Saturday, May 1, 2021

PESUM DEIVAM

 

பேசும் தெய்வம்  --  நங்கநல்லூர்  J  K SIVAN 


 ''மாறிக் கொண்டே  இருக்கும் மனஸு ''


மனித  மனம்  இருக்கிறதே,  அதை சரியாகத் தான்  பலர்   அது ஒரு  குரங்கு என்றார்கள்.   குரங்கு  ஒரு  நிமிஷம் கூட  ஒரு   நிலையில்  இல்லாமல் கிளைக்கு கிளை தாவுகிறதைப்  போல்  எதிலும் ஒரு கண  நேர விருப்பம், ஈடுபாடு,  உடனே  அதில் அலுப்பு, சலிப்பு  இப்படி  மாறி மாறி செயல்படும் மனது   குரங்கைக்   காட்டிலும் மோசம். 

இதை அனுபவித்து  இதில்  இருந்து  மீள  ஒரு  உன்னத ஏற்பாடு, சலிப்பு தட்டாத வகையில் எதிலும் மாறுதல், மாறுபாடு  எல்லாம் உண்டாக்கி   இந்து மதத்தில் பெரியோர்கள் அளித்திருக்கிறார்கள்.   மாறுபாடு ஒரு  ருசி தந்து  அலுப்பை போக்குகிறது.  இது  மனித இயற்கை  - 


மனம் அடிக்கடி  சலிப்படையும் . அதை   விருப்பாக  மாற்ற உதவும்  வழி  தான்   பகவானை பல  ரூபங்களில் பல   முறைகளில், பல பண்டிகைகள்,  பட்சணங்களோடு  வழிபடுவது   என்பதை  தெளிவாக  மஹாபெரியவா  சொன்னதை  சுருக்கி  விளங்கும்படியாக  சொல்கிறேன்.  

சாதாரண மநுஷயர்கள் மட்டுமல்ல பக்குவ ஸ்திதியில் ரொம்ப தூரம் முன்னேறியவர்களாக இருந்தால்கூட, மநுஷ ஸ்வபாவம் எப்படியிருக்கிற  தென்றால் ஒன்றிலேயே எக்காலமும் முழு மனஸையும் கொடுப்ப தென்றால் முடிவதில்லை. இது இப்போது பிடிக்கிறது, சற்று நேரத்தில் அது அருவறுப்பாகிறது.  எதை வேண்டாம் என்று சொன்னோமே, வெறுத்தோமோ , அதன் பின் மனம் சிறிது கணத்திலேயே  ஓடுகிறது. 

எத்தனை நன்றாயிருந்தாலும்  அது ஒன்றிடமே முழு ஈடுபாட்டை ஸதா காலமும் வைக்க முடிவதில்லை.

இன்றைக்குச் சமையல்-- ஸாம்பார், ரஸம், கறி---நன்றாகத்தானிருக்கிறது. அத்ருப்திக்குக் கொஞ்சங்கூட இடமில்லை. ஆனால், நித்யம் (தினந்தோறும்) இதே சமையல் என்றால் பிடிக்கிறதா?

கறி காய்களை, குழம்புத் தானை மாற்றத் தோன்றுகிறது!  அப்புறம், 'இது எதுவுமே வேண்டாம். ஒரு நாள் சித்ரான்னங்களாகச் சாப்பிடலாம்' என்று தோன்றுகிறது.

வித்வான் எத்தனை நன்றாகப் பாடினாலும், அதே பாட்டு, அதே ராகத்தை ஒவ்வொரு கச்சேரியிலும் பாடினால் அலுத்துப் போகிறது.

எதில் (எந்தத் துறையில்) போனாலும் இப்படித்தான் பல தினுஸாக,மாறுபாடாக வேண்டியிருக்கிறது.

அவ்வப்போது ஒவ்வொன்றிடமும் முழு ஈடுபாடு இருந்தாலும்- இன்றைக்குத் தயிர்வடை என்றால் சப்பு கொட்டிக்கொண்டு ஐந்து ஆறு என்று உள்ளே தள்ளினாலும், நாளைக்கு, நாளன்றைக்கு, நாலாம் நாள்,அஞ்சாம் நாளும் அதுவேதான் என்றால், இன்றைக்குச் சப்புக் கொட்டினவர்களே அன்றைக்கு முகத்தைச் சுளிக்கிற மாதிரி-திரும்பத் திரும்ப அது ஒன்றேதான் என்று வரும்போது அதிலே ருசி, ஈடுபாடு குறைந்து விடுகிறது.

இது தெரிந்துதான் நம்முடைய மதத்தில் இத்தனை ஸ்வாமி, விதவிதமான ரூபம், விதவிதமான அலங்காரம், விதவிதமான வாஹனம், அததற்கும் விதவிதமான பூஜா பத்ததி என்று வைத்திருக்கிறது.

கோயிலுக்குப் போகிறோம். பிள்ளையார் ஸந்நிதியில் நிற்கிறோம். அப்போதைக்கு ஒரு க்ஷணம்,இரண்டு க்ஷணம் மனஸு குவிந்த மாதிரிதான் இருக்கிறது. அப்புறம் கையை, காலைச்  சொறிந்து கொள்கிறோம். கைக்கடிகாரத்தில் மணி பார்த்து  எப்போது வெளியே போவோம் என்று எண்ணுகிறோம்.   மனஸு பிய்த்துக்கொண்டு  வேறு எங்கோ  கிளம்பி விடுகிறது!  

மனஸை அப்படியே எந்தக் குப்பைத் தொட்டிக்கு வேண்டுமானாலும் ஓடட்டும் என்று விட்டு விடுவதா?
அப்படி விட்டு விடாமல், நல்லதிலேயே, தெய்வ ஸம்பந்தமாகவே அந்த மனஸை இழுத்தால்தானே தேவலை?
மனஸை  எப்படி சுண்டி  எப்படி இழுப்பது?

பாழும் மனஸுக்கு இந்த விக்னேஸ்வரமூர்த்தி, தொப்பையும் தொந்தியுமாக இத்தனை அழகாக உட்கார்ந்தி ருந்துங்கூட, அவரிடமே தொடர்ச்சியாக ஒட்டிக்கொண்டிருக்க முடியவில்லையே!'
''பரவாயில்லையப்பா!'  என்று இங்கேதான் நம் ஸமயாசார புருஷர்கள் ஆறுதல் தர வருகிறார்கள்.

'மனஸின் நேச்சர் அப்படித்தான் அப்பா!   அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் திருத்தி நிலையாக ஒருமுகப் படுத்த முடியுமப்பா!  

அதற்கு எதிலும் 'சேஞ்ச்'வேண்டும். தெய்வ ஸம்பந்தமாகவுங்கூட அப்படி வேண்டும். அதையும்தான் நம்முடைய மதம் தருகிறதே!

விக்நேஸ் வரரிடம் ஈடுபாடு குறைகிறதா, அழாதே!  இதே 'சேஞ்சா'க ஸுப்ரஹ்மண்யர் ஸந்நிதி,அப்புறம் இன்னும் பல 'சேஞ்ச்'கள் -  அம்மன், ஸ்வாமி, தக்ஷிணாமூர்த்தி, துர்க்கை, நடராஜா, மநுஷ்ய ரூபத்தில் வந்த அறுபத்து மூவர் என்று எல்லாம் ஒன்று சேர்த்துத்தானே கோவில் என்று வைத்திருக்கிறோம்.

ஒவ்வொன்றிடமும் ஒரு க்ஷணம், இரண்டு க்ஷணம் மனஸ் ஈடுபட்டுக் கும்பிட்டு விட்டுப்  போயேன். மொத்தத்தில் ஒரு கணிசமான நாழி உன் மனசு தெய்வ ஸம்பந்தமாகவே ஈடுபட்டிருக்கும்  இல்லையா?. இதுவே பெரிய விஷயம்.  

நம்முடைய மதத்தின் சிறப்புகளிலெல்லாம் பெரிய சிறப்பு ஒன்று எது தெரியுமா?  ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே  தான் என்று காட்டுகிற ஒரே மதம் ஹிந்து மதம்தான் என்று பலபேர்,அறிவாளிகள், அந்நிய தேசத்தவர்கள்கூட, ரொம்பவும் சிறப்பித்துச் சொல்கிறார்கள். 

'எந்த மதத்திலும் இல்லாத அத்வைத ரத்னம் இருக்கிற இந்த மதத்தில், எந்த மதத்திலும் இல்லாத அளவுக்கு இத்தனை த்வைதமான ஆசார அநுஷ்டானங்களும், சாமிப்  பட்டாளமும் இருக்கிறதே!  இவை ஒன்றுக்கொன்று ஒரே முரண்பாடாக இருக்கிறதே'  என்று அவர்களில் ரொம்பப் பேர் வருத்தப்படுகிறார்கள்.

எனக்கோ (மஹா  பெரியவாளுக்கு) என்ன தோன்றுகிற  தென்றால்,அத்வைதம் நம்முடைய பெரிய சிறப்புத்தான் என்றாலும் , அதைவிடவும் சிறப்பாக எது தோன்றுகிறது?  இப்படி ஒன்றேயான அத்வைதத்தைச் சொன்ன மதத்திலேயே வித்யாஸம் வித்யாஸமாக இத்தனை வர்ணாச்ரம வ்யவஸ்தைகளும், இத்தனை பட்டாளமாக தெய்வங்களும் வைத்திருப்பதுதான்!  

அத்வைதம் ஏக பரமாத்மா என்பது ஐடியல்.   அப்படியென்றால்  இத்தனை ஸ்வாமி பட்டாளம்  ஏன்  ?  இத்தனை விதமான ஆசார வ்யவஸ்தைகள் எதற்கு?  என்பது ப்ராக்டிகல்.   ப்ராக்டிகலில் ஆரம்பித்து க்ரமேண (படிப்படியாக) முன்னேறினால்  தான்  ஐடியலுக்குப் போய்ச்  சேர முடியும். இப்போதே ஐடியல் என்று யத்தனம் பண்ணினால் ஒன்று தோல்வியாக ஆகும், அல்லது, அதைவிடத்   தப்பாக ஹிபாக்ரிஸியாக, போலி வேஷ மாகத்தான் ஆகும்.

அத்வைதத்தைச் சொன்ன மதத்தில் இத்தனை த்வைதத்துக்கு இடம் கொடுப்பதா என்று கொஞ்சங்கூடத் தயங்காமல், ஜனங்களின் மனப்பான்மையை நன்றாகப் புரிந்துகொண்டு, அநுதாபத்துடன், பரம கருணையுடன் இத்தனை தர்மாசாரப் பிரிவினைகளையும், சாமிப் பட்டாளத்தையும் இடம் கொடுத்து வைத்துக்   கொண்டிருப்பதுதான் சிறப்புக்களில் பெரிய சிறப்பு. அதனால்தான் அத்வைத ஆசார்யாளான நம்முடைய பகவத் பாதாளே வர்ணாச்ரம வ்யவஸ்தைகளையெல்லாம் மறுபடி நன்றாக ஒழுங்குபடுத்தி நிலை  நாட்டினார்.

பஞ்சாயதனம் என்று ஐந்து தெய்வங்களை வைத்துப் பூஜை பண்ணும்படியாக ஏற்பாடு செய்தார். அதோடு, 'ஸுப்ரஹ்மண்யரையும் பூஜை பண்ணு'   என்கிற மாதிரி (ஸுப்ரஹ்மண்ய) புஜங்கம் பாடி வைத்திருக்கிறார். ஷண்மத ஸ்தாபனம் என்று பண்ணும்போது அதில் (ஸுப்ரஹ்மண்ய உபாஸனையான) கௌமாரம் என்பதையும் சேர்த்துக்  கொண்டார். இன்னும்,  ராமன், க்ருஷ்ணன், நரஸிம்மமூர்த்தி, அம்பாள் என்று எடுத்துக்கொண்டால் அதிலேயே த்ரிபுரஸுந்தரி, பவாநி, ப்ரமராம்பா, சாரதாம்பா என்று பல ரூபபேதங்கள், கங்காதி புண்ய நதிகள்-என்று ஒன்று பாக்கியில்லாமல் அத்தனை சாமிப்பட்டாளத்தின் மேலேயும் ஸ்தோத்ரங்களைப் பாடி வைத்திருக்கிறார்.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...