ஸ்ரீ ராமானுஜர் J K SIVAN
ஒரு யுக புருஷன்.
யாதவ பிரகாசர் ராமானுஜரின் சக்தியை புரிந்து கொண்டுவிட்டார். ஒரு ப்ரம்ம ராக்ஷசன் கூட தனது மந்திரத்திற்கு கட்டுப்படாமல் ராமானுஜரின் வாக்குக்கு கட்டுப்பட்டு விலகியது சாதாரணமான விஷயமா? இதை தனக்கு அவமானமாக, மதிப்பு குறைவாகவா ஏற்றுக் கொள்வதா? எது எப்படியானாலும் இனி ராமானுஜனுக்கு நான் ஆசார்யன் இல்லை. அவன் குருவை மிஞ்சியவனாக தேர்ச்சிபெற்றவன். செடி வளர்ந்து இனி மரமாகும் நேரத்தில் அதற்கு கொழு கொம்புக்கு இனி அவசியமில்லை. ராமானுஜர் யாதவ ப்ரகாசரின் ஆசிரமத்திலிருந்து விலகிவிட்டார்..
அத்வைதி யாதவ ப்ரகாசருக்கு சமீபத்தில் நடந்த இன்னொரு சம்பவமும் நினைவில் நின்றது. மறக்க முடியாத ஒரு விஷயம்.
ராமானுஜர் அவரிடம் சிஷ்யராக இருந்தபோது ஒருநாள் பாடம் நடக்கிறது. மரத்தடியில் எல்லோரும் அவரை சுற்றி அரைவட்டமாக மண் தரையில் கைகட்டி அமர்ந்து கவனமாக யாதவ ப்ரகாசரை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். மரத்தில் பறவைகள் கூட சப்தம் செய்யவில்லை. காற்றும் வேகமாக வீசி இலைகளை அசைக்கவில்லை.
குரு யாதவப் பிரகாசர் ஒரு அத்வைத ஸ்லோகம் வியாக்யானம் பண்ணிக்க கொண்டிருக்கிறார். . சாந்தோக்யோபநிஷத்தில் ''சர்வம் கல்பிதம் பிரம்மம் '' (Candogya Upanisad 3.1, “everything is Brahman”) '' நேஹ நனஸ்தி கிஞ்சன'' (Katha Upanisad 4.11, “there is no distinction”). சங்கரரின் அத்வைதத்தை விளக்கிக்கொண்டிருக்கிறார்.
''புரிகிறதா?'' ஏதாவது சந்தேகமாக இருக்கிறதா? குரு கேட்கிறார். எல்லா சிஷ்யர்களும் அமைதியாக தலை ஆட்ட ஒரு தலை மட்டும் ஆடவில்லை. குருவையே பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சிஷ்யன் ராமானுஜனை யாதவ பிரகாசர் பார்த்து ''என்ன யோசிக்கிறாய்? '' என்று கேட்கிறார்.
எழுந்து நின்ற ராமானுஜர் ''குரு நாதா, என் மனதில் இதற்கு வேறு அர்த்தம் உண்டு அதை உணர்த்தவில்லையோ என்று உறுத்துகிறதே, அதைச் சொல்லலாமா?'' என்றார்:
''ஓ அப்படியா? எங்கே உன் மனதில் எண்ணத்தோன்றியது சொல்லு?''
''ஸர்வம் கல்விதம் பிரம்மன்'' என்றால் “ இந்த பிரபஞ்சமே பிரம்மம் ' என்ற விளக்கம் தெரிந்தாலும், இதை தொடர்ந்த அடுத்த சொல் '' பிரபஞ்சம் பிரம்மம் இல்லை பிரபஞ்சம் முழுதும் பிரம்மம் நிரம்பியிருக்கிறது பிரம்மத்தால் பிரபஞ்சம் உருவாகி, நிலைத்து, பிரம்மத்தில் பிரபஞ்சம் கலக்கிறது. என்று த்வனிக்கிறது .
எப்படி ஒரு மீன் நீரில் பிறந்து,நீரில் வாழ்ந்து முடிவில் நீரில் கரைந்து மறைகிறதோ-- ஆனால் மீன் நீர் அல்ல, அது வேறு இது வேறு, -- அதுபோல் பிரபஞ்சம் வேறு ப்ரம்மம் வேறு ரெண்டும் ஒன்றாக ஒன்றில் ஒன்று கலந்தது போல் தோன்றினாலும் '' என்று தயங்கி தயங்கி ராமானுஜர் ஸ்பஷ்டமாக ஒலிக்கிறார். விசிஷ்டாத்வைதம் பிறந்துவிட்டது.......
முன்பே கதோபநிஷத் ச்லோகத்துக்கும் இதேபோல் வேறு அர்த்தம் ராமானுஜர் விளக்கியதை அனைவரும் வாயைப் பிளந்து கேட்டது ஞாபகம் வருகிறது.
. ''நேஹ னனஸ்தி கிஞ்சன'' என்றால் “ வேறுபட்டது இல்லை '' என்று அர்த்தம் ஆகாது.-- ஒன்றை ஒன்று தொக்கி நிற்பது --. எப்படி ஒரு மாலையில் முத்துக்கள் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தத்தோடு .தனித்து இருப்பது போல். '' என்றார். எல்லாமே பிரம்மத்தோடு இணைந்தது என்றாலும் தனித்வம் கொண்டவை. இணைந்து இருந்தாலும் தனித்வம் - தனித்து இருந்தாலும் எல்லாமாக சேர்ந்து முத்துகள் மாலை என்று தான் அறியப்படும். சங்கரரின் ''எல்லாம் இரண்டற்ற ஓன்றே' முழுமையான தத்வம் இல்லை. என்றார் ராமானுஜர். ராமன் குப்பன் கோபு காதர் எல்லாம் ''தனித்தனி''. ஆனால் ஒன்றுசேர்ந்த போது ''மக்கள்''. மக்களில் எல்லோரும் சேர்ந்தாலும் தனித்துவமும் உண்டு. ரெண்டும் ஒன்றாகி போகவில்லை. தனித்துவத்தை இழக்கவில்லை.....
ஆகவே யாதவ ப்ரகாசர் ராமானுஜரை வாழ்த்தி விடை கொடுக்கிறார். யாதவப் பிரகாசரை விட்டு பிரிந்த ராமானுஜர் திருக்கச்சி நம்பிகளிடம் சென்று நடந்ததை சொல்கிறார். அவரது முதல் குரு அல்லவா?
'' ராமானுஜர் உனக்கு இனி எவரும் எதுவும் உபதேசிக்க அவசியம் இல்லை. நீ ஞானம் பெற்றவன்.உன் குரு இனி வரதராஜன். நீ தினமும் வரதராஜனுக்கு திருமஞ்சன ஜல கைங்கர்யம் செய்'' என்று அறிவுரை அளிக்க ராமானுஜர் அவ்வாறே செய்கிறார்.
ராமானுஜர் வீட்டில் ஒரு பிரச்னை. ராமனுஜரின் மனைவிக்கு தன் கணவன் ஒரு பிராமணரல் லாதவரை குருவாக ஏற்றதில் விருப்பமில்லை.
காலம் செல்கிறது. நேரம் ஒன்றே உலகில் அதி வேகமாக ஓடும் இயந்திரம். எண்ணெய் , பெட்ரோல் எந்த உந்துதலும் இல்லாமல் எப்போதும் இயங்கும் சாதனம்.
ஸ்ரீ ரங்கத்தில் விருத்தாப்பியத்தில், வயது முதிர்ச்சியின் காரணமாக யமுனாச்சார்யார் தனது அந்திம வேளை நெருங்கியதை அறிந்தார். அதே சமயம் ராமானுஜர் அத்வைதி யாதவப் பிரகாசரை விட்டு விலகி காஞ்சி பூர்னரை குருவாக ஏற்றார் எனவும் சேதி அறிந்தார். ஆஹா ரங்கநாதா, நான் விரும்பியது நிறைவேறுமா? ஸ்ரீ வைஷ்ணவத்தை தூக்கி நிலைநிறுத்த தக்கவனாக ராமானுஜம் எனக்கு கிடைப்பானா? நீயே அருளவேண்டும் ""
யமுனாச்சார்யர் ரெண்டு சீடர்களை அழைத்தார். ''நீங்கள் உடனே காஞ்சிபுரம் சென்று வாருங்கள். அங்கே ராமானுஜன் என்று ஒரு ஞானி இருக்கிறார்.அவரை என்னிடம் அழைத்து வாருங்கள். எனக்கு அதிக நேரம் இனி இல்லை....'' என்கிறார்..
No comments:
Post a Comment