கல்கியின் பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும் பலமுறை படித்ததுண்டு. இளம் வயதில் பழைய புத்தக கடையில் கல்கி வாங்கி பொன்னியின் செல்வன் கதைகளை சேர்த்து பைண்ட் பண்ணி வீட்டில் இருந்து அதை எவரோ படிக்க எடுத்துக் கொண்டு போய் தொலைந்ததும் நினைவிருக்கிறது. புத்தக திருடர்கள் என்றும் எல்லா தேசத்திலும் உண்டு. பொன்னியின் செல்வம் அருள்மொழி தேவன் பிற்காலத்தில் ராஜ ராஜ சோழன். தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும்,ஹிந்துக்களுக்கு தெய்வம் அவன். அவனது பெருமை புகழ் பல கல்வெட்டுகளில் செதுக்கி வைத்ததால் நமக்கு தெரிகிறது. ரொம்ப கெட்டிக்காரன். புஸ்தகத்தில் எழுதினால் தொலைந்து விடும், கல்வெட்டை யாரும் படித்து விட்டு தருகிறேன் என்று எடுத்துக் கொண்டு போகப்போவதும் இல்லை, கொண்டுபோனால் வீட்டில் மறந்து போய் வைத்துக்கொள்ளப் போவதும் இல்லை.
பராந்த சோழன் பேரன். சுந்தர சோழன் இளைய மகன். ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு அதிசயமான அற்புதமான தஞ்சை பெரியகோவில் கட்டியவன். அந்த கோவில் சிற்ப வேலைப்பாடுகளை ஒன்று ஒன்றாக ரசிக்க வாழ் நாள் போதாது. பல வருஷங்கள் அவன் காட்டியது பதினைந்து நிமிஷத்தில் அங்கும் இங்கும் கொஞ்சம் பார்த்து விட்டு வாசலில் செருப்பு மேல் கவனத்தோடு மீண்டும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து அடுத்த கோவில் எங்கே என்று கேட்கிறவர்கள் நாம்.
அப்பனுக்கு ஏற்ற சுப்பனாக பிறந்தவன் அவன் மகன் ராஜேந்திர சோழன். அடாடா அவன் கட்டிய கங்கை கொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் (அங்கேயும் தஞ்சை பெரியகோவில் போல் பிரகதீஸ்வரர், பெருவுடையார்)
கோவில் இன்னொரு அற்புதம். ரெண்டுமே பல ஆச்சரியங்களை உள்ளடக்கிக்கொண்டிருக்கும் திருக்கோவில்கள்.
வீரத்திலும் ராஜராஜன் அவன் மகன் இருவரும் சோடை போனவர்கள் இல்லை. அவர்கள் இருவருமே வடக்கே கலிங்கம் முதல் தெற்கே இலங்கை வரை ராஜ்யத்தை விஸ்தரித்ததோடு கடல் கடந்து பல தென்கிழக்கு ஆசிய ராஜ்யங்களை வென்றவர்கள். காவிரியின் இரு கரைகளிலும் எண்ணற்ற சிவாலயங்கள் விஷ்ணு ஆலயங்களை நிர்மாணித்த மஹான்கள் சோழர்கள்.
சோழர்கள் காலம் உண்மையிலேயே நமது நாட்டில் ஒரு பொற்காலம். சமீபத்தில் சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடந்தது. எனக்கு கங்கை கொண்ட சோழ புரத்தில் ஒரு நள்ளிரவு சிவராத்ரி அன்று அன்னாபிஷேக அர்ச்சனையை நேரில் கண்டது நினைவுக்கு வருகிறது. தற்போதைய சோழராஜா என்னை திருவையாறு கோவிலில் கண்டு தஞ்சாவூர் கோவில் வரச்சொல்லி அங்கு பிரகதீஸ்வரர் சந்நிதியில் கண்குளிர தரிசனம், ரகசிய சித்ர மண்டபம் எல்லாம் அழைத்துச் சென்று எனக்கும் என்னோடு வந்த 50 பேருக்கும் பங்காரு காமாக்ஷி ஆலயத்தில் விருந்தளித்தது நன்றியுடன் நினைவில் நிற்கிறது.
நானும் ஏதோ பூர்வ ஜென்மத்தில் யாருக்கோ கொஞ்சம் நல்லது செய்திருக்கிறேன் போல் இருக்கிறது. இத்துடன் தஞ்சை பெரிய கோவில் பழைய கால படங்கள் சிலவற்றை இணைத்திருக்கிறேன் .
No comments:
Post a Comment