Saturday, November 23, 2019

AALAYA DHARSANAM



கோகுலாச்சாரிக்கு பெரிய நமஸ்காரம்  J K  SIVAN 

எனக்கு  சில  கஷ்டங்கள் அனுபவத்தில் இல்லை.   ஒரு பத்திரிகையை  வாராவாரம், மாத  மிருமுறை, மாதாந்திரம் என்று  எழுதி, தொகுத்து, பிரசுரித்து,வாசகர்களை அடையச் செய்வதில் உள்ள  பிரசவ வேதனை எனக்கு தெரிய வாய்ப்பில்லை. பத்திரிகையின் செலவை விளம்பரங்கள், வாசகர் சந்தா  ஆகியவை தான் முதுகெலும்பாக  தாங்கிப் பிடிக்கின்றவை. அது போதுமானதாக இல்லையென்றபோது பத்திரிகையை நிறுத்த முடியாது. தொடர்ந்து நடத்த செலவினங்களை தனது சொந்த செலவில் ஏற்றுக் கொள்ளவேண்டிய நிலையில் தள்ளப்படுவர் பிரசுரகர்த்தா,  ஆசிரியர்.   எனக்கு இந்த வேதனை தெரியாததன் காரணம் நான் பத்திரிகை ஆசிரியனோ,  நடத்துபவனோ அல்ல.   ஏதோ நான்  எழுதுவதை புத்தகமாக்க யார் யாரோ நீங்கள் உதவுகிறீர்கள், என் புத்தங்கங்கள் விலை  போடப்படாதவை.  விற்பனைக்கு அல்ல. குழந்தைகளுக்கு  போட்டிகளில் பரிசாக, இலவசமாக நூல் நிலையங்களுக்கு, முதியோர் இல்லங்களுக்கு,  நன்கொடை க்கு  நன்றியாக  வழங்கப்படுபவை.  என் எழுத்தை புத்தகமாக படிப்பதைவிட அன்றாடம் முகநூல், வாட்ஸாப்ப், என் blogல் உலகமுழுதும் படிப்பவர்கள் லக்ஷக்கணக்கிலேயாம். ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருப்பதை அறிவேன்.  எல்லாம்  முகநூல் சொல்லி தான் தெரியும். 

மேலே சொன்ன கஷ்டங்களை,  சுமைகளை ஒருபுறம் ஏந்திக் கொண்டு,  ஆன்மீக  பொதுக் காரியங்களிலும்  அதிகம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, நிகழ்ச்சிகள் நடத்தி, வைணவத்தை நிலைநாட்டும் ஒரு அற்புத மனிதர் ஸ்ரீ எஸ். கோகுலாச்சாரி.   வைணவ சமாச்சாரங்களில் பூர்ண ஞானஸ்தர். ஆலய தர்சனம் என்ற அவருடைய பத்திரிகையை   மிகச்  சிறந்த முறையில் உயர்ந்த ரக  மாத பத்திரிகையாக அளித்து வருபவர்.  

ரெண்டு மூன்று வருஷங்கள் முன்பு, அவரை நான் முதலில் சந்தித்தது அண்ணன்கோவில்  எனும் திவ்ய தேசத்தில், திருநாங்கூரில் 11 கருட சேவை தரிசித்து விட்டு  வைத்தீஸ்வரன் கோவிலில் ஒரு  ஹோட்டலில் தங்கி மறுநாள் கலியன் ஒலி மாலை என்ற வைணவ மாநாட்டில் எனக்கு வைணவ சேவா ரத்னா விருது கொடுத்த சமயத்தில்.    நண்பர்  ஸ்ரீ கோகுலாச்சாரி மற்றும் அண்ணன் கோயில்  ஸ்ரீ  கல்யாணராமன் போன்ற வைணவ திலகங்கள் ஆண்டு தோறும் இந்த மாநாட்டை நடத்தி வைணவத்துக்கு எந்த ரூபத்தில் சேவையை செய்பவர்களையும்  அழைத்து கௌரவித்து, பட்டங்கள் தருகிறார்கள். . என்னுடைய  பாவையும் பரமனும் என்கிற ஆண்டாள் திருப்பாவை விளக்க கதை புத்தகம்  எனக்கு  இந்த தனிச் சிறப்பை பெற உதவியது என்பதால் நான் ஆண்டாளுக்கும் இந்த விஷயத்தில்  பெரிதும் கடமைப் பட்டிருக்கிறேன்.

அடுத்து என்னுடைய   ''அமுதன்  ஈந்த  ஆழ்வார்கள்''   என்கிற பன்னிரு ஆழ்வார்கள் வாழ்க்கை சரித்திர நூல் மேலும் வைணவர்களோடு என்னை நெருக்கமாக கொண்டு  சேர்த்தது.  இதெல்லாம் ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா நிறுவனம் எனக்கு அளித்த அரிய  வாய்ப்புகள், அருமையான நண்பர்கள்  எனக்கு கிடைத்தார்கள்.   இது தான்  சத் சங்கம்.. 

ஸ்ரீ  கோகுலாச்சாரி ஒரு  பொறியியல் வல்லுநர்.   ஒரு பெரிய தொழில் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு ஏற்று பணி ஆற்றியவர்.  அவரது வைணவ  கோட்பாடு ஞானம், சிந்தனைகள் அவரை எளிதில் ஆன்மீக உலகில் அழைத்துச்சென்று விட்டது நமது பாக்யம்.

அவருடைய  ஆலய தரிசனம் இணையதளம்  www.aalayadharisanam.com/subscription அவரது மின்னஞ்சல் aalayadharisanam @rediffmail.com     கை பேசி:  9442290074

ஆண்டொன்றுக்கு  ரூபாய் 200  செலுத்துவோருக்கு  வீடு தேடி  பத்திரிகை  பன்னிரண்டு மாதங்களும் அற்புத செய்திகளுடன் பத்திரிகை வந்துவிடுகிறது.  இஞ்சி பச்சைமிளகாய் முருங்கைக் காய்  சில காய்கறிகள்       விலையை  விட   ஆலய தரிசனம் குறைவாகத்தான்  கிடைக்கிறது.  அதுவும் ஒரு வருஷம்...!

எத்தனையோ நண்பர்களால்  எனது சதாபிஷேகம் அன்று  வர இயலாததற்கு எவ்வளவோ காரணம் இருக்கலாம்.  இவர் எதற்கு  என்னைப்பற்றி  ரெண்டு பக்கம் எழுதி வாழ்த்த வேண்டும்  என்று புரியாவிட்டாலும் அவரது  அன்புக்கும் பாசத்திற்கும் நான் தலை வணங்குகிறேன். கிருஷ்ணா  எனக்கு  கோகுலாச்சாரி போன்ற நண்பர்கள் அநேகரை அளித்ததற்கு உனக்கு முதலில் நமஸ்காரம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...