Friday, September 4, 2020

ADVICE

 பொன்மொழிகள் வேண்டுமா ஸார்?

J K SIVAN

சிந்திப்பது என்றால் ஆக்க பூர்வமாக இருக்கவேண்டும். இதுவரை எத்தனை சிவாஜி கணேசன் படம் பார்த்திருக்கி றோம், எத்தனை தடவை இட்டலி தோசை இத்தனை வருஷம் சாப்பிட்டோம் என்று யோசிப்பது இல்லை.
நமக்கு எத்தனை பேரை தெரியும் என்பதை விட எத்தனை பேருக்கு நம்மை தெரியும் என்ற நிலை உருவாக வேண்டு மானால் நாம் ஏதாவது பிறருக்கு செய்து கொண்டே இருக்க வேண்டும். ஏதாவது என்றால் தீங்கு, கெடுதல் இல்லை ஸார் , நல்லது மட்டும். கெட்டது தீமை செய்தாலும் ''படுபாவி'' என்று செத்தப் புறமும் வெகு காலம் திட்டுவார்கள். ஹிட்லர், இடி அமின், போன்றவர்கள் இருக்கவே இருக்கிறார்களே உதாரணத்துக்கு.
இன்று சில பொன்மொழிகள் உதிர்த் தால் என்ன என்று தோன்றியது. இதை நினைத்துப்பார்க்கலாமே.
நமது வாழ்க்கைப் பாதையில், போட்டி எதிலும் இருக்கிறது. எனவே ஜாக்கிர தை யாக முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள், பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.
வெட்டுவதிலும் கட்டுவதிலும் கூட சில வித்யாசம் இருக்கிறது. என்னை வெட்டாதீர்கள் அப்போது தான் உங்களுக்கு நிறைய மழை தருவேன் என்கிறது மரம்.. அதே சமயம், ஐயா கட்டாயம் என்னை வெட்டுங்கள் - அப்போது தான் அந்த மழை நீரை நான் உங்களுக்காக சேமிப்பேன் என்கிறது ஏரி குளம், கால்வாய், கிணறு சமாச்சாரங்கள்.
ஒரு சாத்வீக உண்மை. உங்கள் எழுத்தை படித்துவிட்டு முகநூலில் வாட்சப்பில் நிறைய ''கை கூப்பும்'' படங்களும், லைக் களும் வருவதால் அது ஹ்ருதய பூர்வ அன்பாகுமா?
உணவிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. நீ எவ்வளவு இட்டலி தோசை சாப்பிட்டாய், சாப்பிடுவாய் என்பதை அதற்கு தந்த சட்னி, மிளகாய்ப்பொடி யின் தரம் தான் தீர்மானிக்கிறது.
கல்வி பெற கற்பதற்கு புத்தகம் மட்டும் அல்ல, அதை எழுதும் 'நோட்டு புத்த கங்கள் தான் அதிகம் வாங்க வேண்டி இருக்கிறது. ரப் rough நோட்டு தான் அதிகமே செலவா கிய அனுபவம் இருக்கிறதா?!
M F ஹுசேன் என்பவர் மாடர்ன் ஆர்ட் என்று எதையோ குழந்தை கையில் பேனா கொடுத்தமாதிரி கிறுக்குவார் என்று தான் எனக்கு தோன்றியதே தவிர அதை கோடிக் கணக்கான பணம் கொட்டி போட்டி போட்டுக் கொண்டு வாங்குபவர்கள் அதில் எதைக் கண்டார்கள் என்று இனிமேலும் எனக்கு புரியப்போவதில்லை.
உலகத்தில் இந்தியா ஒரு பூஜ்யம் என்று சொல்பவர்கள், இதை உணருங்கள். மதிப்பு இல்லாத அந்த பூஜ்யத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி நமக்கு மதிப்பை பெற்று தந்தவர்கள் நமது முன்னோர்கள் இந்தியர்கள் தான். !!

வீட்டில் வளர்க்கும் ஜிம்மி, மணி, டைகர், என்று என்னென்னவோ பேர்கள் கொண்ட நாய் பூனை ஆடு மாடுகளுக்கு நம் மேல் இருக்கும் உண்மையான பாசம், நேசம், நட்பு, நம் வீட்டில் வந்து நன்றாக சாப்பிட்டு விட்டு கை ஈரம் காய்வதற்குள் நமக்கு பின்னால் பட்டாசு கொளுத்தும் சில மனிதர் களிடம், உறவுகளிடம், ஏன் இருப்ப தில்லை!

சுப்புணி பட்டாபி என்று காரணமே இல்லாமல் சோகமாக இருப்பவர்கள் உண்மையிலே ஒரு சாபக்கேடு. சிரித்துக் கொண்டே காரணமே இல்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பது ஒரு வரம். ஆனால் பாடுபடாமலேயே பைத்தியம் என்ற பட்டம் பெற நிறைய வாய்ப்பு உண்டு.
பள்ளிக்கூடத்தில் திருக்குறளை திருவருட்பா கம்பராமாயணம் எல்லாம் படித்தது நிச்சயம் வாழ்வில் முன்னேறு வதற்காக அல்ல. பரிட்சையில் மார்க் வாங்கி தேருவதற்காக . மற்றபடி அதை பின்னால் நினைவு கூர்ந்து மீண்டும் படித்து புரிந்து அனுபவிப்பவர்கள் தான் வாழ்க்கையில் தேறியவர்கள்.
வாழ்க்கையில் நல்லதோ கெட்டதோ அனுபவம் என்பதை பள்ளி, கல்லூரியில், கலாசாலையில் ஆசிரியர் குரு மூலம் பெறமுடியாது. நிச்சயம் அதை அனுபவிக்க நாம் பலமுறை தோல்வி அடைய வேண்டும். புரிந்துகொள்ள சில சமயம் நிறைய துரோகிகளும் உதவுகி றார்கள். இல்லையா ?

1000 ரூவா சம்பளம் வாங்கும்போது இருந்த பற்றாக்குறை என் ஸார் லட்ச ரூவா கிடைச் சாலும் இருந்து கொண்டே இருக்கு? இதுக்கு தான் நமக்கு எப்படி வாழணும் னு தெரியலேன்னு அர்த்தம்.

சினிமா தியேட்டர்கள் ஒன்றில் தான் ஏழைகள், வசதியில்லாதோருக்கு முதலிடம் கொடுத்து கௌரவித்தது. சின்னதாக காட்டும் விஷயங்கள் திரையில் பூதா கரமாக அவளுக்கு தெரிவது பின்னா லிருந்து பார்ப்ப வர்களுக்கு அனுபவிக்க முடியாது.

அழுவது அவசியம் வேண்டும். அழுகை உடல் நலத்துக்கு, உள்ள மேம்பாட்டுக்கு தேவை தான். அதற்காக ஒரு விஷயம் கவனிக்கவேண்டும். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அழலாம் . ஆனால் மீண்டும் அதே காரணத்திற்காக எப்போதும் அழுவது தப்பு. ரொம்ப தப்பு.
பலபேர் ஒப்புக்கொள்ளும் ஒரு உண்மை ஞாபகம் இருக்கிறதா? நியாயமாக, நேர்வழியில், நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டி யல் களுக்கு ஏன் வருவதில்லை..!!!!

நாம் உழைத்து முன்னேறவேண்டும் அதோ பாருங்கள் குப்புசாமி பலூன் வியாபாரியை. உயிரைக்கொடுத்து தன் குடும்பத்தை காப்பாற்றுகிறான். ஆமாம் ஸார் , அவன் விடும் ப்ராணவாயுவில் தான் அவன் விற்கும் பலூன்கள் பெரிதாக காட்சி அளிக்கின்றன. அதை விற்று தானே காசு பெறுகிறான் .

கிருஷ்ணா எல்லோரும் மரம் வெட்டு கிறார்கள். இதை தடுக்க நீ செய்ய வேண்டிய ஒரே யுக்தி ஒவ்வொரு மரத்திலும் ஒரு ரூபாய் காசாவது காய்க்க வேண்டும். நான் என்ன பணம் காய்ச்சி மரமா? என்று சிலர் சொல்கி றார்களே? உண்மையில் பணம் காய்ச்சி மரம் வேண்டாமா? எவனுமே கோடாலி உபயோகிக்க மாட்டான். ஏணி வாங்கி வைத்துக் கொள்வான்.

நிறைய சொல்ல ஆசை தான். அப்புறம் நீங்கள் என் எழுத்தை படிக்கவே மாட்டீர்கள் என்ற பயத்தில் நிறுத்திக் கொள்வதற்கு முன் ஒரே ஒரு பொன்மொழி.
நடு ராத்திரி ஆற்றிலிருந்து திருடிய மண் லாரியில் போகும்போது நீர் சொட்டிக் கொண்டே போகிறதே. அது நீரா ஸார்? இல்லவே இல்லை. இத்தனை காலம் கூடவே இருந்த ஆற்று நீரிடமிருந்து தன்னை பிரித்துக் கொண்டு போகிறார் களே என்ற அழுகை.

Thursday, September 3, 2020

T N RAJARATHNAM PILLAI




                                       நாதஸ்வர சக்ரவர்த்தி           J K   SIVAN                    

 அறுபது எழுபது வருஷங்களுக்கு  முன்பு  TNR   என்ற  சொல்லுக்கே  தனி மதிப்பு, மரியாதை. கௌரவம்.  பெருமை.   புகழின் உச்சாணிக் கிளையில் அந்த எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் வீற்றிருந்தார்.  அவர் யார்?  நடிகரா, எழுத்தாளரா, சாமியாரா, பாடகரா, இல்லை.   ஒரு  வாத்தியக்காரர்.  மற்றவர் கையில் இருந்த குழலுக்கும் அவர் கையில் இருந்த குழலுக்கும் இருந்த வித்யாசம் அவர் செலுத்தும் காற்றின் பரிமாணம். அது ஒலியாக வெளியேறி பல சங்கீத தேவதைகளை வெளியே அனுப்பி  எதிரே இருப்பவர்கள்  கேட்பவர்களின் செவியில் தேனாக புகுந்து அவர்களை நாகபாசம் போல் கட்டுண்டு  அசைவற்ற பொம்மையாக்கியது என்பதே அவர்  அமரத்வ காரணம். 

யார்  இந்த  T .N .R ?   திருமருகல் நடேசபிள்ளை ராஜரத்தினம் பிள்ளை.   1898-1956 என்ற கால அளவில்  58 வருஷங்கள் வாழ்ந்த  ஒரு அபூர்வ அமரர். இசையுலக சக்கரவர்த்தி. நாதஸ்வர சக்ரவர்த்தி. ஐந்து முறை கல்யாணம் பண்ணிக்கொண்டும் வாரிசு இல்லாத ராஜா.  

நாதஸ்வர கலைஞர்களை அப்போதெல்லாம் மக்கள் ரசித்தார்களே தவிர அவர்களுக்கு சமூகத்தில் உயர்ந்த இடம் கொடுக்கவில்லை, அல்லது  கிடைக்கவில்லை. சாதாரண வேட்டி   இடுப்பில் ஒரு துண்டு கழுத்தில் சில சங்கிலிகள், சிலருக்கு முழு  குடுமி, பலதுகளுக்கு  அப்பள குடுமி.  காது கடுக்கன், நெற்றியில் விபூதி பட்டை, கழுத்தில் ருத்ராக்ஷம் தான் அவர்கள் அலங்காரமாக இருந்தது. கோவிலில் தான்  அதிகம் காணப் பட்டார்கள். சுவாமி ஊர்வலத்துக்கு நடந்து கொண்டே வாசித்தார்கள்.  கல்யாணங்களில் ஒரு ஓரமாக அமர்ந்து  கையை உயர்த்தி ஜாடை காட்டிய   போது  சங்கீதத்தை நிறுத்தி  ''பீ பீ''  என்று உரக்க சப்தம் செய்வார்கள். தவில்  டமடம என்று வானைப்  பிளக்கும். அது  ஒலித்தால்  தாலி கட்டும் நேரம் என்று புரிந்து விடும். இசையைக் காட்டிலும் ஓசையே அதிகம்.  இதற்கு விதி விலக்கு  ராஜரத்தினம் பிள்ளை.  பட்டு சட்டை, கால் சட்டை, வட இந்திய  உடைகள் எல்லாம் போட்டுக்கொண்டு மினுமினுத்தார். அலங்கார பிரியர் மட்டும் அல்ல ஆணவக்காரரும் கூட. சுய கவுரம் முக்கியம் அவருக்கு.  ஆறுமணிக்கு கச்சேரி  என்றால் 7 மணிக்கு தான் ஆரம்பிப்பார். நடுவில் எந்த இடையூறும் கூடாது. இருந்தால்  யாராயிருந்தாலும் கவலை இல்லை.  உடனே நிறுத்திவிட்டு சென்று விடுவார். மீண்டும் அவரைப் பிடிப்பது துர்லபம்.  அவர் வந்து வாசித்து விட்டால், அந்த ரெண்டு மூன்று மணி நேரம் அவர் இசையைக் கேட்பவன் நிச்சயம் அந்த  கிராமத்தில் இல்லை.  தேவலோகத்தில்  கந்தர்வர்களோடு இருப்பான்.

 சங்கீதம் பயின்றது திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யரிடம். நாதஸ்வர குரு  அம்மா சத்திரம்  கண்ணுஸ்வாமி பிள்ளை. திருவாடுதுறை ஆதீனம் அவரை ஆதரித்து  அவர்கள் கோவில்கள், மற்றும்  மடத்தின் ஆஸ்தான  வித்வானாக  அங்கீகரித்தது.  பிள்ளையின்  பூபாளத்தை கேட்கவே கோவிலில் காலை வேளையில் வெள்ளம் போல் மக்கள்.   நாடெங்கும் TNR  புகழ் பரவியது.  மதராஸில் சினிமா டைரக்டர்  எல்லிஸ்  ஆர்  டங்கன்  1940ல்  பிள்ளையை  கதாநாயகனாக வைத்து காளமேகம் என்று படம் ஒன்று தயாரித்தார். சினிமா புகழைவிட  நாதஸ்வர சக்ரவர்த்தி என்ற புகழே அவருக்கு புகழ் சேர்த்தது. தோடி  ராகம் அவரை தத்து எடுத்துக் கொண்டது. அவரது தனிச் சொத்தானது.  சமீபத்தில் தான்  TNR வாய்ப்பாட்டு கூட கேட்டேன். என்ன அற்புதமாக படுகிறார்.  குழலிலும் குரலிலும் வல்லவராக ஒருவரைப் பார்ப்பது துர்லபம்.

 பெரிய பெரிய  மிராசு,  மிட்டாதார்கள், குறுநில பிரபுக்கள்  ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வர கச்சேரியை வைத்தால் தான் தங்கள் வீட்டு கல்யாண வைபவங்களுக்கு கௌரவம், புகழ் பெறும் என்று அவர் பின்னே அலைந்தார்கள். கேட்டதைக்  கொடுத்தார்கள்.  ஒரு வேடிக்கை சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள்: 

 சுட்டுப் போட்டாலும் சங்கீதம் தெரியாத ஒரு  பணக்கார நாட்டுக்கோட்டை செட்டியார் TNR 
 கச்சேரியை  தனது வீட்டுத் திருமணம் ஒன்றிற்கு  ஏற்பாடு செய்து விட்டார்.  பிள்ளைவாள் நாதஸ்வரத்துக்காகவே எங்கிருந்தோ மக்கள் வெள்ளம்.  நிறைய கூட்டம். கச்சேரி முடிந்தது. எல்லோர் எதிரிலும்  சபையில்  சன்மானம் கொடுக்கும் சமயம்.     நாலு பேர் எதிரே தனது சங்கீத  ஞானத்தை வெளிப்படுத்திக் கொள்ள ஆசைப்பட்டு  செட்டியார் உரக்க பேசினார். அப்போதெல்லாம்  மைக்  கிடையாதே.  


''உங்கள் கச்சேரி அபாரம் அபாரம்.  ஆனால்  எனக்கு  ஒரு குறை '' என்கிறார்.

 மூன்று மணிநேரம் பிள்ளை  சங்கீத தேவதையை அங்கே ஆடவிட்டு எண்ணற்ற ரசிகர்கள் மனம் நிரம்ப இதயம் குளிர அவரது சகல ராக ஆலாபனைகளையும் கேட்டு திளைத்திருந்தார்கள். அதிலும் தோடி  அதிக வரவேற்பு பெற்றிருந்தது. பாவம் செட்டியாருக்கு என்ன தெரியும்?. ஆகவே  பிள்ளை  திகைத்துப் போய்  

 ''அடடா  செட்டியார்வாள் என்னை வரவழைத்து கவுரவித்து நிறைய பரிசு கொடுத்தீர்கள்.  அப்படி என்னை திருப்தி படுத்தியும் நான்  உங்களுக்கு என் சங்கீதத்தில் என்ன குறை வைத்துவிட்டேன் என்று தெரியவில்லையே'' .

 ''இன்று எனக்கு பிடித்த தோடியை நீங்கள்  வாசிப்பீர்கள்  என்று வெகு ஆவலாக  எதிர்பார்த்தேன்...''   

 பிள்ளைக்கு  உடனேயே தெரிந்து போய்விட்டது செட்டியாரின் சங்கீத  ஞானம் எவ்வளவு என்று.

  சபையில் அருகே இருந்த அத்தனைபேருக்கும் ஒருபக்கம் ஆச்சர்யம். அதே சமயம் எவ்வளவு ஞானசூன்யம் இந்த செட்டியார் என்று  கேலி சிரிப்பு. வெளியே காட்டிக் கொள்ளாமல் பிள்ளையின்  பதிலுக்கு காத்திருந் தார்கள்.    பிள்ளை சாதாரணம் இல்லை.  விஷமக்கார பிள்ளை ஆயிற்றே. . பலே  கிண்டல் பேர்வழி.
  நாசூக்காக சொன்னார்........

செட்டியார் கையை பிடித்துக் கொண்டு கெஞ்சுகிற பாணியில்,  ''செட்டியார் என்னை தயவு செயது மன்னித்து விடுங்கள். உங்களது அபார சங்கீத ஞானம் பற்றி ஊரிலிருந்து கிளம்பும் முன்பே கேட்டறிந்து ஜாக்கிரதையாக வாசிக்க வேண்டுமே என்ற கவலையில் புறப்பட்டேனா. வரும் அவசரத்தில் கவலையில்,   பிரத்யேகமாக உங்களுக்கு என்று இங்கு வாசிக்க  எடுத்து வைத்த அந்த தோடி பாடும் நாதஸ்வரத்தை கொண்டுவர மறந்து போனேன்.  இங்கு வந்தபிறகு தான் தெரிந்தது  அடாடா  எவ்வளவு பெரிய  தவறு செய்த்துவிட்டோம் என்று.     எப்படியோ ஒரு வழியாக சமாளித்து மீதி  ராகங்களில்  பாட்டு எல்லாம் வாசித்தேன்.  தோடி பாடும் அந்த நாதஸ்வரம் இல்லாததை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்களே. இந்த தவறை இனி  எப்போதும் செய்ய மாட்டேன்.'' 

எல்லோரும் வாய் விட்டு சிரித்தனர்.  செட்டியாரோ  தான் எப்படி பிள்ளையின் தவறுதலை   கண்டு பிடித்து விட்டோம் என்று அவர்கள் மகிழ்வதாக தானும் சிரித்ததுடன்

 ''அதனால் என்ன பிள்ளைவாள்,  மறதி எல்லாருக்கும் ஏற்படுவது தானே'' என்று பெருந்தன்மையாக  சொன்னார்.

பிள்ளையின் சிஷ்யர்களில் சிலர்  குழிக்கரை பிச்சையப்பா, காருகுறிச்சி அருணாச்சலம், திருவாரூர் லட்சப்பா ஆகியோர்.  அவருக்கு  தவில் வாசித்தவர்களில் ஒருவர் நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.  வயலினைக் கூட பக்கவாத்யமாக கொண்டு வாசித்திருக்கிறார் பிள்ளை. எத்தனையோ பட்டங்கள் விருதுகள் சங்கீத கலாநிதி உட்பட  பெற்றவர்.   ஒரு தெய்வீக சங்கீதம் அவரிடமிருந்து கிடைத்தது.

 ஒரு சின்ன விஷயம் சொல்லி முடிக்கிறேன்.
  ஒருமுறை மஹா பெரியவா தஞ்சாவூர் ஜில்லாவில் திக்விஜயம் செய்தபோது  மாயவரத்தில் பட்டண  பிரவேசம்.  யானை, குதிரை ஊர்வலம்.பெரியவா பல்லக்கு  தருமபுரம் மடம் வழியாக வரும்போது பூர்ணகும்ப மரியாதையுடன் தருமபுரம் ஆதீனத்துக்கு விஜயம் செய்தார். பண்டார சந்நிதி அவரை கெüரவம் செய்து மடத்திற்கு அழைத்துச் சென்றார்.  அப்புறம் ஊர்வலம்  மயிலாடுதுறைக்குள் நுழைந்தது..

 கப்பல் போன்ற தனது பெரிய ஸ்டுடிபேக்கர் மோட்டார் காரில் தான் TNR பிள்ளை பயணிப்பார்.வெளியூரில் கச்சேரி செய்துவிட்டு திருவாவடுதுறை வந்து கொண்டிருந்தார். மாயவரம் காளியாக்குடி ஹோட்டல் அருகில் உள்ள மணிக்கூண்டு வழியாக மோட்டார் கார் சென்றபோது  கூட்டம் கண்ணில் பட்டது..

 டி.என்.ஆர். கூட்டத்தைப் பார்த்துவிட்டு "என்ன விசேஷம் இங்கே ?' என்று கேட்டார்.
 ''காஞ்சி பரமாச்சார்யார் பட்டணப் பிரவேசம் வறுகிறார். 
ஊர்வலம்  அடுத்த தெருவுக்குள் நுழைந்து விட்டது ''

 ''நிறுத்து வண்டியை.   பிள்ளை சட்டையைக் கழற்றினார். அங்கவஸ்திரத்தை இடுப்பில் சுற்றிக் கட்டிக் கொண்டார். மணிக்கூண்டு அருகில் நின்று கொண்டு நாயனம் வாசிக்கத் தொடங்கிவிட்டார். காற்றில் அலை அலையாக சங்கீத தேவதைகள் பறந்து வரவேற்றார்கள்.
மஹா பெரியவா எவ்வளவு பெரிய  சங்கீத ஞானம் உள்ள ரசிகர்  என்று எல்லோருக்கும் தெரியுமல்லவா?. அருகே இருந்தவர்களிடம் கேட்டார்:

 " ஏண்டா, இது ராஜரத்தினம் வாசிப்பு போலிருக்கிறதே,  அவரா  இங்கே வாசிக்கிறார். விசாரிச்சு சொல்லுங்கோ''
''ஆமாம்  பெரியவா  ராஜரத்தினம் பிள்ளை தான் நீங்க வருகிறீர்கள் என்று கேள்விப்பட்டதும், காரை நிறுத்தி ஓரமாக நின்று  வாசிக்கிறாராம்''
''அங்கே போங்கோ' . 
 பல்லக்கு காரர்களுக்கு கட்டளையிட்டார் மகா பெரியவா.
 பட்டண பிரவேச ஊர்வலம் மணிக்கூண்டை நோக்கி நகர்ந்தது. இதைத்தானே ராஜரத்தினம் பிள்ளை எதிர்பார்த்தார்! பரம சந்தோஷம். உற்சாகத்தோடு  அடுத்த ஒன்றரை மணி நேரம் மணிக்கூண்டு அருகில்  தேவகான வெள்ளம்.   அனைவருமே சிலையானார்கள். தெய்வ சங்கீத ஆக்கிரமிப்பில் திளைத்தார்கள். நின்றபடியே வாசித்துக் கொண்டிருந்தார் டி.என்.ஆர். மாயவரம் நகரமே அப்போது  அங்கே தான் திறந்துவிட்டது..

 ''இந்தாங்கோ பிரசாதம் ''.
 மெய்மறந்து கேட்டு ரசித்த பெரியவா கையிலிருந்து ஒரு சாத்துக்குடி பழம் ஆசிர்வாதமாக பிள்ளையின் கைகளை அடைந்தது.   சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்த  அந்த  நாகஸ்வர சக்ரவர்த்தி கண்களில் நீர் பனிக்க  நா தழுதழுக்க  
"இந்த ஜென்மா சாபல்யம் அடைந்துவிட்டது!' என்றார் நாதஸ்வர சக்ரவர்த்தி திருமருகல் நடேசன் ராஜரத்தினம் பிள்ளை.
அவருடைய  தோடி ராக ஆலாபனை இத்துடன் யு ட்யூபில் பிடித்து இணைத்திருக்கிறேன். கேளுங்கள். ரொம்ப பழைய ரெகார்டிங்.      https://www.youtube.com/watch?v=wJqbyKPVLlM

BALAJI DHARSAN

 

                  அன்று கேட்ட  அதே குரல்    J.K  SIVAN 


1977  ஜனவரி  21 அன்று என்று ஞாபகம்.  திருமண நாளில் குல தெய்வ தரிசனம் செய்ய  ஆசை. ஆபீசுக்கு  ஒருநாள் லீவ் போட்டாகி விட்டது.   எப்போதுமே  திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்ய  பஸ்ஸில் போய் தான் பழக்கம். பாலாஜி எக்ஸ்பிரஸ் என்று  ஒரு ரயில் அறிமுகப்படுத்தி இருந்தாலும்  என்னவோ பஸ்ஸில் போனால் திருப்தி.   என் ஆபிஸ் எதிரே தான்  எஸ்பிளனேட்  பஸ்  நிலையம். பத்து நிமிஷத்துக்கு ஒரு பஸ், ஆந்திரா பஸ் தமிழ்நாடு அரசாங்க பஸ்  ஏதோ ஒன்று கோட்டை  பஸ்  நிலையத்திலிருந்து பறந்து கொண்டே இருக்கும்.   ஒன்றில் தொத்தி ஏறிக்கொண்டு என் குடும்பத்தோடு திருப்பதி பயணம்.

லக்ஷோப லக்ஷம் ஜனங்கள் திரள் திரளாக  எங்கெல்லாமோ இருந்து வரும் ஒரு ஆலயம் திருப்பதி திருமலை வேங்கடேச பெருமாள் ஆலயம்.    அனைவருக்கும்  அரைநொடியாக தரிசனம் செய்ய  வழிவகுத்து இருக்கிறார்கள். 'பார்த்தாகி விட்டதே போ''  என்று ''  ஜருகண்டி''அப்படி பிடித்து தள்ளாவிட்டால் யார் தான் அவன் முன்னிருந்து நகருவார்கள். இன்றெல்லாம் பார்த்தாலும் அலுக்காதவன் அல்லவா அழகன் அவன்.

ஒவ்வொருநாளும் எத்தனையோ  பூஜைகள்,சேவார்த்திகள்.  இலவச தரிசனம், வித வித கட்டணங்கள்.  எலெக்ட்ரானிக் மெயில் தரிசனங்கள் கூட இருக்கிறது. e dharshan  . எண்ணற்ற விடுதிகள், ஏராளமாக  சிகப்பு வண்ண இலவச பஸ்கள். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மாறுதல் இங்கே தான் முடியும். சாதாரண நாட்களிலேயே லக்ஷம் பக்தர்களை சமாளிக்கும் இந்த ஆலய நிர்வாகம் விசேஷ காலங்களில் எப்படிதான் ஒரு வித குறைபாடும் இன்றி பல மடங்கு ஜனங்களை நிர்வாகம் பண்ணுகிறார்களோ என்று நினைக்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது. பல மணி நேரங்கள் காத்திருந்து கூண்டுகளில்  அடைபட்டு, அங்கே நீர், ஆகாரம், ஒய்வு, கழிப்பறை வசதிகளோடு பக்தர்கள் தரிசனம் செய்யவேண்டிய  நிர்பந்தம். வரும் அத்தனை பக்தர்களுக்கும் தலா  ரெண்டு லட்டு. இலவச உணவு. அவரவர் வசதிக்கேற்ப  வெங்கடாசலபதி தரிசனம் தருகிறார்.

 இதெல்லாம் விட அதிகம் மக்கள் விரும்புவது மன நிறைவு. மலைப்பாதைகளில் முன்பெல்லாம் பஸ்களில் ஏறுவதற்கு இரகுவதற்கும் சண்டை போட்ட காலம் உண்டு.  மலையில் இறங்கும் பஸ்களில்  இருந்து எந்த நேரமும் பலர் வாயில் எடுத்து உமிழ்வது மறக்கவில்லை. வளைவுகளில் கோவிந்தா சப்தம்அதிகமாகவே கேட்கும். போக வர ஒரே பாதை அப்போது. இப்போது  நிலை வேறு.   பாதுகாப்பு. அதிக வேகம் கூடாது என்று குறித்த நேரம் கொடுத்திருக்கிறார்கள். வேகமாக பயணித்தவர்களுக்கு அபராதம். நவீன எலெக்ட்ரானிக் வசதிகள் எல்லாவற்றிக்கும் பதில் தயாராக வைத்திருக்கிறது. செருப்பிலிருந்து செல்போன் வரை பாதுகாத்து தரப்படுகிறது.

ஒருமுறை  பகலில் சென்னையிலிருந்து பம்பாய் பிரயாணம் செய்யும்போது  விமானத்திலிருந்து கீழே அழகிய தங்க கோபுர சொப்பு பொம்மையாக திருமலை தெரிந்தது. ஒரு வினாடி கால கோபுர தரிசனம். 

என் நினைவு பழசை நோக்கி அடிக்கடி போகிறது.

 திருப்பதி  வெங்கடாசலபதியை  தரிசனம் செய்ததில் எனக்கு ஒரு  அற்புத அதிசய பாக்யம் ஒரு முறை கிட்டியது.    வேங்கடேச பெருமாளை   இரண்டடி  தூரத்தில் அருகே நின்று தொடும் அளவு பக்கத்தில் நின்று பல நிமிஷங்கள் தரிசனம் செய்த பாக்கியவான் நான்.  

வெறுமே தரிசனம் அல்ல.  அவரை துயில் எழுப்ப.  இதற்கு வழிவகுத்தவர் என்னுடைய சக ஊழியரின் தந்தை. அவரது  வாசம் திருமலையில். 

முதல் நாள் இரவே அவரை  ஆலயத்தில் கண்டுபிடித்து  பார்த்துவிட்டோம்.  

''யாரு நீங்கள்?
''உங்க மகன் ராமதுரையோடு வேலை பார்க்கிறேன்? உங்களைப்  பார்க்க சொல்லி அனுப்பினான்.''
''ஓ  ஷிப்பிங்கா?  தரிசனம் ஆயிடுத்தா,பண்ணனுமா?'
''இல்லை .  இனிமேல் தான் தரிசனம் ஆகணும். அதுக்கு தான் உங்களை தேடி வந்திருக்கோம்.
' யார் உங்களோடு வந்திருக்கா?''
' நான் என் மனைவி  நாலு குழந்தைகள்''
''காலம்பற  மூணு மூணேகாலுக்கு கோவில் வாசல்லே இருங்கோ. நான் வரும்போது கூட வரலாம் ''
அப்போது மேலே சொன்ன க்யூ வரிசைகள் இல்லை. நேரே ஆலய வாசலில்  விடிகாலை  ரெண்டே முக்காலுக்கே குளித்துவிட்டு எல்லோரும் நின்றுகொண்டு  அவருக்காக  காத்திருந்தோம்.  விர்ரென்று குளிர் காற்று.  குழந்தைகள் பற்களை கடித்துக்கொண்டு நடுங்கி நின்றனர்.   
ஆஜானுபாகுவாக  சற்று கரிய நிறத்தில், இருட்டில்  விடு விடு வென்று நடந்து வந்தவர் எங்களைப்   பார்த்துவிட்டார்.    பேசவில்லை,   ''கூட  வா''   என்று கையால்  ஜாடை.   நாலுபேரும் பின்னே சென்றோம்.

 விடிகாலை ஸ்ரீ அனந்தசயனம் அய்யங்கார் --  ஆறு அடிக்கு மேலே கொஞ்சம் இருப்பாரோ? ஆஜானுபாஹு -  தலையில் கட்டுக் குடுமி, அதிகம்  பேசாத அந்த குரல் கணீரென்று திருமலை எங்கும் எதிரொலித்தது. அவரது சுப்ரபாதம் கேட்டு தான் ஸ்ரீனிவாசன் துயில் எழுவார்.  எம்.எஸ்.  சுபபலக்ஷ்மி வெங்கடேச சுப்ரபாதம் பாடாத காலம் அது.

அதை தொடர்ந்து கத்யம். எண்ணற்ற மரங்கள், காலங்கள், கனிகள்,குளங்கள், நதிகள், மலைகள், புஷ்பங்கள் என்று பெயர்கள் தொடர்ந்து வரும் gadhyam  கேட்பதற்கு அற்புதமாக இருக்கும்.   அந்த குரலை  பல வருஷங்களுக்கு பிறகு  யூட்யூப் இல்   ஒரு நாள் கிடைத்தது.  நான் உததேசமாக  நம்பிக்கை இல்லாமல் தேடினேன். என் அதிர்ஷ்டம் அவர்  குரல் இருந்தது.  யாரோ புண்யவான் அதை பதிவு செய்த்திருக்கிறார். அவர் குளம் நீடூழி வாழ்க.  பல வருஷங்களுக்கு பிறகு அதே குரலை நேரில் கேட்டது போலவே மீண்டும் கண்களில் நன்றிக்கண்ணீர் வழிய கேட்டேன்..

இன்று இரவு  மீண்டும் கேட்கும்போது பழைய நினைவு வந்தது.  உங்களோடு மறுபடியும் அதை பகிர்ந்து கொள்கிறேன்.

கொடுத்திருக்கும் லிங்க் சொடுக்கி  

https://www.youtube.com/watch?v=vEThIe-5HwY வெங்கடேச சுப்ரபாதம்
]]https://www.youtube.com/watch?v=LTwzHj4y7  ஸ்ரீனிவாச கத்யம்

Wednesday, September 2, 2020

GEETHANJALI


 


கீதாஞ்சலி  40     J K   SIVAN  
தாகூர் 

       40  கருணை மழை பொழிவாய்  கண்ணா 

40.  The rain has held back for days and days, my God, in my arid heart. The horizon is fiercely naked---not the thinnest cover of a soft cloud, not the vaguest hint of a distant cool shower.     

 Send thy angry storm, dark with death, if it is thy wish, and with lashes of lightning startle the sky from end to end.But call back, my lord, call back this pervading silent heat, still and keen and cruel, burning the heart with dire despair.Let the cloud of grace bend low from above like the tearful look of the mother on the day of the father's wrath.

கிருஷ்ணா, ஏன் இப்படி செய்துவிட்டாய்? என்ன ஆயிற்று உனக்கு ? ரொம்ப நாளாக மழையை இங்கே அனுப்பாமல் ஏன் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறாய்? என் மன வானம்  இங்கே பாலைவனமாக ஆகிக்கொண்டிருக்கிறதே ஒரு சொட்டு நீர் இல்லாமல், உனக்கு தெரியாதா? 
இது மழையா தூத்தலா? சை .. விடாது நசநச என்று நாளெல்லாம் பெய்கிறதே என்று  எல்லாம் முன்பு சொல்வேன். இப்போது மழையே நீ வேண்டும். ஏன் ரொம்ப நாளாகவே உன்னை காணோம்? என் தெய்வமே கிருஷ்ணா, நீ மழையாக வா. என் இதயம் பாளம் பாளமாக விரிசல் விட்ட மழைகாணா வறண்ட நிலமாகி விட்டதே. வானத்தை உற்று நோக்குகிறேன். எங்குமே கருமை கண்ணில் படவில்லை. தொடுவானம் வரை பார்த்துவிட்டேன். மலட்டு வானம். ஆடைஇல்லாத நிர்வாண வானம். கொஞ்சமாவது ஒரு குட்டி மேகம்.. ஹுஹும்.. எங்காவது மண் வாசனையை கிளப்பி விட கொஞ்சம் தூத்தல்...ஹுஹும். 

என்றைக்கு ஒரு சொட்டு ஜலம் பூமியில் விழுமோ? உன்னிடம் தான்  கோபமான கண் சிவந்த  கோபக்கார  சூறைக்காற்று,  மரணப் புயல்கள் உண்டே, அவற்றை விரட்டி அனுப்பி மேகங்களை எங்கிருந்தோ கொண்டு  வந்து, மின்னல் சாட்டைகளால் வானத்தை ஒரு இடம் விடாமல் அடித்து பயமுறுத்தி மழை மேகம் சீக்கிரம்  கொண்டுவா. . இருண்ட கரு நிறத்தோடு மரண ஓலத்தோடு, உயிர்களை பலி வாங்க வரட்டுமே. அப்படி உன் விருப்பம் இருக்குமா? மின்னல் சாட்டையால் பளீர் பளீர் என்று வலிக்க வலிக்க தாக்குவாயா? ஆகாசத்துக்கும் பூமிக்குமாக நீண்ட சாட்டை அடியா? எதையோ செய். ஆனால் இந்த அமைதியான நீரற்ற நிலத்தில் வீசும் காற்றிலும் தெரியும் உஷ்ணத்தை நீக்கு. உன்னிடமே இந்த வறட்சியை திரும்ப பெற்றுக்கொள். எங்களுக்கு வேண்டாம். அசையாமல் எல்லாம் வாடும் இந்த அவஸ்தை போதும். இது கொடிய செயல். இதயத்தை ஏமாற்றத்தால் எரிந்து துயரால் வாடி துடிக்க செய்யாதே.  ஒரு வித வெறுமையான பிடிப்பில்லாத நிலை. ஏமாற்றம், ஏக்கம் மட்டுமே அல்லவோ மனதில் நிறைந்திருக்கிறது.
கிருஷ்ணா உன் கருணை மேகம் மேலே யிருந்து பரந்து எங்கும் நிறைந்து என் தலை மேல் இடிக்கும் அளவுக்கு தாழ்ந்து வரட்டும்.  ஒரு காட்சி முன்  தோன்றுகிறது.  என் அப்பா காச் மூச் என்று கோபத்தில் கத்தும் போது அம்மா பாவம்  பேசாமல் ண்களில் ஜலம் தளும்ப தலையை குனிந்து கொண்டு  வாய் பேசாமல் இருப்பாளே அந்த பார்வை  தான் இப்போது  என் பார்வை  உன்னை நோக்கி.
 உன் தயை, கருணை, அன்பு, என்னைத்  தாழ்ந்து தலையை தொடும் அளவு நெருங்கட்டும். நான் குனிந்து வணங்கு கிறேன். நீயின்றி வேறு யாரப்பா  எனக்கு உதவ முடியும்?, மழை ரூபமாக, கருணை உருவமாக நீ வரவேண்டும். வா வா கண்ணா வா...

THE DIVINE HOUSE


 

ஒரு தெய்வீக கற்பனை வீடு   J K  SIVAN 


வீடு கட்டும் மேஸ்திரி கனமான கல்சுவர் அஸ்திவாரமாக அமைத்து,  அதை சுற்றி  தாய்ச்சுவர்கள் பலமாக கட்டி இடையே வலு குறைந்த  குறுக்கு  சுவர்களை அமைக்கிறார்.  தாய்ச்சுவர்  அஸ்திவாரம் தாம் முழு சுமையும் தாங்குகிறது. அப்புறம் தரையை வலித்து , நீர் வழிந்து போகும்படியாகச் செய்து, ,சுவர்களுக்கு  வர்ணம், கண்ணாடி, கதவுகள் ஜன்னல்கள் அமைத்து, பளபளவென்று வீடு ஜொலிக்கும்படியாக செய்கிறார்.  அவர் கட்டும் வீடு  நகராது, ஆடாது பாடாது, பேசாது, ஓடாது.  
ஆனால் பிரம்மதேவன்  இன்னும் சிறந்த கை வேலை தெரிந்த மேஸ்திரி.  நமது தேகத்தை,   இயற்கையால் உண்டான சக்திகளைக் கொண்டு  ஒவ்வொரு மனிதனையும் ஒவ்வொரு மாடலாக கட்டி இருக்கிறான்.  வெய்ட் தாங்கும் பெரிய கற்கள் தான் கை கால்கள். உள்ளே  உள்ள தசை நார்கள் தான்  கம்பி வேலை . உள்ளே சதை கொழுப்பு தான் செங்கல்.  தோல் தான் சுண்ணாம்பு சிமெண்ட்.  தோலின் கருப்பு வெளுப்பு, நிறங்கள் தான் வர்ண சமாச்சாரம்.  எவ்வவளவு அற்புதமான  இன்ஜினீயர் ப்ரம்மா.  எலும்புகளை நரம்புகளோடு இணைத்து இருகக் கட்டி இருக்கிறான்.  எலெக்ட்ரிக் லைன்.    எலும்பு மூட்டுகளுக்கு உள்ளே அசையும்படி  கதவு கீல்களுக்கு  கிரீஸ் grease  மாதிரி செய்திருக்கிறான்.   ஆட்டோமேட்டிக் திறந்து மூடும் கதவுகள்  போல.  சதைகளை ரொப்பி  வயிறு, முகம், மார்பு தலை  என்று  ஒவ்வொரு மனிதனும் வேறே வேறே மாதிரி ஒரு உருவம். வீடுகள் பல டிசைன்களில்  பார்த்து ரசிக்கும்  தினுசுகளில் இல்லையா. 
உள்ளே  வசதியாக  இருக்கிறதோ இல்லையோ, வீட்டின் வெளி உருவத்தை கண்டு நாம் பிரமிக்கிறோம். அது போல் மனிதர்களை  இவன் அழகன், உயரமானவன், தலை முடி அலங்காரம், நடை,  குரல் என்று பார்ப்போர் பிரமிக்க வைத்திருக்கிறான்.  அழியும் உடலுக்கு அழகு போர்வை. 
இதில் விசேஷம் என்னவென்றால்  வீடு குட்டி போடாது, நகராது பேசாது பாடாது மேலே சொன்னது போல் இதெல்லாம்  உபரியாக மனிதனைப் படைத்திருக்கிறான்.  மேலே  பல  ரூம்களை, இணைப்பது போல், தேகத்துக்கு  பல பிறப்புகள் இறப்புகள்,  

மேஸ்திரி தான் காட்டிய வீடுகளில் வசிக்க  முடியாது.  மனிதனின் இதயத்தை, மனதை  தன்னுடைய  இருப்பிடமாக  இந்த  கட்டிட  மேஸ்திரி  பகவான் வைத்துக் கொள் கிறான்.  ஒரு ராஜ்யமே உள்ளே நடத்து கிறான்.   உள்ளே  நிற்காது ஓடும்  மின் விசிறி  தான்  ஆத்மா.  புத்தி தான்  ஆத்மாவின் மந்திரி.   மனம்  சேனாதிபதி.  பத்து  இந்திரி யங்கள்  ஞானேந்திரியம் கர்மேந்திரி யங்கள்  தான் படை வீரர்கள், அல்லது வேலையாட்கள்.  கண்கள்  தான் இந்த மாளிகையின் ஜன்னல்.  வாய் இருக்கிறதே அது தான் வெளி வாசல்.   காது கண்கள்  பால்கனி. வெளி விஷயங்களை உள்ளே கொண்டு வருபவை. நரம்புகள்  தான் மின் இணைப்பு கம்பிகள். மூளை  தான்  வாசல் செக்யூரிட்டி.  வருவது போவது எல்லாம் கண்காணிப்பது.  பிராணன் தான்  மின்சாரம். மெயின்டனன்ஸ், பவர்கட்  கிடையாது. நின்றால் ஒரேயடியாக  நிற்பது. 

இந்த வீட்டைப்பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். இந்த வீட்டில் இருப்பவனைபற்றி ஒரு விஷயம் சொல்லி முடிக்கிறேன். 

இந்த   கிருஷ்ண  மேஸ்திரி  நமக்கு கட்டி தந்த இந்தவீட்டில் நம்மைக் கேட்காமலேயே தானும் இருப்பவன் . அதை நிர்வாகம் பண்ணுபவன்.  அவனைப் பார்க்க முடியாதபடி  உள்ளே ஒளிந்துகொண்டு விளையாடுபவன். குழந்தைகள் போல் நாம்  ஓடிப்பிடித்து அவனை தொட்டு ''அவுட்'' ஆக்க முயற்சித்துக் கொண்டே இருந்தால் அவன் பிடிபடுவான்.

அதற்கும் அவன் அனுமதிவேண்டும் அதைத் தான்  அருள் என்கிறோம்.


Tuesday, September 1, 2020

GEETHANJALI

 கீதாஞ்சலி 39 J K SIVAN

தாகூர்
39. மனமே உன் மயில் வாகனம்

39. When the heart is hard and parched up,
come upon me with a shower of mercy. When grace is lost from life,
come with a burst of song. When tumultuous work raises its din on all sides shutting me out from beyond,
come to me, my lord of silence, with thy peace and rest. When my beggarly heart sits crouched, shut up in a corner,
break open the door, my king, and come with the ceremony of a king. When desire blinds the mind with delusion and dust,
O thou holy one, thou wakeful, come with thy light and thy thunder. இது மழையா தூத்தலா? சை .. விடாது நசநச என்று நாளெல்லாம் பெய்கிறதே என்று முன்பு சொல்வேன். இப்போது மழையே நீ வேண்டும். ஏன் ரொம்ப நாளாகவே உன்னை காணோம்? என் தெய்வமே கிருஷ்ணா, நீ கருணை மழையாக வா. ஆனந்த ராகத்தோடு வா.
என் இதயம் பாளம் பாளமாக விரிசல் விட்ட மழை காணா வறண்ட நிலமாகி விட்டதே. வானத்தை உற்று நோக்குகிறேன். எங்குமே கருமை கண்ணில் படவில்லை. தொடுவானம் வரை பார்த்துவிட்டேன். மலட்டு வானம். ஆடை இல்லாத நிர்வாண நீல, நீளமான வானம். கொஞ்சமாவது ஒரு குட்டி மேகம்.. ஹுஹும்.. எங்காவது மண் வாசனையை கிளப்பி விட கொஞ்ச

ம் தூத்தல்...ஹுஹும்.
கிருஷ்ணா, ஆக்கிரோஷமான சூறைக்காற்று போன்று என் மனத்தில் எழும் கற்றை கற்றை யாக எண்ணப் புயல்கள் என்னை திசை திருப்பி உன்னிடமிருந்து என்னை வெகு தூரம் பிரித்து விட்டது. நீ அமைதியே உருவாக காருண்யத்தோடு சப்தமில்லாமல் என்னிடம் வருவாயா?
நான் பரம ஏழையான மனம் சக்தி இழந்து ஒரு மூலையில் நிர்கதியாக எண்ணங்களின் பிடியில் சிக்கி அமர்ந்திருக்கிறது.
நீ என் ராஜா, ஒரு மஹா ராஜா, இதோ பார் என்னை. மூடிய அறையில் மூலையில் சுருண்டு என் இதயம் நோஞ்சானாக கூனி குருகி தவிக்கிறதே. மூடிய கதவை படார் என்று உதைத்து திறந்து உள்ளே வா என் மஹாராஜா, என் இதயத்தைத் தட்டிக் கொடுத்து உனது இருப்பிடமாக ஆக்கிக்கொள்
ஓயாத எண்ணற்ற அலைபோல் என் ஆரவாரமான செயல்பாடுகள் என்னைப் பிடித்து தூர தள்ளுகின்றன. நீ இருப்பதற்கு எதிர்ப்பாதையில் நான் செலுத்தப்படுகிறேன். அவற்றை பிளந்து நீ என்னருகில் வா கிருஷ்ணா, வா வா வந்து என் மனதில் அமைதியை நிரப்பு. அலைபாயும் இதயத்திற்கு அமைதியைக்கொடு . ஒய்வு தா. எப்போதும் என் மனம் ஒரு இனம் புரியாத மாயை மயக்கத்தில் வாடி, ஆசை புழுதியில் கண் இருண்டு , குருடாகி, புரள்கிறதே, பரிசுத்த, பரிபூர்ண தெய்வமே, வா, எழுந்திரு, விழித்துக் கொள். உன் பேரன்பு மின்னல் ஒளி கண்ணை ஒளிபெறச்செய்ய, தைரியம் ஊட்டும் இடியுடன் என்னைக் காத்திட வா கேசவா.

MAHALAYA PAKSHAM

 


            நாளை  (2.9.230) முதல்   அமாவாசை வரை... J K  SIVAN  

புரட்டாசி  பௌர்ணமியிலிருந்து  அமாவாசை வரை  மஹாலய  பித்ரு பக்ஷம்.   மறைந்த பெற்றோர்கள் முன்னோர்களுக்கு செய்யவேண்டிய  பித்ருக்கடனை நிறைவேற்றும் காலம்.  ஸ்ரத்தையோடு  செய்யவேண்டிய ஸ்ராத்த காலம்.


தர்ப்பணம் என்பது எள்ளும்  நீரும் மந்திரங்களோடு சொல்லி   மூன்று தலைமுறை மூதாதையருக்கு அளிப்பது. ரொம்ப எளிய கடமை. தான தர்மம் செய்வது பலனையளிக்கும்.  இந்த பதினைந்து நாட்கள் செய்யும் பித்ருக்கடன் கயாவுக்கு சென்று செய்த பலன் அளிக்கும்.  நாம் அர்ப்பணிக்கும்  எள் , ஜலம் , பிண்டம் சூரியஒளி வழியாக  பித்ருக்களை சென்றடைந்து அவர்கள் பசியை தீர்க்கும்.  அவர்களால் வேறு எதையும் சாப்பிட முடியாது.   பித்ருக்கடன் செய்யாதிருப்பது அவர்களை பட்டினி போடுவது. அதனால் அவர்கள் சாபம் நம்மை பாதிக்கும்.  

''என்னவோ சார், மாத்தி மாத்தி எனக்கு மனக்கஷ்டம், பணக்கஷ்டம். மனசிலே நிம்மதி ஒருநாளும் இல்லை.  எவ்வளவு நானும் ட்ரை பண்றேன்.மீளமுடியவில்லை''

'' ஓஹோ,   எவ்வளவோ வசதியோடு இருக்கிறீர். ஏன் இந்த கஷ்டம் என்றால் ஒருவேளை பித்ரு சாபம் ஏதாவது இருக்குமோ என்று தோன்றுகிறது. காசி, கயா, ராமேஸ்வரம் சென்று பித்ரு கடன் பண்ணிவிட்டு வாருங்கள் சரியாக போய்விடும்''
இந்த சம்பாஷணை நிறைய கேட்டிருப்பீர்கள்.  அது சம்பந்தமானது இந்த கட்டுரை. 
பித்ருக்களின் ஆசிர்வாதத்தோடு இருக்கும் குடும்பத்தில்  சுபிக்ஷம் ஆரோக்கியம், மன நிம்மதி எல்லாம் நிறைய இருக்கும்.

பித்ரு தோஷம்  என்பது முற்பிறவிகளில் செய்த  நமது பாவங்களினாலும், நமது முன்னோர்கள் செய்த பாவங்களினாலும்  கலந்து ஏற்படுகிறது. பித்ருக்கள் என்பது அப்பா வழி மட்டுமல்ல  அம்மா வழி மூன்று தலைமுறையும் சேர்த்து தான். நம்முடன் வாழ்ந்து மறைந்த அவர்கள் நமது நலன் கருதுபவர்கள். அவர்களை பட்டினி போடுவது தப்பு இல்லையா?  ''அட  துரோகி''  என்று  சாபமிடுவார்கள்.

முறையாக  பித்ரு கடன் நிறைவேற்றினால்  ஜாதகத்தில் உள்ள தோஷங்கள்  காணாமல் போகும்.  பித்ரு கடன் செய்யாமல் மற்ற பூஜைகள் செய்வது பலனளிக்காது  என்பது சித்தர்கள் வாக்கு. முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும்  இருந்து கொண்டே இருக்கும்.  இந்த தர்ப்பணத்தை செய்ய தவறியவர்கள் , முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று ஆற்றங்கரையில் அல்லது தன் சொந்த வீட்டில் செய்வதற்கு  இந்த மஹாலய  அமாவாசை தர்ப்பணம் விசேஷ பரிகாரம்.

ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகு வுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.   லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக  சொல்வார்கள். 

அமாவாசை  அன்று , ஏன்  தினமுமே  முடிந்தால்  அதி விசேஷம்,   பசுமாட்டிற்கு அகத்திக்கீரை, பச்சரிசி வெல்லம், எள்ளு இவற்றை கலந்து கொடுக்கவேண்டும். இப்படி செய்துவந்தால் பித்ரு தோஷத்தின் தாக்கம் குறையும். அதே போல், அவர்களின் நினைவு நாளான்று முறைப்படி தர்ப்பணம் முதலியவற்றை  செய்து அன்னதானம் செய்யவேண்டும்.
 
பித்ரு தோஷம் நீங்க எளிய பரிகாரம் லட்சுமி நரசிம்மர் படம் முன், பால் அல்லது பானகம் வைத்து காலை அல்லது மாலை வேளைகளில்  நரசிம்ம ப்ரபத்தி ஸ்லோகத்தை சொல்லலாம். 
 
அனுஷம், பூசம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம் இந்த நட்சத்திரத்தில் அமாவாசை வருமானால்  அன்றைய தினம் சிராத்தம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும். மஹாலய பக்ஷத்தில் வரும் பரணி நட்சத்திரத்தில் திதி கொடுத்தால் மிகவும்  விசேஷமாகும். ஏனொனில் இந்த பரணி மஹா பரணி எனப்படும். அட்சய திரிதியை வரும் நாளில் பித்ருக்களுக்கு சிராத்தம் செய்தால் பித்ரு  தோஷம் நீங்கும்.
 
மேற்குறிப்பிட்டுள்ள நாள்களில் சிராத்தம் செய்தாலோ, அல்லது காளஹஸ்தி சென்று அங்கு பித்ரு பூஜை செய்தாலோ பித்ரு தோஷம்  நிவர்த்தி ஆகும்.
''மாதா பிதா செய்தது மக்கள் தலைமேலே''    என்பார்கள். நாம் செய்த பாவங்கள் நமது வாரிசுகளை தீண்டும்.  நமது பெற்றோர்  செய்தது நம்மை வாட்டும். 

அமாவாசை தினத்தில் 100 கிராம் சந்தனக்கட்டை வாங்கிக் கொண்டு சிவன் கோவிலுக்கு சென்று, அங்கு அந்த சந்தனத்தை உரசி எடுத்து, அந்த சந்தனத்தை அர்ச்சகரிடம் கொடுத்து சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்ய சொல்ல வேண்டும். சிவனுக்கு செய்யப்படும் அந்த அபிஷேகத்தைப் பார்த்த நாள் முதல் உங்கள் பித்ரு தோஷம் நீங்கும்.

ஒரு வரி கதை சொல்கிறேன்.  மஹாபாரத யுத்ததில் கர்ணன் இறந்தபிறகு ஸ்வர்கம் செல்கிறான். அங்கே அவனுக்கு ஆபரணங்களும் பொன்னும் பொருளும் தான் உண்பதற்கு கொடுகிறார்கள்.  ஐயோ,  என்ன இது என்கிறான்? ஆமாம் கர்ணா, நீ ஒரு தடவை கூட உன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவில்லையே என்று பதில் வந்தபோது, எனக்கு அவர்கள் யாரென்றே தெரியாதே எப்படி தர்ப்பணம் செய்வேன்? இப்போது வேண்டுமானால் சொல்லுங்கள் உடனே செயகிறேன் என்கிறான். போ பூமிக்கு என்று அனுப்புகிறார்கள். மகாளய பக்ஷத்தில் பதினைந்து நாட்களும்   நித்ய தர்ப்பணம் செய்துவிட்டு விண்ணுலகம் செல்கிறான்.

 விஞ்ஞானிகள்  மனித வர்க்கம் பூமியில்  20 மில்லியன் வருஷங்களாக இருக்கிறது  என்பதால் நமது முன்னோர் எத்தனை பேர் என்று கணக்கிடவே முடியாது.  அவர்கள் அத்தனை பேருக்கும், தெரிந்தவர் தெரியாதவர் அனைவருக்கும் தர்ப்பண மந்திரத்தில் இடம் உண்டு.  மஹாலய  தர்ப்பண மந்திரம்   

https://youtu.be/dY6nQG9Fbzo

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...