திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் J K SIVAN
19 அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே
திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகளில் 81 மஹநீயர்களை பற்றி தெரிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. அவர்களை உதாரணமாக காட்டி நான் அவர்களை போலவா, ஏதாவதொரு நல்ல செய்கை , எண்ணம், வார்த்தை, என்னிடம் உண்டா என்று கேட்டு அது இல்லாததால் தனக்கு திருக்கோளூர் போன்ற தெய்வீக க்ஷேத்ரங்களில் வசிக்க என்ன அருகதை என்கிறாள்?
19வது உதாரணமாக அவள் காட்டுவது ராவணனின் மனைவி மண்டோதரியை. அசுரன் மயனின் மகள். சிவபக்தை. உத்தமப் பெண்.
ராக்ஷஸிகளுக்கு பெரிய பானை வயிற்றை நமது சித்திரக்காரர்கள் போடுவதை பார்த்திருப்பீர்கள். மண்டோதரி என்றால் கொடியிடை, வெளியே அதிகம் வராத வயிறை உடையவள் என்று அர்த்தம்.
ராம தூதன் ஆஞ்சநேயன் இலங்கையில் நுழைந்ததும் முதலில் ராவணனின் அந்தப்புரம் சென்று அங்குள்ள பெண்களை தான் முதலில் பார்த்து அதில் சீதை அகப்படுகிறாளா என்று தேடும்போது, மண்டோதரி தூங்கி கொண்டிருக்கிறாள். அவளைக் கண்ட ஆஞ்சநேயர் ஒரு கணம் தடுமாறுகிறார். இவள் சீதையோ? என்று. பிறகு சீதை இப்படி அந்நியன் அந்தப்புரத்தில் உறங்கும் பெண் அல்லவே என்று வேறு எங்கெல்லாமோ சென்று தேடுகிறார்.
கணவன் ராவணன் செய்தது தப்பு என்று தெரிந்து கணவனை எச்சரித்தும் பயனில்லை. அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சீதையை ராமனை மதித்தவள் மண்டோதரி. ராமன் கடவுளின் அவதாரம் என்று உணர்ந்து மதித்து ராமனை போற்றியவள் மண்டோதரி. அவள் உபதேசங்கள் ராவணன் காதில் ஏறவில்லையே.
ராமனின் பாணத்தில் ராவணன் வீழ்ந்தபோது யுத்தகளத்துக்கு வருகிறாள் மண்டோதரி. காலை வேளை. எதிரே வருவது அவன் மனைவி மண்டோதரி என்று ராமனுக்கு தெரிகிறது. காலை வேளையில் நீண்ட நிழல் விழுமல்லவா. ராமன் கால்களுக்கு அருகில் மண்டோதரியின் நிழல் விழுகிறது. நெருப்பை மிதித்தவன் போல் ராமன் அந்நிய பெண்ணின் நிழல் கூட தனது உடலில் படக்கூடாது என்று தூர விலகிப் போகிறார்.
ராவணனை பற்றி வால்மீகி சொல்லும்போது அவன் காலத்தால் சோதிக்கப்பட்டவன் என்கிறார். ராவணோ கால சோதித:
ராமானுஜ சுவாமியை வணங்கி ''நீங்கள் இப்போது சொல்லுங்கள் சுவாமி:"மண்டோதரியைப் போல் பகவானை, அவன் அவதாரங்களை அறிந்தவளா, அறிந்து வணங்கியவளா நான் ?'' எந்த அருகதை எனக்கு உள்ளது திருக்கோளூர் ஸ்தலத்தில் வசிப்பதற்கு என்று கேட்கிறாள் அந்த பெண்மணி.
No comments:
Post a Comment