Monday, May 3, 2021

VARIYAR SPEECH


 

இப்படி '' வாரி ''  யார்  தருவார்? - நங்கநல்லூர்   J  K  SIVAN 


கிருபானந்த வாரியார்  என்ற  ஆழ்ந்த  சிந்தனை யாளர், சிறந்த  முருக பக்தர்,  தமிழ்க்  கடல்,  இனிய  காந்த சக்தி கொண்ட  தனக்கே உரிய  சொல்லசைவு  கொண்ட  ஆன்மீக பேச்சாளர் போல் இன்னொருவர்  இல்லை, இருக்கவும் முடியாது.  அவரை  64வது சிவனடியார் என்பார்கள்.  அவர் சொல்லும் கதைகளில்  இலக்கியமும்  ஆன்மீகமும்  தமிழ் மணமும்  எளிமையும் கலந்திருக்கும். நடுநடுவே அவரது  நகைச்சுவை உணர்வும் பரிமளிக்கும் 
சென்ற இடமெல்லாம்  அறியாமையை அகற்றிய ஆஸ்திகர்.   அவரது உருவம்  அவருக்கு  ஒரு தனிச் சிறப்பை, மரியாதையை  அளித்தது. அறநெ றி யை  வலியுறுத்தி,  உள்ளத்தில் புகட்டும் சொல் லாட்சி.  தன்னம்பிக்கையை பக்தர்களிடம் வளர்த்தது.  இன்று உங்களுக்கு அவரது  சொல்லாட்சியில் சிலவற்றை உதாரணமாக தருகிறேன்.

 * அகல் விளக்கு, எப்படி நமக்கு வெளிச்சத்தைக் கொடுக்கிறது என்பதை, நாம் இருளில் இருக்கும் போதுதான் உணரமுடியும். அதுபோல், தாய் நம்மை எப்படியெல்லாம் வளர்த்திருக்கிறார் என்பதை, அவர்கள் இல்லாதபோதுதான் உணரமுடியும். அதனால், தாய்மையை எப்போதும் போற்றுங்கள்.

* உன்னை, மற்றவர்கள் போற்றும்போது மகிழ்ச்சி அடையாதே..! அது போல், உன்னை மற்றவர்கள் தூற்றும்போது மனம் வருந்தாதே..!

 * ஆசை ஒருவனை அழிக்கும் குணம் கொண்டது. ஆனால், மாறாக நாம் மற்றவரின் மேல் செலுத் தும் 'அன்பு' அவர்களை வளர்க்கும் குணம் கொண்டது. எனவே, நீங்கள் எப்போதுமே மற்றவர்களை வளர்க்கும் குணம் உடையவர் களாக இருங்கள். தேவையற்ற ஆசைகளால் துன்பம் வருமே தவிர, நன்மை விளையாது.

* நன்கு வசதியாக வாழும் நாட்களிலேயே துன்பமான விஷயங்களையும் பழகக் கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும் ஒவ்வொரு மனிதனுக்கும் மாறி, மாறி வருவது இயல்பு. ஆகையால், அனைத்து சூழல்களுக்கும் நம்மை தயார்ப் படுத்திக்கொள்வது நல்லது.

* தெரியாத ஒருவனுக்கு ஒரு விஷயத்தைப் பயிற்றுவிக்கலாம். தெரிந்தவனுக்கு அந்த விஷயத்தின் நுணுக்கங்களை மேலும்  கூறி, புரியவைக்கலாம். ஆனால், இது நல்லது, இது கெட்டது என்று பகுத்து உணராதவனை...  அந்த ஆண்டவனாலும்  கூட  மாற்றவோ,  திருத்தவோ முடியாது.

* குடும்பம் என்பது பசுமையான மரத்தைப் போன்றது. அதில் மனைவி என்பவர் 'வேர்'. கணவன் என்பவர் ' அடிமரத்தண்டு'. பிள்ளைகள் என்பவர்கள் 'இலைகளும் மலர்களும்'. அந்த மரத்தில் விளையும் சுவைமிகுந்த பழங்கள்  தான் 'அறச்செயல்கள்'. மரமானது பல்வேறு விதமான ஜீவராசிகளுக்கும் பயன் அளிப்பதுபோல், நமது குடும்பம் என்னும் மரம் மற்றவர்களுக்குப் பயன் தரவேண்டும்.

* பாலுக்குள் இருக்கும் நெய் நம் கண்களுக்கு எளிதில் தெரிவதில்லை. அவ்வாறே, உண்மை யான, பக்தி யானால் மட்டுமே இறைச் சக்தியை உணரமுடியும்.

*நெருப்பு எரியும் இடத்தில்தான், புகை கிளம்பிக் கொண்டு இருக்கும். நெருப்பினால், நமக்குத் தேவையான வற்றை சூடுபடுத்திக் கொள்ளலாம். மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்திக்  கொள்ள லாம். ஆனால், புகையினால் எந்தவொரு பயனும் விளையப்போவதில்லை.

*வயலில் தூவப்படும் சில விதைகளே, பல ஆயிரம் மடங்கு பயிர்களை திருப்பித் தருகின் றன.  அதைப் போலவே, ஒருவர் செய்யும் நன்மையும் தீமையும் அவர்கள் செய்ததற்கு ஏற்றவகையில் பல மடங்காகப் பெருகி, அவரிடமே திரும்ப  வந்துசேரும்.

*சிலர் எதற்காகப் பேசுகிறோம்,  எந்த நோக்க த்தை நிறைவேற்றுவதற்காகப் பேசுகிறோம் என்று வரை  முறையில்லாமல் பேசி விடுகிறார் கள். இதனால் எந்த ஒரு நன்மையும் உண்டாகப் போவதில்லை. ஆகவே, முடிந்தவரை  அமைதி யாக இருங்கள்.

* நாம் தினமும் வீட்டில் பயன்படுத்தும் செப்புப் பாத்திரத்தித்தில் களிம்பு ஒட்டியிருந்தால்,  அதை நாம்  நன்றாகத் துலக்கிப் பயன்படுத்த வேண்டும். இதுவே நெல்லாக இருந்தால், உமியை விலக்கி, சமைக்கப் பழகவேண்டும். அதுபோல், மனிதர்களாகிய நாம் தீமைகளை விலக்கி, நன்மைகளைச் சிந்தித்து வாழ வேண்டும்.

*பறவைகளுக்கு இரு சிறகுகள்,  புகைவண்டிக்கு தண்டவாளங்கள், மனிதனுக்கு இரு கால்கள் மற்றும் இரு கண்கள் இருப்பது போல், மாணவர்க ளுக்கு இரு குணங்கள் நிச்சயம் இருக்க வேண் டும். ஒன்று அடக்கம், இன்னொன்று குருபக்தி. இந்த இருகுணங்களும் உள்ள மாணவன்தான் முன்னேற்றம் அடைவான்.

* தீப்பந்தத்தைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும், அதன்  ஜுவாலை மேல்நோக்கி எரிந்து கொண்டிருப்பதுபோல், உயர்ந்த குணத்தை உடையவர்களைக் கீழ்ப்படுத்த முயன்றாலும் முடியாது.

* இரவில் முறையாக தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. இல்லையேல், மனதை உயர்நிலைக்கு இட்டுச்செல்லும் அற நூல்களைப் படியுங்கள். அதுவே நம்மை நல்வழிப்படுத்தும்.

* பிறருடைய குற்றங்களை அலசி, ஆராயக் கூடாது. நாம் செய்த  குற்றங்களை மூடி மறைக் கவும் கூடாது.

* பணிவு என்பது  மனித வாழ்க்கையின் உயிர்நாடி. அதனால், நம் வாழ்க்கைத்தரம் உயர்ந்த நிலையை அடைகிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...