Saturday, November 9, 2019

THIRUKKOLOOR



திருக்கோளூர்  பெண் பிள்ளை ரஹஸ்யம்   J K  SIVAN 

       6. பிண விருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே

''மனிதனை மனிதன் சாப்பிடுறாண்டா  தம்பி பயலே''.....இதில் ஒருவனை வெட்டி உப்பு புளி காரம் பருப்பு போட்டு சமையல் செய்து சாப்பிடுவதை பற்றி சொல்லவில்லை.  ஏமாற்றுவதை பற்றி. ஆனால்  மனிதர்களை ராக்ஷஸர்கள் சாப்பிட்டதாக  புராணம் சொல்கிறது.   ஏன்  நமது காலத்தில் கூட   உகாண்டா  சர்வாதிகாரி  இடி அமீன்  போன்றவர்கள்  வேண்டாதவன் தலையை வெட்டி பிரிட்ஜில் வைத்து  கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டதாக கேட்டிருக்கிறோம்.  சென்னையில் ஜெனெரல் ஹாஸ்பிடலில் பிணவறையில் வேலை செய்த ஒருவன் தினமும்  பிணங்களை ருசி பார்த்ததாக பல வருஷங்களுக்கு முன் பேப்பரில் படித்திருக்கிறேன்.


நமது கதையில் வரும்  கண்டாகர்ணன், பிணங்களை  ஆகாரமாக கொண்டவன்.  சிறந்த சிவ பக்தன்.  (வடக்கே  இமய மலை பகுதிகளில் அகோரிகள் எனும் சாமியார்கள்  இன்றும்  சுடுகாட்டில்  பிணம் சுட்டு  தின்பதாக செய்தி படித்ததும் ஞாபகம் வருகிறது)  

கண்டா கர்ணன் என்றால் காதில் மணி கட்டி தொங்கவிட்டவன் என்று அர்த்தம்.   சிவனைத்தவிர மற்ற தெய்வங்கள் பெயர்களை கேட்கக்கூடாது என்று  காதில் மணி அடிக்க வைத்துக்கொண்டவன். 

கண்டாகர்ணன்   சிவபெருமானை ஒருநாள் பார்த்து  ''பரமேஸ்வரா, இப்படி  காற்று ரூபத்தில்  வாழ்ந்து பிணந்தின்பது அலுத்துப் போய் விட்டது.  என்னை கைலாசத்திற்கு  அழைத்துக் கொண்டு சொல்லுங்களேன்'' என்று  வேண்டினான். 

 'உனக்கு  இன்னும் நேரம் வரவில்லை. உன்   கர்ம பலனை  நீ  அனுபவிக்கிறாய்.  இதில் மாற்றம் வேண்டுமென்றால் நீ  நாராயணனை தான் நாடவேண்டும்.  நீ  என்  பக்தன் என்பதால் ஒரு வழி சொல்கிறேன்.   மஹா விஷ்ணு வாகிய  நாராயணன் இப்போது கிருஷ்ணாவதாரம் எடுத்திருக்கிறார். அவர் இங்கே அடிக்கடி வருவார். கைலாசத்திற்கு அடுத்த முறை  கிருஷ்ணன்  வரும் பொழுது  நீ அவரை  வணங்கி வேண்டியதை கேட்டு பெறுவாய்'' என்கிறார்  சிவன்.. 

''என்றாவது் ஒருநாள் இங்கே  கிருஷ்ணன் வருவார் என்று சிவன் சொன்னாரே. நான் இங்கேயே வாசலில் உட்கார்ந்து கொள்கிறேன். கிருஷ்ணன் வந்தால் அவரை பிடித்து வேண்டிக் கொள்கிறேன்.  இனி காதில் மணி அவசியம் இல்லாமல் போய்விட்டது.  கண்டாகர்ணன் என்று பேர் மட்டும் கொண்ட அவன் கைலாய வாசலில்  காத்திருந்தான்.  கிருஷ்ணன் என்ற பெயர்   அவர் எப்போ வருவாரோ  என்ற எண்ணம்  இந்த இரண்டைத்தவிர மனதில் வேறு  எண்ணம் இல்லாதவனாக  கண்டாகர்ணன் காத்திருந்தான். 

 கிருஷ்ணன்  கைலாசத்துக்கு வருகின்றார் என்று செய்தி  காதில் விழுந்ததும்  மகிழ்ந்தான்.  அதற்குள்  இன்றைய  காலை உணவை முடித்துவிடுவோம் என்று சுற்றி முற்றிலும் பார்த்தான்.  யாரோ ஒரு ரிஷி ஒரு  காட்டில்  தவத்தில் இருந்தார். அவனது ஒரு  அடியில்  ரிஷி அவன்  காலை உணவாக மாறினார்.  வழக்கமாக  எதை உண்பதற்கும்,  பருகுவதற்கும்  முன்னால்  சிவார்ப்பணம் என்று சொல்வான்.  இன்று  இறந்த ரிஷியை  தூக்கிக் கொண்டுவந்து  உண்பதற்கு முன்னால்  ஸ்ரீ    கிருஷ்ணார்ப்பணம்  என்று  அவன் சொல்லும்போதே   எதிரே கிருஷ்ணன் வருவதை பார்த்து விட்டான். 

  " வாருங்கள் வாருங்கள்,  நீர் தான் கிருஷ்ணனா,  கர்ம வினைகளை  போக் குவீராமே, சிவ பெருமான் சொன்னாரே,  உமக்காக தான் காத்திருந்தேன்.   இதோ இந்த ரிஷியை கொன்றது உமக்காகவே, நீர் முதலில் சாப்பிடும்.  திருப்தியாக சாப்பிட்டதும் எனக்கு கர்மவினை போக்கி முக்தி அருளும்''  என்று வேண்டினான். 

கிருஷ்ணன்  பரிசுத்த பக்தியோடு கண்டாகர்ணன் அளித்த ''காலை  உணவை''  பார்த்தான்.  ரிஷியை உயிர்பித்தான். கண்டா கர்ணனுக்கும் மோக்ஷமளித்தான். 

ராமானுஜரே ,   இப்போது சொல்லுங்கள்,   கண்டாகர்ணன் ஒரு ராக்ஷஸன், சிறந்த சிவ பக்தன், சிவனின் அறிவுரையால் விஷ்ணுவான கிருஷ்ணனை பரிபூர்ண நம்பிக்கையோடு வேண்டினான். தான் பசியாக இருந்தும் தனக்கென கொன்ற ரிஷியை கிருஷ்ணனுக்கு மனப்பூர்வமாக அளித்தான். அவன் பக்தியை போல் எனக்கு ஒருவேளையும் , துளிக்கூட பக்தி இருந்ததில்லையே  என்னால் ஸ்ரீ பெருமாளை முழுமனதுடன் வணங்க எவ்வாறு முடியும்? எந்த யோக்கியதாம்சமில்லாமல் எப்படி நான் இந்த புண்யபூமி திருக்கோளூரில் வசிக்க இயலும், நீங்களே சொல்லுங்கள் ?' பிண விருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே''    என திருக்கோளூர் பெண் கேட்டபோது  அடுத்து இவள் என்ன உதாரணம் காட்ட போகிறாள்  என்று வியந்தார் அந்த மஹான்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...