விக்ரமாதித்தன் கதைகள் J K SIVAN
கணவன் யார்?
பாட்டு பாடவோ கேட்கவோ ரசிக்கவோ தெரியாதவன் ஒரு அவுரங்க சீப் போல் இருந்து விட்டு போகட்டும். ஆனால் கதை கேட்காதவன், கேட்க பிடிக்காதவன், கதை சொல்லாதவன், கதை ''உடாதவன்'' நிச்சயம் ஒரு ஹிந்து வோ இந்தியனோ அல்ல என்று தாராளமாக சொல்லலாம்.
நமது முன்னோர்கள் எண்ணற்ற கதைகளை உருவாக்கி நமக்கு அள்ள அள்ள குறையாத இன்பச் சுரங்கத்தை இலவசமாக அளித்திருக்கிறார்கள். அதில் ஒரு வைரம் தான் விக்ரமாதித்தன் கதைகள். இன்று கொஞ்சம் பார்ப்போம்.
ஒரு ஊரில் ஒரு பிராமணன் இருந்தான். அவன் பெயர் அக்னி சுவாமி. அவனுக்கு அழகிய ஒரு பெண். அவள் பெயர் மந்தாரவதி . அவள் வளர்ந்து கல்யாணத்திற்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தான் அக்னி சுவாமி. அவளை மணக்க ஒரு பெரிய கும்பல். அதை வடிகட்டி மூன்று பிள்ளைகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மூன்று பேருமே ''நான் அவளுக்காகவே பிறந்தவன். அவள் மேல் அளவுகடந்த காதல். ஆகவே அவளை மணக்க முடியாமல் போனால் இறந்து விடுவேன் என்கிறார்கள்.
இதற்கிடையில் மந்தாரவதி திடீர் என்று நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகிறாள். அவள் உடல் தகனம் செய்யப்பட்டு விட்டது. ஒரு பிராமண பையன் அந்த இடத்தில் ஒரு குடிசை கட்டி அங்கேயே வாழ்ந்தான். இன்னொருவன் அவள் எலும்புகளை எல்லாம் பொறுக்கி எடுத்து அவள் எலும்புகளை தேசத்தின் எல்லா புண்ய நதிகளிலும் ஸ்நானம் செய்விக்க யாத்திரை சென்று விட்டான். மூன்றாமவன் என்ன செய்தான்? ஒரு சன்யாசியாகிவிட்டான். ஊரெல்லாம் பரதேசியாக அலைந்தான்.
ஒரு நாள் சந்நியாசி ஏதோ ஒரு ஊரில் யாரோ பிராமணன் சாப்பிட அழைக்க அவன் வீட்டில் போஜனம் செய்ய அமர்ந்தான். அந்த நேரம் பார்த்து அந்த வீட்டுக்கார பிராமணனின் பெண் குழந்தை வீல் வீல் என்று விடாமல் அழ ஆரம்பித்தது. கோபத்தில் அந்த பெண்ணின் தாய் ஒரு ராக்ஷஸி போலிருக்கிறது. அழும் குழந்தையை கோபத்தோடு தூக்கி வீசினாள் . அது எரியும் அடுப்பில் விழுந்து எரிந்து சாம்பலாகியது. சாப்பிடவந்த சந்நியாசி இங்கே உணவு உண்ணமாட்டேன் என்று மறுத்தான்.
அப்போது அந்த குழந்தையின் தந்தையான வீட்டுக்கார பிராமணன் ''அதிதி வந்துவிட்டு போஜனம் செய்யாமல் போனால் எனக்கு பாபம். கொஞ்சம் இருங்கள் என்று சொல்லி விட்டு, ஏதோ மந்திரம் சொல்லி கையில் வைத்திருந்த சொம்பில் இருந்து ஜலத்தை சாம்பலாகிய குழந்தை மீது தெளிக்க சாம்பலிலிருந்து தூங்கி எழுந்த மாதிரி அந்த குழந்தை உயிர்பெற்று சிரித்தது.
பிராம்மண சந்நியாசி ஆச்சரியப்பட்டான். அந்த வீட்டுக்கார ப்ராமணனிடம் அந்த உயிர் தரும் மந்திரத்தை கற்றுக் கொண்டு ஊர் திரும்பினான். .அவன் திரும்பிய நேரத்தில் ரெண்டாவது பிராமணன் மந்திராவதி யின் எலும்புகளை எல்லா புண்யநதிகளிலும் குளிப்பாட்டிவிட்டு எடுத்துக்கொண்டு திரும்பிவிட்டான்.
இந்த ரெண்டு பிராமணர்களும் அந்த எலும்புகளை எல்லாம் மந்திரவாதியை எரித்து சாம்பலாக்கிய இடத்தில் குடிசை கட்டி அந்த சாம்பலோடு வாழ்ந்த முதல் பிராமணன் இடத்துக்கு வருகிறார்கள். எலும்புகளை அந்த சாம்பலின் மேல் வைத்து மூன்றாவது பிராமணசந்நியாசி தான் கற்ற மந்திரத்தை பிரயோகிக்கிறான். மந்திராவதி உயிர் பெறுகிறாள் .
இப்போது அந்த மூன்று பிராமணர்களும் நீ என்னைத்தான் மனக்கவேண்டும் என்று மந்திராவதியை கேட்கிறார்கள். மந்திராவதி யாரை கல்யாணம் செய்து கொள்ளவேண்டும்?
ஒரு நிமிஷம். ஸார் இந்த கேள்வியை ஜே.கே. சிவனாகிய நான் கேட்கவில்லை. தோளில் மயானத்தி லிருந்த முருங்கை மரத்திலிருந்து இறக்கிய இறந்தவன் உடலை சுமந்து கொண்டுவந்த விக்கிரமாதித்தனை, அந்த உடலில் இருந்த வேதாளம் கேட்கிறது. அது ஏன் கேட்கிறது என்றால் அதற்கு தான் இந்த அக்னிஸ்வாமி கதை தெரியும். ஆகவே இந்த '' யார் மந்திராவதிக்கு மாப்பிள்ளை?'' பிரச்னையை தீர்க்க சரியான விடையை கேட்கிறது.
இந்த கேள்விக்கு சரியான விடையை விக்ரமாதித்தன் சொல்லவில்லையானால் அவன் தலை சுக்கு நூறாக வெடித்து அவன் மரணமடைவான். சரியாக சொன்னால் அவன் மௌனம் கலைந்ததால் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு விடும்.
வேதாளம் சொன்ன கதையை கேட்ட விக்ரமாதித்தன் அதன் கேள்விக்கு உடனே சரியான பதிலை சொல்லிவிட்டான்.
' 'எந்த பிராமணன் மந்திராவதியின் சாம்பலை ஜாக்கிரதையாக பாதுகாத்து அதன்மேல் ஒரு குடிசை கட்டி வாழ்ந்தானோ அவன் தான் அவளை கல்யாணம் செயது கொள்ள தகுதியானவன்'' என்றான் விக்ரமாதித்தன்.
''என்ன காரணத்தால் அப்படி சொல்கிறாய்?'' அதை விளக்க வேண்டாமா?'''-- வேதாளம்.
உயிர்கொடுக்கும் மந்திரத்தை கற்றுக் கொண்டு வந்து ஜலம் தெளித்து சாம்பலிலிருந்து மந்திராவதிக்கு உயிர் அளித்தவன் அவளது தந்தை ஸ்தானத்தை அடைகிறான். அவள் எலும்புகளை சுமந்து கொண்டு ஊர் ஊராக சென்று புனித நதிகளில் ஸ்னானம் செய்வித்தவன் அவள் பிள்ளை ஸ்தானத்துக்கு உரியவன். ஆகவே மீதி இருக்கும் சாம்பலை பாதுகாத்த பிராமணன் தான் அவள் கணவனாக உரிமையுள்ளவன்.
(இன்று என்னை சந்திக்க நங்கநல்லூரில் என் வீட்டிற்கு ஒரு முக நூல் அன்பர் திருமதி வரிஜா நாராயணன் வந்திருந்த போது இந்த கதையை பாதி எழுதிக்கொண்டிருந்த நான் அவரிடம் வேதாளம் மாதிரியே இந்த கேள்வியை கேட்டேன். அவரும் விக்ரமாதித்தன் மாதிரியே சரியான விடையை சொன்னபோது ஆச்சரியப்பட்டேன். என் வீட்டருகே முருங்கை மரம் இல்லாததால் தென்னை மரம் ஏறத்தெரியாததால் என் நாற்காலியிலேயே உட்கார்ந்து விட்டேன்)
மீண்டும் விக்ரமாதித்தன் தோளிலிருந்து பிரிந்து போய் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு விட்ட வேதாளத்தை அவன் கொண்டுவந்து மறுபடியும் தோளில் போட்டுக்கொண்டு பேசாமல் நடக்கிறான். வேதாளம் மறுபடியும் பேசுகிறது.
''மஹாராஜா விக்ரமாதித்தா, உன்னை சரியாக புரிந்து கொள்ளாத என்னை மன்னித்துவிடு, என் கதையை சொல்கிறேன் கேட்கிறாயா?
வேதாளம் யார்? நாம் விக்ரமாதித்தனோடு சேர்ந்து அறிந்து கொள்ளத் தயாராகுவோம்.
No comments:
Post a Comment