துளசி தாசர் J K SIVAN
துளசி தாசர் ஒரு கல் நந்தியை புல்கட்டு, கீரைகள் சாப்பிட வைத்தார் என்ற சேதி காட்டுத்தீ போல் எங்கும் பரவியது. அவரது பரிபூர்ண ராம பக்தியை ஏற்கனவே அனைவரும் அறிந்திருந்தார்கள். அவர் வால்மீகி அவதாரம் என்ற சொல் வேகமாக பரவி அனைவரும் அவரை போற்றினார்கள். அவரை பரிசோதித்த பிராமணர்கள் மிக்க மரியாதையோடுஅவரை வணங்கி ஆஸ்ரமத்தில் நுழைந்தார்கள்.
வெளியூர் பிராமணன், ''பிராமணர்களை கொன்றவன் நான்'' என்று சொன்னவனோடு சேர்ந்து அனைவரும் போஜனம் அருந்தினார்கள். ராமநாம பாராயணம் நடந்தது. காசியில் இருந்த அனைத்து பிராமணர்களும் அன்று அங்கே அந்த துளசி தாசர் ஆஸ்ரமத்தில் ஆனந்தமாக ராமநாம பாராயணத்தில் ஈடுபட்டார்கள்.
காலம் இவ்வாறு காசியில் ஆனந்தமாக அவரது ஆஸ்ரமத்தில் ராம நாம கோஷத்தோடு ஓடிக் கொண்டிருந்தது.
ஒரு நாள் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. ஜயத் பால் என்று ஒரு வியாபாரி. அவன் திடீரென்று மாரடைப்பால் காலமானான், அவனது மனைவி தனது கணவன் இன்றி ஒரு நிமிஷமும் வாழ மாட்டேன் என்று அவனோடு உடன்கட்டை ஏற முடிவெடுத்தாள் .
அன்பர்களே, உடன்கட்டை ஏறுதல் என்கிற வழக்கம் அநேக குடும்பங்களில் இருந்தது. ஐந்து ஆறு தலைமுறைக்கு முன் வரை எனக்கு தெரிந்து எங்கள் குடும்பத்தில் கணவனை இழந்த இளவயது மனைவியர் கூட கணவன் உடலோடு சேர்த்து எரிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை '' சதி '' என்பார்கள். ராஜாராம் மோகன்ராய் இந்த கொடிய வழக்கத்தை எதிர்த்து போராடினார். வில்லியம் பென்டிங்க் என்கிற ஆங்கிலேய கவர்னர் ஜெனெரல் காலத்தில் உடன்கட்டை ஏறுதல் அரசாங்கத்தால் சட்டம் இயற்றப்பட்டுதடுக்கப்பட்டது. ஒழிக்கப்பட்டது. இன்றும் அங்குமிங்கும் எங்கோ சில சம்பவங்கள் வெளியே தெரியாமல் நடக்கலாம்.
ஆகவே ஜெயத்பால் மனைவி கங்கைக்கரையில் ஒரு மணல்வெளியில், விறகு கட்டைகள், விரட்டிகள் அடுக்கப்பட்டு எல்லா உறவுகளும், நண்பர்களும் ஊர்க்கார்களும் பார்த்துக் கொண்டிருந்தபோது சிதையில் ஜெயத்பால் உடல் வைக்க பட்டது. அவன் மனைவி குளித்து, புத்தாடை அணிந்து, ஆபரணங்களோடு, நெற்றி நிறைய குங்குமத்தோடு , மலர்கள் தலையில் சூடிக்கொண்டு, வெற்றிலை பாக்குடன் அனைவருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு, விடைபெற்று வீட்டிலிருந்து கங்கைக்கரை மயான பூமிக்கு கணவன் சிதையை நோக்கி நடந்தாள்.
போகும் வழியில் துளசி தாசர் இருந்த ஆஸ்ரமம். அவர்மேல் அலாதி பக்தி அவளுக்கு ஆகவே உள்ளே சென்று அவரை நமஸ்கரித்துவிட்டு விடை பெற்றுச் செல்ல உள்ளே நுழைந்தாள் .
துளசி தாசர் ராமத்யானத்தில் இருந்தபோது அவள் உள்ளே வந்து நமஸ்கரித்தாள்.
''உனக்கு எட்டு பிள்ளைகள் பிறக்கட்டும் '' என்று ஆசிர்வதித்தார் துளசிதாசர். . அவருக்கு வெளியுலகில் என்ன நடந்தது என்றே தெரியாதே.
''குருநாதா, என் கணவன் விஷ்ணுலோகம் சென்றுவிட்டான். நான் உங்களை வணங்கிவிட்டு அவனது உடலோடு தஹனத்தில் சேர்ந்து கொண்டு அவனை அடைய சென்று கொண்டிருக் கிறேன். நீங்கள் எனக்கு எட்டு குழந்தைகள் பிறக்கட்டும் என்று ஆசிர்வதித்தீர்களே சுவாமி அது எவ்விதம் பலிதமாகும். அடுத்த ஜென்மத்தில் வேண்டுமானால் அது பலனளிக்கட்டும்'' என்றால் அந்த பெண்.
''அம்மா, எனக்கு உன் நிலைமை பற்றி ஒன்றுமே தெரியாது. என் மனதில் அப்படி உன்னை வாழ்த்த தோன்றினால் அது ஸ்ரீ ராமன் இட்ட கட்டளையே தவிர என் வார்த்தை அல்ல. நிச்சயம் ராமன் சத்யவாகீஸ்வரன். அவன் வார்த்தை பொய்க்காது '' என்கிறார் துளசிதாசர்.
அந்த பெண் கணவன் கங்கைக்கரையில் ஜெயத்பால் சிதையை அடைந்தாள். அவள் கணவன் ஏதோ தூக்கத்தில் இருந்து எழுந்தவன் போல் அந்த சிதையில் எழுந்து உட்கார்ந்திருந்தான். மிரள மிரள சுற்றி பார்த்தான். அருகில் இருந்தவர்கள் அவள் மூலம் நடந்ததை அறிந்தார்கள். எல்லோருக்குமே ஆனந்தம், ஆச்சர்யம். இருக்காதா பின்னே?
கணவனை கைபிடித்து இறக்கி அழைத்துக்கொண்டு நேராக துளசிதாசர் ஆஸ்ரமம் சென்றார்கள். உள்ளே சென்று இருவரும் அவருக்கு நமஸ்காரம் செய்து ராம நாம பாராயணம் செய்தவர்கள். ஆஸ்ரமவாசிகள் விஷயம் அறிந்து துளசிதாஸரின் பக்தி யின் சக்தியை போற்றினார்கள். இப்போது தானே சமீபத்தில் ஒரு கருங்கல் நந்திக்கு உயிரளித்து புல் ,கீரையெல்லாம் சாப்பிட வைத்தார். அதற்குள் இந்த அதிசயம். அடடா.. எவ்வளவு பெரிய மஹான் இவர் என்று வாய் நிறைய புகழ்ந்தார்கள்.
வாட்ஸாப் , முகநூல், மொபைல் டெலிபோன் இல்லாத காலத்திலேயே வெகுவேகமாக முகலாய சக்ரவர்த்தி அக்பர் காதுக்கும் இந்த செய்தி எட்டியது.
No comments:
Post a Comment