துளசி தாசர் J K SIVAN
நந்திகேஸ்வரன் சாட்சியம்
துளசிதாசரை சுற்றி நின்ற பிராமணர்கள் எல்லோரும் ஒன்றாக குரல் கொடுத்தார்கள்.
''சுவாமி நீங்கள் சொன்னால் போதாது. இந்த பாபி ''பிராமணனை கொன்றவன் நான், கொல்வேன்'' என்று சொன்ன பாபம் அவன் ஸ்ரீ ராமன் நாமத்தை சொன்னதால் உடனே நீங்கி விட்டது என்கிறீர்களே. எந்த சாஸ்திரத்தில் இது சொல்லி இருக்கிறது? இதற்கு சரியான கண்கூடான ஒரு அத்தாட்சி இருந்தால் நம்பலாம். இல்லாத போது இந்த பாபியோடு எங்களை போஜனம் அருந்த சொல்கிறீர்களே? அந்த பாபம் எங்களை பிடித்துக் கொள்ளுமே '' என்றார்கள்.
''பிராமணர்களே, பக்தியோடு மரியாதையோடு உங்களை நமஸ்கரித்து சொல்கிறேன். எனக்கு தெரிந்து, என் அனுபவத்தில், ஸ்ரீ ராமனின் நாமத்தை விட சிறந்த பாப , சோக, துக்க, நிவாரணி எதுவுமே இல்லை. எனக்கு வேறெந்த சாஸ்திரமும் தெரியாது. உங்களுக்கு என்ன சாட்சியம், ஆதாரம் வேண்டும் என்று சொன்னால் என்னால் முடிந்த வரை உங்களை திருப்திப்படுத்துகிறேன். ஸ்ரீ ராமன் அருள் புரிவான்'' என்றார் துளசிதாசர்.
பிராமணர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை. ஆனால் துளசிதாசரை விடக்கூடாது என்று நிச்சயம் பண்ணிக் கொண்டு அவர்களில் தலைவன் போல் ஒருவன் பேசினான். ஆஸ்ரமத்துக்கு எதிரே இருந்த ஒரு பழைய கால சிவன் கோவில் அந்த பிராமணன் கண்ணில் பட்டதும் அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது.
பிராமணர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை. ஆனால் துளசிதாசரை விடக்கூடாது என்று நிச்சயம் பண்ணிக் கொண்டு அவர்களில் தலைவன் போல் ஒருவன் பேசினான். ஆஸ்ரமத்துக்கு எதிரே இருந்த ஒரு பழைய கால சிவன் கோவில் அந்த பிராமணன் கண்ணில் பட்டதும் அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது.
''துளசி தாசரே நீங்கள் சொல்வதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அது மட்டும் போதாது. இதற்கு ஈஸ்வர அனுக்ஞை வேண்டும். அதோ பாருங்கள் எதிரே சிவன் இருக்கிறார். அவர் எதிரே நந்திகேஸ்வரர் அமர்ந்திருக்கிறார்.. சிவனின் வாஹனம். ஒரு பாத்திரத்தில் கீரை, தானியங்கள் வைத்து ஜலம் நிரப்பி அதை அந்த நந்திகேஸ்வரருக்கு நைவேத்யம் செய்யுங்கள் உங்கள் கையால் நிறைய புல் கீரை எடுத்து எங்கள் கண் எதிரே அந்த நந்திகேஸ்வரனுக்கு கொடுங்கள். உங்கள் கையிலிருந்து அதை அவர் வாங்கி சாப்பிடுவதை நாங்கள் பார்த்துவிட்டால் பிறகு என்ன உங்கள் வாக்கை ஒப்புக்கொண்டு இந்த பிராம்மண கொலைகார பாபி எங்களோடு அமர்ந்து சாப்பிடட்டும். ஆக்ஷேபணை இல்லை. நீங்கள் நிறைய படித்தவர். எதையாவது சொன்னால் அதை சரியா என்று அறியக்கூட முடியாதவர்கள் நாங்கள். ஆகவே நிதர்சனமாக இந்த உண்மை போதும்.'' என்றான் அந்த பிராமணர்களின் தலைவன். .
துளசிதாசர் இதை கேட்டு வருந்தவில்லை, கவலைப்படவு மில்லை. அவர் ஸ்ரீ ராமனடிமை. எதுவும் அவன் அருளால் அவன் திட்டப்படி நடக்கிறது என்பதால் இதுவும் அவனது ஒரு விளையாட்டோ? என்று நினைத்தார்.
உடனே தோட்டத்துக்கு சென்றார். ஸ்ரீ ராம நாமத்தை சொல்லிக்கொண்டே அருகம்புல் கைநிறைய பறித்தார். கீரைகளை பறித்தார். வாயகன்ற ஒரு பாத்திரத்தில் குடிக்க ஜலம் எடுத்துக் கொண்டார். நேராக எதிரே சிவன் கோவிலுக்கு சென்றார். பிராமணர்கள் நிழல் போல் அவரை தொடர்ந்தார்கள். சிவனை கண்குளிர தரிசித்தார். வேண்டிக்கொண்டார். நீ விஷத்தையே அருந்தியவன். இந்த புல்கட்டை, கீரையை உன் பிரதம சிஷ்யன், வாஹனம் நந்திகேஸ்வரனை உண்ணச்சொல். என்கிறார். நந்தியை வலம் வந்தார். நந்தியின் சிலை முன் நின்றார். நந்திகேஸ்வரனை போற்றினார். கண்களில் பக்தியால் ஜலம் வழிந்தது.
''நந்திகேஸ்வரா, நான் தான் மகாபாபி, என் எதிரே நீ இருந்தும் இத்தனை நாள் எனக்கு உன்னை வணங்கி உனக்கு ஆகாரம் தரவேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லையே. என் ராமன் என்னை மன்னிக்கட்டும். இதோ இந்த பிராமணர்கள் உனக்கு நான் இந்த ஆகாரம் இன்று கொடுக்க காரணமானவர்கள். அவர்கள் நீண்ட ஆயுளுடன் நோய் நொடியின்றி வாழ கிருபை புரிவாய். நான் அளிக்கும் இந்த சிறிய ஆகாரத்தை மனதார ஏற்றுக்கொண்டு என் தவறுகளை மன்னிக்க வேண்டும். ராமனடிமை நான்.
இந்த ஏழை பிராமணன் ஏதோ தவறான வார்த்தைகள் சொன்னாலும் ஸ்ரீ ராம் ஜெய்ராம் சீதாராம் என்று சொன்னதால் அவன் பாபங்கள் தீர்ந்து விட்டன என்று நான் சொன்னது உண்மையானால் இந்த ஆகாரத்தை நீ ஏற்றுக்கொண்டு அருளவேண்டும்''
என்று நந்தியை வணங்கி கைநிறைய புல்லை, கீரை கட்டுகளை நந்தியின் வாயருகே கொண்டு சென்றார். அப்போது அங்கே ஒரு அதிசயம் நடந்தது. இதுவரை உலகம் காணாத அற்புதம்.
காலை மடக்கி உட்கார்ந்திருந்த கல் நந்தி மெதுவாக எழுந்தது. ''புஸ்'' என்று ஒரு பெரு மூச்சு விட்டது. கண்களை சுழற்றி எல்லோரையும் பார்த்தது. துளசிதாசர் சந்தோஷமாக நீட்டிய கீரைகளை, புல்கட்டை வாய் திறந்து நீண்ட நாக்கினால் சுழற்றி வாங்கி கொண்டு வாயில் நிரப்பிக்கொண்டு தாடையை அசைத்து கடித்து தின்றது. அத்தனை கீரைகளையும் புல்கட்டுகளையும் சாப்பிட்டுவிட்டு பாத்திரத்தில் நிறைந்திருந்த நீரை ஒரே மடக்கில் குடித்துவிட்டது. அடுத்த கணம் மீண்டும் கல்சிலையாக அமர்ந்து விட்டது. பாத்திரங்கள் காலி.
அப்புறம் என்ன எல்லா ப்ராமணர்களும் அங்கே நிற்கவில்லை. அவர்கள் தான் துளசிதாஸரின் காலடியில் ''எங்களை மன்னித்து விடுங்கள்''என்று கீழே விழுந்துவிட்டார்களே. அந்த புதிய பிராமணனும் ஜெய் ராம் சீதாராம் என்று உரக்க கத்திக்கொண்டே ஆடினான்.
எல்லோருக்கும் போஜனம் நடந்தது.
No comments:
Post a Comment