பன்றிகளுக்கு இடையிலே ஒரு மான் குட்டி போல் கழிசடைகளுக்கு இடையே ராவண தேசத்தில் இருந்தவள் திரிசடை.
ராவணன் சீதையை சிறைபிடித்து அசோகவனத்தில் அவளை காவலில் வைத்தபோது சுற்றியிருந்த அரக்கிகள் நடுவே ஒரு இதயமுள்ள பெண்ணாக சீதைக்கு துணையாக இருந்தவள் திரிசடை. அவள் வளர்ப்பு அப்படி. விபீஷணன் மகள் அல்லவா?
இராமனின் இலங்கை நோக்கிய பயணம் பற்றிக் கூறி தேற்றுவாள் . தைரியம் சொல்வாள்.
காதில் விழுந்த விஷயங்களை சீதைக்கு சொல்வாள்.
காதில் விழுந்த விஷயங்களை சீதைக்கு சொல்வாள்.
' கவலைப்படாதீர்கள் சீதாதேவி, நான் கேள்விப்பட்ட விஷயம் எதுவென்றால் ராமன் இலங்கையை நோக்கி வந்து கொண்டிருக்கிறாராம். ஒரு பெரிய படை வருகிறதாம் ''
தாகம் தொண்டையை வரள வைக்கும் போது ஒரு மிடக்கு தண்ணீர் அம்ருதம் என்கிறமாதிரி திரிசடை ஒருத்தி தான் சீதைக்கு புத்துயிர் அளித்தவள் .
'' திரிசடை, இதைக் கேள் அம்மா. புழு வண்டால் விடாமல் கொட்டப்பட்டு தானும் வண்டாவது போல் ராம த்யானம் என்னையும் ஒருநாள் ராமனாக்கி விடும் அல்லவா? அப்புறம் எங்களுக்குள் பிரிவு ஏது ?'' என்பாள் சீதை.
''ஆமாம் நீங்கள் ராமனாகி விடுவீர்கள். அதே சமயம் உங்களையே நினைத்துக் கொண்டிருக் கும் ராமனும் சீதையாகி விடுவாரே! என்று சிரிப்பாள். ஆனால் அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான். நீங்கள் ராமனாகி விட்டால் அங்கிருந்து இங்கே வந்து ராக்ஷஸர்களை வென்று உங்களை மீட்க வேண்டிய வேலை இல்லையே.'' என்பாள். சீதை முகத்தில் சிரிப்பு.
ராவணனின் கட்டளைப்படி இதர ராக்ஷஸிகள் சீதையை கொன்று விடப்போவதாக, தின்று விடப்போவதாக பயமுறுத்தினார்கள். அப்போது திரிசடை ஒரு விஷயம் எல்லோரும் கேட்கும்படி சொல்கிறாள்.
''எனக்கு நேற்றிரவு தூக்கி வாரி போட்டது. ஒரு பயங்கர கனவு. நமது ராஜா இராவணன் சிகப்பு நிற ஆடை அணிந்து தெற்கே போகிறார். அவர் வாகனம் ஒரு கழுதை. அப்போது மேலேயிருந்து ஆயிரக்கணக்கான வெள்ளை நிற ஹம்ஸங்கள், அன்னப் பறவைகள், தூக்கிக் கொண்டு வரும் பளபளவென்று ஜொலிக்கும் தங்க விமானத்தில் வெள்ளை நிறத்தில் புஷ்பங்கள் தொடுத்த மாலை சூடிக்கொண்டு ராமர் வந்து இறங்கி, சீதையை இங்கிருந்து அழைத்து போகிறார். இது நல்ல கனவு தான். இது தான் கடைசி சந்தர்ப்பம். நீங்கள் உயிர் தப்ப வேண்டுமானால் இப்போதே சீதாதேவியிடம் உங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு தஞ்சம் அடைந்து விடுங்கள். உயிர் போனபின் சரணடைவது முடியாது. ராவணன் தெற்கு நோக்கி போகிறார் என்றால் எமனுலகு போகிறார் என்று அர்த்தம். அப்புறம் உங்கள் கதி?
விடியற் காலை கண்ட கனவு நடக்கும். ராமனின் அம்புகளுக்கு இரையாகாமல் தப்ப ஒரே உபாயம் சீதையின் காலைப் பிடித்துக் கொள்வது தான்.
ராம ராவண யுத்தம் நடந்தது. முதல் நாள் முதல் கடைசிவரை அன்றாடம் சீதைக்கு விஷயங்களை சொல்லியவள் திரிசடை.
ராமானுஜரே இப்போது சொல்லுங்கள். நான் ஒரு போதாவது திரிசடை சீதைக்கு தைரியம் சொல்லி, மனத்துக்கு திருப்தி அளித்தது போல் யாருக்காவது நல்லது செய்ததுண்டா? எந்த விதத்தில் இந்த திருக்கோளூர் திவ்யதேசத்தில் நான் வசிக்க தகுதி உள்ளவள்?
ராமானுஜர் பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டே அவளது அடுத்த 19வது உதாரணம் யாராக இருக்கும் என்று நம்மைப்போல் யோசிக்கிறார்.
No comments:
Post a Comment