திருக் கோளூர் பெண்பிள்ளை ரஹஸ்யம் J K SIVAN
12 எம்பெருமான் என்றேனோ பட்டர்
பிரானைப் போலே
கி.பி ஏழாம் நூற்றாண்டு வாக்கில் வாழ்ந்த '' பட்டர் பிரான்'' உண்மை பெயர் யாருக்கும் தெரியாது. '' விஷ்ணு சித்தர்'' என்றும் பெயர். உலகறிந்த பெயர் '' பெரியாழ்வார்''. விஷ்ணு அலங்கார பிரியன் என்று தெரியுமே. ஆகவே தான் வாழ்ந்த ஸ்ரீ வில்லிபுத்தூரிலே வட பத்ர சாயீ , ரெங்கமன்னாருக்கு மாலைகள் சூட்டி மகிழும் புஷ்ப கைங்கர்யம் செய்தவர். பெரிய நந்தவனம் அமைத்திருந்தார். அதில் துளசி வனத்தில் கண்டெடுக்கப்பட்டவள் ஆண்டாள்.
பாண்டிய ராஜா வல்லப தேவனுக்கு இரவில் நகர் சோதனை மாறுவேடத்தில் வருவான். ஒருநாள் வழியில் ஒரு அந்தணனைக் கண்டு நீ யார் எங்கிருந்து வருகிறாய் எங்கே போகிறாய் என்றான். அவன் நான் கங்கை\யில் நீராடி விட்டு இந்தப் பக்கமாக வந்தேன்'' என்றான்.
''ஒ அப்படிப்பட்ட ஸ்ரேஷ்டரோ நீர் ? எனக்கு ஒரு உபதேசம் சொல்லுமேன்? '' என்றான் பாண்டியன்.
பிராமணன் ஒரு ஸ்லோகம் சொன்னான் அதன் பொருள் '' மழைக்காலம் 4 மாசம் சுகமாக இருக்க வேண்டுமானால் மற்ற எட்டு மாதங்கள் உழைக்கவேண்டும். இரவில் நன்றாக சுகமாக நித்திரை பெற வேண்டுமானால் பகலெல்லாம் பாடுபட்டு உழைக்க வேண்டும். வயசான காலத்தில் டாக்டரிடம் தினம் போகாமல் இருக்க வாலிப வயசிலேயே சுறுசுறுப்பாக, மிதமான உணவுடன், வியர்க்க சோம்பல் இன்றி உழைக்க வேண்டும். மறுமையில் மோக்ஷம் கிட்ட, இப்பிறவியிலேயே தர்ம காரியங்கள், சத்தியமாக, நேர்மையாக, நியாயத்தோடு புரிந்து அன்போடு பரமனைப் போற்றி வாழ வேண்டும்.''
ராஜா அசந்து போனான். பிராமணனை வணங்கிவிட்டு நேராக தனது குரு செல்வநம்பியிடம் போனான். காலில் விழுந்தான். ''குருவே எனக்கு மறுமையில் சுகம்பெற வழி சொல்வீர்'' என்று கேட்டான். '' இதற்கு ஆசாரமும் வேதமும் அல்லவோ பிரமாணம். நீ என்ன செய்கிறாய், சமயத்துறையில் சிறந்த அறிஞர்களை வரவழைத்து வேதாந்த சித்தாந்த பர தத்வம் உபதேசிக்கச் செய்து அதனால் பயனடைவாயாக'' என்று சொன்னார்.
யார் சொல்லும் தத்வ முறை சிறந்ததோ அப்போது, தானே கீழே இறங்கும் வகையில் ஒரு பொற்கிழி உயரமான ஸ்தம்பத்தில் கட்டப்பட்டது. வேத விற்பன்னர்கள் நாலா பக்கத்திலிருந்தும் வந்தார்கள். எங்கும் எல்லாவற்றையும் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கும் திருவரங்கன் அரங்கநாதன் சும்மாவா இருப்பார்?.
''விஷ்ணுசித்தா, நீ மதுரைக்குப் போ, பாண்டியனுக்கு அறிவுரை தந்து பொற்கிழியைப் பெற்றுவா'' விஷ்ணு சித்தருக்கு கட்டளை பிறந்தது.
'' பகவானே , நான் வேதநூல்கள் எதையும் அறியாதவன். கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெறாதவன் ஆயிற்றே?''
''எனக்கு தெரியாதா? நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா?. நீ கிளம்பு ''என்று ஊக்குவித்தார் ரங்கநாதர்.
பெரியாழ்வார் பாண்டியனுக்கு பர தத்வம் கற்பித்தார். ராஜாவும் குரு செல்வ நம்பிகளும் ஆச்சர்யப்பட்டனர். பெரியாழ்வாரின் கடல் மடை திறந்தாற்போல் நிகழ்ந்த வேத வியாக்யானம் அந்த மூங்கில் ஸ்தம்பத்திற்கே புரிந்து அது தானாகவே தலை குனிந்து வணங்கும்போது பெரியாழ்வார் கையில் பொற்கிழி விழுந்தது.
அப்புறம் என்ன? பெரியாழ்வார் 'நடக்க' வில்லை.
ஏன் ? அவரைத்தான் ராஜா பட்டத்து யானைமேல் ஏற்றி உட்காரவைத்து நகர் வலம் வரவைத்துவிட்டானே. எப்படி நடக்க முடியும்? ராஜா பெரியாழ்வாரின் பர த்தத்வ உபதேசத்தால் வைணவனாக மாறிவிட்டான் . பெரியாழ்வாரின் கஜாரோஹணத்தை பார்க்க வந்தவர்களில் ஒருவர் கருடவாகனராக விஷ்ணுவே.! அப்போது பெரியாழ்வார் பாடியது தான் திருப்பல்லாண்டு. இனியாவது தினமும் அதைப் படித்து அனுபவிக்கலாமா?
செல்வ நம்பிகள் திருக் கோட்டியூரைச் சேர்ந்த ஒரு ப்ரோகிதர். அவரைப் பற்றி திருப்பல்லாண்டில் பெரியாழ்வார் சொல்கிறார்: ''அபிமானதுங்கன் செல்வனைப் போல நானும் பழவடியேன் '' (தி.ப. -10)
திருமாலை திருத் துழாய் மலர் மாலைகள் தொடுத்துச் சூட்டி மகிழ்வுறும் பணியினை மேற்கொண்டார் பெரியாழ்வார். ஆழ்வார்களிலேயே திருமாலின் கோயிலில் வாழ விரும்பிய வைணவர் என்ற பெருமை பெற்றவர் இவர் ஒருவர் தான்.
பொற்கிழியில் கிடைத்த தங்க மோகராக்கள் எந்த பேங்கில் சேமித்து வைக்கப்பட்டன தெரியுமா? பெரிய நந்தவனமாக, கண்ணைப் பறிக்கும் மலர்கள் மலிந்து கிடக்கும் மலர் வனமாக. எதற்கு? அத்தனையும் மலர் மாலையாக அன்றன்று அரங்கனின் நீண்ட நெடு மேனியை அலங்கரிக்க.
இந்த துளசி வனத்தில் தான் ஒரு நாள் ஆண்டாள் என்கிற கோதை அவரால் கண்டெடுக்கப்பட்டாள். அவளைப் பற்றி நிறையவே எழுதவேண்டும். ஒரு வரியில் சொல்வதானால் கண்டெடுத்த, வளர்ந்த, அவள், அரங்கன் மேல் காதல் கொண்டு அவனையே அடைந்தாள், பிரிந்தாள் . இதை அவர் ஒரு பாசுரத்தில் ''
''ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன், செங்கண்மால் தான் கொண்டு போனான்...!!'' ( பெரி. 3.8.4.)
ரங்க ''மன்னாரை'' அடைந்து கோதை, தனது வளர்ப்புத் தந்தை பெரியாழ்வாரை ''மன்னாரின் 'மா மனாராக'' மாற்றிய பெருமை கொண்டவள்.
ஹிந்து சனாதனம் உலகப்புகழ் பெற காரணமாக அதற்கு இதயமாக இருப்பது ராமன் என்றால் ஆத்மாவாக இருப்பது கிருஷ்ணன் எனலாம். இந்த கிருஷ்ணனை சிறு வெண்ணையுண்ட வாயனாக கம கமக்கச் செய்தவர்கள் ஆழ்வார்கள். அவன் இளமையைச் சிறப்பித்தவர் பெரியாழ்வார். ஈடிணையற்றவர். வாழ வைப்பவனையே ''வாழ்க பல்லாண்டு '' என வாழ்த்தியவர்.
''பெரிய'' (MACRO)ஆழ்வார் இல்லையா. பெருமாளை ''வாழ்த்தி'' பல்லாண்டு பாடினார்.
மேலே கூறிய பெரியாழ்வாரை பற்றிய சம்பவத்தை நான் எழுத தூண்டியவள் திருக் கோளூர் பெண் பிள்ளை. ஸ்ரீ ராமானுஜரே , நான் என்ன "பெரியாழ்வார் போல் பக்தியில் சிறந்து வைத்த மாநிதி பெருமானை நீர் வாழ்க பல்லாண்டு என்று வாழ்த்தினேனா, எம்பிரான் என்று ஒருநாளேனும் வாய் மணக்க அழைத்ததுண்டா? '' எந்த தகுதியில் எனக்கு திருக்கோளூர் வாசம் உரிமையானது. நீங்களே சொல்லுங்கள் ''என்கிறாள்.
No comments:
Post a Comment