத்தகம், பேப்பர் படி, படு, போய் பாட்டு கேள் என்று இடைமறிக்கும். அதை உதறித் தள்ளும் மனோதிடம் வேண்டும். எடுத்த காரியம் தொடரவேண்டும். நியூடன் என்ற விஞ்ஞானி, மணிக்கணக்காக எந்த இடையூறும் இல்லாமல் உட்கார்ந்து யோசிக்கும் சக்தி கொண்டவனாம்.
உடம்பு உடம்பு என்று எப்போது பார்த்தாலும் ஏதாவது சொல்ல ஆரம்பித்தால் அதற்கு முடிவே இல்லை. ஏதேனும் ஒரு தொந்தரவு உடம்பு கொடுத்துக் கொண்டே இருக்கும். மனதை நரகமாக்கி விடும். அதற்கு முக்யத்துவம் கொடுத்து மதித்து அதன் தொந்தரவில் மனம் செலுத்தக் கூடாது.
வருமானம், சேமிப்பு, சொத்து, உடல் நலம் விவகாரங்கள் போன்ற சொந்த விஷயங்களை எவரிடமும் வெளியிடுவதோ, விவாதிப்பதோ தவறு. நெருங்கிய குடும்ப த்தினரோடு மட்டும் நிற்க வேண்டிய விஷயம் இது.
இரவு சாப்பிட்ட பின் அரைமணி நேரமாவது நட என்கிறார்கள். என்னால் இருட்டில் நடந்து விழுந்து தொந்தரவை விலைக்கு வாங்க முடியாது என்பதால் வீட்டிலேயே மொட்டை மாடியில் காலையோ மாலையோ நடக்க இயலும்.
நமக்கென்று ஒரு மரியாதை, சுயகௌரவம் இருக்கிறது, அது கெடாமல் எல்லோரிடமும் பழக வேண்டும். கணவன் மனைவி விட்டுக் கொடுக் காமல் ஒருவருக்கு ஒருவர் நல்ல நண்பர்களாக நேசித்து பழகவேண்டும். வாழ்க்கை இனிக்கும். இருவரும் ஒருமித்து, வாழ்வில் வருவதை மேற்கொள்ளவேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலை களை சமாளிக்கவேண்டும்.
இயற்கையோடு ஒரு சில நிமிஷங்கள் கழிவது அவசியம். வீட்டில் செடி கொடி வளர்க்கலாம். மண் தரை இல்லை என்றால் தொட்டியில் வளரும். அதோடு பேசலாம், அது ரொம்ப நன்றாக நம்மை புரிந்து கொள்ளும் சக்தி உடையது. மனதுக்கு அமைதியை கொடுக்கும். .
மாதத்திற்கு ஒருமுறையோ இருமுறையோ உபவாசம் ரொம்ப உடலுக்கு நல்லது. இருப்பதை ஏகாதசி அன்று இருந்துவிட்டு போகலாமே. முழுப்பட்டினி கிடக்கவேண்டாம், நீராகாரம், பழங்களோடு நிறுத்திக் கொள்வோம்.
நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். என் எதிரே ஒரு வெந்நீர் கெட்டில் எப்போதும் இருக்கும். உடலுக்கு உள்ளே நன்றாக கழுவி சுத்தமாக்கும் . பத்து டம்ளர் குடிக்கலாம் நல்லது என்கிறார்கள். நான் கணக்கு பார்ப்பதில்லை.
இன்னும் சில விஷயங்கள் இருக்கிறது, அடுத்த பதிவில் சொல்கிறேன். இது பிடிக்கிறதா?
No comments:
Post a Comment