திருக்கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யம். J K SIVAN
7. தாய்க்கோலஞ் செய்தேனோ அனஸூயை போலே
இன்னும் திருக்கோளூர் ஸ்ரீ வைத்த மாநிதி பெருமாள் சந்நிதிக்கு செல்லவில்லை. ஊர் எல்லையில் தூரத்தில் கோபுரம் தெரிகிறது. வழியில் மூட்டை முடிச்சுடன் வெளியேறிக்கொண்டிருக்கும் எதிர்ப்பட்ட ஒரு பெண்ணிடம் ''ஏனம்மா எல்லோரும் இங்கு வரவேண்டும் என்று ஏங்கும் போது, ஸ்ரீ வைத்த மாநிதி பெருமாள் அனுகிரஹிக்கும் இந்த புண்ய க்ஷேத்ரத்தை விட்டு நீ மட்டும் எதற்காக அம்மா வெளியேறுகிறாய் என்று கேட்டு விட்டார்.
அவ்வளவு தான் ''ஐயா புண்ய புருஷரே, நீர் சொல்வது ரொம்ப ரொம்ப வாஸ்தவம் சத்ய வாக்கு. இங்கு வசிக்க புண்யம் பண்ணி இருக்கவேண்டும், ஏதாவது ஒரு நல்ல காரியம், எண்ணம், உடலாலும் உள்ளத்தாலும் புரிந்திருந்தால் இங்கு இருக்க வழியுண்டு. இதோ பாருங்கள் சிலரை குறிப்பிடுகிறேன் அவர்கள் போல் நான் ஏதாவது ஒரு காரியம் செய்ததுண்டா, எண்ணியதுண்டா? என்று 81 பேரை குறிப்பிடுகிறாள் அந்த பெண். இன்று 7வது உதாரணம் யார்?
அனஸூயை அத்ரி மகரிஷி மனைவி. மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவருக்கும் தாயாக மாறும் பெரும் பாக்கியம் பெற்றவர். தத்தாத்ரேயர் கதை அப்புறம் விவரமாக சொல்கிறேன்.
ராமர் சீதை லக்ஷ்மணனோடு வனவாசத்தில் ஒரு இரவு மந்தாகினி நதிக்கரையில் இருந்த அத்ரி மஹரிஷி ஆஸ்ரமம் செல்கிறார். அத்ரி அனசூயாவிற்கு பரம சந்தோஷம். அத்ரி சீதையிடம் '' அனுசூயா தர்மிஷ்டை, ஒரு தடவை இங்கே கடும் உணவுப் பஞ்சம். அநஸூயை, தனது பக்தியால் காய்கறிகளையும் கிழங்கு வகைகளையும் இந்த கட்டாந்தரை பூமியில் விளையச்செய்தவள். நீரில்லாமல் பாளம் பாளமாக விரிசலுடன் இருந்த பூமியில் கங்கையை வரவழைத்தவள் அம்மா. அனசூயா பூமிக்கு கொண்டுவந்தது தான் மந்தாகினி நதி . அலக்நந்தா என்ற நதியின் துணை நதியாக, மந்தாகினி என்ற பெயருடன் இன்றும் வடக்கே இமயமலைச்சாரலில் மக்களின் ஜீவாதாரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜீவ நதி.
தேவர்களுக்கு உதவ ஒரு தேவர்களின் இரவை பத்து இரவுகளாக மாற்றி தந்தவள். அவளை உன் அம்மாவாக ஏற்றுக்கொள் அறிவுரைகளைப் பெறுவாய் சீதா. ஒரு குறைவும் வராது உனக்கு '' என்கிறார் அத்ரி மகரிஷி.
அனசூயா பெற்ற மகளின் பாசத்தோடு சீதையை அணைத்து, முத்தமிட்டு, தன்னிடம் இருந்த சில ஆபரணங்களை அவளுக்கு அணிவித்து, பூக்களை தொடுத்து சூட்டி, அலங்கரித்து, உணவளித்து, பக்கத்தில் கட்டிக்கொண்டு படுத்துக்கொண்டு மனம் விட்டு நிறைய பேசுகிறாள். அறிவுரைகள் வழங்குகிறாள். அன்று இரவை ஆனந்தமாக ராம லக்ஷ்மண சீதா அந்த ஆஸ்ரமத்தில் ரிஷி பத்னிகளோடு கழித்தனர். சீதா அனசூயைக்கு உதவி, பணிவிடைகள் செய்தாள். ஸ்ரீ ராமருக்கு சீதாவை அனசூயா பரிவோடு வரவேற்று மகளாக கருதியதில் பெருமிதம்,மகிழ்ச்சி.
''சீதா, நான் ஒரு ரிஷிபத்தினி. கணவரை பின் தொடர்பவள். நீ ராஜகுமாரி. நீ எதற்காக வனவாசம் மேற்கொள்ளவேண்டும். ராமன் திரும்பும் வரை அரண்மனையில் இருந்திருக்கலாம். அப்படி இருந்தும் காட்டில் வசிப்பதால் வரும் கஷ்ட நஷ்டங்களை லக்ஷியம் செய்யாமல் "பிரிவினும் சுடுமோ பெருங்காடு" என்றவாறு, ராமனை பிரியாமல் நிழலாக தொடர்கிறாய் .இந்த சின்ன வயதில் இவ்வளவு பெரிய தியாக மனப்பான்மையா? உனது பதி பக்தியை மெச்சுகிறேன். பகவான் உனக்கு சகல சௌபாக்கியங்கள், சந்தோஷம் கொடுக்கணும்'' என்கிறாள் அனசூயா.
நிறையபேருக்கு அருமையான பெயர் அமைந்தும் ''அனுசுயா'' என்று பெயர் எழுதுகிறார்கள். அசூயை என்றால் பிறரை பார்த்து பொறாமை கொள்வது. அனசூயா என்றால் அசூயை மனதில் ஒரு துளியும் இல்லாதவள் என்று அர்த்தம். இனிமேலாவது பெயரை சரியாக எழுதவும், உச்சரிக்கவும் வேண்டுகிறேன்.
ஸ்ரீ ராமானுஜரே , என்றாவது ஒரு கணம் என் வாழ்வில், எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் ஒரு தாயைப் போல், அநஸூயை போல் அளவில்லா அன்பினையும் பரிவையும் காட்டினேனா?" எனக்கு என்ன அருகதை இருக்கிறது திருக்கோளூரில் வாசிக்க வாழ? என கேட்கிறாள் அந்த திருக்கோளூர் பெண் .
அவள் கேள்விகள் மூலம் நிஜமாகவே நிறைய ரஹஸ்யங்கள் நமக்கு இதுவரை தெரியாதவை தெரிகிறதல்லவா?
No comments:
Post a Comment