Monday, November 4, 2019

NANGANALLUR 6



அரை நூற்றாண்டுக்கு முன் நங்கநல்லூர்   - 6
J K SIVAN                                                                                              ' துணியை அடித்து  துவைக்காதே. அது கல் அல்ல....''
அரைத்த மாவையே அரைப்பது  என்கிற  வார்த்தை அடிக்கடி  உபயோகிக்கிறோமே , அதை விடாமல் செய்யும் ஒரு வஸ்து நமக்குள் இருக்கிறதே.  அதன் பெயர் தான் மனது.  பழைய எண்ணங்கள் அலை அலையாக  மோதி ஒன்றை ஒன்று விழுங்கி  அமுங்கி பின்னோக்கி கடலுக்குள் ஓடி  மீண்டும் ஓ வென்று பெருத்த அலையாக வருமே அது தான்  மறக்க முடியாத ஒரு சம்பவம். அது தான்  ஆண்  அலை. உயரே எழும்பி மற்ற அலைகளை விழுங்கி உருண்டு உருண்டு கரை நோக்கி வரும்.  அது போல் தான்  சில எண்ணங்கள் அடிக்கடி நமக்குள்  தோன்றி தோன்றி மறையும். எப்போது மீண்டும் தலை காட்டும் என்று அதற்கு மட்டுமே  தெரியும்.   

எனக்குள் இப்படி ஆளுயரம் ''அடிக்கடி''  எழும்பும்  அலைகளில் ஒன்று   தான்  பழைய நங்கநல்லூர்  ஞாபகம்.

நங்கநல்லூர்  இப்போது ரங்கநாதன் தெரு. அதே மாதிரி நெரிசல். தெருவில் வண்டி போகமுடியாது. கடைகள் எதிரும் புதிரு மாக  பாதி தெருவை ஆக்கிரமித்து, மீதி இடத்தை நடுத்தெருவில் நிறுத்தப்பட்ட  டூ வீலர்கள்.  மஞ்சள் LG  அல்லது காபி பௌடர் கம்பெனி கொடுத்தது, கல்யாண முகூர்த்த  பையோடு,   அலறும்  வாகனங்க ளை   சட்டை பண்ணாமல், வழி கொடுக்காமல்  நடுத்தெருவில் கூட்டமாக  மற்ற  சட்டையில்லாத ''பையர்'' களோடு  அமேரிக்கா விஜயம் பற்றி பேசிக்கொண்டிருக்கும்  60-75 கள். மடிசார் மாமிகள்,  காய்கறி வேட்டையாடும் மற்றதுகள், இளசுகள், தெருவோர வியாபாரிகள்,  போதுமா.....    நங்கநல்லூரில் ஓட்டல்கள் ரொம்ப பார்க்கமுடியாது. எல்லோரும் அதிகம் வீட்டில் மட்டும் சாப்பிடுபவர்கள். நடுத்தெருவில் அர்த்தநாரிஸ்வரர் கோவில். ஏதாவது ஒரு விசேஷம் இருந்துகொண்டே இருக்கும்.  உள்ளே பெரிய  மஹா காளி  நின்றுகொண்டு அனைவரையும் ஆகர்ஷிக்கிறாளே.   அவள் அப்போது இல்லை. தெருவில் நடமாட்டம் இல்லை. கடைகள், இப்போதிருக்கும்  எண்ணற்ற  பேங்க் கள் , துணிக்கடைகள் இல்லை.  வெளியே இருந்து குடியேறியவர்களும் அதிகம் இல்லை. அவர்களை இழுத்தவர்  ஆஞ்சநேயர், குருவாயூரப்பன், ஹயக்ரீவர், அய்யப்பன்,  எல்லாம் 1980 தாண்டி விறுவிறுவென்று விஸ்வரூபம் எடுத்த ஆலயங்கள். பிள்ளையார் கோவில், குருவாயூரப்பன் கோவில் ராஜராஜேஸ்வரி கோவில் எல்லாம் சின்னது. 1960களில்  சிவன்  கோவில் இல்லை. வேம்புலி அம்மன் ரயில்வே கேட் அருகில் அன்றும் இன்றும் என்றும் இருப்பவள்.அவள் ஆலயத்துக்கு பின்புறம் ஒரு செடி கொடி  மரங்கள் இடையில் ஒரு பழைய கட்டிடத்தில் தமிழ்நாடு அரசு, கார்பொரேஷன் நூல் நிலையம் இருந்தது.  ஒரு பெண்மணி அதற்கு பொறுப்பாளி. அவர் என்னை அங்கத்தினராக சேர்த்து மூன்று புத்தகங்கள் இலவசமாக  படிப்பதற்கு  தருவார். 15 நாட்களுக்குள் படித்து முடித்து வேறு புத்தகம் தருவார். டெபாசிட். 2 அல்லது  5 ரூபாய் என்று ஞாபகம்.  நங்கநல்லூரில் எனக்கு ஆரம்பகாலத்தில் நேரம் இருந்தபோது  தேவன், கல்கி, நாடோடி, மு.வ.  ராஜாஜி, பி.வி.ஆர்,   உ.வே.சா  புத்தகங்கள் தான் பெரும் உதவியாக இருந்தது. இன்றும்   நான்  அந்த நூலகத்தில்  45-50 வருஷ   அங்கத்தினர்,  ஒவ்வொருமுறையும்    மூன்று மூன்று   புத்தகங்களாக  இதுவரை  பல  நூறு  புத்தகங்கள்  படித்துவிட்டேன். இன்னும் படிக்கிறேன்.  என் புத்தகங்களை நிறைய  இலவசமாக எல்லோரும் படிக்க கொடுத்து  வருகிறேன்
.
 டிவி ரேடியோ, இல்லாத காலம். எப்போதாவது  டூரிங் டாக்கீஸ் சென்று பழைய படம் பார்ப்போம். அப்புறம் ரங்கா தியேட்டர் வந்தது.

நங்கநல்லூர் சிவன் கோவில் இருக்கும் இடம் அருகே ஒரு குளம். நிறைய பேர் அதில் குளிப்பார்கள், ஆடு மாடுகள் குளிக்கும், துணி துவைப்பார்கள். சந்தியாவந்தனம் பண்ணுபவர்கள்  காலை மாலைகளில் அங்கே  தென்படுவார்கள்.  ஒரே ஒரு பஸ் 70 நும்பர் மட்டுமே ஓடும்.  ரயில்வே கேட் பழவந்தாங் கலில்   வெகுநேரம் மூடி இருக்கும்.  ஆகவே  காத்திருந்து உள்ளே வரும்  மோட்டார் வாகனங்கள்  விறல் விட்டு எண்ணக்கூடியவை.  சைக்கிளை தவிர ரெண்டு சக்ரவண்டி  அதிகம் இல்லை. கை  ரிக்ஷா,  சைக்கிள் ரிக்ஷா கொஞ்சம்.  NO AUTO OR TAXI.

ஓர்நாள்  மகா பெரியவா வரப்போகிறா.  பிள்ளையார் கோவில் விஜயம்  செய்யப்போகிறார் என்று பரபரப்பான பேச்சு. அவர் குளத்தங்கரையில் தங்க  ஏற்பாடு.   குளத்தில் இறங்கிய பெரியவா ஏதோ ஒரு  தீர்க்க த்ரிஷ்டியோடு அங்குமிங்கும் பார்த்தார்.  எதிரே  சிலர்  துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள்.   ஜெபத்தில் இருந்த  பெரியவா  திடீரென்று  அங்கே இருந்தவர்களை  அழைத்து   ''அதோ  அங்கே  துணி தோய்க்கிறாளே அவ அவாளை  கொஞ்சம்  நிறுத்துங்கோ'' என்கிறார்அணுக்க தொண்டர்கள் அருகில் இருந்த   துணி துவைத்தவர்களை கொஞ்சம் நிறுத்துகிறார்கள்.  

பெரியவா அவர்கள் துணிதுவைத்த ஒரு கல்லை பார்த்துக்கொண்டே இருந்தவர் ''  அது துணி தோக்கிற  கல் இல்லை. நிறுத்துங்கோ, பரமேஸ்வரன். அவரை  வெளியிலே எடுங்கோ''
விரைவில்  குளத்தங்கரையில்  ஒரு  பாதி மட்டும் தெரிந்து கொண்டிருந்த அந்த பெரிய  கருங்கல்லை புரட்டி வெளியே எடுக்கிறார்கள். அது  ஒரு ஸ்வயம்பு லிங்கம்.   வெகுகாலம் ஜலத்தில் இருந்ததால்  ஜலகண்டேஸ்வரர்  என்று ஆரம்பத்தில் சொல்வார்கள். 
இவர்  அர்த்தநாரீஸ்வரர்  என்று பெரியவர் விஜயத்திற்குப்பிறகு   நாமகரணமாகியது.   நங்கநல்லூரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு  யாரெல்லாமோ மஹான்கள் வந்திருக்கலாம், புண்ய பூமி.  அதனால் தான்  பல்லவர் காலத்து தர்மலிங்கேஸ்வரர்  ஆலயமும்  பூமியிலிருந்து  வெளிப்பட்டது. அந்த  ஆலயமும்  என் வீட்டுக்கு அருகே தான்.  
குளத்திலிருந்து வெளிப்பட்ட  சிவலிங்கம்  ஒரு சிறு  கூரை வேய்ந்த இடத்தில்  வெயிலும் மழையிலும் இத்தனை காலம் பட்டது போதும் என்று  நிம்மதியாக அமர்ந்து நூதன  கும்பாபிஷேகம் நடந்து, மஹா  பெரிய  அர்த்தநாரீஸ்வரர் ஆலயமாக மீண்டும்  ராஜகோபுர  கும்பாபிஷேகங்கள் ஆகி  நங்கநல்லூர் பஜார் வீதியை ரெங்கநாதன் தெருவாக்கி விட்டது இப்போது  என்பது ஊரறிந்த விஷயம்.

மஹா பெரியவா சம்பந்தப்பட்ட  சின்ன சின்ன விஷயங்கள் கூட  அவரது தவ வலிமை, தீர்க்க திருஷ்டி, சாஸ்த்ரா சம்பிரதாய ஞானம் எல்லாவற்றையும்  சின்ன சின்ன வார்த்தைகளில்  வெளிப்படுத்துவது அல்லவா.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...