Saturday, May 1, 2021

KUTRALAM

 


குற்றால  நினைவு  ....   நங்கநல்லூர்  J K  SIVAN 


கோடை வெயில் தஹிக்கிறது.  ரெண்டு  மூன்று  வருஷம் முன்பு  குற்றாலம்  போனதை   நினைத்தால்   சந்தோஷமாக இருக்கிறது.   கிட்டத்தட்ட  ஒரு வருஷத்துக்கு மேலாக  நான் தான் வீட்டை விட்டு வெளியே  காலை வைத்து  நகரவே முடியவில்லையே.  

முன்பு,  குற்றால நாதனை தரிசித்து, ஐந்து சபைகளில் ஒன்றான சித்ர சபை மண்டபத்தில் சென்று அற்புத சித்திரங்களை, ஓவியங்களைப்  பார்த்தது, சிலு சிலு வென்று  காற்றில்  அருவியின்  சாரல் மெலிதாக என்னை என் உடையை நனைத்தது, அருவியில்  திருப்திகரமாக  ஜல தாரை இருந்தது.  அரைமணிக்கும் மேலாக  குளித்தது.  எங்கும்  குரங்குகள்  சேஷ்டை, கண்ணாடியை,  மொபைல் போன், பையை, பர்ஸை   எல்லாம் பிடுங்க வந்தது  எல்லாம்   கண் முன் தோன்றுகிறது.   

 ஒரு அற்புதக்  கவிராயர்  குற்றாலத்தில் வசித்தார்.   அவர் எழுதிய  அமர  நூல் தான்  திருக் குற்றாலக் குறவஞ்சி. அவர் பெயர்  திரிகூட இராசப்பக்கவிராயர்,    சந்தம்  ஓசை  நயம் உள்ள  பாடல்கள் அதில் உள்ளன.  பள்ளியில் நான் படித்த காலத்தில் அதன் அருமை தெரியாத வயது.  குற்றால குறவஞ்சி 200 வருஷங்களுக்கு முன்பு   மேலகரம் என்ற ஊரில் வாழ்ந்த  மேலே சொன்ன  திரிகூடராசப்பக் கவிராயர் எழுதியது.  

இதுவரை எத்தனையோ  ஆயிரம்   பள்ளி மாணவிகள்  குழந்தைகள் இந்த பாடல்களுக்கு  குறத்தி வேஷம் போட்டு  நடனம் ஆடி இருக்கிறார்கள்.   குற்றால அழகை, எழிலை, இயற்கை சூழ்நிலையை  கவிராயர்  பாடல்களில்  காட்டுகிறார். சிலது சொல்கிறேன். படித்து ரசியுங்கள்.  காசு கொடுக்காமல் இந்த வெயில் காலத்தில், கொரோனா  தொந்தரவோ, பயமோ இன்றி   வீட்டிலிருந்தே   குற்றாலம் போவோம்.

''வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
     மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பார்
    கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவித் திரை எழுப்பி வானின்வழி ஒழுகும்
     செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங்காரர்
     குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே.''

குற்றால  அருவி கொட்டும்  மலையின் மேலே  நிறைய  பழம் தரும்   மரங்கள் கண்ணைக் கவரும் கனிகளோடு இருப்பதால்   குரங்குகளுக்கு  படு குஷி.   குரங்கு குடும்பங்களில்  ஆண் குரங்குகள் என்ன செய்யும் தெரியுமா?  மரங்களில் தாவி ஏறி உச்சாணி கிளையில் அமர்ந்து  சுவையான  பழங்களைப் பறித்துக்கொண்டு வந்து பெண்  குரங்குகளுக்குக் கொடுத்து அவற்றோடு   ஆசையோடு  கொஞ்சும். அப்போது நிறைய  பெண் குரங்குகளின் கைகளில் இருந்து கீழே  விழுகின்ற  பழங்களை எடுத்துக் கொள்ள   விண்ணிலிருந்து வந்த  தேவர்கள் கெஞ்சுவார்கள்.  வேடுவர்கள் அந்த வானவர்களைக்  கீழே வருமாறு அழைப்பார்கள். வானத்திலிருந்து சித்தர்கள் வந்திருந்து சித்த  மூலிகைகளைப் பயிரிட்டு வளர்ப்பார்கள். தேன் அருவியின் அலைகள் மேலெழுந்து வான்  வழியாக ஒழுகிக்  கொண்டிருக்கும். அதிலே செங்கதிரவனின் தேர்ச் சக்கரங்கள் வழுக்கி விழும். வளைந்த பிறையினைச் சடையிலே அணிந்திருக்கும் குற்றாலநாதன்   குடிகொண்டிருக்கும் அத்தகைய வளம் கொண்ட திரிகூட மலைதான் எங்கள் மலை'' என்கிறாள் ஒரு குற வஞ்சி.

 இன்னொரு பாடலில்  அந்த  வஞ்சி  தனது ஊரான  குற்றால மலை, அதைச் சார்ந்த மற்ற மலைகள் பெயர்களை சொல்லி, அங்கெல்லாம் அவள் சுற்றத்தார், உறவினர் இருப்பதை சொல்கிறாள். எல்லா மலைகளுமே   எங்கள் சொந்தக்காரர்கள் ஊர் மலைகள் தான்,   ஆனாலும் அந்த மலைகளில்  எங்கே  மேகங்களின்  மேகங்களின் இடியோசை  டமடம  வென்று  பெரிய முழவு, மாதிரி  ஒலிக்கிறதோ,  அந்த  மேகங்களின் இடி சப்தத்தில் மயங்கி,  மயில்கள்  கூட்டம் கூட்டமாக வந்து  தோகைகளை  விரித்து ஆடுகின்றதோ  அது தான் எங்கள்   திரி கூட மலை. நான்  வசிக்கும் மலை என்கிறாள்.   

நான் படிக்கும்போது கோடம்பாக்கம் சூளைமேட்டில் கார்பொரேஷன் பள்ளிக்கூடத்தில்  சரோஜினி  டீச்சேர் இந்த பாடல்களை பாடி  தானும்  ஆடி,   மாணவிகளுக்கும்  நடனம் சொல்லித் தருவாள். அப்போது மைக், டேப் ரெக்கார்டர்,  வீடியோ எல்லாம் இல்லை.  மனப்பாடமாக  பாடுவார்கள்.  நடுவில் கூடை வைத்து கும்மி அடிப்பது கண் முன்னே நிற்கிறது.  ஆகஸ்ட் 15,  ஜனவரி 26   பள்ளி விழாக்களுக்கு  ஒரு மாதம் முன்னே  இந்த ரிஹெர்சல்  தினமும்  காலை மாலை தொடர்ந்து நடக்கும்.

''கொல்லிமலை எனக்கிளைய செல்லி மலை அம்மே
     கொழுநனுக்குக் காணிமலை பழநிமலை அம்மே
எல்லுலவும் விந்தைமலை எந்தைமலை அம்மே
     இமயமலை என்னுடைய தமையன்மலை அம்மே
சொல்லரிய சாமிமலை மாமிமலை அம்மே
     தோழிமலை நாஞ்சிநாட்டு வேள்விமலை அம்மே
செல்லினங்கள் முழவுகொட்ட மயிலினங்கள் ஆடும்
     திரிகூட மலையெங்கள் செல்வமலை அம்மே!




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...