விருந்துபசாரம்.... நங்கநல்லூர் J K SIVAN
மனித மனத்துக்கு கொள்ளளவு என்பது கிடையவே கிடையாது. எவ்வளவு கொடுத்தாலும் வாங்கி எங்கேயோ போட்டுக்கொள்ளும். சில சமயம் ஏதோ ஒன்று வேண்டும் என்று அதில் தேடுவது கடினம். அதிர்ஷ்டமும் இருந்தால் தான் கிடைக்கும். சட்டென்று நினைவுக்கு வந்துவிடும். சில சமயம் எனக்கு என் அப்பா பேர் கூட எவ்வளவோ யோசித்தாலும் ஞாபகம் வராது.
எங்கோ என்றோ பார்த்த நீல சட்டை பழைய பேப்பர் காரன், எவ்வளவு பழைய ஹிந்து பேப்பர் போட்டாலும் அத்தனையும் அவன் தராசில் ரெண்டு கிலோ தான் காட்டும் அளவுக்கு ஏதோ ஒரு வித்தை பண்ணுபவன் பேர் மாணிக்கம் என்று உடனே ஞாபகம் வரும். இது மனதின் தன்மை.
இதோ பாருங்கள் என்னுடைய மொபைல் டெலிபோனில் எப்போதோ சேமித்து வைத்த தியாகராஜ ஸ்வாமிகளின் உபச்சாரமு என்ற பைரவி கீர்த்தனை கொஞ்சம் கேட்டபோது ஏதோ ஒரு பழைய ஞாபகம் நெஞ்சிலிருந்து மேலெழும்பியது.....சம்பந்தா சம்பந்தமில்லாத விஷயங்கள் ஒன்றோடொன்று ஏன் ஒட்டிக் கொள்கிறது.
என் சிறு வயதில், அதாவது 75 வருஷங்களுக்கு முன்பு, நமது குடும்பங்களில் என்ன பழக்கம் என்றால் எந்த சொந்தக்காரரும் , நண்பர்களும் முன்கூட்டியே நான் உங்கள் வீட்டுக்கு வரேன் என்று சொல்லிவிட்டு வரமாட்டார்கள்.
திடீரென்று வாசலில் மாட்டு வண்டியோ குதிரை வண்டியோ வந்து நிற்கும். பெட்டி பை யோடு இறங்குவார்கள். போன் வசதிகள் கிடையாது. லெட்டர் போட்டிருந்தார்களாம். அந்த போஸ்ட் கார்டு அவர்கள் வந்தபிறகு தான் வந்து சேரும்.
அன்று காக்கை காலை ரொம்ப நேரம் விடாமல் கொல்லையில் மல்லிகைப் பந்தலில் உட்கார்ந்து கத்திக் கொண்டே இருந்தது. பசியோ ஆகாரம் தேடுகிறதோ என்று ஏன் என்று நான் கூட ரெண்டு தடவை சென்று பார்த்தேன்.
காக்கை இப்படி விடாமல் கத்தினால் வீட்டுக்கு விருந்தாளி வரப்போகிறார்கள் என்று அர்த்தம் என்று அம்மா சொல்வாள்..
அது காலை 10-11 மணிக்கு பலித்து விட்டதே. வாசலில் குதிரை வண்டியிலிருந்து மூட்டை முடிச்சோடு ஒரு நாலு டிக்கெட் வந்து இறங்கியது.
'' அம்மாஞ்சி ஒண்ணேகால் ரூபா கொடுங்கோ வண்டிச் சத்தத்துக்கு. ரயிலடிலேருந்து வீட்டுக்கு கொண்டுவிட அவ்வளவா கேட்பா இங்கே ?''
தொச்சா எனும் துரைசாமி அய்யர் உரக்க அப்பாவைப்பார்த்து காசு கேட்டார். இல்லை கத்தினார்..
நம்மிடமே சில்லரை கேட்டு வண்டிக்கு கொடுத்து விட்டு வந்து இறங்கும் சில உறவுகள் அப்போது உண்டு. சிலது நடந்தே வந்து கதவை தட்டும்.
''அட சின்னம்பியும் வந்திருக்கானா, அண்ணா, வாங்கோ, வாடா வா, வாம்மா சுப்பு, என்று வாசலில் சென்று அம்மா வரவேற்றாள். வண்டிக்காரனுக்கு சில்லறை கொடுத்தாள் .
''பாத்து ஒரு யுகம் ஆகிறது. கடோசியா கும்பகோணம் வைத்தா கல்யாணத்தில் பார்த்தது... சௌக்கியமா '' என்கிறார் தொச்சா.
அதற்குள் சட்டையை கழட்டிவிட்டு பூணலால் முதுகை சொரிந்து கொண்டே உள்ளே வந்தார். வாங்கோ வாங்கோ என்று அப்பா உபசரித்தார்.
'' வாங்கோண்ணா வாங்கோ'' .
புகையிலை வெற்றிலை காவியேறிய வாய் முழுதும் நிறைந்த பல்லோடு தொச்சா அவர் பின் நாணிக்கோணிக் கொண்டு அவர் மகன் சின்னம்பி என்கிற சாமிநாதன் அவன் தாய் சுப்புலக்ஷ்மி கூடவே சிறிய பெண் கோகிலா அனைவரும் உள்ளே வந்துவிட்டார்கள்.
வந்த ஒரு நிமிஷத்தில் கோகிலா உள்ளே ஓடி நடையில் தொங்கிய ஊஞ்சலை ஆட்டி ஏறி அமர்ந்தாள். கீழே அவள் கால் பட்டு தூண் அருகே கீழே வைத்திருந்த தேங்காய் எண்ணெய் சம்படம் சரிந்து கொட்டியது. அப்பா ஓடிப்போய் அதை நிமிர்த்தி மீதி எண்ணையை
காப்பாற்றி தரையில் கொட்டிய எண்ணையை துடைக்க துணியை எடுக்க உள்ளே போனார்.
எல்லோருக்கும் அம்மா காப்பி கொடுத்தாள் . அடுத்த அரைமணி நேரம் ரெண்டு வருஷ விஷயம் வேகமாக பரிமாறிக் கொண்டார்கள்.
'' என்னடி சுப்பு ரொம்பவே இளைச்சு போயிட்டே.? உன் பெரிய அக்கா நாகு என்ன ஊரோட வந்துட்டாளா? அவ ஆம்படையான் இன்னும் மளிகை கடைலே தான் வேலை பார்க்கிறானா? பெரியம்மா வீட்டோட இருக்காளா புள்ளே கிட்டே போய்ட்டாளா? சின்னம்பி இப்போ எத்தனாங்க்ளாஸ் ?'' இது மாதிரி எல்லாம் அடுக்கடுக்காக .... பல கேள்விகள். சிலது உறுத்தும்.
''அம்மாஞ்சி உங்களைப் பார்த்து யுகமாய்டுத்து. '' என்று திரும்பி திரும்பி தொச்சா சொல்லிக்
கொண்டே இருந்தார். அவரிடமிருந்து விஷயம் எதுவும் வாங்க முடியாது.
அவருக்கு பட்டணத்தில் உயிர் காலேஜ் செத்த காலேஜ் பார்க்க வெகு காலமாக ஒரு அபிலாஷை. இந்த தடவை அதை நிறைவேற் றிடவேண்டும் என்று தீர்மானம்.
எல்லோரும் அப்பா அம்மாவுக்கு நமஸ்காரம் பண்ணினார்கள். வெற்றிலை பாக்கு தட்டில் ரெண்டு ரூபா பணம் வைத்து அம்மா அப்பா கொடுத்ததை தொச்சா தொடும் முன்பே சுப்பு எடுத்து முடிந்துகொண்டாள்.
சின்னம்பி கண்ணில் அடுத்த வீட்டு பலராம பிள்ளை வீட்டு மாமரமும் அதன் கிளையில் தொங்கிய மாங்காய்களும் பட்டதால் யாரையும் கேட்காமல் பக்கத்து வீட்டு மரத்தில் தாவி ஏறிவிட்டான். பிள்ளைவாள் முசுடு. யாருக்கும் எதுவும் கொடுப்பதே பிடிக்காதவர். அவர் மனைவி மரகதம் அம்மாள் அப்படியில்லை. கையில் எது கிடைத்தாலும் யாராவது கேட்டால் கொடுப்பவள். அரைநிஜார் பை நிறைய ஆறு ஏழு மாங்காய் பறித்து நிரப்பிக் கொண்டு சின்னம்பி இறங்கி ஓடிவந்துவிட்டான். அப்புறம் என்ன? அவனைப் பார்த்துவிட்ட பிள்ளை மரகதத்திடம் கத்திக் கொண்டிருந்தார்.
''பிள்ளைங்க அப்படிதான் செய்யும். பல்லில்லாத நீங்களா புளிப்பு மாங்கா கடிக்கப் போகிறீங் க சும்மா வுடுவீங்களா . பெரிசு படுத்தி லபலப ன்னுவீங்களா.?
''அவன் வேறே யாரோ பையன். பக்கத்து அய்யர் வீட்டு பிள்ளை இல்லை.. பார்த்துட்டு . சும்மாவா இருக்கறது.
''வேறே பையன் யாரும் இல்லை, பக்கத்து வீட்டுக்கு வந்திருக்கிறா உறவு மனுஷா வெளியூர்லேருந்து வந்திருக்காங்க. அந்த பையன் நம்ம அய்யர் பையன் ஈடு தான். ஏதாவது பேசி உறவைக் கெடுத்திடாதீங்க.''
கோகிலா வீட்டை சுற்றி பார்த்தாள் . அலமாரி யில் இருந்த நீல நிற கண்ணாடி குடுவையை JUG பார்த்துவிட்டாள் . அப்பாவுக்கு யாரோ கொடுத்த பரிசு அது. அதைத் தூக்கி போட்டு பிடிக்கிறேன் பார் என்று கீழே போட்டு உடைத்து விட்டாள் .
''அடடா இதிலே போயா விளையாடுவா''... என்று சொல்லிக்கொண்டே அம்மா அந்த கண்ணாடி துண்டுகளை பெருக்கி பொறுக்கி வெளியே போட்டு விட்டு வரும்போது மேஜையின் மேல் வைத்திருந்த அப்பாவின் வெள்ளை வேஷ்டி ஜிப்பா மேல் நீல இங்க் பாட்டிலை தொச்சா கவிழ்த்து விட்டிருந்தார்.
''அடடா, இங்க் கொட்டிடுத்தே. மேஜைமேல் இங்க் பாட்டிலைப் பார்த்தேன். என் பேனாவுக்கு கொஞ்சம் இங்க் போடலாம்னு திறந்தேன், கை நழுவி கீழே விழுந்துட்டுதே. வெள்ளை வேஷ்டி சட்டை யெல்லாம் மேஜைமேலேயா வைப்பா அலமாரிலே வைக்க கூடாதோ. மேலே எங்கேயா வது கொடியிலே போடமாட்டாரோ அத்திம்பேர்?
''இல்லை அண்ணா, அவர் இன்னிக்கு ஒரு கல்யாணத்துக்கு போய்ட்டு வரணும்னு உள்ளே சலவை பண்ணின துணியிலேருந்து எடுத்து அதை இங்கே வச்சார். அதுக்குள்ளே வேறே வேலை எல்லாம் வந்துட்டுது. கவனிக்க முடியல்லே. பரவாயில்லே நான் தரையை துடைச்சுட்டு ட்ரெஸ்ஸெல்லாம் உடனே சோப்பு போட்டு கசக்கி காய போட்டுடறேன் ''
அம்மா குரல் கொடுத்து முடிக்கிறதுக்குள் வாசலில் வீல் என்று கத்தல் .
''என்னடா அங்கே சத்தம்?'' என்று அம்மா ஓடினாள்.
வாசலில் திண்ணை அருகே கோகிலா வாக்குமூலம் கொடுத்தாள் .விவரம் இது தான்:
நான், என் அண்ணா, சின்னம்பி கோகிலா. இந்த கும்பல் நடுவே என் அண்ணா கையில் நடு விரலில் ரத்தம். அவனது ''ஹா லக்ஷ்மணா'' என்ற மாரிசன் குரல் தான் அம்மாவை அங்கே இழுத்தது.
''என்ன ஆச்சு, ஏன் ரத்தம் பாலு விரல் லே ?
''சின்னம்பி மரத்துலே ஏறி பறிச்சுண்டு வந்த மாங்காயை வெட்டி மிளகாய் பொடி போட்டு சாப்பிடலாம்னு சொன்னான். நான் உள்ளே போய் மிளகா பொடி ,உப்பு, கொண்டு வந்து கொடுத்தேன். சின்னம்பி அப்படியே ஒரு கத்தி கொண்டுவா நறுக்க என்று சொன்னதால் அண்ணா சமையல் ரூம்லேருந்து ஒரு கத்தியைக் கொண்டு வந்து கொடுத்தான் .
''நான் தான் நறுக்குவேன்'' ன்னு சின்னம்பி கத்தியைப் பிடுங்கினான்.
''இல்லே நான் தான் நறுக்குவேன் '' னு அண்ணா கத்தியை பிடிச்சிண்டு தரல . சின்னம்பி வேகமாக கத்தியை பிடுங்கினான். அண்ணா வலது கை நடு விரல்லே கத்தி பட்டு வெட்டிடுத்
து.
அம்மா சுண்ணாம்பு கொண்டுவந்து போட்டு கட்டுப்போட்டாள் . பெருமூச்சு விட்டாள்.
உள்ளே மித்ததிலேயிருந்து சுப்புலக்ஷ்மி அம்மாள் குரல் கேட்டது.
''ஏண்டி மீனு, உங்காத்து பாத்ரூம் வழுக்குமா. தெரியாம வேகமா நடந்துட்டேன். கீழே சறுக்கி விட்டுடுத்து. இடது கால் சப்பை வலிக்கி றது. எழுந்துக்க முடியல. விண் விண் ணுனு தெரிக்கிறதே. என்ன பண்றது?. இங்கே யாரு நல்ல டாக்டர். அவா கிட்டே போய் பாக்கலாமா?? ஆத்துக்காரர்ட்டே சொல்லி ஏற்பாடு பண்ணு .''
இன்னும் ஏழு நாள் இந்த குடும்பம் இங்கே இருக்கப்போவதாக விஷயம் அறிந்த அப்பாவும் அம்மாவும் பெருமூச்சு விட்டார்கள்.... அந்த ஏழு நாட்கள்...... நான் எப்படி விலாவாரியாக விவரிக்க முடியும்?
ஏனென்றால் சின்னம்பி பிள்ளைவாள் வீட்டுக்கு விஜயம் செய்தான், பிள்ளையார் கோவிலுக்கு சென்றான், சத்தார் கடைக்கு போய் அங்கே அவருடைய சைக்கிளை ஓட்டினான், நீலவேணி அம்மன் கோவில் குளத்தில் நீந்தப் போவதாக சவால் விட்டு குளத்தில் இறங்கினான். பம்பரம் விளையாட்டில் ரெண்டு பேருடன் சண்டை. பம்பர ஆணியால் நெற்றியில் கிட்டுவை குத்தியதாக ஒரு கம்ப்ளெயிண்ட். இன்னும் எத்தனையோ இருக்கிறதே..
No comments:
Post a Comment