Monday, November 25, 2019

RAJARAJA CHOZHAN






 ராஜராஜ சோழன்.  J K  SIVAN 

                                                                      






            பேசுகிறோமே  அறிந்தோமா ? ​

ராஜராஜ சோழன்  67 வருஷம் வாழ்ந்த ஒரு தனிப்பிறவி. அவனுக்கு முன்னும்  பின்னும் இப்படிப்பட்ட ஒரு  ராஜா பிறந்ததில்லை, இருந்ததில்லை. வீரத்தில், கம்பீரத்தில், ராஜ்ய நிர்வாகத்தில், பக்தியில்,  எதிர்கால நோக்கில்,  கலைகளை ஆதரிப்பதில், மக்களை நிர்வகிப்பதில்,   எண்ணற்ற   சைவ வைணவ  ஆலயங்களை நிர்மாணித்து,  புனருத்தாரணம் செயது  பாதுகாத்து தந்தவன்  ஆறுகள் குளங்கள் வெட்டி சோழ வளநாட்டை சோறுடைத்ததாக்கியவன் அல்லவா?.   


கருவூர் தேவர் அவன் நிர்மாணித்த  ப்ரஹதீஸ்வரர் எனும்  பெருவுடையார் லிங்கத்தை அஷ்டபந்தன ஸ்தாபனம் செய்தவர்.
ஒரு வண்ண ஓவியத்தில்  ராஜராஜனோடு கருவூர் தேவர் சித்தர் இருக்கிறார்      - காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிய கோராஜகேசரி வன்மரான ஶ்ரீ ராஜராஜ தேவன்​'' என்று கல்வெட்டில் அவன் பெயர்.

​ராஜ ராஜனுக்கு  15 மனைவியர்.   அவர்களை கல்வெட்டில் அவன் ” நம் பெண்டுகள்​'' என்கிறான்.   அவனுக்கு மூன்று பெண்கள் ஒரு பிள்ளை. அவன் தான் ராஜேந்திர சோழன். அப்பனுக்கு தப்பாமல் பிறந்த சுப்பன். 

ராஜேந்திரன் மனைவி யார் தெரியுமா.  ராஜராஜன் சகோதரி குந்தவை அவள் கணவன் வந்தியத்தேவன் (பொன்னியின் செல்வன் படித்ததுண்டா?) ஆகியோரின் மகள் இளங்கோன் பிச்சியார்.

​இப்போது தஞ்சாவூர்  பெரியகோவிலில் உள்ள நந்திக்கு முன்னால்   ராஜ ராஜன் காலத்தில்  அங்கே  ஒற்றைக்கல் நந்தி என்ற  ஒரே கல்லால் செதுக்கிய  நந்தி இருந்தது.  மராட்டி  ராஜாக்கள் காலத்தில் ஒற்றைக்கல் நந்தி பிரஹாரத்துக்கு சென்றுவிட்டது. இப்போது இருக்கும் பெரிய நந்தி தோன்றியது. ஒற்றைக்கல் நந்தி தான்  வளர்ந்து வருகிறது என்று சொல்லப்பட்ட  நந்தி.  அதன் காலில்  ஆணி அடித்து வளராமல் செய்தனராம்.  சரியாக பராமரிக்கப்படாமல் இந்த ஒற்றைக்கல் நந்தி சிதிலம் அடைந்துள்ளது.

ராஜராஜன் புதைக்கப்பட்ட இடம் தஞ்சை கும்பகோணம் இடையே  உடையாளூர்  என்ற ஊரில்.  எத்தனை பேர் அவன் கல்லறையை  ( பள்ளிப்படை) பார்த்திருக்கிறீர்கள்? உடையாளூருக்கு அவன் காலத்தில் ஸ்ரீ காங்கேயபுரம் என்ற  பெயர்.  அங்கே  1000 வருஷ சிவன்  கைலாசநாதர் ராஜராஜன் கட்டிய ஆலயத்தில் அருள் பாலிக்கிறார்.  உடையாளூர்  ராஜராஜனின்  ஒரு மனைவி   ''உலகமுழுதுடையாள் '' என்பவளுக்கு  ராஜராஜன் தானமாக கொடுத்த ஊர்   ''உலகமுழுதுடையாளூர் ''  அது சுருங்கி உடையாளூர் ஆகிவிட்டது. அங்கே பாதி சாய்ந்து புதையுண்ட ஒரு சிவலிங்கம் தான் தென்படுகிறது.

அது  ஏன் சரியாக இன்னும் பராமரிக்கப்படவில்லை? எவருக்கெல்லாமோ  கடற்கரையில் பூங்காவில் நினைவாலயம்  இருக்க  தமிழை உலகறியச்செய்து,  உலகம் புகழும் ஆலயத்தை அதிசயமாக தந்து,  கடல்கடந்து தமிழன் வீரம் பெருமை கொள்ள செய்து, ஆறு குளங்கள் வெட்டி  சோழநாடு  சோறுடைத்து, வளமாக செழிக்க வைத்து,  சோழநாட்டில்  ஆன்மீகம் வளர பல  சைவ வைணவ ஆலயங்கள் எழுப்பியவன்,     மேலே கூரையின்றி  எவரும்  அதிகம்  அறியாத எங்கோ ஒரு வயல்வெளியில்  எதற்காக புதைக்கப்பட்டுள்ளான்???   தமிழ் தமிழ் என்று மார் தட்டுவோர்கள்  கண்ணிலோ  கருத்திலோ இனி யாவது அது புகுமா?  ராஜ ராஜன்  கல்லறையை படமாக  இணைத்திருக்கிறேன். ​ கும்பகோணம் ஜில்லா  அரசியல் தஸ்தாவேஜில் ராஜராஜனின்  இந்த கல்லறை  சொல்லப்பட்டிருக்கிறதாம்.  ராஜராஜன் இறந்தபின்  பழையாறை கிராமத்தில் ஒரு  மண்டபத்தில் அவன் உடல்   இறுதி சடங்குகளுக்காக  வைக்கப்பட்டது.    ஏனோ  இந்த மண்டபம் சிதைந்து விட்டது.  ஒரு கல்தூணில் இந்த விஷயம் செதுக்கப்பட்டிருக்கிறது.  இந்த கல்தூண் அவன் பெயரை அருள் மொழி வர்மன் என்று சொல்கிறது. இந்த மண்டபம்   பின்னர் பாண்டியன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழர்களை வென்றபோது இதை அழித்தான் என்று தகவல்.

பெரிய கோவில் கட்டிய காலத்தில் கல்வெட்டுகள் அதன் வளர்ச்சியை சொல்கிறது. ஒரு கல்வெட்டில் ஒரு  சிற்பி  பெரிய பாறை ஒன்று அவன் மீது விழுந்து நசுங்கி மாண்டான். அவன் குடும்பத்துக்கு ராஜராஜன் நிறைய பொருளுதவி செயதான். ஆற்றங்கரையில் நிலம் அளித்தான். ஏழு தலைமுறைக்கு  வரி, வட்டி கிஸ்தி எதுவும் செலுத்தவேண்டாம் என்று எந்த அளவுக்கு மக்கள் மீது பற்று கொண்டு அரசாண்டான் என்று கட்டியம் கூறுகிறது.

ராஜராஜன் எப்படிப்பட்ட ஆலய நிர்மாண திட்டம் வைத்திருந்தான் என்று நூல்கள் சொல்கிறது. பெரிய கடின பாறைக்குள் ஊசி நுழையும் துவாரம் இன்னும் தெரிகிறது. எப்படி இது ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு விஞ்ஞானம் வளராத காலத்தில் முடிந்தது? 80 டன்  எடையுள்ள விமான ஒற்றைக் கல் சிகரம் எப்படி அவ்வளவு உயரம் ஏறியது.....???  நினைத்தால் மேலே எழுத முடியாமல் கண் மூடி கற்பனை உலகில் மூழ்க வைக்கிறது.......

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...