துளசி தாசர் J K SIVAN
திருடர்களும் காவலர்களும்
ஸ்ரீ ராம தரிசனம் நேரில் பெற்ற துளசிதாஸரின் பக்தி தோய்ந்த ஸ்லோகங்கள் காட்டுத்தீ போல எங்கும் பரவ ஆரம்பித்து விட்டது. அவர் எந்த விளம்பரத்தையும் தேடாதவர். தனது சிறிய பழைய கூரை வேய்ந்த ஆஸ்ரமத்தில் இரவு பகல் எந்நேரமும் ராமத்யானத்தில் ஆழ்ந்து அவனைப் பற்றியே எழுதியவர். பேசியவர்.பாடியவர்.
காசி வாழ் மக்கள் ஒரு ஆஸ்ரமத்தை அவருக்கு கட்டித்தந்தார்கள். பெரிய தனவந்தர்கள் கூட அவருக்கு சீடனாக சேர்ந்தார்கள். எதெல்லாமோ கொண்டு வந்து ஆஸ்ரமத்தை நிரப்பினார்கள். ஆசிரமம் விஸ்வரூபம் எடுத்து தினமும் ஆயிரம் பிராமணர்களுக்கு , ஏழை பாழைகள் அனைவருக்கும் அன்னதானம் அளித்தது. இரவு பகல் தங்க இடமளித்தது. ..வெள் ளி தங்க சாமான்கள், பணம் எல்லாம் குவிந்தது. துளசிதாசர் தொடவே இல்லை. யார் யாரோ எடுத்துச் சென்றார்கள்.
ஆசிரமத்தில் எப்போதும் கதவுகள் திறந்தே இருந்தது. எவர் வேண்டுமானாலும் வரலாம் போகலாம் எதை வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.
அந்த ஊருக்கு வந்த ரெண்டு திருடர்களுக்கு இது லட்டு மாதிரியான சந்தர்ப்பம். விடுவார்களா? தங்கம் வெள்ளி தட்டுகள் பாத்திரங்கள் நிறைய இருக்கிறது. எடுத்துச் செல்வோம்'' என்று எண்ணம். பக்தர்களோடு பக்தர்களாக திருடர்கள் பஜனையில் கலந்து கொண்டார்கள். இரவு பிரசாதம் சாப்பிட்டுவிட்டு அனைவரும் படுத்தார்கள். திருடர்களும் கூட. நள்ளிரவு எல்லோரும் தூங்கும்போது திருடர்கள் எழுந்து தமது வேலையை துவங்கினார்கள். எல்லா தங்க வெள்ளி சாமான்களையும் திருடி தூக்கமுடியாமல் தூக்கி மூட்டை கட்டி தலையில் மூட்டைகளோடு மெதுவாக ஆசிரம வாசலுக்கு வந்தார்கள். கதவுகள் தான் திறந்திருக்குமே .
ஒருவாசலில் ரெண்டு காவல்காரர்கள் வில்லும் அம்புடனும் இருப்பதை கண்டு அடுத்த வடக்கு வாசலுக்கு சென்றார்கள். அங்கேயும் அதே இருவர் ஆஜானுபாகுவாக கிரீடம் அணிந்து வில்லுடனும் அம்புடனும் காவல் இருந்தார்கள் தெற்கு கதவுக்கு ஓடினால் அங்கேயும் அதே இருவர் காவல். வரும்போது எவரையும் காணோம். போகும்போது இப்படி ஆகிவிட்டதே என்று ஏமாற்றம் திருடர்களுக்கு. எதற்கும் கொஞ்ச நேரம் காத்திருந்து எவனாவது காவல் காரன் அசந்த நேரத்தில் ஓடிவிடுவோம் என்று ரெண்டு மணிநேரம் காத்திருந்தும் எந்த காவல் காரனும் அசையவில்லை. மூட்டைகளை ஓரிடத்தில் வைத்து விட்டு படுத்தார்கள்.
இரவு கழிந்தது.கிழக்கு வெளுத்தது. சூரியன் வந்தான். பக்தர்கள் எழுந்தார்கள், ஆஸ்ரமத்தை கழுவி சுத்தம் செய்தவர்கள், தீபங்களை ஏற்றினார்கள். துளசிதாசர் தனது அறையிலிருந்து வந்தார். பூஜை, பஜனை வழக்கம்போல் ஆரம்பிக்க போகிறது.
ரெண்டு திருடர்களும் அவர் காலில் விழுந்தனர். அழுதார்கள்.
'' குருநாதா, எங்கள் தப்பை மன்னித்து அருளவேண்டும்.''
'' எழுந்திருங்கள். யார் நீங்கள்.? என்ன தப்பு செய்தீர்கள்?
' பிரபு, நாங்கள் திருடர்கள். இங்குள்ள தங்க வெள்ளி சாமான்களை திருட வந்தோம். நேற்று இரவு எல்லோரும் தூங்கும்போது திருடினோம். மூட்டை கட்டி வெளியே தூக்கி செல்ல முயற்சித்தோம். ஆனால் எல்லா வாசல்கதவுகளையும் அடைத்துக் கொண்டு வில் அம்புகளுடன் ரெண்டு காவல் வீரர்கள் எங்களை வெளியே செல்ல விடவில்லை. நீங்கள் தாராள மனது கொண்ட ராம பக்தர். இப்படிப்பட்ட சுத்த வீரர்கள் இரவு பூரா காவல் இருப்பதால் தான் உங்கள் கதவுகள் எப்போதும் திறந்திருப்பதை அறியாமல் உங்களுக்கு துரோகம் செய்ய நினைத்த எங்களை மன்னியுங்கள்''
துளசிதாசர் ஆச்சரியப்பட்டார். அருகே இருந்த பக்தர்களிடம்
''உங்களில் யார் இரவில் இப்படி காவல் காத்தவர்கள்? எதற்கு காவல் இந்த ஆஸ்ரமத்துக்கு. எனக்கு தெரியாதே இந்த ஏற்பாடு? '' என்கிறார்.
''குருதேவா, யார் எதை வேண்டுமானாலும் கொண்டுவரட்டும், கொண்டு போகட்டும் என்ற உங்கள் பரந்த நோக்கம் தெரிந்த நாங்கள் யாருமே காவல் காக்க வில்லை''
''ஐயா, அந்த காவல் காரர்கள் பளபளவென்று கிரீடம் காதில் குண்டலம் அணிந்து, ஆபரணங்கள் பூண்ட மேனியர்களாக கையில் வில்லோடு நின்றார்கள். பீதாம்பரம் உடுத்திய கருநீல மேனியர்கள்..அதோ ஒருவர் அங்கே இன்னும் உட்கார்ந்திருக்கிறார் பாருங்கள்...'' என்று ஒரு திருடன் கையை நீட்டி காட்டினான். துளசிதாசருக்கோ மற்றவர்கள் கண்ணுக்கோ யாரும் அங்கே கண்ணுக்குத் தெரியவில்லை.
துளசிதாசருக்கு புரிந்துவிட்டது. தன்னுடைய ஏழைக்கு குடிசைக்கு இரவெல்லாம் தூங்காமல் காவல் காத்தது ஸ்ரீ ராம லக்ஷ்மணர்களா? எத்தனையோ யுகம் தவமிருந்து, யோகம், யாகம் செய்து , புண்ய க்ஷேத்ரங்கள் சென்று, புனித நீராடி பெறமுடியாத பாக்யம் ஸ்ரீ ராமலக்ஷ்மணர்களை எனது காவல்காரர்களாக கொள்வது! ஸ்ரீ ராமா என்னே உன் கருணை. பக்தவத்சலன் நீ என்பதில் என்ன சந்தேகம்.
ஜெய் ஸ்ரீ ராம்
No comments:
Post a Comment