அன்பு நண்பர்களே J K SIVAN
அன்புடன் ஒரு வார்த்தை.....
சுந்தா என்கிற சுந்தரராமேஸ்வரனுக்கு வாழ்க்கை பிடிக்கவில்லை. ''சட், என்ன உலகம் இது. வயது 70 ஆகிவிட்டது என்பதால் ஒருவரும் நம் வார்த்தையை கேட்பதில்லை, மதிப்பதில்லை. நமக்கு முக்யத்வம் கிடையாது. ஏன் இப்படி? நான் என்னவெல்லாம் செய்திருக்கிறேன் இந்த குடும்பத்துக்கு''.
''சுந்தா... கொஞ்சம் நிதானமாக யோசி. இது தான் நியதி. இது தான் காலத்தின் கட்டாயம். புரிந்து கொள்'' .
வயது என்று சொன்னாயே அது மூன்று வகை. பிறந்தது முதல் காலண்டர் காட்டும் உலகம் ஏற்கும் வயது.
இயற்கை உன்னைக்காட்டும் உன் உடலைக் காட்டும் வயது.
உன் உள்ளத்தால் நீ உணரும் வயது. (நான் என்றும் 50)
முதல் வகை தான் நாம் எல்லோரும் சொல்லிக் கொள்ளும் D.o.b வயது. 70,75,80 என்று வருஷங்களை சொல்வது.ரெண்டாவது நமது உடல் நிலை காட்டும் வயது. நல்ல உழைப்பு, நல்ல உணவு, தேகப்பயிற்சி இதன் மூலம் வயது குறைந்து காணப்ப டுவது. மூன்றாவது நீ எதையும் ஆர்வத்தோடு, பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு உற்சாகத்தோடு சிரித்துக் கொண்டு சுறுசுறுப்பாக செயல்படுவது, கவலைப்படாமல் இருப்பது, நல்ல எண்ணங்களை செயலை மேற்கொள்வதால் உன் வயதை நீ மறந்து விடுவதால் அது உன்னை மாற்றி காட்டும் வயது.
முதல் வகை வயதை உன்னால் மாற்ற முடியாது. மற்ற ரெண்டும் நம் கையில் தான் கட்டுப்பாட்டில் உள்ளது. குழந்தைகள் குடும்பத்துக்கு உழைக்க வேண்டுமானால், உன்னால் பாசமுடன், அன்புடன் அவர்களோடு பழக வேண்டுமானால் உன் உடம்பை அதற்கு ஏற்றமாதிரி வைத்துக்கொள்வது அவசியமாகிறது. அவர்களுக்கு நீ சுமையாக இருக்காமல் உபயோகமாக இருக்க முடியும்.
மெடிக்கல் இன்சூரன்ஸ் உனக்கு கை கொடுக்கும். வருஷா வருஷம் உடம்பை மெடிக்கல் செக்க்கப் செய்து கொண்டு வருமுன் காப்போன் ஆகிவிடு. தேவையான டானிக், வைட்டமின், நல்ல உணவு பழங்கள் சாப்பிடு.
பணம் அவசியம் உனக்கென்று வைத்துக்கொள். உனக்கு தேவையானதற்கு மற்றவர்களை நம்பி இருப்பது கஷ்டம் தரும் . உனது மதிப்பும் குறையாது. உனக்கும் தன்னம்பிக்கை குறையாது . சக்திக்கு மீறிய செலவு வேண்டாம். உன் குடும்பத்துக்கு நீ தேவைக்கு மேல் உழைத்தாகிவிட்டது. இனி உனக்காக கொஞ்சம் உழைக்க வேண்டிய நேரம் இனிமேல்.
நல்ல குழந்தைகள் நிச்சயம் வயதான பெற்றோரை பாதுகாப்பார்கள். அது நீ எதிர்பாராமல் அமைய வேண்டும். நீ நடந்துகொள்வதை பொறுத்தது.
உனக்கு பொழுது போக்கு இனி அவசியம். ஒய்வு தேவை. மனதுக்கு பிடித்த காரியத்தில் ஈடுபடு . தோட்ட வேலை, பாடம் சொல்லிக் கொடுப்பது, பாட்டு கதை சொல்வது. எழுதுவது. உனக்கு தெரிந்ததை பிறருக்கு சொல்வது. கோவில் குளம் போவது. மற்றவரையும் முடிந்தபோது அழைத்துக் கொண்டு போவது வீட்டில் காரியங்களில் உதவுவது. சமைப்பது.. நான் இதை தான் செய்து வருகிறேன். 81 ஆகிவிட்டது.. ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்தால் அது போனஸ். சுகமாக சந்தோஷமாக அதை கழிக்க வேண்டாமா.
காலம் பொன்னானது. ஒரு வினாடி கூட வீணடிக்க கூடாது. குதிரையை கட்டுப்படுத்தும் சேணம் உன் கையில் தான் இருக்கிறது. உனக்கு தெரிந்திருக்கும் தெரியாவிட்டால் தெரிந்து கொள் . மாறுதல் ஒவ்வொரு நிமிஷமும் யாரையும் கேட்காமல் நடந்து வருகிறது. நாம் அதை அனுசரித்து நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும். அமெரிக்கா போனால் உன் இந்திய கடிகாரத்தில் நேரம் மாற்றிக்கொள்கிறாயே அது போல். 75 வருஷம் முன்னால் நான் பார்த்த ஊரா, மக்களா இப்போது? நானும் மாறித்தானே ஆக வேண்டும்? த்ரேதா யுக ரிஷியாக எல்லோரும் தவம் செய்ய முடியுமா? நினைத்துக் கூட பார்க்க முடியாதே.மாறுதலில் கூட சுகம் இருக்கிறது என்று அப்போதுதான் உணர்வாய்.
சுயநலம் இல்லாத ஒருவனை பார்க்க முடியாது. எது செய்தாலும் அதற்கு பதிலாக ஒன்று எதிர்பார்க்கிறோம். கல்யாணம் , வீட்டு விழா, நவராத்ரி எதற்காவது யாராவது ஏதாவது கொடுத்தால் உடனே பதில் மரியாதை. ரிட்டர்ன் gift. இது ஒரு கடமையாகி விட்டது; எனக்கு இதை கொடு அதை கொடு. உனக்கு இதை தருகிறேன்,..'
மனதிருப்தி, உள்ளே சந்தோஷம், ரெண்டு தான் அவசியம். விடாமல் பிறருக்கு ஏதாவது ஒரு விதத்தில் உழை நல்லது செய். எதையும் எதிர்பாராமல் இதை செய். அதில் உனக்கு அளவு கடந்த சந்தோஷம் கிடைக்கும். அன்பும் ஆதரவும் பொங்கும். அது போதுமே. எனக்கு இது நிறைய கிடைக்கிறது.
மற்றவர் மேல் தப்பு கண்டுபிடிக்காதே. தவறு செய்யாதவன் யார்?குறை சொல்லாதே. ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொரு கன்னம் காட்டும் ஜாதி இல்லை நாம். மறப்போம் மன்னிப்போம். எவனோ எப்போதோ செய்ததை நினைத்து BP எகிறுவதால் என்ன பயன்?
இன்னொரு விஷயம். உலகத்தில் எதுவும் ஏதோ ஒரு காரணத்தால் இயங்குகிறது. அது நம் கையில் இல்லை. எல்லோரும் நம்மைப் போலவே என்ற ஞாபகம் இருக்கட்டும்
. கடைசியாக 'கடைசி' பற்றி ஒரு வார்த்தை. ஒருநாள் நாம் இந்த தற்காலிக வாசஸ்தலத்தை விட்டு நீங்கியே ஆகவேண்டும். தனியாகத்தான் பயணம் மேற்கொள்ளவேண்டும். நம் இழப்பு மற்றவர்களால் நினைக்கப் பட வேண்டும். ''அப்பாடா ஒருவழியா போச்சு'' என்ற பேர் பட்டம் வேண்டாம். காலம் எல்லாவற்றையும் மாற்றும். குணப்படுத்தும் மருந்து.
No comments:
Post a Comment