திருக்கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யம்: J K SIVAN
8. ''தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே''
துருவன் என்பவன் கதை இதுவரை நாம் நினைத்துக் கூட பார்க்காத ஒரு குழந்தையின் சோக கதை.
உத்தானபாதன் என்ற ஒரு ராஜாவுக்கு ரெண்டு மனைவிகள். சுநீதி, சுருசி. சுநீதிக்கு பிறந்த பிள்ளை துருவன். சுருசி பிள்ளை உத்தமன். அந்த ராஜா சுருசியிடமும் அவள் பிள்ளை உத்தமனிடமும் மட்டுமே பிரியம் கொண்டவன். சிறு குழந்தை துருவனை கொஞ்சமாட்டான். நம்மைப்போல குழந்தை துருவனோடு விளையாடமாட்டான். அந்த குழந்தைக்கு எவ்வளவு ஏக்கமாக இருக்கும்? அதைப்பற்றி என்னால் எழுத முடியவில்லை. வார்த்தைகளை கொட்டிவிடுவேன். உத்தான பாதனை கிழி கிழி என்று கிழித்துவிடுவேன். துருவன் ஐந்து வயது குழந்தை, மூத்தது. உத்தமன் அவனுக்கு சின்னவன்.
ஒருநாள், குழந்தை துருவன் தனது தம்பி உத்தமன் அப்பா உத்தானபாதன் மடியில் உட்கார்ந்து அப்பாவோடு விளையாடுவதை பார்த்துவிட்டு, குழந்தைதானே, ''அப்பா, நானும்' என்று அப்பாவை நோக்கி ஓடுகிறான். இதை சுருசி பார்த்துவிட்டு ''டேய் துருவா, நீ ராஜா கிட்டே போகக்கூடாது.
ராஜா உத்தமனுக்கு மட்டும் தான் அப்பா. உனக்கு இல்லை '' என்று பிடித்து துருவனை தூர தள்ளுகிறாள். அந்த ராஜா இதெல்லாம் பார்த்துக்கொண்டு பேசாமல் இருக்கிறான்.
அழுதுகொண்டே துருவன் அம்மா சுநீதியிடம் வந்து நடந்ததை சொல்கிறான். நிர்க்கதியான அந்த பெண் சுநீதி என்ன செய்யமுடியும்? திக்கற்றவருக்கு தெய்வமே துணை அல்லவா?
அவனை வாரி அணைத்து தானும் அழுகிறாள். பிறகு அவனை முதுகில் தடவிக்கொடுத்து சமாதானப் படுத்தி
''என் செல்வமே துருவா, ராஜாவையோ, சித்தி சுருசியையோ நாம் எதுவும் பேசவோ நினைக்கவோ வேண்டாம். நம் எல்லோருக்கும் ஒரு அருமையான அப்பா இருக்கிறார். அவர் பெயர் வாசுதேவன். அவரை நீ கெட்டியாகப் பிடித்துக் கொள். அவரை அடைந்துவிட்டால், உன்னைமாதிரி அதிர்ஷ்ட சாலி, சந்தோஷமானவன் வேறே யாருமில்லை. ''
'' அம்மா அந்த அப்பா வாசுதேவனை எங்கேம்மா பார்க்கலாம்?''
''காட்டில் தவமிருக்கணும் குழந்தே. ரிஷிகள் எல்லாம் அப்படி தான் இருக்கிறார்கள்'' . அவ்வளவு தான் எனக்கு தெரியும்.
''சரிம்மா'. துருவன் காட்டில் வாசுதேவனை நோக்கி தவமிருக்கும்போது நாரதர் வருகிறார். துருவனைக் கண்டு அதிசயிக்கிறார்.
" குழந்தே துருவா! உனக்கு இந்த கடுமையான தவம் எல்லாம் வேண்டாமடா. பல வருஷங்கள், ஏன் பல பிறவிகள் எடுத்தும் எத்தனையோ ரிஷிகள், முனிவர்கள், யோகிகள் தவம் இருந்தும் வாசுதேவனை அடைய முடியவில்லை. ரொம்ப சின்ன குழந்தை உன்னால் பசி தாகம், தூக்கம் இல்லாமல் தவமிருப்பது கஷ்டம். முடியாதும் கூட. இந்த எண்ணம் வேண்டாம், பேசாமல் அரணமனைக்கு போய்விடு'' என்கிறார்.
''மகரிஷி தாத்தா, எனது ஒரே லக்ஷியம் வாசுதேவன் எனும் அந்த மஹா புருஷரை, என் அப்பாவை கண்டு அவரை என் அடைவது தான். அவர் வரும் வரை காத்திருக்கிறேன். என் அப்பா வரும்போது வரட்டும். எனக்கு அப்பா வேணும்''
சரி அப்படியென்றால் நான் சொல்லித்தரும் இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டே இரு. அவர் வருவார். என்று துருவன் காதில் ''ஓம் நமோ பகவதே வாசுதேவாய :" என்று நாரதர் உபதேசித்தார்.
ஐந்து வயது துருவன் அதை கெட்டியாக பிடித்துக்கொண்டு யமுனை நதிக்கரை செல்கிறான். அங்கே மூன்று வேளையும் ஸ்னானம் செய்து, அருகே மதுவனம் என்ற கிருஷ்ணன் விளையாடிய இடத்தில் அமர்ந்து தியானம் செய்கிறான். அவன் முன்னே வாசுதேவன் தோன்றாமலா இருப்பான்?
துருவனை வைகுண்டத்திற்கு அழைத்து சென்று, தனது மடியில் அமர்த்தி, சகல ஸாஸ்த்ர ஞானம் அளித்து விண்ணில் அவனுக்கு தனி இடமாக அமைத்து நமக்கு என்றும் மறையாத துருவ நக்ஷத்ரமாக (NORTH STAR, POLE STAR ) விளங்குகிறான் துருவன்.
திருக்கோளூர் பெண் ஸ்ரீ ராமானுஜரை வணங்கி கேட்கிறாள்:
''சுவாமி என்றாவது எனக்கு அந்த சின்ன குழந்தை, துருவன் மாதிரி வாசு தேவனிடம், வைத்த மாநிதி பெருமாளிடம், பரிபூர்ண நம்பிக்கை, பக்தி இருந்ததா, இல்லையே. நான் எப்படி இந்த புண்ய க்ஷேத்ரம் திருக்கோளூரில் வாசம் செய்ய அருகதை உள்ளவள், நீங்களே சொல்லுங்கள்? ''
திருக்கோளூர் பெண் பிள்ளை சொல்வதை கேட்டால், அரிது அரிது மானிடராக பிறத்தல் அரிது என்கிற வார்த்தை கொஞ்சமாவது நமக்கு புரிந்தால் நாம் எப்படியெல்லாம் அந்த இறைவனுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கவேண்டும்! இனிமேலாவது ஒரு ஐந்து நிமிஷம் தினமும் அவனை நினைத்து நன்றி சொல்வோமா? பிறர்க்கு ஏதாவது நம்மால் ஆன உதவி சுயநலமின்றி செய்வோமா?
No comments:
Post a Comment