Friday, January 3, 2020

SKST 2020 CALANDER



Dear Members and friends,
Our Publisher and Printer, M/s Sakthi Scanners, Gopalapuram 3rd St., Chennai , has been kind enough to gift us 100 pcs of 2020 Calander with the picture of Maha Periyava selected by me. As this cannot be sent by post to prevent damage in transit, those who wish to have this picture of Periyava in their homes can visit Nanganallur and collect this freely from me on - first come first get- basis. This picture of Kanchi Periyava meditating with the back drop of Kanchi Kamakshi is a rare combination. This is just to adorn the wall in your house not to refer to the passing dates which has no meaning. J.K.Sivan.
Joining you all I thank the management of M/s SAKTHI SCANNERS PVT LTD. for their good gesture of assisting the cause of Sree Krishnarpanam Seva Trust.

Thursday, January 2, 2020

margazhi virundhu



மார்கழி  விருந்து           

J.K. SIVAN

                              18.  உந்து மத களிற்றன்

ரொம்பவே அதிர்ஷ்டக்காரி அந்த ஆண்டாள் குட்டி.. நினைத்ததை சாதிப்பவள். அடடா! எவ்வளவு புண்யசாலி. சாதாரண, படிக்காத எளிய இடைச்சாதி பெண். இல்லவே இல்லை. பள்ளி படிப்பு எல்லாம் ஒரு படிப்பா?   நிறைய  பணம் கொட்டி  மூன்று வயதிலேயே   ஒன்றுக்கும்   ப்ரயோஜனமில்லாத உதவாக்கரை   பாபா  ப்ளாக் ஷீப். ஜாக் அண்ட் ஜில்  கற்றுக்கொள்வது தான் உயர்ந்த படிப்பா?  அறஞ்செய விரும்பு  ஆறுவது சினம்,  குப்பையில் போடப்படவேண்டியதா?  பெற்றோர்கள் கொஞ்சம் யோசிக்கலாமே.


ஆண்டாள்  பிறக்கும்போதே ஞானத்தில்  தேர்ந்த யாதவ குல, இடைச்சாதி  பெண்.  கோதைக்கு  வில்லிப்புத்தூரில் அவள் தந்தை அவளுக்கு கற்றுக் கொடுத்தது  நமக்கும்  சேர்த்தல்லவோ பயன்படுகிறது. அவள் திருப்பாவை அழியாத கருவூலம்.   சாதி என்பது  உடம்பு சம்பந்தப்பட்டது  தானே. உள்ளத்திற்கேது? சாக்ஷாத் பரமாத்மன் நாராயணனே, தான் வளர, ஆயர்குலத்தைத் தானே தனக்கு வேண்டும் என்று தேர்ந்தெடுத்தான்,

உலகில் உத்தமமான, பூஜிக்கத் தக்க பிராணியான பசுவை பராமரிக்கும் ஆயர்பாடி மக்கள் அனைவரும் தான் ஆயர்  குலம் (higher குலம், ஐயர் குலம் )என்ற உயர்குலம் கொண்டவர்கள். அதனால் தான் ஆண்டாளால் கிருஷ்ணனை அவன் வீட்டிலேயே காண முடிந்தது. ஆண்டாள் நினைத்ததை சாதிப்பவள் என்று தான் அடிக்கடி சொல்வேனே.

நந்தகோபன், யசோதை, கிருஷ்ணன் பலராமன் ஆகியோரை எல்லாம் துயிலெழுப்பும் வேலையில் ஈடுபட்ட ஆண்டாள் தன் தோழியருடன் சுற்றும் முற்றும் பார்க்கிறாள், இன்னும் யாரை விட்டு விட்டேன் துயிலெழுப்பாமல் என்று. அப்போது தான் நப்பின்னை தெரிகிறாள். அடடா, இவளை விடலாமா என்று ஆண்டாளும் தோழிகளும் அவளையும் ஸ்தோத்ரம் செய்கிறார்கள்.

''அழகிய நப்பின்னையே, (நீளா தேவி) கமகமக்கும் தைல வாசனையோடு மணப்பவளே நந்தகோபன் மறுமகளே, உன் மாமனார் எப்படிபட்டவர் தெரியுமா உனக்கு?.

வெளியே சேவல்கள் குரல் கொடுத்து பொழுது விடிந்ததை பறை சாற்றுகிறதே.    அவரது செல்வங்கள் கணக்கிலடங்காது.  ஏராளமான  பசுக்கள், எருமைகள்,கன்றுகள் மட்டுமல்ல. யானைகளையும் உடையவர். எதிரிகள் தான் அவரைக் கண்டு அஞ்சி ஓடுவார்களே தவிர அவர் அஞ்சியதாக சரித்திரமே இல்லை. 

 அதோ பார் மல்லி பந்தல் முழுதும் குயில் கூட்டம்,  என்னமாக சூழ்ந்து கொண்டுள்ளன. அவைகளின் இனிய பாட்டு துயிலெழுப்பும் வேலையைச் செய்கிறதே தினமும். பந்து வைத்துக்கொண்டு விளையாடும் பருவப் பெண்ணே, உன் கைகளின் வளையோசை கலகலவென ஒலிக்க உடனே வந்து கதவைத் திற உள்ளே வந்து ஆசி பெறுகிறோம். எங்கள் நோன்புக்கு உன் நல்லாசியும் தேவையம்மா.''

நப்பின்னை யார்? இது பரம ரகசியமல்ல. ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே ஒரு பாலம்.
அது புரிந்தால் போதுமானது. அவளது அனுகூலத்துடன் தான் நாம் வீடு பேறு அடைய முடியும்.

அது புரிந்தால் போதுமானது. அவளது அனுகூலத்துடன் தான் நாம் வீடு பேறு அடைய முடியும்.

சூர்ப்பனகை  சீதையை ஒதுக்கிவிட்டு ராமனைத் தேடினாள், ராவணன் சீதையைத் தேடினவன் ராமனை மறந்தான். முடிவில் இருவருமே அழிவைத்தான் தேடிக்கொண்டனர். நப்பின்னைப் பிராட்டி தான் ஆண்டாள் குரல் கேட்டு, கதவைத் திறந்து அந்த ஆயர்பாடி சிறுமிகளைக் கண்ணனிடம் உள்ளே அழைத்துச் சென்றாள். அதற்கப்புறம் தான் ஆண்டாள் கிருஷ்ணனை நேரே காண்கிறாள்.


ஆண்டாளின் இந்த இந்த பாசுரம் ஸ்ரீ ராமானுஜரை மிகவும் கவர்ந்த ஒரு பாசுரம். அவர் பிக்ஷைக்கு போகும்போது இதையே பாடிகொண்டு தான் தனது ஆசார்யன் வீட்டு வாசலில் நின்றார் என ஒரு சரித்திரம் உண்டு. அதை சுருக்கமாக சொல்கிறேன்.

ஸ்ரீ ராமானுஜருக்கே திருப்பாவை ஜீயர் என்று ஒரு பெயர். பெயரை வைத்ததே அவரது ஆசார்யன் பெரிய நம்பிகள். என்ன காரணம் ?

ஸ்ரீ ராமானுஜருக்கு திருப்பாவையின் உள்ளர்த்தங்களில் பொதிந்த வேத சாஸ்திர சாரமும் அதன் பொருட் செறிவும், தெள்ளிய நடையும் அதைப்பாடும்போது கிடைக்கும் நாவின் சுவையும் அனுபவமாயிற்றே. அடிக்கடி ஆண்டாள் பாசுரங்களை பாடிக்கொண்டே செல்வார். அதுவும் முக்யமாக பிக்ஷைக்கு அவர் வெறுங்  காலோடு பாதரக்ஷை அணியாமல் செல்வது வழக்கம்.

அவரை மிகவும் ஈர்த்த பாசுரம் இந்த 18வது திருப்பாவை ''உந்து மதக் களிற்றன்''

ஒரு முறை திருக்கோஷ்டியூரில் இவ்வாறு வெறுங்காலுடன் ''உந்து மதக்களிற்றின்'' பாசுரம் பாடிக்கொண்டே தனது ஆசார்யன் வீட்டு வாசலில் பிக்ஷைக்கு நின்றார். அவர் நின்ற சமயம்  வாசலில் அவர் குரல் கேட்டு  உள்ளே இருந்த  அவரது  ஆசார்யனின் பெண் அத்துழாய்  என்பவள்  வாசல் கதவை திறக்கிறாள்.

அந்த சமயம் தான் ராமானுஜர் பாசுரத்தின் மற்றொரு அடியான ''செந்தாமரைக் கையாள் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்'' என்ற வரியை பாடிக்  கொண்டிருந்தார். '' வளை ஒலிப்ப'' என்று சொல்லுவதற்கும்  தற்செயலாக அந்தப் பெண் அத்துழாய்  கையில் வளைகள் கலகல வென  ஒலிக்க  வாசல் கதவை  திறப்பதற்கும் ஒரே சமயமாக நிகழ்ந்தது. .

கை வளை ஒலிக்க ஆண்டாளே பிரத்யக்ஷமாக தோன்றியதாக ராமானுஜருக்கு மனதில் பட்டது. அந்த ஆனந்த அநுபவத்தில் ராமானுஜர் மூர்ச்சையானார்.   அத்துழாய் அதிர்ச்சி அடைந்து  உள்ளே  ஓடுகிறாள் 

''என்னம்மா  ஆயிற்று வாசலில் என்ன சத்தம், என்ன நடந்தது?''

''வாசலில் பிக்ஷைக்கு யாரோ வந்திருக்கிறாரே என்று கதவைத் திறந்தேன். உங்கள் சீடர் ராமானுஜர் தான் நின்றார்.    திருப்பாவை  பாடிக்கொண்டிருந்தவர்   என்னைக் கண்ட அடுத் த வினாடி  திடீரென்று  மூர்ச்சையடைந்து கீழே விழுந்து விட்டார் அப்பா. ஏன் எதற்கு விழுந்தார் என்று தெரியவிலையே ''

ஓஹோ அப்படியா.   என்ன  பாடிக்கொண்டிருந்தார் நீ கதவை திறந்து பார்த்தபோது ?

'ஏதோ ''சீரார் வளை ஒலிப்ப '' என்று தான்  உச்சரித்துக்கொண்டிருந்தார்.''

மஹான் பெரிய நம்பிகளுக்கு  என்ன நடந்தது என்று புரிந்து விட்டது... சிறந்த ஞானி அல்லவா?

''ஓஹோ,   ராமானுஜன்  ''உந்து மதக்களிற்றன்''  பாசுரத்தை பாடிக்கொண்டு வந்திருக்கிறான் போலும். வளைக்கரங்களோடு நீ கதவை திறந்தது அவன் பாடிய பாசுரத்தில் வரும் காட்சியை நினைவூட்டி இருக்கும். ஆண்டாளே நேரில் வந்து கதவைத் திறந்ததாக ராமானுஜனுக்கு தோன்றியிருக்கலாம்'. அந்த ஆனந்தானுபவத்தில் தன்னை இழந்திருக்கிறான்' என்று ஊகித்தார். அதனால் தான் அவருக்கு ''திருப்பாவை ஜீயர்'' என்ற பெயரும் இட்டார்.

அது சரி ஏன் ராமானுஜர் திருப்பாவை பாடல்கள் பாடும்போது பாத ரக்ஷை அணிவதில்லை? . 
காரணம், ஆண்டாள் பூமி தேவியின்  சாக்ஷாத் அவதாரம். அவளைப் பாடும்போது செருப்பு அணிவது தாயாருக்கு செய்யும் அபசாரம், அவமரியாதை அல்லவா என்று எண்ணினவர். என்னே அவர் பக்தி!! இதோ அந்த பாசுரம்:



உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

வில்லிப்புத்தூரில் .........

மேலே சொன்ன ஆண்டாள் குரல் ஒலித்தது கோதை மூலம்  அந்த  சிறிய  ஓலை வேய்ந்த ஆஸ்ரமத்தில்.   வில்லிபுத்தூர்  கிராமத்தில்   எங்கோ ஒரு அமைதியான நந்தவனத்தில் பறந்து செழித்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேலென்று பூத்துக்குலுங்கும் பல ஜாதிப்பூக்கூட்டங்களுக்கிடையே அந்த பர்ண சாலையை நந்தவனப்பூக்கள் எல்லாம் நறுமணத்தால் குளிப்பாட்ட உள்ளே விஷ்ணு சித்தர் பூஜைக்காக ஏற்றிய தூப தீபங்களின் இனிய மணமும்  கலந்து மேலும் இன்ப போதையை மூட்டியது. கண்ணுக்கு தெரியாமல் எங்கிருந்தெல்லாமோ வித வித பட்சி ஜாலங்களின் சப்தக்கலவை ஏழு ஸ்வரங்களின் ஓசையைக் கலந்து கட்டியாக பரிசளித்தது. இவற்றை எல்லாம் உள்ளடக்கி மேலே காற்றில் கோதையின் தெய்வீகக் குரலில் மேற்கண்ட பாசுரம் ஒலி பரப்பானது.   இத்தகைய  சூழ்நிலையில் விஷ்ணு சித்தர்  தன்னை மறந்து  அதில் லயித்ததில் என்ன ஆச்சர்யம்?

''அம்மா கோதை, நீ பாடுவது ஒவ்வொன்றும் அபூர்வம். அசாத்தியம். அதன் அர்த்தம் அலாதி. நான் இப்போதெல்லாம் வில்லிப்புத்தூரில் இல்லை அம்மா. நீ தான் என்னைக் குண்டு கட்டாக கட்டித் தூக்கிக்  கொண்டு போய்  ஆயர்பாடியிலே போட்டுவிட்டாயே.  நான் கேட்பதெல்லாம்  '' என்னை ஆயர்பாடியிலேயே விட்டுவிடு.  அந்த ஆண்டாளோடு சேர்ந்து நானும் அவள் எங்கெல்லாம் போகி றாளோ அவள் கூடவே போகி றேன். அவளை எனக்கு ரொம்ப பிடிக்கிறதற்கு  காரணம் என்ன என்பது உனக்கு தெரியவேண்டுமா? சொல்கிறேன் கேள் :

''நீ தான் எனக்கு அந்த ஆண்டாள். என்னை மட்டுமல்ல எவரையுமே நீ தான் ''ஆண்டவள்''  அதற்கு சாட்சியம் வருஷா வருஷம் வரும்  இந்த  மார்கழி மாதம்.

SHEERDI BABA





மனித உருவில் ஒரு தெய்வம்  J K SIVAN 
ஷீர்டி பாபா 

                                               பாபா  பாதுகை பிரதிஷ்டை 


ஷீர்டியில் முதன் முதலாக  அறிமுகமானபோது பாபா  இளைஞர்.  நீளமான  தலைமுடி. தாடி மீசையுடன்  வாலிபர்.  கட்டுமஸ்தான  தேகம்.  இருகப்பிடித்த   உடை.  ஷீர்டியிலிருந்து  3  மைல்  தூரத்தில்  உள்ள  ரஹதா  என்ற  ஊருக்கு குடிபெயர்ந்த  போது  சில  பூச்செடிகளை  கொண்டு சென்றார். அவற்றை அங்கே நட்டு  செடிகளை வளர்த்தார். அவற்றுக்கு தானும் நீர் வார்த்து பராமரித்ததால் கிடுகிடுவென்று அவை வளர்ந்தன. அந்த ஊரில்  வாமன்  தாதியா  என்ற மண்பாண்டம் செய்யும் குயவர் ஒருவர் இருந்தார்.  அவர் தினமும் பாபா  இருந்த இடத்தை தாண்டி தான் செல்வார். பாபா செடிகளை நட்டு அவற்றுக்கு  தகரகுவளையில் தண்ணீர் மொண்டு ஊற்றுவதை பார்த்துவிட்டு  ரெண்டு பெரிய  பானைகளை  செய்து கொடுத்தார். ஒரு கொம்பில்  அந்த பானைகளை இரு முனையில் கயிற்றில் கட்டி   ஊர் கிணற்றில் நீர் முகர்ந்து பாபா   தோளில்  தூக்கி வந்து செடிகளுக்கு தாராளமாக நீர்  வார்ப்பார்.

சாயந்திர வேளைகளில்  அந்த பானைகள்   பாபா   இருந்த  வேப்ப  மரத்தடியில் இருக்கும்.  மண்பானை களானதால்  அடிக்கடி உடைந்து போய் விட்டாலும்  அடுத்த நாளே  தாதியா புதிதாக  ரெண்டு பானை தருவார். இப்படியே, மூன்று வருஷங்கள் உடைந்த  பானைகளுக்கு  பதிலாக புதுப் பானைகள் பாபாவுக்கு தந்து வந்தார்.  பாபாவின் கடின உழைப்பால்  பல வண்ண பூக்கள்  பூத்து குலுங்கும் ஒரு நந்தவனமும் உருவாகியது. 

இப்போது அந்த இடம்  ''சமாதி மந்திர் ''என்ற பெரிய  மாளிகை கட்டிடமாக உருவாகி உள்ளது.  லக்ஷோப லக்ஷம்  ஸாயீ  பக்தர்கள்  அன்றாடம் குவிந்து வணங்கும் ஸ்தலம்.  

பாய்  கிருஷ்ணா அல்பகர் என்ற ஒருவர்  வெகுகாலமாக  அக்கல்கோட் மஹாராஜ் என்கிற  துறவியின் பக்தராக  வழிபட்டு வந்தார்.  அக்கல் கோட் மஹராஜ் என்ற துறவியின் படம் மட்டும் தான் அவரிடம் இருந்தது.   அல்பகருக்கு என்றாவது ஒருநாள்   அக்கல்கோட் செல்லவேண்டும்.  அங்கே உள்ள தனது  குருநாதரின்  பாதுகையை வணங்கி வழிபடவேண்டும் என்று ஆசை.  அக்கல்கோட்  ஷோலாப்பூர் ஜில்லாவில் இருக்கிறது.   

ஓருநாள் கிளம்பலாம் என்று  முடிவு செய்து  நடைப் பயணத்துக்கு  தயார் பண்ணிவிட்டார். முதல் நாள் இரவு ஒரு கனவு.  கனவில் வந்தவர்  அவரது  குருநாதர்  அக்கல்கோட்  மஹராஜ் .   அவர்  '' ஏ,  பக்தா, அல்பகர்,  நீ  ஏன் அப்பா  என்னை தேடி அவ்வளவு தூரம்  அக்கல்கோட்  வரை நடக்கிறாய்.   நான்  தான் ஷீர்டியிலேயே இருக்கிறேனே. அங்கேயே   நீ என்னை வழிபடலாமே''  என்கிறார். 

அல்பகருக்கு  ஆச்சர்யம்.   ''என்ன  நம் ஊருக்கு  அருகிலேயே இருக்கும்  ஷீர்டியிலா  என் குருநாதரும் இருக்கிறார். எங்கே?''   அல்பகர்  உடனே ஷீர்டிக்கு நடந்தார்.  அங்கே  ஷீர்டி பாபாவை  தவிர யாருமில்லை என்று தெரிந்தது.  சரி பாபாவை சந்திக்கலாம் என்று மசூதிக்கு வருகிறார். 

பாபாவை சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. குருவை சந்தித்த  ஆனந்தம்.   ஆறுமாதமாகியும்   ஊர் திரும்ப மனம் வரவில்லை.  கனவில் வந்த  குரு அக்கல்கோட் மஹாராஜின்  பாதுகைகள் மனதை விட்டு நீங்க வில்லை.  குருநாதரின் பாதுகைகள் தயார் செய்தார். ஆவணிமாதம் ஒரு புனிதநாளில்  1912ல்  பாபா  தங்கியிருந்த  வேப்ப மரத்தடியில்  அக்கல்கோட் மகாராஜ்  பாதுகைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.  பூஜைகள் விமரிசையாக அதற்கு நடந்தது.  தாதா கேல்கர், உபாஸனி  ஆகிய இருவர் இதில் பங்கேற்றனர். 
பாதுகை பூஜைக்கு  ஒரு பிராமணரை பூஜாரியாக நியமித்தார்கள் . சாகுன் மேரு நாயக்   என்ற ஒரு பக்தர்  அந்த பாதுகை  பூஜா ஸ்தானத்தை   பராமரிக்க, பொறுப்பேற்றார்.

இது பற்றி  இருக்கும்  ஒரு விவரம் தருகிறேன்.   ஸ்ரீ   பி. வி  ராவ் (B.V. RAO) என்கிற  ஓய்வுபெற்ற தானா நகரத்து  மாம்லத் தார்   (நம்முடைய தாசில்தார் மாதிரி ஒரு பெரிய  பதவி )  அவர்  ஷீர்டி பாபாவின் பக்தர்  ஷீர்டி வந்தபோது  சாகுன் மேரு நாயக்கிடமும்    கோவிந்த கமலாகர் தீக்ஷித் என்பவரிடமும் இந்த  பாதுகை பிரதிஷ்டை  விஷயங்கள் எல்லாம் அறிந்து   சாய்லீலா  என்கிற தனது புத்தகத்தில் எப்படி  விளக்கி இருக்கிறார் என்று பார்ப்போம்:

''1912ம் வருஷம்  பம்பாயிலிருந்து  ஒரு  டாக்டர்,  ராமராவ் கோதாரே  என்பவர் ஷீர்டிக்கு  பாபாவை தரிசனம் செய்ய வந்தார்.  டாக்டருக்கு உதவியாளராக, (compounder )  கம்பௌண்டர் என்று மருந்து கலக்கி,  ஜாடியிலிருந்து மாத்திரைகள் பொட்டலம் கட்டி தருபவர்  தான்  மேலே சொன்ன பாய் க்ரிஷ்ணாஜி அலிபகர். நல்ல நண்பரும் கூட.  ஆகவே அவரும் ஷீர்டி வந்தார். இவர்கள்  சகுன்  மேரு நாயக், தீக்ஷித், ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்த போது  ''நமது பாபா  முதன் முதலில் இந்த ஷீர்டி  ஊருக்கு வந்து  இந்த வேப்ப மரத்தடியில் தங்கியதற்கு  ஏதாவது ஒரு ஞாபகார்த்த  சின்னம் இருக்க  வேண்டாமா?'' என்று யோசித்தார்கள்.

''பாபாவுடைய  பாதுகைகளையே அங்கே  பிரதிஷ்டை பண்ணினால்  என்ன? '' என்று  அலிபாகர் கேட்க,  டாக்டர் கோதாரேக்கு  தெரிந்த ஒருவர்  கல்லில் சிலைவடிப்பவர். அவரை விட்டு பாபாவின் பாதுகைகளை உருவச்சிலையாக  வடிக்கலாம் என்று  முடிவானது.  காண்டோபா கோவிலில்  உபாஸனி  மஹாராஜிடம் பேசினார்கள், பாதுகையின்  உருவப்படத்தை காட்டி இது  சரியாக இருக்குமா  என்று அவரிடம்  காட்ட,  அதை அவர்  சிறிது மாற்றி, அங்கங்கே  தாமரை இதழ்கள் , பூக்கள்  சங்கு  சக்கரம்  எல்லாம் சேர்த்து, கீழே  பாபா அமர்ந்த  வேப்ப மர  மஹிமை , பாபாவின் யோக சக்தி பற்றிய  ஒரு ஸ்லோகமும்  எழுதிகொடுத்தார். அந்த ஸ்லோகம்: 

 "Sada Nimbarvrikshasya mooladhiwasat, Sudhasravinam tiktamapi-apriyam tam, Tarum Kalpavrikshadhikam sadhayantam Namameeshwaram Sadgurum Sai Natham" 

 சதா நிம்பர் விருக்ஷயஸ்ய மூலாதி வஸத் , சுதாஸ்ரவிணம் திக்தமபி  அப்ரியம் தம், தரும் கல்ப விருக்ஷாதிகம் சதயந்தம்  நாமமீஷ்வரம் ஸத் குரும்  சாய் நாதம் ''

''ஆஹா ரொம்ப  நல்ல வாசகம்'' என்று இருவரும் மகிழ்ந்தார்கள்.  பம்பாயில்  பாதுகைகள் தயாராயின. அலிபாகர் பாதுகையை  பம்பாயிலிருந்து ஷீர்டிக்கு  கொண்டுவந்தார்.  ஒரு  ஆவணி  பௌர்ணமி அன்று  காலை 11 மணிக்கு  பாபாவின் பாதுகை ஷீர்டியில் வேப்பமரத்தடியில்  பிரதிஷ்டை செய்யப்பட்டது. பாது கை கண்டோபா கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டு,   பக்தியோடு   தீக்ஷீத் தனது  சிரத்தில் பாதுகையை தாங்கி  ஷீர்டியில் துவாரகாமாயீ  மசூதிக்கு கொண்டுவந்தார்.  மேல தாளங்களுடன் பாதுகை ஊர்வலம் வந்தது.  

பாபா தனது கரங்களால் அந்த பாதுகையை  தொட்டார்.   ''இது பகவானின்  பாதம்'' என்று அருகிலிருந் தோரிடம் சொன்னார். 

பாதுகை வேப்பமரத்தடியில்  பிரதிஷ்டை செய்யப்பட்ட  தினத்திற்கு முந்தைய தினம்  யாரோ  ஒரு  பார்ஸிக்கார  பாபா பக்தர்  பம்பாயிலிருந்து  25 ரூபாய்  மணி ஆர்டர் செய்திருந்தார்.  அந்த காலத்தில் அது 2 லக்ஷத்துக்கு சமம்.  பாதுகையை  பிரதிஷ்டை செய்யும் செலவிற்கு அதை பாபா  அளித்தார்.  மொத்த செலவு  நூறு ரூபாய்கள் ஆனதில்  மீதி  75 ரூபாய்  நன் கொடையாக  பக்தர்களிடமிருந்து  வசூல் ஆகி யிருந்தது.



Wednesday, January 1, 2020

THIRUVEMBAVAI



திருவெம்பாவை.   J K  SIVAN  

                                     பூக்காடர் ..

திருவெம்பாவை மொத்தம்  20  பாடல்கள் மட்டுமே  மணிவாசகர் அருளி இருக்கிறார்.  போதுமே இது என்று நினைத்தாரோ?  ஒரு பாடலை அலசினாலே மென்று சுவையை ருசித்தால்  அதற்கே  எத்தனையோ நாளாகும் முடிக்க.. ஒவ்வொரு கோணத்திலும் புது அர்த்தங்கள் உள்நின்று ஒளிர்வதை  உணரலாம். அதனால் தான்  ஹே  மனிதா. இது  ஆனந்தவிடகன், கல்கி இல்லையடா. உன் வாழ்க்கைக்கு வழிகாட்டி. நிதானமாக இதை அறிந்து உன் சரியான பாதையை அடையாளம் கண்டுகொண்டு நட  என்று நடராஜனை நாட வழிகாட்டிவிட்டார்.

திருவையாறு சென்றபோது எனக்கு சப்தஸ்தான க்ஷேத்ரங்கள் அருகில் தானே இருக்கின்றன சென்று பார்க்கலாமே என்று ஒரு ஆசை உந்த, நண்பர்களோடு சென்றோம். அதில் ஒன்றை மட்டும் இன்று  நினைவு கூர்ந்துவிட்டு  இன்றைய 17வது திருவெம்பாவைக்குள் செல்வோம்.

மேலைத் திருக்காட்டுப்பள்ளி வழியாக வந்தால் திருக்கண்டியூருக்கு மேற்கே 3 கி.மீ., நடந்தால் தான்   இன்னொரு சப்தஸ்தான க்ஷேத்ரம் வரும்.  அதற்கு பெயர் திருப்பூந்துருத்தி .   சப்தஸ்தான க்ஷேத்ரங்களில் இது ஆறாவது. தஞ்சாவூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தூரம்.

நந்திகேஸ்வரனின்  திருமண வைபவத்திற்கான அத்தனை மலர்களையும் வாரி வழங்கிய ஸ்தலம். தேவர்கள் அனைவரும் நிறைய பூக்கள் கொண்டுவந்து இங்கே சுயம்புவாக சிவனை வழிபட்டதால் இப்பெயர். “வானோருலகமெல்லாம் வந்திறைஞ்சி மலர்கொண்டு நின்று போற்றும் வித்தானை’ என அப்பர் பாடல் சொல்கிறது. 

திருமாலும், திருமகளும் இத்தல இறைவனை வழிபாடு செய்தனர் ஆகவே திருப்பூந்துருத்தி. இன்னொரு காரணம் சோழ ராஜா ஒருத்தன் இங்கே துருத்தியை லிங்கமாக வைத்து பூஜை செய்ததால் என்பார்கள். 

இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. ரெண்டு ஆறுகளுக்கு இடையே இருக்கும் ஊருக்கு துருத்தி என்ற பெயராம். காவிரி குடமுருட்டி ரெண்டுக்கும் இடையே உள்ளதால் இது திருப்பூந் துருத்தி. மேலைத்திருப்பூந்துருத்தி என்று சில தஸ்தாவேஜுகளில் இதற்கு ஒரு பெயர். எது எப்படி இருந்தாலும் இது மிகவும் சிறப்பு மிக்க காவேரி தென்கரை சிவாலயங்களில் பதினொன்றாவது. சிவனுக்கு இங்கே மிகப்பொருத்தமான  பெயர்.  புஷ்பவனேஸ்வரர்,   பூக்காடர்,   புஷ்பவன நாதர் என்ற பெயர். அம்பாள் சவுந்தர்ய நாயகி. ஐந்து நிலைகளுடன் கிழக்கு பார்த்த ராஜகோபுரம். இந்த ஆலயத்தில் ஒரே கிணற்றில் 13 தீர்த்தங்கள் சேர்ந்து வந்தது எப்படி என்று ஒரு சிறு கதை சொல்லட்டுமா?

ஒருமுறை முனிவர்கள் பலர் ஒன்று கூடி ‘ஆடி அமாவாசை அன்று, வேதாரண்யம், தனுஷ்கோடி, சங்கமம் ,, திருவேணி சங்கமம், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, காவிரி, சிந்து, பிரம்மபுத்ரா, தாமிர பரணி, ராமேஸ்வரம் ஆகிய 13 தீர்த்த க்ஷேத்ரங்களில்   ஸ்னானம் செய்ய  நினைத்தார்கள்.   இப்படிப் பண்ணினால் ஈடற்ற புண்ணியம், பித்ரு சாபங்கள் விலகும்.     இந்த புனித தீர்த்தங்களில் ஆடி அமாவாசை தினத்தில் நீராடி ஈசனை வழிபட   நமக்கும்  கூட ஆசைதான். ஆனால் இது யாரால் எப்படி முடியும் ? என்று அந்த ரிஷிகள்  அதிசயித்தார்கள். அங்கே காசியப முனிவர் இருந்து, அவர் காதில் இந்த பேச்சு விழுந்ததால் அவர் குறுக்கிட்டு பேசினார்:

‘ஏன் முடியாது?!. நான் ஆடி அமாவாசை அன்று இந்த பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடி, பிதுர் தர்ப்பணம் முடிக்க  வழி  காட்டுகிறேன்.பார்க்கிறீர்களா?’ என்றார்.   உடனே காசியபர் சிவனை வேண்டி தவம் இருந்தார். பல சிவ தலங்கள் சென்றவர் திருப்பூந்துருத்திக்கு வந்தார். இங்கேயும் ஈசனை வேண்டி தவம் இருந்தார். அவர் தவத்தை மெச்சிய பரம சிவன் ஆடி அமாவாசை அன்று காசியபருக்கு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராக திருக்காட்சி கொடுத்தபோது மேலே சொன்ன 13 புனித தீர்த்தங்களையும், ஒரே இடத்தில் (திருப்பூந்துருத்தியில்) பாயும்படிச் செய்தார். அதுவே இப்போது இங்கே காசியப தீர்த்தம். கிணற்றில் நீரெடுத்து தானும் ஸ்நானம் செய்தபின் புஷ்பவனீச்சரவுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தார். முக்தி அடைந்தார்.  இப்படி  கஷ்டப்பட்டு  காசியபர் நமக்கு உதவியதால் நாம்  சுலபமாக  திருப்பூந்துருத்தியில்  ஸ்னானம் செய்ய முடியாவிட்டாலும் ஒரு துளி ஜலம்  ப்ரோக்ஷணமாவது செய் து கொண்டு பாபம் தீர்ப்போம்.

காசியப தீர்த்தம் சோமாஸ்கந்த மண்டபம் பக்கத்தில் தென்கிழக்கு மூலையில் கிணறாக இருக்கிறது. வடிவில் உள்ளது. அருகே ஆதி விநாயகர், சம்பந்தர், அப்பர், பரவை நாச்சியார்,மற்றும் சங்கிலி நாச்சியார் சமேத சுந்தரர் எல்லோரும் இருக்கிறார்கள். ஒவ்வொரு அமாவாசையிலும் இந்த ஸ்தலத்தை வலம் வந்தால் அது தான் கிரிவலம்.      அதிலும் ஆடி அமாவாசை நாளில் இந்த கிரிவலம் வந்தால், பித்ரு சாபங்கள் நீங்கும்; செல்வ வளம் பெருகும்; தடைகள் அகலும்; தீவினைகளும் விலகும் என்பது ஐதீகம்.

வில்வ மரம் ஸ்தலவிருட்சம். அப்பரின் திருமடம் ஆலயத்திற்கு எதிரில் உள்ளது. ராஜ ராஜ சோழன் சிலை வைத்திருக்கிறார்கள். வள்ளி- தெய்வானை சமேத முருகன் இங்கே ஆறுமுகத்தான் இல்லை.   ஏக முகன். ஒரு முக முருகன்.  நான்கு கரங்களோடு விசேஷனாக அருள் பாலிக்கிறான். காசி க்கு சென்றுவந்த பலன் இங்கே ஒரு முறை தரிசனம் செய்தால் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இங்கே இன்னொரு விசேஷமும் நடந்தது. அப்பர் பெருமான் திருஞான சம்பந்தருக்கு தெரியாமல் அவர் அமர்ந்திருந்த பல்லக்கை சுமந்து வந்த இடம். அப்பர் பெருமான் உழவாரப்பணி செய்ய நடந்த இடம், அவர் கால் பட்ட இடத்தில் என் கால் படக்கூடாதே என்று சம்பந்தர் வெளியே இருந்தே சிவனை தரிசிக்க விரும்பியபோது பெரிய நந்தி மறைத்தது. திருப்புன்கூரில் நந்தனாருக்கு வழி விட்டது போல் இங்கே நந்தி திருஞான சம்பந்தருக்கு வழிவிட்டதால் அழகாக நந்தி இங்கே சந்நிதியை விட்டு விலகி இருக்கிறது. இன்னொரு அற்புத சிற்பமாக காட்சி தருபவர் வீணா தட்சிணாமூர்த்தி.

இங்கே கொடிமரம் காணோம். பலிபீடம் நடராஜர் சபை இருக்கிறது. அம்பாள் சந்நிதி தெற்கு பார்த்து இருக்கிறது.

   
இப்படிப்பட்ட  சிவனை போற்றப்பட எழுந்திரு பெண்ணே என்று  மாணிக்கவாசகர் ஒரு பெண்ணாகி மற்றவர்களோடு சேர்ந்து  ஒரு பெண்ணை இந்த மார்கழி 17ம் நாள்  துயிலெழுப்புகிறார். என்ன சொல்லி?

17. ''செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்''.

''கம கம வென நறுமண மலர்கள் வாசம் வீசும் கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முகனிடத்தும், பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாத, எல்லையற்ற ஆனந்தம் எங்களிடம் உண்டாகும்படி பெருமைப் படுத்தி விட்டாய். நம் இல்லத்தில் வந்து செந்தாமரை போன்ற அழகிய திருவடியை தரிசிக்க தந்தருளும் அந்த ஆடலரசனை, இணையற்ற மா வீரனை, அழகிய கருணை நோக்குடைய மன்னனை, நம்மை தடுத்தாட்கொள்ளும் பேர் அமுதனை எம்பிரானைப் புகழ்ந்து பாடி, நன்மைகள் பெருக, எழுந்து வா. எங்களோடு இந்த பொற்றாமரை நிறைந்த நீரில் குதித்து நீராடுவோம்.






MARGAZHI VIRUNDHU


மார்கழி விருந்து  J K  SIVAN 


                                17.     கொழுந்தே குலவிளக்கே

ஆண்டாளுக்கு   நம்மைப்போல்  இந்த  புத்தாண்டு  ஹாப்பி நியூ இயர்  விஷயம்  எல்லாம் தெரியாது. ஆங்கில புத்தாண்டு நாள். ஒருவரை ஒருவர் போனில் கூப்பிட்டோ, வாட்சப்பில் பட்டாசு வெடித்தோ,எல்லா நலனும் பெற்று பரம சந்தோஷத்தோடு வாழுங்கள் என்று ராத்திரி பன்னிரண்டு மணிக்கு எழுப்பி சொல்லத் தெரியாது  . ஏனென்றால் ஆண்டாள் காலத்தில்  இங்கிலீஷும்  ஜனவரியும்   இல்லை. எங்கோ  அது  உலகத்தில் ஒரு கோடியில்  இருந்திருந்தாலும் அதன் மேற்சொன்ன ''மகத்துவம்''   கோபியர் வரை செல்லவில்லை. ஒருவேளை பசுக்களுக்கு தெரிந்தாலும் வாய் திறந்து  ''அம்மா';'  என்று தமிழில் தான் கூப்பிட்டன  ஏனென்றால்  வெள்ளைக்கார பசுவுக்கும்  ''அம்மா''    தான்.  . இந்த வருஷம் இன்று ஆங்கில புத்தாண்டு ஜனவரி 1 மார்கழி 17ம் நாள். ஒவ்வொரு வருஷமும் முக்கால்வாசி புது காலண்டரில் 1-16   1-17 மாதிரி நம்பர்கள் தான் கலரில், கருப்பில், கொட்டையாக  பெரிதாக மறுநாள் காலையில் கிழிக்க காத்திருக்கும்.

பேசிக்கொண்டே ஆயர்பாடிக்கு வந்து விட்டோமே. மிகத் துணிச்சலானவள்  இந்த பெண் ஆண்டாள். நினைத்ததை சாதிப்பவள். ஆண்டாள் மற்ற பெண்களை அழைத்துக்கொண்டு நந்தகோபன் அரண்மனைக்குள் சென்றாளல்லவா? எல்லோரும் குதூகலத்தோடு நந்தகோபனை சந்தித்தனர். இந்த துயிலெழுப்பும் பாசுரம் நமது குட்டிக் கதையில் மார்கழி 17வது நாளன்று இடம் பெறுகிறது. உள்ளே சென்ற ஆண்டாளும் மற்ற சிறுமிகளும் நேராக நந்தகோபன் அறைக்கே சென்றார்கள்.

தனது சப்ரமஞ்ச கட்டிலில் சாய்ந்திருந்த நந்தகோபன் திடீரென்று சில பெண்கள் தன்னெதிரே வந்து நிற்பது எதற்கு என்று யோசித்தவாறு முதலில் நின்ற அழகிய பெண் ஆண்டாளை பார்க்க ஆண்டாள் அவரை வணங்கி நின்றாள் :

''என்ன விஷயமாக நீங்கள் இந்த அதிகாலையில் வந்திருக்கிறீர்கள்?''

''ஐயா,   மகானுபாவரே, நந்தகோப பிரபுவே, நீங்களல்லவோ எங்கள்அனைவருக்கும் எல்லா
 நன்மை
 களும் செய்பவர், உம்மாலல்லவோ நாங்கள் குடி நீர் பெறுகிறோம், உங்கள் தயவால் அல்லவோ எங்களுக்கு உடுக்க உடை கிடைக்கிறது. உலகில் வாழத் தேவையான அனைத்தும் எங்களுக்கு வாரி அளிக்கும் பெருந்தகையே! உங்களை துயிலெழுப்ப முகமன் பாட நாங்கள் பாக்கியம் செய்தவர்கள்.'' என்றாள் ஆண்டாள்.

நந்தகோபன் அருகில் இருந்து கொண்டு அவர்களை அன்பாக வரவேற்ற யசோதையைக்கண்டதும் ஆண்டாள்

''எங்களின் தாய், அம்மா யசோதை! நீ அல்லவோ எங்கள் இல்லங்களின் ஒளி விளக்கு. எங்கள் பசுக்கூட்டம் அவற்றை கண்காணிக்கும் இந்த ஆயர் பாடி கோப கோபியர்கள் எல்லோருமே உங்கள் அன்பாலும் பாசத்தாலும் அன்றோ கட்டுண்டு இருக்கிறோம். துயில் எழுந்திரு தாயே. எங்களை ஆசிர்வதிப்பாயாக.''

நந்தகோபன் யசோதைக்கு நடுவில் ஒரு கட்டிலில் கிருஷ்ணனும் பலராமனும் அழகிய கட்டிலில் இருப்பதை கண்டு ஆனந்தம் கொண்டாள் ஆண்டாள். கிருஷ்ணன் அரைத்  தூக்கத்தில் இருப்பது போல்   இருந்தான். ' யார் அவனை தூங்க விட்டார் தாலேலோ'' என்ற அழகான வரிகள் மனதில் ஓடுகிறது.

''எங்கள் உயிராய் விளங்கும் ''ஹே, கிருஷ்ணா, கடவுளுக்கெல்லாம் கடவுளே, தெய்வமே துயிலெழு. நீ உறங்கினால் உலகமே உறங்கிவிடுமே.! எங்கள் தலைவனின் சகோதரா அழகிய வீரா பலதேவா நீயும் உன் சகோதரனும் எழுந்திருங்கள்.எங்களை ஆசிர்வதியுங்கள். எங்கள் நோன்பு சிறக்க உங்கள் அருள் வேண்டும் ''

இவ்வாறு வேண்டி ஆண்டாளும் சிறுமிகளும் பல துதிப்பாடல்களை ப் பாடினர். (அந்த பாடல்களின் பெயர்கள் எனக்கு மறந்து போய் விட்டது!!) இந்த நந்தகோபன் குமரன் கதையில் அந்த ஆயர்பாடிப் பெண்கள் போற்றிப்  பாடும் அந்த நாராயணனின் கலியுக தோற்றமாகிய திருப்பதி வெங்கடேசனுக்கு இந்த நன்னாளில் ஸஹஸ்ர கலசாபிஷேகம் விமரிசையாக நடைபெறும். ''கலியுக தெய்வமே, கண்கண்ட வரதா'' என நாமும் அவனைப் பணிவோம்.

ஆண்டாள் கண்ணனைக்   கண்ட ஆனந்தத்தில் கடல் மடை யென பாசுரம் ஒன்று பாடுகிறாள். இல்லை, இல்லை ,ஆண்டாள் உருவில் வில்லிப்புத்தூரில் இருந்த மற்றொரு இளம்பெண் கோதை ஆண்டாளாகி இதைப் புனைகிறாள். ஏட்டில் எழுத்தாணி விரைகிறது. வார்த்தைகள் மனசிலிருந்து பொங்கி மதியை  நிரப்பி கண் வழியே கைக்குத் தாவி ஏட்டில் படைக்கப்பட்டது. பனை ஓலை ஏடு நிறைகிறது.

இனி காலம் காலமாக அந்தக் காவியம் திருப்  பாவையாகி நமக்கு மகிழ்ச்சியூட்டி என்றும் நம் மனத்திலும் நிற்கச் செய்த ஆண்டாளே, கோதையே, சிறிய உருவில் வந்த பெரிய  தாயே,  உன்னை சாஷ்டாங்கமாக வணங்குகிறோம்.

வில்லிப்புத்தூர் வட பத்ர சாயீ கோவிலில் பட்டாச்சார்யர் தான் அந்த விடிகாலையில் மற்ற பக்தர்களுக்கு விஷ்ணுசித்தர் வீட்டிலிருந்து எழுதிக்கொண்டு வந்த கோதையின் அன்றைய பாசுரத்தை படித்துக்  காட்டிக் கொண்டிருந்தார்:  அவரால்  ஆண்டாள்  போல்  பாடமுடியாதே.  அவரைச்சுற்றி உள்ளூர் வைஷ்ணவர்கள் ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். இது தான் கோதை எழுதிய அந்த பாசுரம்.

''அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உளகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடிச் செல்வா பலதே உம்பியும் நீயுன்
உறங்கேலோர் எம்பாவாய்''

அன்று நந்தவன ஆஸ்ரமத்தில் திண்ணையில் தூணில் சாய்ந்தவாறு விஷ்ணுசித்தர் இதுவரை இருபது தடவையாவது மேற்கண்ட பாசுரத்தை வாயாரச் சொல்லி மகிழ்ந்திருப்பார்.

இன்னும் அவருக்கு அந்த ஓலைச்சுவடியில் படித்த பாசுரத்தை மனதிலிருந்து நகர்த்த அவர் மனம் இடம் கொடுக்க வில்லை. எதிரே மலர்களைத் தொடுத்துக் கொண்டே அவரைப்பார்த்து பாசத்தோடு கோதை அமர்ந்திருக்கிறாள்.

'கோதையின் பாமாலையில் மகிழ்ந்த அரங்கா, உனக்கு ரெட்டிப்பு சந்தோஷம் இன்று, கோதை படைத்த பாமாலையோடு கோதை தொடுத்த பூமாலையும் இந்தா சூடிக்கொள்.''

 

SOOR SAGARAM



சூர் சாகரம்   J K   SIVAN 

சூர் தாஸ்

                       ''அன்று கண்டதும் அதே நிலா.''..

இந்த உலகத்தில்  அப்பப்பா,   எத்தனையோ கோடி  பேர்  எத்தனையோ காலமாக பிறக்கிறோம்.  இதில் ஒருவராவது  நான்  இன்னாருக்கு  பிறக்கவேண்டும் என்று  தீர்மானித்து மற்றொருருவருக்கு பிள்ளையாக, பெண்ணாக பிறக்க முடியுமா?       எங்கோ ஒரு இடத்தில், நேரத்தில், வழியில்  பார்த்து, பிடித்து,   சேர்ந்து கொண்டு குடும்பமாகிறோம். சிலது எலியும் பூனையும்.  சிலது ஜோடி கிளிகள். அதது அவரவர் கொடுத்து வைத்தது.  அதிர்ஷ்டம். பாக்யம்.  கிளிகளை பார்த்து எலி-பூனை ஜோடிகள் பொறாமைப் படும். படட்டும்.  அது அது  வந்த வழி பலன் அது அதற்கு .

கிருஷ்ணனை ராதை பார்த்தாள்.  ராதையை  கிருஷ்ணன் பார்த்தானா? யாரை யார் முதலில் பார்த்து விரும்பியது...   அண்ணலும் நோக்கினான். இதயங்கள் ஒன்றில்  மற்றொன்று இடம்  பிடித்தது.... இது ஏற்கனவே  இருந்த  தெய்வீக உறவு. வைகுண்ட உறவு .   வ்ரஜ பூமியில் தொடரக்கூடாதா? கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடியது.   எத்தனையோ பக்கங்கள் பாராக்கள், பேசியது. அத்தனையிலும் அடிநாதம் பிரேமை. உணர்வு ஒன்றாக கலந்த பின்னர் வார்த்தைக்கு  அங்கே  என்ன வேலை?

எந்தெந்த ஜென்மத்தில் என்னவாய் இருந்தோம். என்னென்ன பேசினோம். என்னென்ன பரிமாறிக் கொண்டோம் ??

பிறவிகள் அடுத்து அடுத்து  ஒன்றன் பின் ஒன்றாக கூட்ஸ் வண்டியை போல் வரிசையாக வருகிறதே. நான் சின்ன வயசில் கூட்ஸ் வண்டி யை கோடம்பாக்கம் சூளைமேடு  வீட்டில் இருந்தே முதன் முதலாக.  என் வீட்டுக்கும்  ரயில்வே  பாதைக்கும்  அரைமைல் தூரமாக வாவது இருக்கும். நடுவே  வீடுகள் கிடையாது. நடுவே  வயல்கள் , பனை மரங்கள்,  அங்கே ஒன்று இங்கே ஒன்று என  சில  சிறிய  தனித்தனி கலர் வீடுகள்.  ஆகவே  ரயிலை வீட்டிலிருந்தே  அது கத்திக்கொண்டு ஓடுவதை  பார்க்க முடிந்தது. இப்போது ஐந்து அடி  தூரத்தில் இருக்கும் எதையும் கூட பார்க்க முடியாத அளவு கான்க்ரீட் வீடுகள்,  கூடுகள். 


அப்போதெல்லாம்  கூட்ஸ் வண்டியின் வித வித வர்ண உருவ பெட்டிகளை எண்ணுவேன். நூற்றுக்கும் மேலே கூட போகும். மெதுவாக ஊர்வது ஒரு மரவட்டை நேராக நகர்வது போல் இருக்கும். பாம்பும் பூரானும் வளைந்து  வளைந்து ஓடும்.  மழைக்காலத்தில் வீட்டு சுவர்களில்  வாசலில், கொல்லைப்புறத்தில் தரையில்,  மரவட்டைகள்  நூறு கால்களோடு நேராக சீராக நகர்வது ஒரு தனி அழகு.

ஒவ்வொருவர் மனத்திலும் தமது முன் ஜென்மத்தின் தொடர்புகள் அலை அலையாக முடிவின்றி எழுப்புவதை ராதையும் ரசித்தாள் கண்ணனும் சிரித்து தலையாட்டினான்.  மனம் பேசியது. மனங்கள் என்று  நான் சொல்லவில்லை. ரெண்டும் தான் ஒன்றாகிவிட்டதே. பன்மை ஒருமையாகியது.

'' ராதா, வா, என் வீட்டிற்கு ''
'' உன் வீடு எங்கே என்று சொல்லாமல் வா என்றால் எப்படி வருவது ?''
''உனக்கு தான் எல்லாமே தெரியுமே என்று நான் சொல்லவில்லை. இந்த பிருந்தாவனத்தில் நந்தகோபன் வீடு என்று யாரை வேண்டு மானாலும்  கேள்.. நேராக உன்னை என்னிடம் தான் கொண்டு வந்து விடுவார்கள்.''
''அவ்வளவு பெரிய ஆளா நீ? உன் பேர் என்ன ?
''கிருஷ்ணன் கண்ணன்,முகுந்தன்,  என்று  ஏதேதோ  பெயரில் கூப்பிடுவார்கள். யார் எந்த பேர் சொல்லி கூப்பிட்டாலும் நான் வருவேனே''
''ஓ சரி ''
''நீ எங்கே இருக்கிறாய் என்று சொல்லவில்லையே ராதா?
''ரொம்ப தூரத்தில் இருக்கிறேன்...''
'''உன் வீடு எங்கோ தூர இருக்கிறது என்று சொல்கிறாய். உன் ஊர் சப்தம் இங்கே கேட்கிறதே?'' என்றான் கிருஷ்ணன்
''கேட்கும், கேட்கும்... நீ மனது வைத்தால் எங்கெங்கோ யார் யாரோ பேசுவது, உன்னை கூப்பிடுவது கூட இங்கேயே உனக்கு கேட்கும் என்று எனக்கும்  தெரியும் ''.
''நீ என் வீட்டுக்கு வருவாயா? உன் அப்பா யார்? அவர் பெயர் என்ன ராதா?'
''விருஷபானு -எங்கள் ஊரிலும்   எல்லோருக்கும் அவரை தெரியும்.''
''ஓ, அப்படியென்றால் அவ்வளவு பெரிய மனிதர் பெயரில் நீ சத்தியம் செய், என்னை பார்க்க என் வீட்டுக்கு வருவேன் என்று ''
''அவர் பெயரில் சத்தியம் செய்யாமல் உன் தலையில் அடித்தே சத்தியம் செயகிறேனே. வருகிறேன் உன் வீட்டுக்கு, போதுமா '
''காலையிலும் வரவேண்டும். தினமும் மாலையிலும் வருகிறாயா''
''அப்படியென்றால் மத்தியானத்தில்  வரக்கூடாதா கிருஷ்ணா ?'
மரங்களில் பக்ஷிகள், விலங்குகள், யமுனை நதியின் நீரோட்டம், காற்று, மலர்கள் எல்லாமே குலுங்கி குலுங்கி சிரித்தன. எங்கும் மகிழ்ச்சி பிரவாகமாக ஓடியது.
சூர்தாஸ் கண்ணின்றி மனதுக்குள் இந்த காட்சியை கண்டு, ரசித்து ஆடினார் பாடினார்.
அந்த பாட்டு  எனக்கு கிடைக்கவில்லை உங்களுக்கு சொல்ல....
இது போதாதா....

THIRUK KOLOOR PEN PILLAI



திருக் கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள் J K SIVAN


36 இரு மாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியார் போலே
பன்னிரு ஆழ்வார்கள் ஒவ்வொருவருமே ஒருவிதத்தில் தனித்வம் கொண்ட சிறந்த விஷ்ணு பக்தர்கள் என்று தான் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கிறேனே. அதில் ஒருவர் தான் விப்ரநாராயணர். இவர் யார் என்று யோசிக்கிறீர்களா? வேறுயாருமில்லை, நமது தொண்டரடிப்பொடியாழ்வார்.
ஒரு காலத்தில் நான் சிறு வயதில் நாகேஸ்வர ராவ் நடித்த விப்ர நாராயணா தெலுங்கு படத்தை தமிழில் பார்த்தேன். அப்போது என் மனதில் புகுந்தவர் நாகேஸ்வர ராவ் மேற்படி ஆழ்வார். சில படங்களுக்கு, பாத்திரங்களுக்கு அசைக்கமுடிய பொருத்தமானவர் நாகேஸ்வரராவ். இந்த ஆழ்வாரை எனக்கு தந்த நா. ரா.வுக்கு நன்றி.

ஒரு சிறு கிராமம். திருமண்டங்குடி என்று சோழ தேசத்தில், இன்றும் இருக்கிறது. அங்கு பிறந்தவர் மேற்படி ஆழ்வார். விஷ்ணு பக்தர். திவ்ய தேசங்கள் எல்லாவற்றுக்கும் செல்லலாமே என்று முதலில் ஸ்ரீ ரங்கம் வந்தவர் பிறகு அதை விட்டு வேறு எந்த ஒரு தேசத்துக்கும் போகவில்லை. அரங்கன் ஆலயம் அருகே ஒரு நந்தவனம் அமைத்தார். புஷ்பங்கள் வளர்த்து மாலை தொடுத்து ரங்க நாதனுக்கு மனதார சாற்றுவது ஒன்றே வேலை. பெரியாழ்வார் போலவே இவரும் பூமாலையோடு பாமாலை (பாசுரங்களும்) பாடி ரங்கனுக்கு அளித்தவர்.

அரங்கனை விட அவன் பக்தர்கள் மேன்மை வாய்ந்தவர்கள் . அவர்களுக்கு தொண்டு செய்வது தான் சிறந்தது என்று அறிந்தவர். ஜனசேவை ஜனார்தன சேவை , மக்கள் சேவை மகேசன் சேவை என்று புரிந்து கொண் டவர். அவர் பெயர் ''தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்'' என்று அமைந்தது புரிகிறது அல்லவா? சுந்தரர் சொன்ன ''தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்'' புரிகிறதா?

அச்சுதா அமரர் ஏறே என்று சொல்லும் இந்த ருசியை, ஆனந்தத்தை விட, எனக்கு இந்திரலோகத்திற்கே நீ அரசனாகிற தேவேந்திர பதவி கொடுத்தாலும் வேண்டவே வேண்டாம்'' என்று சொன்ன ஆழ்வார் இவர். ''பச்சை மா மலை போல் மேனி '' பாசுரம் தெரியாத அக்கால தமிழர்களே கிடையாது. நமது குழந்தைகளுக்கு இந்த மாதிரி அருமையான பாடல்கள் பாசுரங்களை நமக்கு நம் பெற்றோர் தாத்தா பாட்டியர் கற்றுக்கொடுத்தது போல் நாமும் கற்றுக் கொடுக்க வேண்டாமா? தவறு செய்கிறோமே.

ராமானுஜரை பார்த்து வணங்கி திருக்கோளூர் பெண்மணி ''அய்யா நீங்கள் சொல்வது வாஸ்தவம் தான். நான் இந்த திருக்கோளூர் க்ஷேத்திரத்தில் வசிக்க ஆசைப்படுகிறேன். நான் அதற்குண்டான தகுதி பெறவில்லையே . தொண்டரடிப்பொடியார் போல பூ தொடுத்து ஒரு நாளாவது அரங்கனுக்கு அருளினேனா, பாசுரம் இயற்றி பாடினேனா. பூமாலை பாமாலை இருமாலைகளும் ஒரு நேரமாவது அளித்தவளாக இருந்தால் எனக்கும் பெருமையோடு இங்கே இடம் கேட்க உரிமை உண்டு. நான் என்ன செய்வேன்? சொல்லுங்கள்'' என்கிறாள்.

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...