திருக் கோளூர் பெண்பிள்ளை ரஹஸ்யம்
J K SIVAN
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
திருக்கோளூர் பெண் பிள்ளைக்கு என்ன பெயர் என்று நமக்கு தெரியாது. ரொம்ப விவரமானவள், விஷயங்கள் நிறைய தெரிந்தவள் என்று மட்டும் தெரிகிறது. இல்லாவிட்டால் ஸ்ரீ ராமானுஜரை சிலையாக நிற்க வைத்து அவர் அசந்து போகும்படியாக 81 பேர்களை உதாரணம் காட்டுகிறாளே .
எத்தனையோ புராண பெயர்களில், க்ஷத்ரபந்து என்பது ஒரு ராஜகுமாரன் பெயர். அவனுக்கு அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாக நல்ல குணம் கிடையாது. எல்லோரையும் கேலி செய்வான். கெடுதல் இடைஞ்சல் செய்வது, எதிர்த்து மரியாதை இல்லாமல் பேசுவது இதெல்லாம் அவனது சிறந்த குணங்கள். அவன் வளர வளர இந்த குணங்களும் வளர்ந்தது. .செல்லமகன். தட்டிக்கேட்க ஆள் கிடையாது. அவனால் ராஜ்யத்தில் மக்கள் துன்பப்பட்டு தாங்க முடியாமல் போய்விடவே, அவர்களே அவனை ராஜ்யத்தை விட்டு அடித்து துரத்தி விட்டனர். ''
உயிருக்கு பயந்து க்ஷத்ரபந்து ஒரு காட்டுக்குள் ஓடி மறைந்து கொண்டான். அங்கேயும் காட்டு வாசிகளையும் காட்டு வழிப்போக்கர்களையும் அடித்து துன்புறுத்தினான். .அமைதியாக அங்கே தவம் செய் து வரும் ரிஷிகள், முனிவர்கள், சாதுக்களுக்கும் தொல்லை கொடுத்தான். யாகம் செய்யும்போது அவற்றை கலைத்து கெடுத்தான். வாயில்லா ஜீவன்களை வதைத்தான்.
ஒரு நாள், அங்கே ஒரு முனிவர் வந்தார். காட்டில் உள்ள குளத்தில் காலை வைத்தவர் தடுமாறி ஆழமான அந்த குளத்தில் மயங்கி விழுந்தார். என்னவோ ஆச்சர்யமாக அந்தப்பக்கம் வந்த க்ஷத்ர பந்து, இதை பார்த்துவிட்டு வாழ்க்கையில் முதன் முதலாக ஒரு நல்ல காரியம் பண்ணினான். நீரில் குதித்து முனிவரை காப்பாற்றி கரை சேர்த்தான். மயக்கம் தெரியும்வரை கவனித்து மருந்து போட்டு அவர் கண் திறந்தார். அவர் எங்கே செல்லவேண்டும் என்று கேட்டு சரியான வழி சொன்னான்.
அவனைப் பற்றி விஷயம் அறிந்து கொண்ட முனிவர், அவனுக்கு உபதேசம் செய்தார்:
''அடே க்ஷத்ரபந்து, நாட்டில் எல்லோரும் உன்னை கொடியவன் என்கிறார்களே, நானும் கோபி பட்டிருக்கிறேன். நீ உண்மையில் கெட்டவன் இல்லை. இது உன் பிறவிக்குணம். ஆத்மாவின் குணம் இல்லை. நீ இனிமேல் தினமும் பொழுது விடிந்ததும், எந்த வேலை செய்யும் முன்னாலும் , செயது முடித்த பின்னாலும் இதற்கிடையிலும் ''கோவிந்தா'' "கோவிந்தா" ''கோவிந்தா'' என்று சொல். அது உன்னை நல்லவனாகவே மாற்றிவிடும் என்று சொல்லி விட்டு போய்விட்டார். இதை கெட்டியா கப் பிடித்துக் கொண்ட க்ஷத்ர பந்து அன்றுமுதல் முனிவர் சொன்னபடியே செய்தான்.
காலப்போக்கில் மரணம் அடைந்த க்ஷத்ரபந்து அடுத்த பிறவியில் உயர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தான். வாசுதேவன் பக்தனாக திகழ்ந்தான். எல்லோராலும் போற்றப்பட்டான்.
No comments:
Post a Comment