அதி வீர ராமபாண்டியன்.
அதிவீர ராமா நீ அற்புத கலைஞன்
''பூனைக் கில்லை தவமுந் தயையும்'' பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகுமோ டொய்ங் டொய்ங்'' என்று ஒரு பாட்டு. இந்த வாசகத்தை தான் பாவம் தலைவர் ஒருவர் தடுமாறி தத்தளித்து தப்பாக பிரயோகித்தார் அடிக்கடி காட்டி தொல்லை படுத்துகிறார்கள்.
அதிவீர ராம பாண்டியன் என்ன சொல்ல வருகிறான் என்றால் பூனை கண்ணை மூடிக்கொண்டு அசையாமல் உட்கார்ந்திருப்பது தவம் செய்வது போல் இருந்தாலும் அது தவமோ, அதற்கு அருளோ இல்லை. ஒரு குட்டித்தூக்கமாக கூட இருக்கலாம். மனிதரில் சில ருத்ராக்ஷ பூனைகள் இருக்கிறார்கள் என்று உங்களுக்கே தெரியும். தவவொழுக்கமும், சீவகாருணியமும் கொண்டவர் போல் காட்சி அளித்தாலும், அவர்கள் போலிகள். ஜாக்ரதையாக இருக்கவேண்டும்.
''ஞானிக் கில்லை யின்பமுந் துன்பமும்''.உண்மையான ஞானிக்கு சுகம் துக்கம், இன்பம் துன்பம், இரவு பகல், எல்லாம் ஒன்று. அவன் ஆத்மாவோடு ஒன்றி சதா ஆனந்தத்தில் இருப்பவன்.
''சிதலைக் கில்லை செல்வமுஞ் செருக்கும்.'கரையானுக்கு பணக்காரன் ஏழை வீடு என்ற பேதமோ, பாகுபாடோ கிடையாது. எங்கே மரத்தை, புஸ்தகத்தை, துணியைப் பார்த்தாலும், குடும்பத்தோடு அங்கே சென்று இருந்து, விருந்து கொண்டாடிவிடும் அருமையான விஷயங்களை எல்லாம் தின்று விடும். அரித்துவிடும். மனிதர்கள் இப்படி கரையான் போல் அரிப்பவர்கள் நிறைய வெளியே அதிகம் தெரியாமல் இருப்பார்கள். தக்க சமயத்தில் நெருங்கி கூடவே தங்கி பிறருடைய செல்வத்தையோ அதிகாரத்தையோ கொஞ்சம் கொஞ்சமாக அழித்து தமதாக்கி கொண்டு விடுவார்கள். வீட்டிலிருந்தாலும் ஜெயிலில் இருந்தாலும் இது அவர்கள் தன்மை. எப்படியோ இவர்களை அ .வீ.ரா. பாண்டியன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருக்கிறான்.
''முதலைக் கில்லை நீத்தும் நிலையும்''
முதலையை பொறுத்தவரை அதற்கு தேவை ஆழமாக நீர் ஓடுகின்ற ஆறாக இருந்தாலும், தேங்கி இருக்கும் ஏரியானாலும் ஒன்றுதான். மனித முதலைகள் அதுபோல் காரிய வாதிகள், சரியான ஆட்கள் அகப்பட்டால் சந்தர்ப்பத்தை கோட்டை விடமாட்டார்கள். தக்கது தகாதது என்று பாராமல் எவ்வளவு தகாத காரியத்தையும் துணிந்து செய்வர் என்கிறான்.
''அச்சமு நாணமும் அறிவிலோர்க் கில்லை''எதையாவது உளறுவது. பிறகு மன்னிப்பு கேட்பது. எல்லோரும் கேட்க வெட்ட வெளிச்சமாக பேசிவிட்டு, நானா பேசினேனா , வேண்டுமென்றே என் மேல் பழி, என்பது, அதற்கு காசு வாங்கிய சில அடிமைகள் வக்காலத்து வாங்குவது எல்லாம் அருவருப்பாக பார்க்கிறோம். செய்யக்கூடாத அஞ்சத்தக்க தீய தொழிலுக்கு அஞ்சுதலும், பழிக்கு நாணுதலும் அறிவில்லாதவரிடத்தில் இல்லை என்கிறது இந்த ஒரு வரி பாடல்.
''நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை''சாதாரண நாட்களுக்கும், விசேஷ, பண்டிகை நாட்களுக்கும் எந்த வித வித்தியாசமில்லை அன்றாடங் காய்ச்சிகளுக்கு. நலிந்த ஏழைகளுக்கு நாளேது , நக்ஷத்ரமேது. வறுமை, பசிப்பிணியால்துபவர்களுக்கு நாளும் நட்சத்திரமும் கிழமையும் இல்லை. இன்ன நாளில் இன்னது செய்ய வேண்டுமென்னும் நியதி இல்லை.
''கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை''.
அடுத்த வேளை வயிற்றை கழுவ உணவு தண்ணீர் எங்கே என்று தேடுவதிலேயே நேரம் ஓடுபவனுக்கு நண்பர்கள் யார், உறவினர் யார். அவர்களும் மனிதர்கள் தான். ஆனால் எவருமில்லாதவர்கள். படிக்கும்போதே மனது உருகுகிறதல்லவா. நாம் நண்பர்களாக இருப்போம். திக்கற்றவனுக்கு தெய்வமே துணை. தெய்வம் நம் உருவத்தில் ஏதாவது உதவட்டும்.
இன்னும் வரும்.
No comments:
Post a Comment