Friday, November 8, 2019

RAMANUJA

ஒரு யுக புருஷன். J K SIVAN ஆயிரம் வருஷம் முன்பு 1017ல் சித்திரை பவுர்ணமிக்கு ஐந்தாம் நாள், வேதசாஸ்திரத்தில் சிறந்த ஒருவர் வடம ஸ்மார்த்த பிராம்மண ஐயர் குடும்பத்தில் பிறந்தார். தந்தை கேசவாசார்யர் சகல யாக யஞங்கள் அறிந்த பண்டிதர். ''சர்வ க்ரது ' என போற்றப்பட்டவர். தன் பிள்ளைக்கு ஸம்ஸ்க்ரிதம், வியாகரணம் வேதம் எல்லாம் தானே கற்பித்தார். பின்னர் காஞ்சி பூர்ணர் என்ற யமுனாச்சர்யாரின் சிஷ்யர் மூலம் தமிழும் பாடமாயிற்று. உபநயனம் ஆயிற்று. பதினாறு வயதில் கல்யாணமும் கூட . கல்யாணமான ஒரே மாதத்தில் அப்பா கேசவ​ன் தேகவியோஹம் அடைந்தார். அம்மாவும் பிள்ளையும் அவன் புது மனைவியும் காஞ்சிபுரத்துக்கு இடம் மாறினார்கள். அங்கே யாதவப்ரகாசர் என்ற அத்வைத வேதாந்தி குருவானார். பிள்ளையாண்டான் கல்வி கேள்விகளில் தேர்ந்தார். யாதவ ப்ரகாசருக்கு பிரதம சீடரானார். ஆனால் அத்வைத கோட்பாடுகள் அந்த பிள்ளைக்கு ஏற்புடையதாக வில்லை. மாயா வாத கோட்பாடுக​ளை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. ஒருநாள் குருவுக்கு முதுகு பிடித்து விட்டுக்கொண்டிருக்கும்போது குரு யாதவ பிரகாசர் சாந்தோக்ய உபநிஷதத்திலிருந்து ஒரு ஸ்லோகம் சொன்னார். அதில் ஒரு பதம் ''கபியாசனம் புண்டரிகம் ஏவம் அக்ஷிணி '' கபி என்றால் வானரம் என்ற பொருளில் ஆசனம் என்றால் பின்புறம். ஸ்லோகத்தை இப்படி அர்த்தம் பண்ணிக்கொண்டால் குருவின் வியாக்யானம் ''விஷ்ணுவின் தாமரை நயனங்கள் வானரத்தின் பின்புறத்தைப் போல ...'' என்று அருவருக்கத்தக்கதாகி விட்டது. பிரதம சிஷ்யன் தாங்கமுடியாமல் வெடித்து விட்டார். கண்களில் நீர் தாரை தாரையாக பெருக குருவின் முதுகிலேயே விழுந்து விட்டார்.
''என்னடா ஆயிற்று உனக்கு ?
''குருநாதா உங்கள் வியாக்யானத்தை ஏற்க மறுக்கிறேன்'' அதற்கு வேறு மாதிரி பொருள் இருக்கிறது என்று தோன்றிற்று.'
''ஓ.. சரி,அப்படியென்ன உனக்கு வியாக்யானம் தோன்றியது சொல் ''
'' வார்த்தையை பிரித்து உச்சரித்தால், ''கப்யசம்'' என்றால் எது நீரில் அமர்ந்து நீரைப் பருகிகிறதோ அது .. அதாவது தாமரை ​..​ இந்த அர்த்தத்தில் பார்த்தால் ஸ்ரீ விஷ்ணுவின் அழகிய கண்கள் நீரில் வாழும் அன்றலர்ந்த தாமரை போல்.....'' என்று அர்த்தம் தொனிக்கிறது.'' இதுதான் சரியான அர்த்தம் அந்த​ ஸ்லோகத்துக்கு என்று பட்டது''. குருவிற்கு கோபத்தில், அகம்பாவத்தில் என்ன தோன்றியது? ''ஓஹோ இவன் என்ன குருவுக்கு மிஞ்சிய சிஷ்யனா?'' இந்த .எண்ணம் வலுத்து அந்த சிஷ்யப்பிள்ளையை ஊக்குவிப்பதற்கு பதில் வெறுக்க தொடங்கினார், கொலை முயற்சியிலும் ஈடுபட்டார் என்று யாரோ எழுதியதை படிக்கும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. குருவும் சிஷ்யர்களும் கங்கை செல்ல பயணம் ஏற்பாடாகி மற்ற சிஷ்யர்கள் அந்த பிரதம சிஷ்யனை கங்கையில் மூழ்கடித்து கொல்ல திட்டமாம். பிரதம சிஷ்யனுக்கு ஒரு ஒன்றுவிட்ட சகோதரன் கோவிந்தராஜன் இந்த கூட்டத்தில் ஒரு சிஷ்யன். அவன் கொலை திட்டத்தை மற்றவர்கள் பேசும்போது கேட்கிறான். '' சகோதரா,உனக்கு ஒரு பேராபத்து.கங்கையில் ஸ்னானம் தான் உன் வாழ்க்கையில் கடைசி அனுபவம். அப்புறம் நீ மோக்ஷமோ நரகமோ தான். உடனே கிளம்பு இந்த இடத்தை விட்டு. கங்கை ஸ்னானம் இப்போது வேண்டாம். உயிர் தப்பு'' பிரதம சிஷ்யன் .அதிர்ச்சி அடைந்தான். மனதில் தனது தாய், மனைவி முகம் தோன்றி ''நீ எங்களுக்கு வேண்டும். வந்துவிடு​. என்றது. மனமும் ''வரதராஜா நான் உனக்கு சேவை செய்ய வேண்டுமே..​'' என்றது. எப்படியோ சகோதரர்கள் இருவரும் கூட்டத்தை விட்டு ​ காட்டில் வழி தேடி கஷ்டப்பட்டு தப்பித்து காஞ்சிபுரம் ​ அ​டைகிறார்கள். குருவும் மற்ற சீடர்களும சில நாளில் கங்கை யாத்திரை முடிந்து காஞ்சிபுரம் திரும்புகிறார்கள். ​பிரதம சிஷ்யன் கங்கையில் மூழ்கவில்லை, உயிரோடு திரும்பி தனியே காஞ்சிக்கு வந்து விட்டான் என்று அறிந்து குரு ஆச்சர்யப்படுகிறார். அவன் அவருடைய சிஷ்யனாக தொடர்கிறான். ஸ்ரீரங்கத்திலிருந்து ஸ்ரீ வைஷ்ணவ மஹான் யமுனாச்சர்யார் காஞ்சிபுரம் வரதராஜனை தரிசிக்க வருகிறார். அவர் ஞானி. முதியவர். அவர் மனதில் அந்த பிள்ளையாண்டானை சந்தித்து அவனை தன்னோடு அழைத்துக் கொள்ளவேண்டும் என்று தோன்றியது. ஸ்ரீவைஷ்ணவத்துக்கு தலையாய கார்யம் அவன் பொறுப்பேற்பது என்று உள் மனதில் தெய்வ சங்கல்பமாக பட்டது. அவனைப் பற்றி விசாரித்து அவன் எங்கே இருக்கிறான் என்று​ அவர் கேட்க, ​ கூட்டத்தில் யாரோ கையால் சுட்டிக்காட்ட, ​அவனை ஆவலோடு தூரத்தில் இருந்தே பார்க்கிறார். அவர் ஏற்றுக்கொள்ளாத அத்வைதி யாதவப் பிரகாசரிடம் சிஷ்யன் என அறிந்து
அவனை சந்திக்காமல் யமுனாச்சார்யர் ஸ்ரீரங்கம் திரும்புகிறார். ''​ரங்கநாதா, அவ​ன் வேண்டும். அவனை ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்துக்கு மீட்டு தந்து, தர்சன ப்ரவர்தகனாக ஆக்க அருள் புரிவாயா? ன்று மானசீகமாக வேண்டுகிறார் யமுனாசார்யார். இதற்கிடையே காஞ்சியில் ராஜாவின் மகளை ஒரு பிரம்ம ராக்ஷச பேய் பிடித்து வாட்டுகிறது என்று மாந்த்ரீகர்கள் சொல்ல அந்த பெண்ணை மீட்க யாரோ சொல்லி யாதவ பிரகாசரை ராஜா அழைத்து மந்திரிக்க செயகிறான். அந்த பிரம்மராக்ஷசன் பெண்ணை விடவில்லை.அவரால் அவளை மீட்க முடியவில்லை. எல்லோரும் பிரமித்து இதை பார்த்துக்கொண்டிருந்த போது இளவரசியை பிடித்திருந்த பிரம்ம ராக்ஷச பேய் , அவள் வாய் மூலம் ''யாதவப்ரகாசரை இழிவாகப் பேசுகிறது. ராமானுஜன் வந்தால் தான் நான் போவேன் என்கிறது​. ராமானுஜன் புகழ் பேர் வேகமாக பரவ ஆரம்பித்தது. ​ ஆமாம் நான் இது வரை விவரித்த பிள்ளையாண்டான் ஸ்ரீமத் ராமாநுஜாசார்யார். யாதவ பிரகாசர் தனது பிரதம சிஷ்யன் ராமானுஜனை வரவழைக்க, அவரைக் கண்ட அரசகுமாரியை ஆக்ரமித்த 'பிரம்ம ராக்ஷச பேய் ''ராமனுஜரே உங்கள் பாத தூளியினால் என்னை ஆசிர்வதித்தால் நான் உடனே இந்த பெண்ணை விட்டு விலகுவேன்'' என்கிறது. ராமனுஜரின் திருவடிப் பொடி அந்த பெண்ணின் தலையில் தெளிக்கப் பட்டு அவளை ஆசிர்வதித்தவுடன் அவளிடமிருந்து பேய் விலகுகிறது.'' ராஜாவின் பரம சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகள் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் மேலே தொடர்வோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...