Saturday, November 16, 2019

LIFE LESSON


                                ஸ்வர்க வாழ்க்கை!! J K  SIVAN

ராஜப்பாவுக்கு  என்ன சந்தேகம்  எப்போது எழும் என்று  ப்ரம்மதேவனுக்கே  கூட தெரியாத ஒரு விஷயம். அவர்  எனக்கு  நண்பரான விதமே தனி.

''சார்  நீங்கள்  என் செருப்பை போட்டுக்கொண்டு விட்டீர்கள்''  

 என் தோளை  ஒரு கை  தொட்டபோது நான் ராஜா மஹால் கல்யாண மண்டபத்திலிருந்து சாப்பிட்டு விட்டு புறப்பட்டுக்கொண்டிருந்தேன்.  அந்த குரலின் முகத்தை திரும்பி பார்த்தபோது தான் ராஜப்பா பழக்கமானார்.  பிறகு என் காலை பார்த்தேன்.  ஆமாம்  எப்படி  இந்த செருப்பு எனது போலவே இருக்கிறது. ரெட்டை பிறவியோ ? ஆனால்  கொஞ்சம் கடைசி விரலை கடிப்பது  அப்போது தான்  கவனித்தேன். 
''சாரி  எனது போலவே இருந்ததால் இந்த தவறு''   அவருடைய  செருப்பை கழற்றி விட்டு தேடும்போது யாரோ  தங்களது காலணியை தேடும்  அவசரத்தில் எனது செருப்பை அங்கொன்றும் இங்கொன்றுமாக  ஜோடி பிரித்து  தூர தூர  தளி   அவை எங்கோ சற்று தூரத்தில்  பிரிந்து  கிடந்தன.  தேடி எடுத்துக் கொண்டு திரும்பியபோதும் ராஜப்பா அங்கேயே எனக்காக காத்திருந்தார்.  

அன்று ஒட்டிக்கொண்டவர்  வருஷம்  நான்கு ஆகியும் என்னை விடுவதில்லை. சென்ஸஸ் டிபார்ட்மெண்டில்  ஜனங்களை ஜனத்தொகை  எண்ணி  ஒய்வு பெற்று  பென்ஷன் வாங்குகிறார். 

என்  வீட்டிற்கு ஒரு கி.மீ  தூரத்தில் ஜான் தேசிகர்தெருவில் வசிப்பவர்.   (இப்படி ஒரு பெயர் நங்கநல்லூரில் அதிசயமாக இருக்கிறது, யார் ஜான். அவர் எப்படி தேசிகர் குடும்பம்??இது பற்றி ஒருநாள்  ஆராய வேண்டும்.) 

ராஜப்பா அடிக்கடி வருவார்  ஏதாவது பேசுவார். அவர் தான் பேசுவார் நான் கேட்டுக் கொண்டிருப்பேன் நடுவில் ஏதாவது கேள்விகள் கேட்பார் . அதன் பதிலைப் பற்றி கவலைப் படுவதில்லை என்பதை  அதேகேள்வியை மீண்டும் மீண்டும் அவர்  என்னிடம்  கேட்பதிலிருந்து புரிந்து கொண்டேன். இன்றும் அதே கேள்வி...

''கர்மா  என்பது உண்மையில் என்ன ஸார்?'

''நியூட்டன்  கண்டுபிடித்த லா மாதிரி  என்று வைத்துக் கொள்ளுங்கள்.  எந்த ஒரு காரியத்துக்கும் எதிர் விளைவு உண்டு. கர்மா என்பது நான் செய்யும் மட்டும் அல்ல  எண்ணுகிற   எண்ணமும் கூட  கர்மா தான்.. அதற்காக தான் நல்லதே நினை, நல்லதே செய்'’. இது ஒவ்வொருக்கும் உண்டானது. சொல் செயல், எண்ண விளைவுகள் எவரையும் விடாது. நல்லதுக்கு நன்மை கிடைக்கும். தீயவைக்கு அதன் பலனை அனுபவித்தே தீரவேண்டும். இதை தண்டனை என்று எடுத்துக் கொள்ளாமல் படிப்பினையாக  கொள்ளவேண்டும். இது தான்  நீதி, நியதி.  இதற்கு மற்றவரை, கடவுளை சாக்கிடுவது நிறைய பேருக்கு பழக்கமாகி விட்டது.  கர்மாவுக்கு  அடுத்த பிறவி பற்றி   பயப் படுவதும் தேவையில்லை.

தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை விதைத்தவன்  வினையை தான் அறுப்பான். வட்டியோடு தான் முதல் திரும்பி வரும். சுவற்றில் வேகமாக வீசிய பந்து அதே வேகத்தில் முகத்தில் திரும்பி வந்து விழாதா?

எனக்கு  அமைதி, சந்தோஷம், நட்பு அன்பு எல்லோரிடமிருந்தும் வேண்டும் என்றால் நான் முதலில் அதை எல்லோருக்கும் அளவுக்கு மீறி கொடுக்கவேண்டுமே .
வாழ்க்கை  எல்லோருக்கும் அற்புதமாக அமைய வேண்டும் என்றால் அதற்காக  உழைக்க வேண்டும். தானாக எதுவும் நடப்பதில்லை. காரணம் காரியம் இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தமுடையது.
பிரபஞ்சம் தான் நாம். அதன் ஒவ்வொரு நிலையும்  நாம் அதை அணுகும் அனுபவிக்கும் செயலை எண்ணத்தை பொறுத்தது.  நாம் உள்ளூர மனதில் சந்தோஷமாக இருந்தால்  காண்பதெல்லாம் இனிக்கும். நாம் உள்ளே  கோபத்தை விழுங்கி இருந்த போது யாரைப்பார்த்தாலும், எதைப் பார்த்தாலும் பிடிக்கவில்லை. கோபமாக இருக்கிறது.  இந்த  பொல்லாத உலகம், மோசமான உலகம் பழிகார உலகம் என்றெல்லாம் எதற்கு பாவம் எரிமலை கோபம்,  அதன்  மீது பொல்லாப்பு?

ஒவ்வொரு ஜீவனும்  அமைதி,இன்பம், அன்பு, ஆகியவைகளால் நிரப்பப்பட்ட பிறகே  பூமிக்கு அனுப்பப் படுகிறது. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும்  தெய்வ ஸ்வரூபம்.   மற்றவற்றை நாமே  தேடிக்கொண்டு அது அதிகமாகி நம்முள்ளே  உள்ள  ஆதார குணங்களை விழுங்கி அவஸ்தை படுகிறோம். புரிகிறதா?.   உன்னுள்ளே அமைதியை, அன்பை தேடு என்று சொல்கிறார்களே  அது இதைத்  தான்.  ''நாம்  நாமாகவே''  இருக்கவேண்டும் என்பது இந்த அடிப்படையில் தான்.  

எனக்கு வேண்டாம் என்பதால் நம்மை விட்டு கர்ம பலன் போய்விடுமா? எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பண்பு வேண்டும்.  accept what comes ,  accept  what  is'' என்பதற்கு   இது தான் அர்த்தம்.

தர்மனுக்கு எல்லோரும் நல்லவராக காணப்படும்போது  துரியோதனனுக்கு எல்லோரும் கெட்டவர்கள் ,தீயவர்களாகவே தென்பட்டார்கள்..எல்லோரிடமும்  நல்லதும் கெட்டதும்  கலந்து தான் இருக்கும். அன்னம் பாலை தேடட்டும். நல்லதையே பார்ப்போம். 

கர்ம வினை, பலன், நமது நிழல் மாதிரி. கூடவே இருக்கும். தொடரும்.  அமெரிக்கா  போனாலும்  டிக்கெட் விசா இல்லாமல் நம்மோடு பயணம் செய்யும்.   நமது வாழ்க்கை நாம்  அமைத்துக் கொள்வது. 
கண்ணாடியில் பார்க்கும்போது மற்றவர் முகமா தெரியும்?  
நமது  சுக துக்கங்கள், இன்ப துன்பங்கள் நாம் போட்ட குட்டிகள், நாம் விதைத்ததில் முளைத்த ரோஜா, கள்ளி செடிகள்.
ஒரு அடி  எடுத்து வைத்தபின் தான் அடுத்த அடி . ஒவ்வொன்றாக தான்  எதிர் கொள்ளவேண்டும். ஒரே சமயம் ரெண்டு காரியம் எப்படி செய்ய முடியும்?  என் மனம்  ஆன்மீக தார்மீக  எண்ணங்களில் நிரம்பி இருக்கும்போது மற்ற  எண்ணங்கள் உள்ளே  நுழைய  இடமில்லை.  

கடந்த காலம்  நிகழ் காலம் எதிர்காலம் எல்லாமே ஒன்றே தான். மனிதன் மாற்றிக்கொள்ளும் வேறு வேறு சட்டைகள்.
உண்மை  சத்யம் உள்ளே இருப்பது எல்லோருக்கும் ஒன்றே  தான். அதை  வெளிக்கொணர்வது நமது முயற்சி.
நடந்ததையே நினைத்து  நேரத்தை கடத்தாமல்  இப்போது நமது எண்ணம், செயல்களில் மனம் நல்லதை  நிரப்பினால் இனி வரப்போகும் காலம் நல்லதாகவே தானே  இருக்கும். இருண்ட காட்டில் நாம் நுழைந்துவிட்டு   வெளிச்சம் தெரியவில்லையே, வழி காணோமே என்று கதறி என்ன பயன்?
சரித்திரம்  சொல்லும் பாடம், எதை செய்யக்கூடாது என்பது தான். 
பொறுமை, நிதானம், அன்பு, பெருமை, நட்பை வாரி அள்ளி கொடுக்கும்.  ஒரு நிமிஷம் யோசித்து பார்ப்போம். உலகில் எல்லோரும் இவ்வளவு அருமையாக நடந்து கொண்டால் எவ்வளவு அழகான சொர்க்க்க பூமி நமக்கு அனுபவிக்க காத்திருக்கும்.  ஓஹோ  அதனால் தான்  அன்பே தெய்வமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...