Tuesday, December 3, 2019

THIRUKOLOOR PENPILLAI




திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள். J K SIVAN

20 ''அஹம் வேத்மி'' என்றேனோ விசுவாமித்ரரைப் போலே விஸ்வாமித்ரர் ரிஷியாகும் முன்பு ஒரு ராஜா. வசிஷ்டரோடு போட்டியிட்டு தோல்வியுற்றார். கடும் தவம் செய்து வசிஷ்டரைப் போல் தானும் ஒரு ப்ரம்ம ரிஷியாக வேண்டி, கடும் தவமிருந்து பெரிய ரிஷியானார். காயத்ரி மந்தரம் மற்றும் சில பழமையான ரிக் வேத பகுதிகளை இயற்றியவர். ஸ்ரீ ராமரின் கல்யாணத்துக்கு காரணமானவர் விஸ்வாமித்ர முனிவர். கோபக்கார முனிவர் என்று பெயர் பெற்றவர்.
ஒருநாள் திடீரென்று தசரத சக்ரவர்த்தி முன் நிற்கிறார்.
தசரதர் அவரை வணங்கி உபசரித்து அவர் வந்த விஷயம் அறிகிறார்:
''தசரதா , கானகத்தில் என் சித்தாஸ்ரமத்தில் வசிக்கும் முனிவர்கள் ராக்ஷஸர்கள் தொந்தரவால் கடுமையாக பாதிக்கப்பட்டு யாகம் ஹோமம் நடத்த முடியாமல் தவிக்கிறார்கள். காரணம் அவர்கள் யாகத்தை ஹோமத்தை ராக்ஷஸர்கள் வந்து கலைத்து விடுகிறார்கள். ரிஷிகளை தாக்குகிறார்கள்.
இப்போது ஒரு ஆறு நாள் சித்தாஸ்ரமத்தில் யாகம் நடத்தப்போகிறேன். யாகத்துக்கு காவல் புரிய உன் மகன் ராமனை அழைத்து போக வந்தேன். அனுப்பு அவனை என்னோடு. ராமன் வந்து காவல் நின்றால் பெரிய பாதுகாப்பு எங்களுக்கு. அரக்கர்கள் அழிவார்கள். '' என்கிறார்.
பதினாறு வயது கூட நிரம்பாத என் உயிரினும் மேலான யாரும் புதல்வன் ராமனா, கொடிய ராக்ஷஸர்களை தனியே எதிர்த்து கொல்லக் கூடியவன் என தயங்குகிறார் தசரதர். 'மகரிஷி, நானே பெரும் படையுடன் வீரர்களோடு வந்து காவல் காக்கிறேனே''என்கிறார்.
"தசரதா, அறியாமல் பேசுகிறாய். என் வார்த்தைகளில் நம்பிக்கை கொள். உன் புதல்வன் யார் என்று தெரியாமல் சாதா ரண மானிட சிறுவன் என்று கருதி நீ பேசுகிறாய். நான் சொல்வதைக் கேள். இப்போவாவது புரிந்து கொள் . ராமனது தீரம், வீரம், சக்தி, ஞானம், பலம், அனைத்தும் வசிஷ்டர் மற்றும் என் போன்ற பிரம்மரிஷிகளுக்கே நன்றாக தெரியும். வேதம் முற்றும் அறிந்தவர்க்கு மட்டுமே உனது புதல்வனின் பலமும் குணமும் தெரியும். தயங்காமல் உம் புதல்வனை அனுப்பு.''என்கிறார் விஸ்வாமித்ரர்.
''அஹம் வேத்மி'' என்று நூறு ஸ்லோகங்களில் அற்புதமாக ''ராமன் யார் என நீ அறியமாட்டாய். நான் அறிவேன்'' என்று விளக்குகிறார். இதை ''ரஸ நிஷ்யந்தினி'' என்று பருத்தியூர் பிரம்மஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகள் பிரவசனம் செய்திருக்கிறார். அவரது அற்புதமான நூல் புத்தகமாக வந்திருக்கிறது. இதை எனக்கு தெரிந்த வரை தமிழில் எழுதியிருக்கிறேன். அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடுகிறேன்.'
இதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த வசிஷ்டரும் ''தசரதா, உடனே உன் மகன் ராமனை விஸ்வாமித்ர முனிவரோடு அனுப்பு'' அன்று ஆமோதிக்கிறார். தசரதன் பயமின்றி கவலையின்றி ராமனை அனுப்புகிறான். கூடவே லக்ஷ்மணனும் கூப்பிடாமல் செல்கிறான். வனவாசமும் தானே ஏற்றுக்கொண்டவன் லக்ஷ்மணன். பதினான்கு வருஷமும் இமைக்காமல் விழித்து ராமனை காத்தவன் லக்ஷ்மணன். ஏனென்றால் ராமனின் நிழல் லக்ஷ்மணன்.
இந்த விஷயத்தை தெரிந்து வைத்துக் கொண்டிருக்கும் திருக்கோளூர் பெண்மணி, ராமாநுஜரிடம் ,
"பிரம்மரிஷி விசுவாமித்ரரைப் போல் உண்மை அறிந்து, அதை நம்பிக் கையுடன் கூற என்னால் இதுவரை ஒரு கணமாவது இயன்றதா, இனியாவது இயலுமா? " அப்படி இருக்கும்போது எந்த விதத்தில் நான் திருக்கோளூர் திவ்யதேசத்தில் வசிக்க அருகதை பெற்றவள் நீங்களே சொல்லுங்கள்?'' என்று கேட்கிறாள்.

VALLALAAR



வள்ளலார்:   J K SIVAN

                          பயந்த ஸ்வபாவம்..

பயந்த ஸ்வபாவம்  என்று  நாம் சொல்லும்   நபர்கள், தங்கள்  உடல், உயிருக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்று அஞ்சுபவர்களை.    ஆனால்  வள்ளளார் வேறுவிதமான  பயந்த ஸ்வபாவம் உள்ளவர்.
ஒரு    காக்கை, குருவி,  பருந்து, ஆந்தை, ஆடு  மாடு,  பறவை, பூச்சி தினமாக  வலியோடு  கத்தினாலும்   ''ஆண்டவா,  அதற்கு  என்ன   துன்பமோ? என்னால்  அதை போக்க முடியுமோ? என்று  கலங்குவார்,  பாவம்  அதற்கு  என்ன ஆச்சோ  என்று  பயந்துபோவார். நடுங்குவார்.    ''என்  அப்பா,  இறைவனே  அவற்றின்  துன்பம்  உடனே  போக்கிடுவாய்''  என  வேண்டுவார். .  இது கொடிய  விஷ நாகத்திற்கும்  கூட. அவருக்குத்தான்  எல்லா  உயிரும்  சமமாயிற்றே.     அவரது வார்த்தையில்  இதை  கேளுங்கள்:

'' காக்கைகள் கூவக்  கலங்கினேன்  பருந்தின்
    கடுங்குரல்  கேட்டு உளம்  குலைந்தேன்
 தாக்கிய  ஆந்தை குரல் செயப் பயந்தேன்  
    சாக்குரல்  பறவையால்  தளர்ந்தேன்
வீக்கிய  வேறு கொடுஞ் சகுனம் செய்
    வீக்களால் மயங்கினேன்  விடத்தில்
ஊக்கிய பாம்பைக்  கண்ட  போது உள்ளம்
    ஒடுங்கினேன்  நடுங்கினேன்  எந்தாய் ''

 செடி  கொடி  தண்ணீரின்றி  எங்காவது  வாடி வதங்கி  தலை  சாய்ந்ததைப் பார்த்து  பதறுவார்.  ஐயோ  என்ன  துன்பம்  அதன்  பசியை  போக்க  யாருமில்லையா  என்று  உலகில்  எந்த  உயிரும் துன்பமுருவதைக்  காண  சகிக்காத ஜீவ காருண்யர் அவர். ''வாடிய  பயிரைக்கண்ட போதெல்லாம்  வாடிய  நெஞ்சம்'' அவருக்கு.  நமக்கும்  கொஞ்சமாவது  அவர்  வழியில்  போக  கொடுத்து வைத்திருக்க வேண்டாமா?   ஜீவ காருணியத்தைப்பற்றி  அவர்  கையாலேயே  எழுதிய ஒரு  சில  வரிகள்  நம் மனதைத்  தொடவில்லையானால்  நமது  நெஞ்சம்   வாடிய  எந்த  உயிரைப்  பற்றியும்  கவலையே  கொள்ளாது.
அவரது எழுத்துக்களை படியுங்கள்:  தெளிவாக  இருக்கிறார்: 
 
 ''  உள்ளபடி பசியால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங்கொடுக்க நினைத்தபோது, நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்தக் கரணமாகி நினைத்தபடியால், அந்தப் புண்ணியர் களை யோகிகளென்றே உண்மையாக அறியவேண்டும். 
ஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக் கொடுக்கும்போது, அவருண்ணுவது தாமுண்ணுவதாக அறிந்து களிக்கின்ற படியால், ஞானிகளென்றே உண்மையாக அறியவேண்டும். 
ஆகாரங்கொடுக்க உண்டு பசி தீர்ந்தவர்களுக்கு அத்தருணத்தில் ஆன்மாவின் உள்ளும் புறத்தும் கீழும் மேலும் நடுவும் பக்கமும் நிறைந்து கரண முதலிய தத்துவங்களெல்லாம் குளிர்வித்துத் தேகமுழுதும் சில்லென்று தழைய முகத்தினிடமாகப் பூரித்து விளங்குகின்ற கடவுள்விளக்கத்தையும் திருப்தியின்பமாகிய கடவுளின் இன்பத்தையும் பிரத்தியட்சத்தில் தரிசித்து அனுபவிக்கின்றார்க ளாதலால், அந்தப் புண்ணியர்கள் கடவுளைக் கண்டவர்களென்றும் கடவுளின்பத்தை அனுபவிக்கின்ற முத்தரென்றும் அறியவேண்டும். 
பசி நீங்க உண்டு சந்தோஷ’த்தவர்கள் இந்தப் புண்ணியர்களைத் தெய்வமாகப் பாவிக்கின்றார்களாதலால், இவர்களே தெய்வமுமென்று உண்மையாக அறியவேண்டும்.''

 
 வள்ளலார்  ஒரு   ம்ருது பாஷி .  உரக்கவே  பேசமாட்டார்.  நம்மை  மாதிரி   எதையாவது  சாப்பிட்டுவிட்டு   இடுப்பு  வேஷ்டியில்  துடைத்துக்கொள்ளும்  ரகமல்ல.  ஒரு  கைக்குட்டை  எப்போதும்  இடுப்பில் இருக்கும்..   கைககளை  வீசி  நடக்கவே  மாட்டார்.  கைகளை   தொங்க விட்டுக்கொண்டும்  நடக்க மாட்டார்.எப்போதும்   கைகளை கட்டியபடியே  காணப்படுவார்.   காலும்  தலையும்  எப்போதும்  மறைத்தே வைத்திருக்க வேண்டும்  என்ற  கொள்கை.   ஒரே  துணி  உடம்பைச் சுற்றி  தலையையும்  சுற்றி  இருக்கும்.  அதுவும்  வெள்ளைத்துணி.  காலில்  செருப்பு அணிவார். 
 எதிரே  வரும்  யாரையும்  முகமோ,  நிறமோ உருவமோ   எதையுமே பார்க்கமாட்டார்.  அப்படி அவர்கள்  உருவம்  கண்ணில்  பட்டுவிட்டால்   என்னால்  அவர்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்து  விட்டதோ  என்ற  பயமும்  கவலையும்  அவரைத்  தின்று விடும்.  

அவர்  பற்றி  அவரே  சொல்வது:    படிக்க  கஷ்டமே  இல்லை. எளிதில் புரியும் தமிழ்: 
கையற  வீசி  நடப்பதை  நாணிக்
   கைகளை  கட்டியே நடந்தேன்  
மெய்யுற  காட்ட வெருவி    வெண்  துகிலால்
    மெய்யெலாம்  அய்யகோ  மறைத்தேன்.
வையமேல் பிறர்   தம்  கோலமும்  நடையும்  
   வண்ணமும்  அண்ணலே  சிறிதும்
பைய நான்  ஊன்றிப்பார்த்ததே  இல்லை.  
  பார்ப்பனேல்  பயமிகப் படைப்பேன்  ''

 இன்னும் சொல்கிறேன்.

THINKER




சில தெரியாத தமிழ் வார்த்தைகள்
J K SIVAN
'அஞ்சும் மூன்றும் உண்டானால் , அறியாப்பெண்ணும் சமைக்கும்'' என்று அப்போதெல்லாம் சொல்வார்கள். இப்போது யார் சமைக்கிறார்கள் வீட்டிலே? பாதிபொழுது எங்கோ ஒரு ஓட்டலில் தானே. இல்லையென்றால் வீடு தேடி வரும் SWIGGY, ZOMATO சாப்பாடு. ஆனைவிலை குதிரை விலை. இது போக மீதி பணம் கையில் இருக்குமானால் அது தான் டாக்டருக்கு சொந்தமாச்சே.
முன்னோர்கள் சொன்ன ''அஞ்சு'' மிளகு, உப்பு, கடுகு,சீரகம், புளி, ''மூன்று'' என்பது தண்ணீர், அடுப்பு, நெருப்பு. ஒண்ணுமே தெரியாத பொண்ணு கூட இந்த அஞ்சையும் மூன்றையும் கொடுத்தால் நல்ல சமையல் செய்து விடுமாம் (அக்காலத்தில்).
இட்டலி தோசை பொங்கல் உப்புமா இல்லாத வீடு அப்போதெல்லாம் கிடையாது. ஹோட்டல், fast fo
od என்கிற பெயர்கள் கேள்விப்பட்டதே இல்லை. ஒன்று வீட்டில் சாப்பிடுவோம். இல்லையென்றால் யார் வீட்டிலோ ஏதோ ஒரு விழா, கல்யாணத்தில் தான் சாப்பாடு. ''அரைக்காசை ஆயிரம் பொன்னாக்குகிறவளும் பெண்சாதி, ஆயிரம் பொன்னை அரைக்காசாய் ஆக்குகிற வளும் பெண்சாதி.'' இந்த வாக்யத்தின் முற்பகுதி கற்காலத்தையோ முற்காலத்தையோ சேர்ந்தது தான் என்று நினைக்கா தீர்கள். இன்றும் சில வீடுகளில் கணவனுக்கு எவ்வளவு சம்பாதித்தோம் என்று மட்டும் தான் தெரியும். அது எப்படி செலவானது என்று இதைப் படிக்கும் வரை தெரியாது. தெரியப்போவதும் இல்லை. அவனுக்கு ஒன்றாம் தேதியும் முப்பதாம் தேதியும் ஒன்றே. என்றுமே அவன் கையில் காசு இருக்கப்போவதில்லை. சம்பளம் வாங்கிய அன்று சட்டையை கழட்டுவதற்குள் பணத்தை கழட்டிவிடுவாள் குயீன் எலிசபெத். '' அம்மா கையிலே கொடுத்து போடு சின்னக்கண்ணு, அவங்க ஆறை நூறாக்கும் தகுதி கொண்டவர்களாக இருந்தது ஒரு காலத்தில். இன்னும் சில நிர்மலா சீதாராமன்கள் அப்படி பல குடும்பங்களில் இருப்பது யாருடைய அதிருஷ்டமோ?
குடும்பத்தை பல ஐந்தாண்டு திட்டங்கள் போட்டு அரசாங்கம் போல் இல்லாமல் உண்மையிலேயே வெற்றிகரமாக நடத்தக்கூடியவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அத்தகைய இல்லத்தரசிகள் மனைவியாக அமைய அவர்கள் கொடுத்துவைத்தவர்கள். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது சரிதான். வீட்டில் சிலருக்கு அடித்த லக்கி ப்ரைஸ் இது . ''ஆயிரம் பொன்னை அரைக்காசு ஆக்கும் அரைக்காசு அம்மன்களை பற்றி எல்லோருக்குமே தெரிந்திருக்கும். அதனால் அதைப்பற்றி சொல்லாமலேயே விட்டு விடுகிறேன். பணத்தை மிச்சம் பண்ணாவிட்டாலும் சில வார்த்தைகளையாவது மிச்சம் பிடித்த திருப்தி கிடைக்கும். ''ஒரு நாளும் சிரிக்காதவன் திருநாளில் சிரித்தான் , திருநாளும் வெறு நாளாச்சு.'' என்று ஒரு பழமொழி கேள்விப்பட்டது உண்டா? இப்படியும் சிலர் இருக்கிறார்கள். எப்போது எதை செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாத மனிதர்கள் இவர்கள். இவர்கள் சமய சஞ்ஜீவிகள் அல்ல.
சீதக்காதி என்ற ராஜா செத்துப்போனப்புறம் கூட ஒரு புலவருக்கு உதவி செய்தான் என்று படித்திருக்கிறோம். அவனைப்பற்றி தான் ''செத்தும் கொடுத்தான் சீதக்காதி'' என்பார்கள். சமயா சந்தர்பம் தெரியாமல் மனம் போல நடக்கும், வாயை திறந்து பேசும், சிலரால் தான் சம்பவங்கள் அசம்பா, விதங்களாகிறது. சோக மரண செய்திகளுக்கு கூட FB முகநூலில் ''லைக்'' போடும் ஜீவன்கள்.
சில 'திக் விஜயசிங்குகள்'' பலபேர் வீட்டில் இன்னும் இருக்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல சுப்பிரமணியம் சுவாமிகளும் இருக்கிறார்கள். இதையே சற்று மாற்றி வேறு ஒரு பழமொழியாக சொல்வதும் உண்டு. ''ஒரு நாளுமில்லாமல் திருநாளுக்குப் போனால் , திருநாளும் வெறு நாளாச்சு.'' அது கொஞ்சம் நமக்கு தெரிந்த வழக்கு தானே. அதிர்ஷ்ட கட்டை என்று பெயர் வாங்கிக்கொண்டு திரிபவர்கள் சம்பந்தப் பட்டது.
''நான் எங்கே போனாலும் என் அதிர்ஷ்டம் எனக்கு மின்னாலே அங்கே போய்டறது சார்'' என நொந்து கொள்பவர்கள் . ''அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் சார், ஏதோ அது யதேச்சையாக நடந்திருக்கும். அடுத்த தடவை பாருங்கள் நீங்கள் எடுத்த கார்யம் எல்லாம் ஜாம் ஜாம் என்று நடக்கும். ஜெயம் தான் போங்கள்'' என அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவோம். ''விளக்குமாறுக்கு பட்டுக்குஞ்சமா'' என்பது நிறைய பேர்களின் வாயில் புரளும் பழமொழி. இது தகுதி இல்லதாவனுக்கு பதவி கிடைத்ததையும் ஒண்ணுமில்லாதவனுக்கு உசந்த மரியாதையும் புகழும் கிடைப்பதை விளக்கும் சொல். இது கிடைக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். கஷ்டப்பட்டு படித்து, தட்டு தடுமாறி ஏதோ ஒரு வேலை கெட்டியாக பிடித்துக்கொண்டு நாலு காசு பார்த்து தானும் குடும்பமும் ஒரு வேளை சாப்பிட வழி செய்துகொண்டவர்களுக்கு இது வயிற்றெரிச்சலை கொடுக்கும் பழமொழி. நமக்கு தலையில் இட்டது இவ்வளவு தான் என்று சமாதானம் தேடிக் கொள்ள வேண்டியது தான். எல்லோருமே பப்புவாகவோ தளபதியாகவோ பிறக்க முடியுமா? கொடுப்பினை இருக்கவேண்டாமா?

Monday, December 2, 2019

VETRI VERKAI




வெற்றி வேற்கை J K SIVAN
அதி வீரராம பாண்டியன்

''கேளும்  நட்பும்  கெட்டோர்க்கு இல்லை''
பணமிருந்தால் தான், வசதியாக இருந்த போது  தான்  எல்லோரும்  அருகில் இருப்பார்கள்.  உறவு எங்கிருந்தோ வந்து முளைக்கும். நண்பர்கள் என்று ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டே இருக்கும்.  எல்லாவற்றையும் இழந்து அந்த மனிதன் வாடும்போது, வறுமை அவனை  வாட்டும்போது,   அவன் தனித்து விடுகிறான்.  அவனுக்கு நண்பர்களோ சுற்றத்தார்களோ எவரும்  அப்போது  கிடையாது. அவர்கள் யாரும் நெருங்குவதில்லை.  இது  உலகியல் . அதிவீரராம பாண்டியன் காலத்திலிருந்து இன்னமும் இந்த பழக்கம் நமக்கு இருக்கிறதே.


''உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா''.
 சுகமும்  துக்கமும்  எப்போதும் ஒருவனை  மாற்றி மாற்றி தான்  அணுகும்.  நிறைய  செல்வம் இருக்கிறவன் எப்போதும் செந்துவந்தனாகவே  இருக்க முடியாது. அதேபோல்  தரித்திரம் பிடித்தவன் எக்காலத்திலும் அப்படியே இருக்க விடாது. காலம் மாறும் . வாழ்க்கை என்பது சக்கரம்.  கீழே இருப்பதும் மேலே இருப்பதும் ஓருவருக்கு சாஸ்வதம் இல்லை. எல்லோருக்கும் இந்த நிலை மாறி மாறி அமைவது தான் இயற்கை.   

குடைநிழ லிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
 நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர்.

ஒரு காலத்தில்  நமது தேசத்தில்  பல  ராஜாக்கள் இருந்தார்கள்.  அவர்களது அந்தஸ்து, படை பலம், சக்தி, செல்வம் எல்லாம் கணக்கற்று இருந்தது.  காலப்போக்கில் அவர்கள் காணாமல் போய்விட்டார்கள்.  எல்லாரும் இந்நாட்டு மன்னராகி  ரேஷன் கடையில் நிற்கிறோம்.  ராஜா என்பது  பேரில் தான் என்று ஆகிவிட்டது.  யானை மீது எங்கும் சவாரி,   அமர்வதற்கு  சிம்மாசனம், அதற்கு மேல்  ஒரு  பட்டுத்துணி குடை என்று  டம்ப, ஆடம்பர ராஜாவாக இருந்தவன் ஒருநாள் கையில் கூஜாவில்  கொஞ்சம் தண்ணீரோடு,  நாடிழந்து, பொருளிழந்து, பதவி இழந்து வெயிலில்  காத தூரம் நடை  ராஜா வாக  மெலிந்து இன்னொரு ஊருக்கு  பாதசாரியாக நடந்து போக நேரிடும் என்று அ.வீ.ரா. பாண்டியன் சொன்னது கலியுகத்தில்  கண்கூடு. . 

''சிறப்புஞ் செல்வமும் பெருமையு முடையோர்
 அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர்.


நன்மையையும்  தீமையும்  பிறர் தர வாரா என்பது நமக்கு தெரிந்தது.  ஒரு காலத்தில் சீரும் சிறப்பும்  செல்வமும் நம்மிடம் இருக்கும். பிறகு ஒரு காலத்தில்  அடுத்த வேளை   சாப்பாட்டிற்கு  எங்கே  இலவசமாக காஞ்சி வார்ப்பார்கள் என்று தேடி அலையும்  நிலை வரலாம்.  எப்போதும்  ஒரே நிலையில் தான தர்மங்கள் செயது எளிய வாழ்க்கை நடத்துபவனுக்கு  இந்த  துன்பம்   இல்லை  அல்லது  குறைச்சல்.  அகலக்கால்  வைக்காதே  என்று பெரியவர்கள்  அடிக்கடி ஞாபகப்படுத்துவது இதை தான். 
அறத்திடு பிச்சை கூவி யிரப்போர்   அரசோ டிருந்தர சாளினும் ஆளுவர்.முன்பெல்லாம்  பகல் பிச்சை, ராப்பிச்சை என்று  வீடு வீடாக வந்து  உணவு கேட்பார்கள்.  அம்மா தாயே  என்ற குரல் தான் கேட்கும்.  இப்போது இல்லை.  கால்லிங் பெல் அடித்து  காசு கேட்கும்  காலம்.  ஒரு ரூபாய்  ரெண்டு ரூபாய் போட்டால்  அவர்களுக்கு வரும் கோபத்தில்  முடிந்தால் நம்மை  பார்வையாலேயே கொளுத்தி விடுவார்கள்.   அதி வீரராம  பாண்டியன் இந்த  பொன்மொழியை என்ன சொல்லவருகிறான் தெரியுமா.  இப்படி அடுத்து வேளைக்கு  உணவு இல்லாதவர்கள் கூட , இரந்துண்டு வாழ்வோரும் ஒருநாள்  நம்மை ஆளும்  அரசர்களாக, இந்தக்கால வழக்கம் படி  மந்திரிகளாகவும் ஆகலாம்.  

குன்றத் தனையிரு நிதியைப் படைத்தோர் அன்றைப் பகலே யழியினும் அழிவர்.

மலைபோல்  சொத்து செல்வம்,  பரம்பரை பரம்பரையாக இருந்தாலும்,  ஒருநாள்  களி தின்பதை  பார்க்கிறோம், படிக்கிறோம். சிறந்த  ஏரோபிளேன் கம்பனிக்கு சொந்தம் கொண்டாடிவிட்டு, , குடி போதை வியாபாரியாக பேர் வாங்கி, ,வைர வியாபாரியாக உலகம்  எல்லாம் கூட புகழ் பெற்றாலும்,    ஏதோ ஒரு பிளேனில் ஏறி சத்தம்போடாமல்  எங்கோ  சென்று  பிடிபடாமல்  ஏன் ஒளிந்துகொள்ளவேண்டும்.  விதி வலியது. மேலே சொன்னது தான்.   இவர்களெல்லாம்  அ.வீ. ரா. பாண்டியன் காலத்திலும் உண்டு போல் இருக்கிறது. 


 செய்வன  திருந்த செய்து, நியாயம் நேர்மை, மனசாட்சியை மதித்து எளிய வாழ்க்கை நடத்தும் எத்தனையோ  பேரையும் பார்க்கிறோம். மதிக்கிறோம். 

Sunday, December 1, 2019

BAGEERATHAN




                    ஞானி  அரசனானால்....!  J.K. SIVAN 

இக்ஷ்வாகு வம்ச ராஜா பகீரதன் நல்லவன் . அவன் தான் ஆகாசத்திலிருந்து கங்கையை கங்கையை  பூமிக்கு கொண்டு  வந்தவன். கங்கைக்கு  அதனால் அவன் பெயரில் பாகீரதி என்றும் ஒரு பெயர்.

பகீரதன்  சகரர்கள்  குல இளவரசன்.  கபிலர் சாபத்தால்  அவன் முன்னோர்கள் பலர் சாம்பலாகி   தேவலோகம், பித்ருலோகம் செல்லமுடியாத  பாபிகளாகி விட்டனர்.   சாபமிட்ட  கபிலர்  ஆஸ்ரமம்  அருகே  அவர்கள் சாம்பல் மலையாக கிடந்தனர்.  

அவர்களை பித்ருலோகம் சேர்க்க அவன் கங்கை நீரைக் கொண்டு வந்து  அந்த  பல்லாயிரக்கணக்கான  முன்னோர்களின்  அறுபதினாயிரம் பேர்)  சாம்பலில் கரைத்தால் தான் சாபவிமோசனம் கிடைத்து அவர்கள்  தேவலோகம் போகமுடியும் என்றறிந்து கங்கையை பூமிக்கு வரவழைக்க தவம் இருக்கிறான்.  நமக்கும்   இறந்தவுடன்  ஒருவன் சாம்பலை கடலில் கரைப்பது கூட  இந்த   வழக்கத்தால் தான். 

பகீரதன் ராஜ்யபாரத்தை மந்திரிகளிடம் ஒப்படைத்துவிட்டு  தவம் செய்ய இமயமலை காட்டுக்கு சென்று ஆயிரம் வருஷங்கள்   கடும் தவம் இருந்தான். 

ஒருநாள்  கங்கை அவன் முன் தோன்றுகிறாள்.  

''பகீரதா,  என்னை எதற்காக பூமிக்கு அழைக்கிறாய்?

''என் முன்னோர்  அறுபதினாயிரம் பேர் கபில முனிவர் சாபத்தால் சாம்பலாகி ஒரு மலைபோல் சாம்பல் நிற்கிறது.  கங்கை நீர் அவற்றின் மேல் பட்டால் அவர்கள்  உயிர்பிக்கப்பட்டு, தேவலோகம் செல்லமுடியும் என்று  சாபவிமோசனம் . ஆகவே  தாயே உன்னை நோக்கி தவமிருந்தேன். ''

''பகீரதா, நீ என்னை வரவழைப்பது சரி. நான் கீழே இறங்கி வந்தால் என் வேகத்தை சக்தியை தாங்கமுடியாதே''

''கங்காமாதா,  நீ தானம்மா அருள் புரியவேண்டும். எனக்கு என்னசெய்வது என்று தெரியவில்லையே''

''பகீரதா நீலகண்டன் பரமேஸ்வரன் ஒருவர் தான் என் சக்தியை  தாங்கட் கூடியவர். அவரை வேண்டிக்கொள். அவர் உனக்கு வரமளித்தால் நான்  ஆகாசத்திலிருந்து இறங்குகிறேன்.

பகீரதன் மீண்டும்  பரமேஸ்வரனை நோக்கி தவமிருந்து அவர் அருள் பெற்று கங்கை பூமியில் இறங்குகிறாள் . அவள்  ஆகாசத்திலிருந்து பூமியில் இறங்கும்போது  அந்த வேகத்தை நீங்கள் ஒருவர் தான்  தாங்கி மெதுவாக அவளை இறங்கச் செய்யவேண்டும்.'' என்கிறான் பகீரதன்.

கங்கை பாகீரதியாக  பூமிக்கு இறங்கி  பரமேஸ்வரனின்  விரிந்த கூந்தலில் இறங்குகிறான்.  ஹரனின்  கேசத்தை  தான் பூமியில் இறங்கும் இடமாக கொண்டதால் அவள் இறங்கிய இடம்  ஹர் த்வார், ஹ்ரிஷிகேஷ் என்று பெயர் பெற்றது.  கங்கை பாகிரதியாக ஓடி  அலக்நந்தா  நதியோடு  தேவப்ரயாகையில்  சேர்கிறாள்.
கங்கை நதி சகரர்களின் சாம்பலை கரைத்து அறுபதினாயிரம் முன்னோர்களும்  பகீரதனை  வாழ்த்தி ஆசிர்வதித்து  மேலுலகம் செல்கிறார்கள்.

வாசிஷ்டத்தில் இன்னொரு  விஷயம்  பகீரதனை பற்றி வருகிறது.

ராஜ்ய பாரம் வேண்டாம் என்று துறந்து பகீரதன்  ஆத்ம விசாரம் செய்ய விழைகிறான்.  தன்னுடைய  சொத்து நகை, உடைமைகள் அனைத்தையும்  தானமாக தந்துவிடுகிறான்.   அவன் ராஜ்யத்தை எவரும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை. அவனை மாதிரி நேர்மையாக  ஆள முடியாதே.    பகீரதன் என்ன செய்வது என்று யோசித்தது தனது எதிரி நாட்டரசனை  அழைக்கிறான்.  நீ  பல முறை விரும்பிய எனது ராஜ்யத்தை எடுத்துக் கொள்  மனமுவந்து தருகிறேன்'' என்கிறபோது  தானாக வரும் ராஜ்யலக்ஷ்மியை அவன் வேண்டாம் என்று சொல்வானா?  அவன் ராஜாவாகி விடுகிறான்.  அந்த ராஜாவிடம்  பகீரதன்  பிக்ஷை வாங்கிக்கொண்டு காட்டுக்கு செல்கிறான்.

இனி பகீரதன்  அன்றாடம் உஞ்சவிருத்தி எடுத்து அதில் கிடைப்பதை உண்டு காட்டில் ஆத்ம விசாரத்தில்  (ஆத்ம  ஜிஞ்ஞாஸம் )  முழுகினான்.  ஊர் ஊராக  சென்று பிக்ஷையில் வாழ்ந்தான். ஒருநாள் ஒரு தேசத்தில் அவனையே  ராஜாவாக்குகிறார்கள்.  வேறுவழியின்றி அந்த நாட்டுக்கு ராஜாவாகிறான்.  நாடு நாடாக  சென்றான். ஒரு நாள்  தனது நாட்டுக்கு வருகிறான். அவனது அரண்மனை பழைய விசுவாசமான  சேவகன் பகீரத்தை அடையாளம் கண்டுகொண்டு ஓடிப்போய் மந்திரிகளிடம் சொல்கிறான்.   அப்போது பகீரதன் நாட்டு அரசன் இறந்து போய் வேறு ராஜாவை  நியமிக்க  யோசித்துக்கொண்டிருந்த மந்திரிகளுக்கு சேவகன் சொன்ன சேதி தேனாக  காதில் இனிக்க அவர்கள் ஓடிவந்து பகீரதனையே  திரும்ப அரசனாக்கி விடுகிறார்கள். நாட்டு மக்களும் பகீரதன் ஒருவனே  தங்களுக்கு நல்ல ராஜா என்று  வரவேற்கிறார்கள்.   வேறுவழியின்றி பகீரதன் ராஜ்யபாரம் திரும்ப ஏற்றுக்கொள்கிறான்.தாமரை இல்லை தண்ணீராக  சுயநலம் இன்றி பொதுநலம் கருதிய ராஜாவாக  ஞானி பகீரதன் ஆட்சியில் எல்லோரும் சுபிக்ஷமாக இருக்கிறார்கள்.

இந்த கதையை  பகவான்  ரமண ரிஷி சொல்லுவார். 

VISHNU SAHASRANAMAM

SRI  VISHNU SAHASRANAMAM  J K  SIVAN 

                     ஆயிர நாமன்   ( 202-217)

202. சந்திமான் : இயற்கையில் தனித்வம் ஒரு சிறந்த கட்டமைப்பு. பரமாத்மா தான் நீதியும்,நீதிமானும் ஆவார்.ஜீவன் தனது நல்ல,  தவறான,கர்மங்களுக்கேற்ற  பலனை அனுபவிக்க செய்பவர்.

203. ஸ்திரன்: உறுதியானவர்.மாறாதவர்

204. அஜன்: பிறப்பற்றவன். பிரமனை, உயிர்களை பிறப்பித்தவன்.

205. துர்மர்ஷணன்: எதிர்க்கவோ, வெல்லவோ முடியாதவன். சர்வமும் கடைசியில் சரணம் அடையும் பரமாத்மா.

206.சாஸ்தா: பிரபஞ்சத்தை ஆள்பவன்.சாஸ்திர ஞான நல்வழியில் நடத்தி செல்பவன்.பரமபதம் அடைய செய்பவர்.

207. விஸ்ருதாத்மா: ஆத்மா என்றாலே வேதத்தில் விஷ்ணு தான்.ஆயிர நாமத்தில் சகுண உபாசனை செய்தாலும் சகல சாஸ்திரமும் உணர்த்தும் பரிசுத்த அருவமான ஆத்மன்.

208. ஸு ராரிஹா : விண்ணுலக தெய்வம். சுரர்களின் எதிரிகளை வதம் செய்பவர்.ஸ்ரீமந் நாராயணன். விஷ்ணு.

23. குருர் குருதமோ தாம ஸத்யஸ் ஸத்ய பராக்ரம: |
நிமிஷோ நிமிஷஸ் ஸ்ரக்வீ வாசஸ்பதி ருதாரதீ: ||

209. குரு: ஆசார்யன். வேத நுணுக்கங்களை ரஹஸ்யங்களை கற்பிப்பவர். ஜீவனின் ஆத்ம ஒளியை பிரகாசிக்கச் செய்பவர்.

210. குருதமா: பரமாச்சாரியர்: ப்ரம்மஞானி. வேதங்களை உணர்ந்தவர். வேதங்களை காக்க பிரமனை படைத்தவர்.

211. தாமா: லக்ஷியம்: ஜீவனின் யாத்திரை முடிவே பரமாத்மாவை ஞான பிரகாசத்தை சேர்வது.

212. சத்யன்: பேருண்மையின் உரு. கடந்த, நிகழ், எதிர் காலம் எவற்றிலும் மாறாத சத்யம். ''ப்ராணன்களை உண்மை என்று கொண்டால் விஷ்ணு அவற்றின் சத்யம் ஆனவர் '' என ப்ரஹதாரண்யக உபநிஷத் தெளிவாக கூறுகிறது.”

213. சத்யபராக்ரமன்: நிச்சயமான சத்யன். நிலையான உண்மையின் சக்தி ஸ்வரூபம்.

214. நிமிஷா: இமைக்கும் கால அளவு. விழிகள் இமைக்காமல் நிலையாக இருப்பதை அநிமிஷா என்போம். எண்ணங்களை குவியும்போது, மனதில் அவற்றை அலசும்போது கண் இமைகள் குவியும். ஆழ்ந்துள்ளபோது இமை மூடும்.

215. அநிமிஷா: இமைக்காமல் விழிப்பு நிலை: தேவர்கள் இமைப்பதில்லை. தேவாதிதேவன் விஷ்ணுவை சர்வஞானி இமைக்காமல் உணர்பவர் என்று சாந்தோக்ய உபநிஷதத்தில் சங்கரர் சொல்கிறார்.

216. ஸ்ரக்வீ : ஸ்ரக் என்பது ஒரு மாலை. வாடாமலர்கள் கொண்ட அதை சூடுபவர்.விஷ்ணுவின் மாலை வைஜயந்தி மாலை.

217. வாசஸ்பதி  ருதாரதி: தாராள தயை நிறைந்த மனம் கொண்டு ஜீவன் மாயையின் பிடியில் சிக்கி தவறுகளை புரிந்தாலும் பொருட்படுத்தாது நல்வழிப் படுத்துபவர். நெருப்பு பாரபக்ஷம் காட்டுவதில்லை. நாராயணன் விஷ்ணுவாக நம்மை ரக்ஷிக்கும்போது தயை புரிய தவறுவதில்லை.

 

SWAMIJIS TIME



                          'சொன்னதை செய்''    J K  SIVAN 

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...