Sunday, November 24, 2019

SEWAGE



  செய்யும் தொழிலே தெய்வம்     J K  SIVAN 
                         

சோமு பள்ளிக்கூடத்தில் நன்றாக படிப்பான். வாத்யார்களுக்கு  பிரதம சிஷ்யன். மாணவர்களுக்கும் அவன் தலைவன். எட்டாம் வகுப்புக்கு மேல் அவனால் படிக்க முடியவில்லை. அவன் அப்பா முனிசிபாலிட்டியில் கூலி வேலை செய்தவர். ஒருநாள்  ஒரு மணல் லாரி அவரை காவு வாங்கி விட்டது. எப்படியோ வளர்ந்த அவன் வேலைக்கு போக திண்டாடினான்.  அவன் அப்பாவுக்கு தெரிந்த ஒரு  பிரமுகர் முனிசிபாலிட்டியில் அவனுக்கு கழிவு நீர் சாக்கடைகளை அடைப்பு நீக்கும் உத்யோகம் வாங்கி கொடுத்தார்.  


முனிசிபாலிட்டியில் அவன் சக ஊழியர்களுக்கும் அவனை பிடிக்கும். கழிவு நீர் சாக்கடைக்குழாய்களில் இறங்கி சுத்தம்  செய்வதன் கடினம், நாற்றம் அவனுக்கு பழக்கமாகிவிட்டது.  காலம் ஓடியது.
 கல்யாணம் ஆகிவிட்டது.    ரெட்டை  பெண் குழந்தைகளும் பிறந்தது. நன்றாக படிக்க  வைக்கவேண்டும்.  தன்னைப்போல படிப்பு தொடரமுடியாமல் போகக்கூடாது என்று இரவும் பகலும் உழைத்தான்.  

 அவன்  மனைவிக்கோ  அவன் பெண்கள் இருவருக்கு மோ அவன்  கார்பொரேஷனில்  ஆபிசில்  வேலை செய்கிறான் என்று  மட்டுமே தெரிவித்தான்.   அவன் செய்யும் வேலை ரகசியமாகவே  வைத்திருந்தான்.  வேலையிலிருந்து வரும்போதே வழியில் பொது குளிக்கும் இடத்தில் நன்றாக சோப் போட்டு தேய்த்து குளித்து விட்டு காய்ந்த சட்டை வேட்டி உடுத்துக்கொண்டு வீடு தீரும்புவான்.  அவனுடன் உழைக்கும்  சக ஊழியர்களையும் அவ்வாறே  தயார் படுத்தி வைத்திருந்தான் சோமு.  

அவர்களுக்கு எழுத படிக்க சொல்லிக் கொடுத்தான்.  நல்ல பண்புகள், சமூகத்தில் பழகுவது எப்படி என்று சொல்லிக்கொடுத்தான். அவர்களும் அவனை  உயிருக்கும் மேலாக நேசித்தார்கள் அப்படி நல்ல குணம் அவனுக்கு. அவர்களையும் எப்படியாவது குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கவேண்டும் என்று வற்புறுத்துவான். தங்களது வேலை பற்றி தெரிந்தால் பள்ளியில் மற்ற குழந்தைகள் கேலி செய்வார்கள். தங்கள் குழந்தைகள் மனம் உடைந்து போவார்கள். தன்னம்பிக்கை, சமூக மரியாதை தளர்ந்துவிடும் என்பதால்  அதனால் அவர்கள் கல்வி வளர்ச்சி பாதிக்கப்படும் என்று எடுத்து சொல்வான். பட்டினி கிடந்து பணம் சேர்த்து நன்றாக படிக்க வைத்தான். நல்ல துணிமணிகளை  வாங்கி கொடுத்தான். தனக்கு என்று ஒரு சல்லிக்காசும் செலவழித்ததில்லை. 

இப்படியே காலம் ஓடிவிட்டது. பெண்கள் இருவரும் நன்றாக படித்து கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டது.  பணம் நாளை கட்டவேண்டும் என்றபோது தான் திணறினான் சோமு. அவனிடம் தேவைப்பட்ட பணம் இல்லை. அவனது சேமிப்பு போதவில்லை.  எங்கெங்கோ கடன் கேட்டும் மேலதிகாரிகள், உதவ வில்லை.  
சாக்கடையில் இறங்கி தனியே  யாருக்கும் தெரியாமல் அழுதான்.   இத்தனை நாள் ஜாக்கிரதையாக கட்டிய கோட்டை சரியப்போகிறதா?

ஒரு சில நண்பர்கள் சக ஊழியர்கள் அதை பார்த்துவிட்டார்கள். மெதுவாக அவனிடமிருந்து விஷயம் கிரஹித்தார்கள்.    அவர்கள் யாரும் அவனுடன் ஒன்றும் பேசவில்லை.

''கடவுளே  இத்தனை நாள் நான் பாடு பட்டு என் குழந்தைகளுக்கு கஷ்டம் தெரியாமல் வளர்த்தேன். இன்றிரவு என்ன பதில் சொல்வேன். என்னிடம் பணம் இல்லை  நான் ஏழை அன்றாட தொழிலாளி என்று எப்படி சொல்வேன்? கல்லூரியில் அனுமதிக்கு பணம் இல்லை என்று எப்படி சொல்வது. நீ தான் வழிவிட வேண்டும்'' என்று கெஞ்சினான்.

மாலை எல்லோரும் வேலை முடிந்து அன்றாட கூலி வாங்கினார்கள்.  அன்றைய கூலியும் சேர்த்தால் கூட  சோமுவுக்கு இன்னும்   ரெண்டாயிரத்து நூறு ரூபாய்  தேவை. அதற்கு  எங்கே போவது?.   ஓரமாக  உட்கார்ந்து எண்ணினான்.  காசை திரும்ப திரும்ப எண்ணினாலும் பாக்கி தானாக சேர்ந்து விடுமா.?
என்ன செய்வது. எப்படி பெண்களிடம் சொல்வது, எவ்வாறு கடைசிநாளான நாளைக்குள் பணத்தை செலுத்த முடியும்? கல்லூரியில் சென்று தலைமை பிரின்சிபால்  காலில் விழுந்து கால அவகாசம் கேட்கலாமா?  குழந்தைகளுக்கு தெரியாமல் அதை  செய்வது எப்படி?

கண்கள் தாரை தாரையாக கண்ணீர் உகுத்தன. முதுகில் ஒரு அன்பான கை  தட்டியது. திரும்பி பார்த்தான் .  அவனுடன் வேலை பார்க்கும் எட்டு நண்பர்கள், சக ஊழியர்கள். எல்லோரும் வரிசையாக அவனிடம் வந்து தங்கள் கைகளை நீட்டினார்கள்.  அனைவர் கையிலும்  அன்று வாங்கிய தினக்கூலி.   
ஆச்சர்யத்துடன் அவர்களை பார்த்தான்.

''என்ன இதெல்லாம்?   ஏன் இப்படி செயகிறீர்கள்?''
''நண்பா  சோமு, நாங்கள் உன்னோடு பழகியதில்  எவ்வளவோ விஷயங்கள் கற்றுக்கொண்டு விட்டோம். எங்கள் வீட்டிலும் குழந்தைகளை  நன்றாக படிக்க வைக்கிறோம்.  உன்னால் தான் எங்கள் குடும்பம் முன்னேற வழி தெரிந்தது.  உன் பெண்கள் இருவரும் நாளை கல்லூரியில் நிச்சயம் இடம் பெறவேண்டும். அதற்காக எங்களுக்குள் நாங்கள் பேசி முடிவெடுத்தபடி,  எங்கள் ஒரு நாள் கூலியை உனக்கு தந்து உதவுகிறோம். இந்தா மொத்தம் இதில்   ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாய் இருக்கிறது. இதை நீ எங்களுக்கு திருப்பி தராதே. உன் குழந்தைகள் எங்கள் குழந்தைகள்.  எங்கள் குழந்தைகளுக்கு என்றாவது   எப்போதாவது  உதவி தேவைப்பட்டால் நீயும் உதவுவாய் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். போ இதை எடுத்துக் கொண்டு. உன் பெண்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.''

அன்றும்  சோமு  வழக்கம்போல் அழுக்கு உடை  கழற்றிவிட்டு குளித்து விட்டு  கொண்டுவந்த வேறு உடையோடு வீடு சென்றான். 

வீடு வழக்கம்போல் அவனை அன்போடு வரவேற்றது. அவர்களோடு சிரித்து விளையாடினான். மறுநாள் கல்லூரி சென்றான். அவர்கள் பணம் கட்டி மேல் படிப்புக்கு இடம் பெற்றதை கண்குளிர பார்த்தபோது  தான் ஓ வென்று கூச்சல்.  தலைமை பிரின்சிபால் அறைக்கு சற்று தள்ளி இருந்த  குறுகலான கிணறில் ஒரு சிறுவன் விழுந்து விட்டான்.  அதில் ஏதோ ரிப்பேர் என்று மூடியை திறந்து வைத்து விட்டு வேலையாள் முதல் நாள் சென்றது யாரும்  கவனிக்கவில்லை. தோட்டத்தை பெருக்கும்  கன்னியம்மாவின் 2 வயது சிறுவன் அதில் விழுந்ததை அவள் பார்த்து விட்டாள் . குய்யோ முறையோ என்று கத்தினாள். யார் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தபோது சோமு ஒரே பாய்ச்சலாக அங்கே சென்றான். உடையை கழற்றிவிட்டு உள்ளே இறங்கினான்.  அசுத்தமான  கிணறு. அதில் லாகவமாக இறங்கி அடியே சென்றான். நீரில் மூழ்கி மயக்க நிலையில் இருந்த குழந்தையை எடுத்து மார்பு முதுகு  எல்லாம் அழுத்தி வேகமாக  தட்டி மூச்சு வர செய்துவிட்டான். அது அவனது வேலையில் பல வருஷங்கள் அனுபவத்தில் கற்றது.  மெதுவாக குழந்தையை மேல் இடுப்பு துணியை அவிழ்த்து   மார்போடு இணைத்து இறுகக் கட்டிக்கொண்டு  கிணற்றிலிருந்து  மேலே ஏறினான்.  ஒரு மணி நேரத்தில் குழந்தை உயிரோடு வெளியே வந்து விட்டது.  ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்று வைத்தியம் செய்ய அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள். 

பிரின்சிபால்  அருமைநாயகம் அவனை கையெடுத்து கும்பிட்டார். எப்படிப்பட்ட சேவை ?  கல்லூரியின் பெயர் கப்பலேறி இருக்கும். குழந்தையின் உயிரும் காப்பாற்றப்பட்டது. கன்னியம்மாள் ஓடிவந்து அவன் காலில் விழுந்து கதறினாள்.  கல்லூரியில் அனைத்து குழந்தைகள்,  பெற்றோர்,ஆசிரியர்கள், பொதுமக்கள் அனைவரும் கூடி விட்டார்கள். விஷயம் அறிந்து எல்லோரும் பணம் பரிசாக அவனுக்கு கொடுக்க  பத்தாயிரம் ரூபாய் சேர்ந்தது.  பிரின்சிபால் அதை அவனிடம் கொடுக்க விரும்பியபோது  சோமு எல்லோரும் கேட்க பேசினான்.

''நான் பல வருஷங்களாக முனிசிபாலிடி, கார்பொரேஷன் சாக்கடை தொழிலாளி. குறுகலான குழாய்களுக்குள் நுழைந்து அடைப்பு எடுப்பவன். என் குழந்தைகளை படிக்கவைத்து ஆளாக்கி இந்த கல்லூரியில் சேர்க்க அரும்பாடு பட்டேன்.   செய்யும் தொழில் தான் ஒவ்வொருவருக்கும் தெய்வம். என் தொழிலை நான் மதிக்கிறேன். அது தான் எனக்கு சோறு போட்டு என் குடும்பத்தை இந்த அளவுக்கு வளர்த்தது.  இதை எல்லோரும் மனதில் கொண்டு எவரையும்  உயர்ந்தவன், தாழ்ந்தவன், படித்தவன், படிக்காதவன், ஏழை பணக்காரன் என்ற வித்தியாசங்களை மனதில் கொண்டு  பிறர் மனம் புண்பட  அவமதிக்க வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன்.  பிறகு உதவி செய்வது என்பது நமது கடமை.  ''இதம் சரீரம் பரோபகாரம்'' உயிரைத் திரணமாக  வைத்து   நம் நாட்டு எல்லையில் காப்பது  நமது நாட்டு  ராணுவ வீரர்களுக்கு மட்டும் கடமையும் பொறுப்புமாகாது.   நம் எல்லோருக்குமே  பிறருக்கு உதவ தான் நமக்கு உடலும்   உள்ளமும் உயிரும் தரப்பட்டுள்ளது.   இங்கே இன்றைக்கு  என் கடமையை எனக்கு தெரிந்த தொழிலை நான் செய்ததில்  ஒரு தியாகமும் இல்லை. 

 இந்த பணம் ஏழைக்குழந்தைகள் படிப்புக்கு உதவ ப்ரின்சிபாலிடமே  இருக்கட்டும்  என்ற கேட்டுக் கொள்கிறேன்''   என்று சொன்னான் சோமு.

சோமுவின் பெண்கள் படித்து பெரிய உத்யோகத்தில் அமர்ந்து  சோமுவின் சகாக்களின் குழந்தைகளும் நன்றாக படித்து முன்னுக்கு வர உதவினார்கள் என்பது  உங்களுக்கு  போனஸ் செய்தி.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...