துளசி தாசர் J K SIVAN
வயோதிக பிராமணன்
தனக்கு எதிரே ஆஜானுபாகுவாக ஒரு ராக்ஷஸன் கை கட்டி நிற்கிறானே . என்ன விஷயம்? துளசிதாசருக்கு அவனிடம் எந்த பயமுமில்லை.
''அப்பா, நீ யார், எதற்கு முன் நிற்கிறாய் இங்கு? என்ன வேண்டும் உனக்கு?''
''சுவாமி, எனக்கு உங்களிடம் அபார பக்தி . உங்கள் ஆசீர்வாதம் எனக்கு வேண்டும். நீங்கள் ஒரு மஹான். உங்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று விருப்பமாக இருக்கிறதே. உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள். அதை என்னால் செய்ய முடியும்?'' என்றான் அந்த ராக்ஷஸ உருவமுள்ளவன்.
''அப்பனே நீ யார்? எதற்காக உனக்கு என்னை பிடித்தது? எதற்கு எனக்கு உதவி செய்கிறேன் என்கிறாய்? எனக்கு ஒன்றும் புரியவில்லை, விளக்கமாக சொல்'' என்கிறார் துளசிதாசர்.
''சுவாமி, நான் ஒரு ராக்ஷஸன். வெகுகாலம் இந்த மரத்தில் வசிப்பவன். ஒவ்வொரு நாளும் நீங்கள் இந்த மரத்தின் வேரில் கொட்டும் மந்திர ஜலத்தை குடித்து வளர்ந்தவன். எங்களுக்கு கிணறு, குளம் ஆறு, ஏரி, கடல் இதிலிருந்தெல்லாம் நீர் பருக அனுமதி கிடையாது. பலகாலம் தாகமாக இருந்த எனக்கு பன்னிரண்டு வருஷங்களாக நீங்கள் தான் குடிக்க நீர் வழங்கிய தர்ம பிரபு. அந்த நன்றிக்கடன் தீர்க்கவே தான் உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள், செய்கிறேன்'' என்று சொன்னேன்
''அப்பனே, ரொம்ப சந்தோஷம். எனக்கு என் ராமனை நேரில் தரிசனம் செய்ய ஆசை. அதை உன்னால் எப்படியப்பா நிறைவேற்றி தர முடியும்?''
''முடியும்'' என்று சொன்னான் அந்த ராக்ஷஸன்.
''ஒரு காலத்தில் சிறு மாங்கன்று நட்டேன். அது விருக்ஷமாகி மாங்கனியாகவா உருவானவன் இந்த ராக்ஷஸன். காமதேனு தேடியவனுக்கு பன்றி கிடைத்தது. என் ராமனின் தரிசனம் தேடிய எனக்கு ஒரு ராக்ஷஸன் தரிசனம். என் தவம், சாத்வீகம், எல்லாமே ஒரு ராக்ஷஸனுக்கு தான் பிடித்திருக்கிறது. என்ன செய்ய? ராஜ ஹம்சத்தை நோக்கி தவமிருந்தவன் ஒரு காகத்தை தான் தரிசித்தேன்.
இருக்கட்டும். செம்பை உபயோகித்து தான் தங்கத்தை பளிச்சிட செய்யமுடியும். இவனையும் தான் கேட்டுப்பார்ப்போமே என்று தான் துளசிதாசருக்கு தோன்றியது.
''சுவாமி, என்னை தாங்கள் சந்தேகிக்கிறது போல் தோன்றுகிறது. உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் நான் முயற்சி செய்கிறேன் என்றான் அந்த ராக்ஷசன்.
நூல் இல்லாமல் மாலை தொடுக்க முடியாது. ஊசியில்லாமல் துணியை தைக்கமுடியாது. துடைப்பம் இருந்தால் தான் அழகான மாளிகையும் சுத்தமாகும். சாதாரணனிடம் கூட சிறந்த சக்தி இருக்கலாம். தப்பாக இந்த ராக்ஷஸனை நாம் எடை போடக்கூடாது என்று நினைத்தார் துளசிதாசர்.
''அப்பா உன்னை பற்றி சற்று யோசித்தேன். அவ்வளவு தான். எனக்கு தேவை ஸ்ரீ ராமன் தரிசனம் வேறொன்றும் இல்லை.
ராமன் என்ற பெயரை கேட்டதும் ராக்ஷஸன் திடுக்கிட்டான். பின் வாங்கினான். ''அந்த பெயரை சொன்னால் நான் மரணமடைவேன். ராக்ஷஸர்களை அழிக்கும் நாமம் அது. நீங்கள் ஹநுமானிடம் வேண்டிக் கொள்ளுங்கள் அவர் உங்கள் ஆசையை பூர்த்தி செய்வார். ராமனின் தூதன் ஹனுமான். நான் ஹனுமனை உங்களுக்காக போய் வேண்டிக் கொள்கிறேன்'' என்றான் ராக்ஷஸன்.
''ஆஹா. உனக்கு ஹனுமனை தெரியுமா? அடடா. எங்கேயப்பா இருக்கிறான் மாருதி. உனக்கு தெரியுமானால் எனக்கு சொல். காட்டமுடியுமானால் அவனை எனக்கு காட்டு '' என்கிறார் துளசிதாசர்.
''சுவாமி நீங்கள் எப்போதும் புராணங்கள் வாசிக்கிறீர்கள். தினமும் ஒரு இடத்தில் சென்று கேட்பீர்களே. ராமநாம த்யானம் பஜனை நடக்குமே அப்போது ஒரு வயதான பிராமணர் தினமும் அங்கே வந்து கேட்கிறாரே. அவர் தான் ஹனுமான். அவருக்கு உங்களை தெரியும். எல்லோருக்கும் முதலாக வந்து உட்காருவார். எல்லோரும் சென்றபின் செல்வார். கையில் ஒரு தடி தலையில் ஒரு குல்லா இருக்கும். பழைய கந்தல் மேலாடை உடுத்தி இருப்பார். கோவணம் தரித்திருப்பார். வானர வீரன். ஸ்ரீ ராம தூதன். வாயு புத்ரன். அங்கு வருபவர்களில் அவர் யார் என்று தெரியாவிட்டால் நான் சொன்னது தான் அவர் அடையாளம்.''
இதைச் சொல்லிவிட்டு அந்த ராக்ஷஸன் மறைந்துவிட்டான். துளசிதாசர் தனது ஆஸ்ரமத்துக்கு திரும்பினார்.
மறுநாள் காலை ஸ்னானம் முடித்து ராமநாம த்யானத்துடன் வழக்கமாக புராணங்கள் பாராயணம் பண்ணும் இடத்துக்கு சென்றார். எல்லோரையும் கவனித்தார். ஒரு வயதான பிராமணன் வந்தார். ஒரு மூலையில் அமர்ந்தார். அவரை உற்றுப்பார்த்த துளசிதாஸ் அவர் அப்படியே ராக்ஷஸன் சொன்னது போலவே இருந்ததை கண்டார்.
புராண பாராயணம் முடிந்தது. எல்லோரும் எழுந்து சென்றார்கள். முதிய பிராமணன் மெதுவாக எழுந்தார். துளசிதாசர் அவர் பின்னாலேயே சென்றார். வெளியே சென்றதும் ஹனுமான் வேகமாக செல்ல ஆரம்பித்தார்.
ஓடிச்சென்று துளசிதாசர் அவர் காலை பிடித்துக்கொண்டார் '' சுவாமி, மஹா புருஷரே என் மேல் இரக்கம் காட்டவேண்டும் .
''யாரப்பா நீ ? எதற்கு என் கால்களை பிடிக்கிறாய்? நான் ஒரு ஏழை பிராமணன்
என்கிறார் முதியவர்.
''வானர யூத முக்கியரே, ஸாக்ஷாத் ஹனுமாரே , ஸ்ரீ ராம பக்தரே,'' என்பதற்கு மேல் துளசிதாசரால் பேச முடியவில்லை. நிமிர்ந்து பார்த்து விட்டு மீண்டும் கால்களில் விழுந்தார்.
''அனுமாருக்கு தெரியாதா எதிரே இருப்பது வால்மீகி மகரிஷி. துளசிதாஸ் எனும் மனிதனாக பிறந்தவர் என்று. அவரை மகிழ்ச்சியோடு வாரி அணைத்துக் கொள்கிறார்.
''உன்னை எனக்கு பிடிக்கிறது அப்பா என்கிறார் முதியவர்.
''சுவாமி, உங்களிடம் எனக்கு ஒரு விண்ணப்பம். என் நெடுநாள் ஆசையை பூர்த்தி செய்வீர்களா?'
''என்ன அது.சொல்லப்பா. என்னால் முடிந்தால் செய்கிறேன் ''
''என் மீது கருணை கொண்டு ஒரு கணம் ஸ்ரீ ராமனின் தரிசனம் எனக்கு செய்து வைப்பீர்களா?
''ஆஹா முயல்கிறேன்'' என்று சொன்ன முதியவர் மறைந்து போகிறார்.
ஸ்ரீ ராமனிடம் ஆஞ்சநேயர் ''சுவாமி, என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். பூமியில் வால்மீகி மகரிஷி துளசி தாசர் என்ற பெயருடைய மகானாக அவதரித்திருக்கிறார். அவருக்கு உங்கள் தரிசனம் தரவேண்டும் என்று ஏங்குகிறார்'' என்கிறார்.
புன்னைகைத்த ஸ்ரீ ராமர் ''அதற்கென்ன செய்கிறேனே'' என்கிறார்.
No comments:
Post a Comment