இறைவன் திட்டம். -- நங்கநல்லூர் J K SIVAN
மாற்றம் காலத்தின் கட்டளை. நிகழ வேண்டிய ஒன்று என்பதால் அதை ஏற்பதில் தயக்கம் அவசியம் இல்லை.
நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை போதும்
பழசை நினைக்கும்போது அந்த கால வாழ்க்கை, எந்த அளவு இப்போது நாம் வாழும் வாழ்க்கையை விட எப்படி மாறுபட்டு இருந்தது என்று காட்டுகிறது. இன்னும் எழுபது என்பது ஆண்டுகளுக்கு பிறகு நமது இப்போதைய வாழ்க்கை ''ஆஹா எவ்வளவு அற்புதமாக நம்முடைய முன்னோர் வாழ்ந்தார்கள்'' என்று நினைக்கப்படும். அது தான காலத்தின் மாறுதல். மக்களின் மனமாற்றம் தான் காலத்தின் மாறுதல்.. கடந்தகாலம் என்பது ஒரு வழிப்பாதை.. நம்மால் அதை மீண்டும் அனுபவிக்க முடியாது. நடந்தது நடந்தது தான். அப்போது கற்ற அனுபவம், பாடம், இப்போதைய வாழ்வில் எப்படி பயன் தரும் என்று யோசித்து நடக்கும் காலத்தை சுகமானதாக வேண்டுமானால் மற்ற முயல்வோம்.
வாழ்வு நலமானதாக, சுகமானதாக மாற, முதலில் சிலரை தவிர்க்க வேண்டும். புறங்கூறுபவர்கள், எதையும் எதிர்த்து வாதம் செய்பவர்கள், கூடிக் கூடி ரகசியமாக தீய சிந்தனைகளை பரப்புபவர்கள்., எல்லோரையும் சபிப்பவர்கள், குறுக்கு வாதங்கள் புரிபவர்கள், குதர்க்க வாதிகள், லஞ்சப்பிரியர்கள்,, -- இவர்களுடன் பழக கூடாது. இது சத்சங்கமல்ல.
எவருடைய செய்கையையும் நாம் சீர்தூக்கி பார்த்து நீதி சொல்லவேண்டாம். அது நம் வேலையல்ல. மற்றவர்களின் எண்ணம் செயல்கள் பற்றி நாம் சிந்திப்பதால், அது நம்முடைய எண்ணங்களை தன்வயமாக்கி, மன அமைதியைக் குலைத்து தின்றுவிடும்.
நன்றி மறப்பது நன்றன்று. எவர் என்ன சின்ன சின்ன உதவி செய்தாலும் மறக்காமல் நன்றி கூறவேண்டும்.
''ஐயா கிருஷ்ணா, உன்னருளால் ஏதோ உடல் வியாதிகள் இன்றி, கடன் இன்றி, படுக்க ஒரு படுக்கை இருக்க, மூன்று வேளையும் சாப்பாடு உண்டு, கம்ப்யூட்டரில் இன்டர்நெட் தடைபடாமல் இருக்க என் எண்ணங்களை எழுத்தாக வடிக்க என்னால் முடிகிறதே. எத்தனை பில்லியன் கோடானு கோடி மக்களுக்கு இதெல்லாம் வெறும் பகல் கனவாகவே இன்னும் இருக்கிறது. நன்றிடா கிருஷ்ணா உனக்கு.''
நிறைய புத்தகங்கள் படிக்க ஆசை. இன்டர்நெட்டில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறதே. இன்னும் தேடி அறியவேண்டும். படிக்கவேண்டும். புதிதாக எதையாவது தெரிந்துகொள்ளவேண்டும். இதனால் என்னைப் பற்றி சதா நினைப்பதை, என் உடலின் நிலையைப்பற்றி கவலைப்பட நேரமே இல்லை. குறைகூற ஒன்றுமே இல்லை. எல்லோரும் நல்லவரே.
ஒவ்வொரு ஜீவனிலும் ஆத்மா என்று ஒன்று இருக்கிறது. யாரையும் எதிர்த்து விளாச என்ன அவசியம்? ஒவ்வொருவர் உணர்வையும் மதிக்க வேண்டும். அவர்கள் சொல்வதை கேட்போம். அபிப்ராயம் சொல்ல தேவை இல்லை. ஒவ்வொரு ஜீவனும் வித விதமானது. என் எண்ணங்கள் மற்றவர்கள் எண்ணங்களாக இருக்க வேண்டும் என்று அவர்கள் மேல் அதை திணிக்க எனக்கு அதிகாரம் இல்லை. சில சமயம் நமது எண்ணங்களே அபத்தமானதாக, எனக்கே ஆபத்தை தரும் விதமாக இருக்கலாம்.இப்படி நினைப்பது மன அழுத்தத்தை குறைக்கும்.
இன்னொரு முக்கிய விஷயம், மற்றவர் எண்ணங்களை நாம் சரியாக புரிந்து கொள்கிறோமா? எண்ணங்களை வெளிப்படுத்திய வார்த்தைகள் அவர் மனதை சரியாக காட்டியதா, அல்லது நாம் அதை சரியாக அவர் எண்ணம் பிறந்த வழியில் புரிந்துகொண்டோமா? உணர்ச்சிகள் வார்த்தைகளை விழுங்கிவிடும். என் மனப்பார்வையில் அவர் எண்ணங்களை புரிந்துகொள்வது தப்பாகிவிடும்.
சந்தர்ப்பங்கள் நம்மை கேட்டு நம் விருப்பப்படி அமைவதில்லை. நாம் ஒன்று நினைப்போம், விரும்புவோம்,. அது ஒன்றாக விளையும். அதைக் கண்டு துவளாமல் அதற்கேற்ப நம்மை திருத்திக் கொள்ள தயங்கக்கூடாது. மனித முயற்சிகள் இறைவன் எண்ணத்தை, தீர்மானத்தை, மாற்றவே முடியாது.
பயம் எதற்கும் வேண்டாம். நாம் பிறர்க்கு தீங்கு விளைவிக்காதவரை நம்மை தீங்கு தீமைகள் அணுகாது. பாம்பு நம்மை தேடி வந்து கடிப்பதில்லை, தேள் அட்ரஸ் தேடிக்கண்டுபிடித்து வந்து கொட்டுவதில்லை . அதன் வழியில் நாம் குறுக்கிட்டபோது தற்காப்புக்காக இறைவன் கொடுத்த வசதியை அது பயன்படுத்திக் கொள்கிறது. எல்லா ஜீவன்களும் அவரவர் நெறிமுறையை வாழ இறைவன் உலகை அமைத்திருக்கிறான். அன்பு எல்லாவற்றையும், எல்லோரையும், இணைக்கும். இதற்கென்றே மனிதனுக்கு மட்டுமே இறைவன் கொடுத்த சிறப்பு பரிசு சிரிப்பு. மனம் அன்பினால் விசாலமானால் உலகமே ஒரு இனிய பெரிய ஆனந்த ஸ்தலமாக மாறும்.
No comments:
Post a Comment