Sunday, November 24, 2019

THULASIDAS





துளசிதாசர்    J K  SIVAN 


                                        தெளிவு பெற்ற  திருடர்கள் 
                                                                 
''இங்கு  திருட வந்த ரெண்டு திருடர்களை  தடுத்த ஸ்ரீ ராமா,   நீலகண்டனின் மறு உருவே, லட்சுமி மணாளா, ராம கிருஷ்ணா, உபமன்யு சிறிது பால் கேட்டதற்கு  பாற்கடலையே  அளித்தவனே, அப்பா மடியில் அமர இடம் கேட்டு பெறாத சிறுவன் துருவனுக்கு  அகிலாண்ட ப்ரம்மாண்டத்தில் ஒளி நக்ஷத்ர பீடம் கொடுத்தவனே, உன்னை உள்ளன்போடு அண்டிய விபீஷணனுக்கு  இலங்கா சாம்ராஜ்யத்தையே வழங்கியவன், சீதா ராமா,    பாவம் இந்த அறியாத திருடர்கள் சில வெள்ளி தங்க சாமான்கள் வேண்டும் என்று எடுத்துச் செல்ல முயன்றபோது ஏன் அவர்கள் அதை பெறமுடியாதபடி தடுத்தாய்?  நீ கருமியா?  என்று துளசிதாசர் ராமனை கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

பிறகு அந்த  ரெண்டு திருடர்களை பார்த்து,  ''இது உங்கள் இல்லம். இங்கு உங்களுக்கு என்ன தேவையோ  எடுத்துச் செல்லுங்கள். தயக்கமே வேண்டாம் '' என்கிறார்.

கண்களில் நீரோடு அந்த ரெண்டு திருடர்களும் துளசிதாஸரின் கால்களில் விழுகிறார்கள். ''ஐயா இதுவரை திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்த எங்களை புனிதமாக்கிய  மஹான் நீங்கள் .  ஸ்ரீ ராமன் பெருமை எங்களுக்கு இன்று தான் புரிந்தது.  ரஸ வாத மந்திரக் கல் இரும்பை தங்கமாக்கும் என்று அறிவோம், உங்கள் திருக்கரம் எங்கள் சிரசில் பட்டு ஆசீர்வாதம் பெற்றதில் இரும்பாக இருந்த நாங்கள் இப்போது தங்கமாகிவிட்டோம். எங்கள் தீய குணம் விலகிவிட்டது.

''பலர்  நெடுங்காலம் தவமிருந்தும் காண முடியாத  ஸ்ரீ ராம தரிசனத்தை  நேரில்  எளிதில்  பெற்ற நீங்கள் புண்யவான்கள்.  அதிர்ஷ்டசாலிகள்'' என வாழ்த்துகிறார் துளசிதாசர்.

திருட உள்ளே நுழைந்த இரு திருடர்கள் கடைசி மூச்சு உள்ளவரை ஸ்ரீ ராம பக்தர்களாக  அந்த ஆஸ்ரமத்தில் சேவை செய்து வாழ்ந்தார்கள்.

இன்னொரு சம்பவம் சொல்கிறேன்.     

வழக்கம் போல   பூஜை அர்ச்சனை, ஆராதனை, நைவேத்தியம் ஆர்த்தி முடிந்தபின் துளசிதாசர் முதலில் எல்லோரையும் அமர்த்தி போஜனம் செய்விப்பார்.  ஆஸ்ரமத்தில் இருந்தவர்கள் மற்ற வெளியூர் உள்ளூர்  பிராமணர்கள் போஜனத்துக்கு அமர்ந்திருந்த சமயம் வாசலில் ஒரு குரல்.

''ஜெய்ராம்   சீதாராம்.   பிராமணர்களை கொல்லும்  எனக்கும் போஜனம் தருவீர்களா?''

துளசிதாசரும் மற்றவர்களும் இந்த குரலை கேட்டு ஆச்சர்யப்படுகிறார்கள். துளசிதாசர் ஓடிச்சென்று அந்த மனிதரை வணங்கி   அன்போடு  அணைத்து  உள்ளே அழைத்து வந்து அவருக்கும் இலைபோட்டு  போஜனம் செய்விக்க ஏற்பாடு செயகிறார்.  அதற்குள் மற்றவர்கள் எதிர்க்கிறார்கள் 

''சுவாமி எப்படி     ''பிராமணர்களை   நான்  கொல்பவன் , கொல்வேன் , கொல்லவேண்டும் , என்று சொல்பவனுக்கு எங்களோடு சரிசமமாக போஜனம்  அளிக்கலாம்.?''

'' அவர் என்ன சொன்னார் என்று கேட்கவில்லையா.  ஜெய்ராம் சீதாராம் '' என்று அவர் சொன்னபோதே  அவர் செய்த சகல பாபங்களும் விலகிவிட்டதே. சகல பாபங்களும்  நெருப்பிலிட்ட  வைக்கோல் போல் எரிந்து விட்டதே.   உங்களைப்  போலவே அவரும் அல்லவா  உயர்ந்து விட்டார்''  ஆகவே  நீங்கள் சந்தோஷமாக  போஜனம் அருந்தலாம்''  என்கிறார்  துளசிதாசர்.    

''எந்த சாஸ்திரத்தை அடிப்படையாக வைத்து இதை சொல்கிறீர்கள்?'' 

''ஸ்ரீ பாகவத புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணனே உத்தவருக்கு  சொல்லி இருக்கிறாரே.  கலியுகத்தில் ஒரே சக்தி பகவன் நாமம் ஒன்றே . குளிக்கும்போதும் சாப்பிடும்போதும்  கேசவ நாராயண   என்று சொன்னாலே போதும்.  உடம்பு உள்ளத்தில் இருக்கும் எல்லா  அழுக்குகளும்  உடனே காணாமல் போய்விடும்.   விஷ்ணுவின் எந்த பெயருக்கும் இந்த சக்தி உண்டு.  ஸ்ரீ  பரமேஸ்வரனே பார்வதியிடம்  ஸ்ரீ ராம என்று சொல் அது வே  அவனது ஆயிரம் நாமங்களுக்கு சமம் என்று சொல்லி இருக்கிறாரே,  

பிங்களா என்கிற வேசி  ஒரு கிளி வளர்த்தால் அதற்கு ரகு என்று பெயர் வைத்து அடிக்கடி ரகு ரகு என்று கூப்பிட்டதால் மோக்ஷம் அடைந்தாள். 

அஜாமிளன் ஒரு பாபி. ஆனால் அவன் மகனுக்கு நாராயணன் என்று பெயர் வைத்து நாராயணா என்று அடிக்கடி பிள்ளையை கூப்பிட்டதால்  அவன் எதிர்பார்க்காமல்,  மோக்ஷ கதவு திறந்து வைத்தார்கள் அவனுக்காக.''  என்று விளக்கினார்  துளசிதாசர்.

அப்படியும் திருப்தி அடையாத பிராமணர்கள்  ''இதற்கு சரியான  கண்கூடான ஒரு அத்தாட்சி இருந்தால் நம்பலாம். '' என்கிறார்கள்

''என்ன  சாட்சியம் வேண்டும் உங்களுக்கு?'' என்று  துளசி தாசர் கேட்கிறார்.

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...