Saturday, November 30, 2019

VALLALAR



வள்ளலார்        J K  SIVAN 
          

       1.    ஒரு ஆச்சர்யமான  மனிதர் . 

நெய்வேலி,  வடலூர் பக்கம் போகும்போதெல்லாம்  கால்  தானாகவே  வள்ளலார் வாழ்ந்த இடத்தை நோக்கி  இழுக்கிறது.  வள்ளலாரை .மனிதர்  என்று  எப்படி  சொல்வது?  தெய்வம்  மானிடனாக  வந்த உரு என்பது தான் பொருத்தமாகும்.  காவி உடை அணியவில்லை, தாடி மீசை உருத்ராக்ஷமாலை, கையில் கிண்டி  இல்லை.  எந்த குருவிடமும்  தீட்சை பெறவில்லை. ஆனால்  அவருக்கோ பல  சிஷ்யர்கள். 

ஒன்பது வயசிலேயே வித்யாசமின்றி  அனைவராலும்  ஏற்கப்பட்டவர்.  அவரது ஒரு பார்வையிலேயே மாமிசம்  உண்பவர்கள் கூட  அடியோடு அதை விட்டனர். அவர் பார்வை  எக்ஸ்ரே தன்மை கொண்டதோ  என்னவோ?.  பிறர் மனத்தில் தோன்றும்  எண்ணங்களை  எல்லாம்  அவரால்  உணர முடிந்தது.    திடீரென்று மறைவார், தோன்றுவார்.  எங்கிருக்கிறார்  என்று அறியமுடியாது.  விசித்ரமானவர்..

பார்ப்பதற்கு,  மாநிறம், ஒல்லி, நிமிர்ந்த உருவம், எலும்பெல்லாம் தெரியும்.நீண்ட  மெல்லிய  மூக்கு. விசாலமான நெற்றி. கண்களில்  ஏதோ ஒரு காந்த  சக்தி. முகத்தில் ஏதோ  சதா எதைப்பற்றியோ  கவலைப் பட்டுக்கொண்டெ யிருக்கிற மாதிரி  ஒரு தோற்றம். 

நீண்ட  கூந்தல்  மாதிரி தலை முடி. காலில்  பாத ரக்ஷை. (அந்த காலத்தில்  ஆற்காடு ஜோடு என்று  அதற்குப் பெயர்)  உடம்பை மூட ஒரு  வெள்ளைத் துணி.   நீளமாக வேட்டியோடு  சேர்ந்து  உடம்பு  மேலும்  போர்த்தப்பட்டிருக்கும். 

ஆகார விஷயம்  சொல்பம்.  ஒன்றிரண்டு கவளம்  அதுவும்  ரெண்டு மூன்று நாளைக்கொரு தரம்.  உபவாசம்  என்று இருந்தால்  அது ரெண்டு மூன்று மாசம் வரை தொடரும். வெந்நீரில் கொஞ்சம்  வெல்லம்  கலந்து அது தான்  ஆகாரம். சிறுவயதிலே குழந்தையாக அப்பாவின்  தோளில்   இருந்தபோதே சிதம்பரத்தில்  ''ரகசியம்''  (ஆனந்த  வெளி, பரமஆகாசம்)  புரிந்துவிட்டது.  பல பாடல்களில்  அது அவரது திருவருப்பா  பாடல்களில்  வெளிப்பட்டது.

சந்நியாசியாய் இருந்தும்  உலக  இயல்  பிடிக்கவில்லை,  பட  முடியவில்லையே  இந்த மானிட  வாழ்வின் துயரம் என்று கதறல். போதும்  போதும்  பட்டதெல்லாம்.  நிதானமாக படித்தால் அர்த்தம் புரியும் என்பதால்  நான் விளக்கம் தர முயலவில்லை. 

''படமுடியாதினித்  துயரம் பட முடியாதரசே 
    பட்டதெல்லாம்  போதும்  இந்த  பயம்  தீர்ந்து  இப்பொழுதே என் 
உடல்  உயிராகிய  எல்லாம்  நீ  எடுத்துக்கொண்டு  உன் 
   உடல் உயிராகிய எல்லாம்  உவந்தெனக்கே  அளிப்பாய் 
வடலூரு சிற்றம்பலத்தே வாழ்வாய்  என்  கண்ணுள் 
   மணியே,  குரு  மணியே, மாணிக்க  மணியே 
நடன சிகாமணியே  என்  நவமணியே,  ஞான
   நன் மணியே, பொன் மணியே,  நடராஜ மணியே  

இந்தப்பாட்டில்  கண்டபடி   தானே  இறைவனின்  உடல்  உயிர்  ஆவியானவர்   அந்த மா மனிதர். சித்தர். ஞானி. 
இன்னும் வள்ளலார் பற்றி சொல்கிறேன்.





THIRUKKOLOOR PEN PILLAI

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள்   J K SIVAN 


19 அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகளில்  81 மஹநீயர்களை பற்றி தெரிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது.    அவர்களை  உதாரணமாக காட்டி  நான் அவர்களை போலவா, ஏதாவதொரு நல்ல செய்கை , எண்ணம், வார்த்தை, என்னிடம் உண்டா  என்று கேட்டு  அது இல்லாததால்  தனக்கு  திருக்கோளூர் போன்ற தெய்வீக க்ஷேத்ரங்களில் வசிக்க என்ன அருகதை என்கிறாள்?

19வது உதாரணமாக அவள் காட்டுவது ராவணனின் மனைவி   மண்டோதரியை. அசுரன் மயனின் மகள். சிவபக்தை.  உத்தமப் பெண். 

ராக்ஷஸிகளுக்கு  பெரிய   பானை வயிற்றை நமது  சித்திரக்காரர்கள் போடுவதை பார்த்திருப்பீர்கள்.  மண்டோதரி என்றால் கொடியிடை,  வெளியே அதிகம் வராத வயிறை உடையவள் என்று அர்த்தம்.    

ராம தூதன் ஆஞ்சநேயன்  இலங்கையில் நுழைந்ததும் முதலில்  ராவணனின் அந்தப்புரம் சென்று அங்குள்ள பெண்களை தான் முதலில் பார்த்து அதில்  சீதை அகப்படுகிறாளா என்று தேடும்போது,  மண்டோதரி தூங்கி கொண்டிருக்கிறாள். அவளைக்  கண்ட  ஆஞ்சநேயர்  ஒரு கணம்   தடுமாறுகிறார். இவள் சீதையோ? என்று.  பிறகு  சீதை இப்படி அந்நியன் அந்தப்புரத்தில்  உறங்கும் பெண் அல்லவே என்று வேறு எங்கெல்லாமோ சென்று தேடுகிறார்.

 கணவன் ராவணன் செய்தது தப்பு என்று தெரிந்து கணவனை எச்சரித்தும்  பயனில்லை. அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  சீதையை  ராமனை மதித்தவள் மண்டோதரி.      ராமன்  கடவுளின் அவதாரம் என்று உணர்ந்து மதித்து ராமனை போற்றியவள் மண்டோதரி. அவள் உபதேசங்கள் ராவணன் காதில் ஏறவில்லையே.

ராமனின்  பாணத்தில்  ராவணன் வீழ்ந்தபோது யுத்தகளத்துக்கு வருகிறாள் மண்டோதரி. காலை வேளை.  எதிரே வருவது அவன் மனைவி மண்டோதரி என்று ராமனுக்கு தெரிகிறது.   காலை வேளையில்   நீண்ட நிழல்  விழுமல்லவா.    ராமன் கால்களுக்கு  அருகில் மண்டோதரியின்  நிழல்  விழுகிறது.  நெருப்பை மிதித்தவன் போல்  ராமன்  அந்நிய பெண்ணின் நிழல் கூட  தனது உடலில் படக்கூடாது என்று தூர விலகிப் போகிறார்.
ராவணனை பற்றி  வால்மீகி சொல்லும்போது அவன் காலத்தால் சோதிக்கப்பட்டவன் என்கிறார். ராவணோ கால சோதித:

ராமானுஜ சுவாமியை வணங்கி  ''நீங்கள் இப்போது சொல்லுங்கள் சுவாமி:"மண்டோதரியைப் போல்  பகவானை, அவன் அவதாரங்களை அறிந்தவளா, அறிந்து வணங்கியவளா நான் ?''  எந்த அருகதை எனக்கு உள்ளது திருக்கோளூர் ஸ்தலத்தில் வசிப்பதற்கு என்று கேட்கிறாள் அந்த பெண்மணி. 



NARSI MEHTA



                           பரமேஸ்வர புலி   J K  SIVAN 


 இறைவன்  படைப்பில்  அனைத்திலும்  அவன்  இருக்கிறான்.   பக்தி  என்பது  உள்ளூர ரத்தத்தில்  ஊறியது என்பதற்காக  லேப் டெஸ்டில் lab test  ரத்தத்தை பரிசோதித்தால்  பக்தி  நிச்சயம் தெரியாது. மனதால்  மட்டுமே  அறியக்கூடியது.

ஒரு  நல்ல  ராஜா.  பிபாஜி  என்று  பெயர்.  அவனுகேற்ற   ஒரு  நல்ல ராணி.  ரெண்டு பேருமே பக்தியில் திளைத்தவர்கள்.     இது   கதையில்  தான் நடக்கும்  என்று  இல்லை.  உண்மை வாழ்க்கையிலும்  நிறைய  குடும்பங்களில் நடக்கிறது.  இதற்கு  ஏழை  பணக்கார  பேதம்  கிடையாது.  நான்  அருமையான சில குடும்பங்களை பார்த்திருக்கிறேன்.  ராஜாவாகத்  தான் இருக்க வேண்டிய அவசியமில்லை.

பிபாஜி தனது குரு  ராமாநந்தாவிடம் நிறைய உபதேசங்கள்  பெற்றான்.   நாராயணன்,  அவனது அவதாரங்களான  ராமன்,  கிருஷ்ணன்  பற்றியும்  பண்டரிநாதன்  மகாத்மியங்களை  எல்லாம்  நிறைய கேட்டு   மகிழ்ந்த  பிபாஜி ராஜாவுக்கு பக்தி மேலும்  அதிகரிக்க,  ஒருநாள்,  குரு  ராமானந்தாவின் பாதங்களை  வணங்கிவிட்டு   ''சுவாமி  நாங்கள் இருவரும்   த்வாரகை செல்ல  விரும்புகிறோம். கிருஷ்ணனை தரிசிக்காவிட்டால்  தூக்கமே  எங்களுக்கு  இனி  கிடையாது.  தங்கள் ஆசி  அனுமதி வேண்டும். .

'' ரொம்ப சந்தோஷம். போய்வாருங்கள். ஆசிர்வாதங்கள் ''

தம்பதியர்  இதுவரை  சிவ பக்தர்கள்.  பவானியையும்  சிவனையும்  வணங்கி வந்தவர்கள்.  சமீபத்தில்  தான்   குருவிடமிருந்து   ராமனைப்பற்றியும்  க்ரிஷ்ணனைப்பற்றியும்  நிறைய  உபதேசங்கள்  பெற்றவர்கள்.    உடனே   துவாரகைக்கு பயணம்  தொடங்கினார்கள்.   கிருஷ்ணன்  முன்  ஆலயத்தில்  நின்று அவன்  அருளை வேண்டி நின்றார்கள்.  நான்கு மாத  காலம்  மனம் குளிர  கிருஷ்ண தர்சனம்  தினமும்  பெற்றனர்.  காட்டு  வழியாக ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.   அது அடர்ந்த பெரிய  காடு.  நிறைய  வன  விலங்குகள்  குறுக்கிட்டன.   ராஜாவும்   ராணியும் ஹரே  கிருஷ்ணா  ஜெய்  பாண்டுரங்கா   என்று   வாய்  ஓயாமல்  பஜித்துக்கொண்டே நடந்தார்கள்.

ஒரு  பெரிய வேங்கைப்புலி வழியில்  குறுக்கிட்டது.  ராணி நடுங்கினாள். ''அதோ  பாருங்கள் எதிரே  புலி'' என்று  பின்னால்  வந்து கொண்டிருந்த  ராஜாவிடம்  சொன்னாள் . புலி  பார்த்துவிட்டு   உறுமியது. நெருங்கியது.

''பயப்படாதே.  என்றான்  ராஜா.

''இல்லை   நாதா.  நம்மை கொன்று  விடும் இந்த  புலி.   சில நிமிஷங்களில்  நாம்  இன்று இதன்  ஆகாரம். ''

''பயப்படாதே.  எல்லாவற்றிலும் நாம்  வணங்கும்  கிருஷ்ணன்,  விட்டலன்  இருக்கிறான். எனவே அவன்  நம்மைக்  கொல்ல மாட்டான்  பார். ''

''பிபாஜி அருகே   புலி  வந்து விட்டது.  ராஜா   தைர்யமாக,  '' ஹே    புலியே,   இது வரை  நீ  கொடியவனாகவே  வாழ்ந்தாய். இது முதல்  உன்  வாழ்க்கையில்  ஒரு  திருப்பம்  அமையட்டும்.   இனி  உயிர்களைக்  கொல்லாதே.  கிருஷ்ணனையோ   ராமனையோ  நினை.  உன்  ஜன்மம்  கடைத்தேறும் '' என்றான்.  தன்  கழுத்தில்  இருந்த  துளசி மணி மாலையைக் கழட்டி  அந்த   புலியின் கழுத்தில்  மாட்டி விட்டான் ராஜா பிபாஜி.   அவன்  வாயிலிருந்து   ''ராம  கிருஷ்ண விட்டல்''  என்று விடாமல்  நாமஸ்மரணம்.

புலி  ஸ்தம்பித்து  நின்றது.  அதற்குள்  என்னவோ  ஒரு   புது  மாற்றம்   ஏற்பட்டது.

புலி  ஆச்சர்யமாக  ''ஜெய்  விட்டல்,  ஜெய  ராம்,    ஹரே கிருஷ்ணா''  என்று  உச்சரித்ததில்  அதன் குணமே  மாறிவிட்டது.  (இது  கதை.  புலி  பேசுமா  என்று குறுக்கே கேள்வி  கேட்கக்கூடாது.  பேசியதாக நம்பவேண்டும்)

புலி இரு முன்னங் கால்களையும்  நீட்டி   வணங்கி   '' சுவாமி, எனக்கு இது வரை  தெரியாததை  உணர்த்தி  இவ்வளவு  சந்தோஷத்தை கொடுத்தீர்கள்''  என்று  ராஜாவை  நமஸ்கரித்தது .  ராஜாவும்   ராணியும்  மேலே நடந்து சென்றுவிட்டார்களே  தவிர  புலி அந்த நிமிஷம் முதல்   எந்த  விலங்கையும் கொல்லவே யில்லை.  காட்டில் கிடைத்த  காய்  கனி  இலைகளை  தின்று   ஒதுங்கிவாழ்ந்தது.   சிலநாளில்  இறந்தது.  (இதன்  மூலம்  நாம  சங்கீர்த்தனம்   புலியைக்கூட  மற்றும்  சக்தி வாய்ந்தது   என்று  புரிந்தாலே  போதும்.)

 கதைக்கு   நடுவே  ஒரு அற்புத  விஷயம்  சொல்கிறேன்.  நாம்   கடைசி  நிமிஷம்  எதை  நினைக்கிறோமோ அதுவே   நமக்கு  சம்பவிக்கிறது.  கீதை அப்படி தான் சொல்கிறது.  அடுத்த  பிறவி இந்த  அடிப்படையில்   தான் நிகழும்  என்பதால்   நாம்    அந்திம  காலத்தில்  பகவன் நாமாக்களையே  நினைவில்  கொள்ள வேண்டும்.  புலி 


கதையில்  புலி   ''கிருஷ்ணா  விட்டலா''  என்று  சொல்லிக் கொண்டே உயிரை விட்டதால்  அடுத்த பிறவி  மேன்மையாக  கிட்டி   ஜுனகாத்  என்கிற  குஜராத்  ஊரில்  சிறந்த  விட்டல பக்தர்  நார்சி  மேத்தாவாக  பிறந்தது.
''வைஷ்ணவ   ஜனதோ''  என்ற  மகாத்மா  நிறைய  விரும்பி  கேட்ட  பாடல் தெரியுமல்லவா?  அதை  இயற்றியவர் நார்ஸி  மேத்தா. என்னுடைய  ''தெவிட்டதா விட்டலா'' புத்தகத்தில் அவர் பற்றிய   கதைகள்  நிறைய  சொல்லி இருக்கிறேன்.   ரிஷிகள்  முநீஸ்வரர்கள் யோகிகள்   சிலர் இவ்வாறு  தமது  அடுத்த  பிறவிகளில்  கங்கை, பாகிரதி  சந்திரபாகா  போன்ற  புண்ய நதிகளாக  கலந்து அவதரித்ததால்  நாம்  இம்மாதிரி  நதிகளில்  ஸ்நானம்  செய்து புண்ய  பலன்  பெறுகிறோம்.  

 நமது கதையில் வரும் புலி  சிவ பெருமானின்  ஒரு அவதாரம்.  நார்ஸி  மேத்தா   எப்போதும் புலித்தோலோடு காணப்பட்டதால்  சிவனின்  பூலோக  அவதாரம்  என்பார்கள்.

இளம்  வயதிலேயே  ஒரு  காட்டில்  சிவ  தரிசனம்  பெற்றவர் மேத்தா.  சிவனிடமிருந்து கிருஷ்ணன் மகிமையை  தெரிந்து கொண்டார்.  நேரே  கிருஷ்ணன்  வாழ்ந்த  புண்ய  இடங்களுக்கு  எல்லாம்  க்ஷேத்ராடனம் போனார்.   துவாரகா நாதனுக்கு  எதிரே வணங்கி நின்ற  மேத்தாவை  சிவன் என்று  தெரிந்தது. புரிந்தது.   ஹரியும்   ஹரனும்   இணை பிரியாதவர்கள்  அல்லவா.  ''நீலகண்டா,  உன்னை  கண்டதில்  எனக்கு  மகிழ்ச்சி''  என்றான்  ஹரி.''

''நான் புலியாக இருந்தபோது  எனக்கு  உன்  நினைவு வரச்செய்தவன்  பிபாஜி  என்ற  விட்டல  பக்தன். நீ தானே  விட்டலனும்  கூட ''  என்று  சிரித்தார்  மேத்தா. ' அதனால்  தான்  விட்டல  நாமம் எங்காவது  கேட்டாலே  போதும், சகலமும்  மறந்து  ''விட்டலா  விட்டலா''  என்று  ஸ்மரித்துக்கொண்டே  ஆடக் கிளம்பிவிடுவார்  மேத்தா .  சிவனுக்கே  ஆடலரசன்  நடராஜன்   என்று பெயர்.  நடனப்ரியன்.  ஹரிக்கோ, விட்டலனுக்கோ  கோபிகளுடனும்  பக்தர்களுடனும்  சைதன்யர்களுடனும்  தனை மறந்த பக்தி பரவச ஆடல்,  ராசக்ரீடை பிடிக்கும்.  

ஆகவே    ஹரியும்  ஹரனும்   ஒருவரை ஒருவர்  ஆடலில்  மிஞ்சுபவர்கள் என்று  சொல்லலாமா?   சுவாமி  ஹரிதாஸ்  கிரி,  விட்டல்  தாஸ்,  உடையாளூர்  பாகவதர்,   போன்ற  எண்ணற்ற  மஹா புருஷர்களின்  அபங்கங்கள் கேட்கும்போது  தலையாவது  கையாவது  ஆடுகிறது நமக்கு.  ஆடலும்  பாடலும்  ஒன்றை  ஒன்று  பிரியாதவை.

 

SARNAGATHI

                                              பூரண  சரணாகதி  

ஆசை ஆசையாக மயிலிறகு போல்  தடவி ,  பார்த்து பார்த்து வளர்க்கும் அம்மா கூட  தான் குழந்தையை அடிக்கிறாள். ஏன் ? அது  தப்பு செய்யும்போது  திருத்த வேண்டும் என்பதற்காக. 

அப்படி தான் நீ  கிருஷ்ணா, காக்கும் கடவுள்  என்று பெயரெடுத்தாலும், அப்பப்போ வந்து கெட்டவர்களை, தீயவர்களை, ராக்ஷஸர்களை எல்லாம் காலி செய்கிறவன்.  ஓரு  கிலோ கத்திரிக்காயில்  மூன்று நான்கு  சொத்தை இருந்தால் அதை தூக்கி வெளியே  போடுவது போல்.

உனது காருண்யம் எல்லையில்லாதது.  ஏதோ நூறு தடவை பொறுமையாக இருந்தாய் சிசுபாலனுக்காக. அவன் தாய்க்கு கொடுத்த வாக்குக்காக  அவன் உன்னை இழிவாக பேசும்போதெல்லாம் சிரித்துக்கொண்டே தானே  இருந்தாய்.  ராவணன்  நிராயுதபாணியாக இருந்தபோது  கூட அவனைக் கொல்லாமல் , இன்று போய் நாளை வா என்று சொன்னவனா யிற்றே நீ.

ஒரு காட்சி  என் மனத்திரையில்  ஓடுகிறது. சொல்கிறேன்.  

அடர்ந்த காடு ஒன்றில் பறவைகள் மிருகங்கள் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது  வேடர்கள் அவற்றை வேட்டையாட வருகிறார்களே. வேட்டையாடுவது அவர்கள் ஜீவனம். என்ன செய்வது?

பூர்ண கர்ப்பமாக ஒரு மான். வேகமாக ஓடமுடியவில்லை.  எந்த நேரமும் பிரசவித்து மான் குட்டி பிறக்கும் நேரம்.  நிம்மதியின்றி அந்த  மான் ஜாக்கிரதையாக ஆபத்தில்லாத ஒரு இடம் தேடி குட்டி போட அலைகிறது.   ஒரு இருட்டு  மூலையை கண்டு பிடித்துவிட்டது.  இங்கு இருந்தால் மற்ற மிருகங்கள் கண்ணிலிருந்து தப்பலாம்.   கீழே  புல்தரை  மெத்து மெத்தென்று நல்ல படுக்கையாக அமைந்துவிட்டது.  அந்த  இடத்திற்கு ஒரு பக்கம்  சலசலவென்று ஓடும் காட்டாறு.   ஆகவே  மிருகங்கள் ஆபத்து  அந்த பக்கத்திலிருந்து வராது.   மான் தரையில் படுத்துவிட்டது. பிரசவவிக்கப் போகிறது. 

மான் மேலே பார்த்தது.    ''டம டம''  என்று  பெரிய இடி சத்தம்.    காதை செவிடாக்கும் சப்தம். பளிச் பளிச்சென்று மின்னல் வெட்டுக்கள்.  மின்னல் இடி விழுந்து  மான் படுத்திருந்த பக்கத்தில்  இருந்த  மூங்கில் காட்டில் தீ பிடித்ததால்  மூங்கில் மரங்கள் கபகபவென்று எரிய ஆரம்பித்துவிட்டது.   ஆபத்து ஏதாவது வந்தால்  இனி அந்த பக்கம் ஓடி தப்ப முடியாது.   தீ  கொஞ்சம் கொஞ்சமாக இந்த பக்கம் வேறு வந்து கொண்டிருக்கிறது.  

திரும்பி  ஆற்றங்கரை பக்கம் பார்த்தது மான். ஐயோ  இது என்ன ஆபத்து.  ஒரு  கருப்பு  ஆள்,  வேடன்,   ஆற்றிலிருந்து  கரை ஏறி, மான் இருந்த பக்கம் கையில்  வில் ஈட்டி அம்புடன் வந்து கொண்டிருந்தான்.

அடடா  இது என்ன ஆபத்து,  ஒரு பக்கம் நெருப்பு,  இன்னொருபக்கம்  ஆற்றில் இறங்கி ஓட முடியாது. வேடன் வருகிறான். வடக்கு மூலையிலிருந்து அப்போது தான  ஒரு சிம்ம கர்ஜனை. பசியோடு ஒரு சிங்கம் இறை தேடுகிறது.  மான் வாசனை மூக்கை துளைத்து விட்டது போல் இருக்கிறது.  ஆஹா  ஒரு நல்ல ஆகாரம் அருகிலேயே  எங்கோ இருக்கிறதா?

பிரசவ வலி அதிகரித்துவிட்டது. இதோ  இன்னும் சில நிமிஷங்களில் புள்ளி மான் குட்டி ஒன்று புத்தம் புதிதாக  பூமியில் தோன்றப்போகிறது.  தாய் மான்  என்ன செய்யும்? அது முதலில் பிழைக்குமா?குட்டி ஈனுமா? அதுவும் தப்புமா?

மானின் கண்கள்  தீனமாக எதையோ பார்த்தது. மனதில் யாரை வேண்டுகிறது? எழுதும் எனக்கு புரியவில்லையே?  வேடன் மானை பார்த்துவிடுவானா?   சிங்கம் முதலில் விழுங்குமா?  நெருப்பு பரவி  சூழ்ந்துகொண்டு  மான்  தீயில் வெந்து போகுமா?  இந்த நிலையில் பிரசவம் சுகமாக  நிறைபெறுமா ? என் அழகிய புள்ளி புள்ளி   குட்டியே  உன்னை பார்க்க வேண்டாமா நான்.....? கொஞ்சவேண்டாமா?  யார் உதவுவார்கள்?

மான் கண்ணுக்கு  யார் தோன்றி இருப்பார். கவலைப்படாதே நான் இருக்கிறேன் என்று சொல்லி இருப்பார்?  என்ன சந்தேகம். புல்லாங்குழல் ஊதிக்கொண்டு மான்களோடு விளையாடும் கிருஷ்ணனுக்கு  தாய் மானுக்கு வந்த  இந்த  ஆபத்து, நெருக்கடி, தெரியாமலா போகும்?

ஆம். தெரிந்திருக்கிறது.  மேலே  பார்த்த மான் கண்களுக்கு   யாரோ தெரிந்தார்கள். அதற்கு நிம்மதி வந்தது.  கண்ணை மூடிக்கொண்டு ஒரே  முக்கு  முக்கி, அழகிய குட்டிமானை  வெளியே தள்ளியது.  இத்தனை ஆபத்துகள் சூழ்ந்திருக்க கவலையே இல்லாமல்  மான் குட்டி உலகை மிரள மிரள  ஆச்சர்யமாக  பார்வையிட்டது.   

திடீரென்று ஏன்  வேடன் அலறினான்?  அவன் தான் தூரத்தில் தரையில் படுத்திருக்கும் தாய் மானைப் பார்த்து விட்டானே. அம்பை   குறிவைத்து மானை நோக்கி விடும் நேரம்... ஐயோ,   பளிச் என்று ஒரு வெளிச்சம்.   மின்னல் அவன் கண்ணை பறித்து விட்டதே.  அந்த ஒளி கண் பார்வையை மழுங்க செய்த நேரம்  அவன் தொடுத்த அம்பு  திசை மாறி சரியாக சிங்கத்தின் மார்பில் பாய்ந்து அந்த க்ஷணமே சிங்கம் சுருண்டு விழுந்து இறந்தது.   மின்னல், இடியை தொடர்ந்து ஒரு பேய் மழை ஜோ என்று பெய்ய மூங்கில் காட்டு தீ அணைந்தது..... எங்கும் அமைதி,  நிசப்தம். பிரசவம்,   ஆபத்துகள், அவற்றின்  நீக்கம் எல்லாம் ஒரே சமயமா?

தாய் மான் மெதுவாக எழுந்து குட்டியை உடல் முழுதும் நக்கி கொடுத்தது.  தாய் அன்பு. 

தாய் மான் மேலே  பார்த்தபோது கிருஷ்ணனின் கண்களுக்கு  மான்  திரௌபதியை  நினைவூட்டி இருக்கலாம். க்ஷண நேரத்தில் அவள் மானத்தை  காப்பாற்றியது போல்  மானுக்குமா உயிர் பிச்சை? வாஸ்தவம் தான்.  திரௌபதி எல்லாவிதத்திலும் முயற்சி  செய்து ஒரு வழியும் தெரியாமல், ஒரு உதவியும் கிடைக்காமல்    ஹே  கிருஷ்ணா, ஆபத் பாந்தவா  என இருகைகளையும் உடலைவிட்டு  மேலே கூப்பி சரணடைந்தான் .  மான்  எங்கும் ஓட  தனது சக்தி எல்லாம் இழந்து  நாலா பக்க  ஆபத்திலிருந்து தன்னையும், தனது சிசுவையும் காப்பாற்ற மேலே பார்த்தது.   அதால் ''ஆபத் பாந்தவா''   என்று கண்ணால் மட்டும் தான் சொல்ல முடிந்ததோ? பூர்ண சரணாகதியோ?.

Friday, November 29, 2019

THIRUK KOLOOR PEN PILLAI



திருக்கோளூர் பெண்பிள்ளை ரஹஸ்யம்   J K  SIVAN 


 

      18 அந்தரங்கம் சொன்னேனோ த்ரிஜடையைப் போலே

பன்றிகளுக்கு இடையிலே ஒரு மான் குட்டி  போல் கழிசடைகளுக்கு  இடையே ராவண தேசத்தில் இருந்தவள் திரிசடை. 


 ராவணன் சீதையை சிறைபிடித்து  அசோகவனத்தில் அவளை காவலில் வைத்தபோது சுற்றியிருந்த  அரக்கிகள் நடுவே ஒரு இதயமுள்ள பெண்ணாக  சீதைக்கு துணையாக இருந்தவள்  திரிசடை.  அவள் வளர்ப்பு அப்படி.  விபீஷணன் மகள் அல்லவா?


இராமனின் இலங்கை நோக்கிய பயணம் பற்றிக் கூறி தேற்றுவாள் . தைரியம் சொல்வாள்.
காதில் விழுந்த விஷயங்களை சீதைக்கு சொல்வாள்.  

' கவலைப்படாதீர்கள்   சீதாதேவி,   நான் கேள்விப்பட்ட விஷயம் எதுவென்றால் ராமன் இலங்கையை நோக்கி வந்து கொண்டிருக்கிறாராம். ஒரு பெரிய  படை வருகிறதாம் ''

தாகம் தொண்டையை வரள  வைக்கும் போது  ஒரு மிடக்கு தண்ணீர் அம்ருதம் என்கிறமாதிரி திரிசடை ஒருத்தி தான்  சீதைக்கு புத்துயிர் அளித்தவள் .

'' திரிசடை, இதைக் கேள் அம்மா.   புழு வண்டால்  விடாமல்  கொட்டப்பட்டு  தானும் வண்டாவது போல்  ராம த்யானம் என்னையும் ஒருநாள் ராமனாக்கி விடும் அல்லவா? அப்புறம்  எங்களுக்குள்  பிரிவு ஏது ?'' என்பாள்  சீதை. 

''ஆமாம்   நீங்கள்  ராமனாகி விடுவீர்கள்.  அதே சமயம் உங்களையே நினைத்துக் கொண்டிருக் கும் ராமனும் சீதையாகி விடுவாரே!  என்று சிரிப்பாள். ஆனால்   அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான். நீங்கள் ராமனாகி விட்டால் அங்கிருந்து இங்கே வந்து ராக்ஷஸர்களை வென்று உங்களை மீட்க வேண்டிய வேலை இல்லையே.'' என்பாள். சீதை  முகத்தில் சிரிப்பு.

ராவணனின் கட்டளைப்படி  இதர  ராக்ஷஸிகள்  சீதையை கொன்று விடப்போவதாக, தின்று விடப்போவதாக  பயமுறுத்தினார்கள்.  அப்போது  திரிசடை  ஒரு விஷயம்  எல்லோரும் கேட்கும்படி  சொல்கிறாள்.

''எனக்கு  நேற்றிரவு தூக்கி வாரி போட்டது. ஒரு பயங்கர கனவு.  நமது ராஜா  இராவணன் சிகப்பு நிற ஆடை  அணிந்து   தெற்கே  போகிறார். அவர் வாகனம் ஒரு  கழுதை.  அப்போது  மேலேயிருந்து  ஆயிரக்கணக்கான  வெள்ளை  நிற  ஹம்ஸங்கள், அன்னப் பறவைகள், தூக்கிக் கொண்டு வரும் பளபளவென்று  ஜொலிக்கும்  தங்க விமானத்தில்  வெள்ளை நிறத்தில் புஷ்பங்கள் தொடுத்த மாலை சூடிக்கொண்டு ராமர் வந்து இறங்கி, சீதையை  இங்கிருந்து அழைத்து போகிறார்.  இது நல்ல கனவு தான்.  இது தான்  கடைசி சந்தர்ப்பம். நீங்கள் உயிர் தப்ப வேண்டுமானால்  இப்போதே  சீதாதேவியிடம்  உங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு  தஞ்சம் அடைந்து விடுங்கள். உயிர் போனபின் சரணடைவது முடியாது.  ராவணன் தெற்கு நோக்கி போகிறார் என்றால் எமனுலகு போகிறார் என்று அர்த்தம். அப்புறம் உங்கள் கதி?
விடியற் காலை கண்ட கனவு நடக்கும்.    ராமனின் அம்புகளுக்கு இரையாகாமல் தப்ப ஒரே  உபாயம் சீதையின் காலைப் பிடித்துக் கொள்வது தான். 

ராம ராவண யுத்தம்  நடந்தது.    முதல் நாள் முதல் கடைசிவரை அன்றாடம் சீதைக்கு  விஷயங்களை சொல்லியவள் திரிசடை.

ராமானுஜரே  இப்போது சொல்லுங்கள். நான் ஒரு போதாவது திரிசடை சீதைக்கு  தைரியம் சொல்லி, மனத்துக்கு திருப்தி அளித்தது போல் யாருக்காவது நல்லது செய்ததுண்டா? எந்த விதத்தில் இந்த திருக்கோளூர்  திவ்யதேசத்தில் நான் வசிக்க  தகுதி உள்ளவள்?

ராமானுஜர்  பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டே  அவளது அடுத்த 19வது  உதாரணம் யாராக  இருக்கும் என்று நம்மைப்போல் யோசிக்கிறார்.

LAST WISH




              சிறு பெண்ணின் ஆசை   J K  SIVAN 

 75 வருஷங்களுக்கு  முன்னால்   ''ரங்க ராட்டினம்'' என்ற  ஒரு பெரிய  விளையாட்டு சாதனத்தை   கிராமங்களில் கொண்டுவருவார்கள். பெரிய  வட்டமான  குடை  அதில்  நிறைய கம்பிகள் தொங்கும். ஒவ்வொன்றிலும்  குதிரைகள், யானைகள்,சோபாக்கள். அதில் ஏறி உட்கார்ந்து கெட்டியாக பிடித்துக் கொள்ளவேண்டும்.    நான் குதிரை பிரியன். அதன் மேல் தூக்கி உட்கார வைப்பார்கள். குதிரையின் முதுகில் உள்ள கெட்டி கம்பியை கட்டிப்பிடித்துக்கொண்டு சுற்றுவேன். 

குடையின் மத்தியில்   ஒரு பெரிய  கனமான  தண்டு போல்  இரும்புத் தூண்  தாங்கி நிற்கும். ரெண்டு ஆட்கள் கைப்பிடி போல் தடி கம்பியை  தூணின் ரெண்டு பக்கமும் பக்கம்  சுற்றும்போது  குதிரை யானை, சோபா எல்லாம் சுற்றும். வேகம் அதிகரிக்கும். சவாரி ஆனந்தமாக இருக்கும். பத்து சுற்று முடிந்து இறக்கி விடுவார்கள். காசு கொடுத்தால் மறுபடியும் சுற்றலாம். பிற்காலத்தில்    GIANT  WHEEL    ரோலர் கோஸ்டர் போன்ற விளையாட்டுகள் இதன் அடிப்படையில் தோன்றி  குழந்தைகளை கவர்ந்தன. இன்னும் கூட.  

எங்கள் காலத்தில் மேலே சொன்ன ரங்க ராட்னம்  எக்சிபிஷனில் திருவிழாக்களில் மட்டுமே  காணப்பட்டது. 

இனி விஷயத்துக்கு வருவோம். 

அமெரிக்காவில் ஒரு  பெரிய  ஆஸ்பத்திரியில்  ஒரு பத்து வயது பெண் .
 எவ்வளவோ போராடியும்  தோற்று போய்விட்டது.  காசு தண்ணீரானதே தவிர கண்ணீரை துடைக்கவில்லை. 
தீராத புற்றுநோய்க்கு அந்த குழந்தை அடுத்த பலி.   140 நாள்  அதிக பக்ஷம்.   அவள் பூலோக வாழ்க்கை முடியப்போகிறது.  பள்ளிப் படிப்பை ஆஸ்பத்திரி நிறுத்தியது. 
 தனது வியாதி என்னவென்றும் , தனது முடிவு இன்னும் சில நாள்  மட்டும் தான்  என்றும் அப்பெண் அறிவாள்.
 பெற்றோர்கள் அவளோடு  ஆஸ்பத்திரியில் குடியிருக்கிறார்கள். 
''அம்மா எனக்கு ஒரு நோட் பேனா கொடு '' அந்த பெண் ஒருநாள்  கேட்டபோது அம்மா கொடுத்தாள் .  பெண் ஆங்கிலத்தில் எழுதிய கவிதையின் சாரம்.

ரங்கராட்டினத்தில்  குழந்தைகள் சுற்றுவதை பார்த்ததுண்டா?
மழை  டப் டப் பென்று   தரையில் இடித்துக்கொண்டு  வானத்திலிருந்து இறங்கும் சத்தம் கேட்டதுண்டா?
பட்டாம்பூச்சி அங்குமிங்குமாக  திசை மாற்றி  பறப்பதை பார்த்ததுண்டா?
சூரியன்  மலைவாயில் விழும்போது  தகதகவென சிவப்பு பந்தாக கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி முழுதும் மறைந்து இருள் சூழ்வதை கவனித்ததுண்டா?

அவசரம் ஏன்?. மெதுவாகவே  செல்.. 
உன் ஆட்டத்தில் வேகம் எதற்கு.  வேகம் விவேகம் இல்லை என்று தெருவில் எழுதி இருக்குமே. 
காலம் நீண்டதே இல்லை. குறுகியது தான் .  எனக்கே தெரியுமே. 
பாட்டு ஒலிக்கிறது.. சற்றுநேரத்தில் ஓய்ந்து விடும்.  அப்புறம்?  
 ஆகவே மெதுவாகவே  போ.  

நாள் தோறும்   ஓடி பறக்கும்  ஈயை பார்க்கிறாயே 
எப்படி இருக்கிறாய்  என ஒருநாள் கேட்டதுண்டா?
அதன் பதில் காதில் விழுந்ததா ?
காலை  விடிந்தது. மாலையில்  முடிந்தது.  படுக்கையில் படுத்தாயா?
மறுநாள் செய்யவேண்டிய ஆயிரத்தெட்டு வேலைகள் ஒன்றன் பின் ஒன்றாக மனதில் ஓடுமா?

அவசரம்   ஏன்?. மெதுவாகவே  செல்.. 
உன் ஆட்டத்தில்  வேகம் எதற்கு.  வேகம் விவேகம் இல்லை என்று தெருவில் எழுதி இருக்குமே. 
காலம் நீண்டதே இல்லை. குறுகியது தான் .  எனக்கே தெரியுமே. 
பாட்டு ஒலிக்கிறது.. சற்றுநேரத்தில் ஓய்ந்து விடும்.  அப்புறம்?  
 ஆகவே மெதுவாகவே  போ.  

வீட்டில் பிள்ளையிடம்  சொல்வாயே  நினைவிருக்கிறதா?
'' இன்றைக்கு  இது போதும்,  நாளைக்கு  மீதியை  செய்வோம் ''
  ஏன்  நிறுத்தினாய்.  உன்  அவசரமா?  
 அவன் துயரம் அறிவாயா?

நட்பு அறுந்து போய்  நல்ல நண்பனை  காணோமா?
உனக்கு தான்  நேரமே இல்லையே
 ''என்னடா சௌக்யமா ? ' கேட்க  எப்போது நேரம்?  

அவசரம்   ஏன்?. மெதுவாகவே  செல்.. 
உன் ஆட்டத்தில்  வேகம் எதற்கு.  வேகம் விவேகம் இல்லை என்று தெருவில் எழுதி இருக்குமே. 
காலம் நீண்டதே இல்லை. குறுகியது தான் .  எனக்கே தெரியுமே. 
பாட்டு ஒலிக்கிறது.. சற்றுநேரத்தில் ஓய்ந்து விடும்.  அப்புறம்?  
 ஆகவே மெதுவாகவே  போ.

தலை தெறிக்க ஓட்டம், எங்கோ எதையோ அடைய....
அந்த அவசரம் உன்னை
போகும் வழியில் காணும் அற்புத  கேளிக்கையை  காணாத  குருடனாக்கியதோ?
கவலை மேல் கவலை பட்டு நாளெல்லாம் அவசர ஓட்டத்தில் 

வாழ்க்கை ஒரு பிரிக்கப்படாத 
பொட்டலமாக  தூக்கி எறிந்தாயிற்று.

வாழ்க்கை ஓட்டப்பந்தயம் இல்லை.
அவசரம்   ஏன்?. மெதுவாகவே  செல்.. 
உன் ஆட்டத்தில்  வேகம் எதற்கு.  வேகம் விவேகம் இல்லை என்று தெருவில் எழுதி இருக்குமே. 
காலம் நீண்டதே இல்லை. குறுகியது தான் .  எனக்கே தெரியுமே. 
பாட்டு ஒலிக்கிறது.. சற்றுநேரத்தில் ஓய்ந்து விடும்.  அப்புறம்?  
 ஆகவே மெதுவாகவே  போ.
மெதுவாகவே நட.   ஓடாதே.
கொஞ்சம் கொஞ்சமாகவே  செல் ,
பாட்டை முழுதும் கேள் 
அது முடியும் முன்பே.....

இன்னும் எண்ணி  140 நாள் தான்  வாழ்வு  என்று தெரிந்தும் ... இந்த பாட்டை எழுதிய அந்த பெண் தான் எழுதியதை  எல்லோரும் படிக்கவேண்டும் என்று விரும்பினாளாம். எல்லோருக்கும் சொல்லலாமே, என்று கடைசி ஆசையை  அந்த குழந்தை சொல்லிஇருக்கிறது. 
'' என்போல் வேண்டாம்... வாழ்க்கையை நிதானமாக ரசித்து ருசித்து வாழுங்கள் என்கிறது. என்னால்  அப்படி  முடியாது''  என்கிறதோ? 

 படித்து  வளர்ந்து முன்னேறி கல்யாணம் பண்ணிக்கொண்டு குடும்பம், குழந்தை என்று கனவு காணமுடியாது.  மற்றவர்கள் சந்தோஷமாக வாழட்டும் என்ற எண்ணம் இதை எழுத வைத்திருக்கிறதோ?  எவ்வளவு உயர்ந்த எண்ணம் !

அவளை உயிரற்று கட்டிலிலிருந்து  அகற்றியபோது தலையணை அடியில் 
அம்மா கொடுத்த  நோட்டு,
 அதில் இந்த பாட்டு. 
அதை எடுத்த வெள்ளை  கோட்டு    
--  அவளை  கடைசியாக  தொட்ட  டாக்டர். பெற்றோரிடம் கண்ணீருடன் கொடுத்து விட்டு  சொன்னது:  
எல்லோரிடமும் காட்டு. 




THULASIDAS





துளசி தாசர்  J K SIVAN
                                                 
            வீரர்கள்  முன்னே ராமர் பின்னே....

''அப்படியா?  கல்லில் செய்த  மாடு  எழுந்து நின்று சாப்பிட்டதா?  இறந்த மனிதன் பிழைத்தானா?  என்னால் நம்ப முடியவில் லையே?  ஊர்  அதிகாரிகளை கூப்பிடுங்கள். இது உண்மை  என்று பொறுப்புள்ள அவர்கள் சொல்லட்டும். நம்புகிறேன்.''  என்றார்  டில்லியில் சக்கரவர்த்தி அக்பர்.

கிராம அதிகாரிகள், கோவில் அதிகாரிகள், பொதுமக்களில் சிலர்  எல்லோரும்  நடந்தது அத்தனையும் சத்தியமாக உண்மை.  துளசிதாஸரின்  ராம பக்தி ஒன்றே காரணம் என்று அடித்து (அக்பரை அல்ல, தங்கள் தலையில்) சொல்லிவிட்டார்கள்.  அக்பருக்கு துளசிதாசரை உடனே வரவழைக்கவேண்டும் நேரில் அவரை பார்த்து ஏதாவது அதிசயம் பெறவேண்டும் என்று தோன்றிவிட்டது. அகபர் ஏகசக்ராதிபதி. சர்வாதிகாரி.  அவர்  வார்த்தையை எவர் மீற முடியும்?   
                                                                                                    
 மந்திரிகளை கூப்பிட்டார்.  ''நீங்கள் அந்த வைஷ்ணவர்  துளசிதாசை இங்கே வரவழையுங்கள். நீங்கள் அனுப்புகிற ஆள்  ப்ரம்ம ஞானம் தெரிந்தவனாக இருக்கவேண்டும். சாமர்த்தியமாக பேசவேண்டும்.  அவன் பேச்சை கேட்டு துளசிதாஸ் உடனே என்னிடம் வரவேண்டும். சௌகர்யமாக ஒரு பல்லக்கு கொண்டு போகவேண்டும். சீக்கிரம் அவர் இங்கே வரவேண்டும்.அவர் வாய் மூலமாக நடந்ததை நான் கேட்கவேண்டும். ஜல்தி ''. ஆணையிட்டா்் அக்பர். 

ஒரு சிறு படைவீரர்கள் கூட்டம்  பல்லக்குடன் சென்றது. சில வித்துவான்கள், பண்டிதர்கள்  கூடவே   சென்றார்கள்.  காசியை அடைந்தார்கள்
துளசிதாசர் ஆஸ்ரமத்தில்  பண்டிதர்கள் அன்றிரவு தங்கினார்கள்.  சக்ரவர்த்தியின்  அழைப்பு தெரிவிக்கப்பட்டது. ''உங்களை பற்றி கேள்விப்பட்ட பிறகு சக்ரவர்த்தி உங்களைப் போன்ற உயர்ந்த பக்த சிகாமணியை நேரில் பார்த்து வணங்க ஆவல் கொண்டுள்ளார். நீங்கள் உடனே புறப்படுங்கள்.  எல்லா சௌகர்யங்களும்  ஏற்பாடு செய்திருக்கிறார். 

''  ராமா, உன்  நாமம் அதன் மஹிமை  நாடு முழுதும் பரவவேண்டும்.  சுயநலமில்லாத வைஷ்ணவர்கள்,  நாடு முழுதும் பிரயாணம் செய்து இதை பரப்பவேண்டும் .  ஹரியின் கட்டளை இது. அறியாமை ஒன்றே மக்களை சூழ்ந்து இருக்கிறது.  கொடியவர்கள், தீயவர்கள் , அறியாமை இவற்றிலிருந்து  மக்களைக்  காப்பாற்ற , நல்வழிப்படுத்த,   அரசனே முன் வந்தால்  அது ராமன் அருள். அதற்கு நான் உதவவேண்டாமா. இதோ உடனே புறப்படுகிறேன் உங்களோடு '' என்கிறார்  துளசிதாசர்.

வழியெல்லாம் ஹரிநாம பஜனையோடு செல்கிறார். டில்லி வந்து சேர்ந்தார். அக்பர் அவர் பல்லக்கு  அரண்மனையை நெருங்கியதும் தானே வாசல் வரை வந்து, வணங்கி உபசரித்து.  தன்னுடைய  சிம்மாசனத்தில் அவரை அமர்த்தினார் .  அவரது ஆட்களுக்கு கட்டளையிட்டார்   

''இவரை இனி  எந்த காரணத்தை கொண்டு  இங்கிருந்து திரும்பி போக, அரண்மனையிலிருந்து வெளியே போக  அனுமதிக்கக்கூடாது. இது என் கட்டளை. மீறினால் கடும் தண்டனை''  என்று உத்தரவு பிறந்தது.

அக்பர்  துளசிதாசருக்கு ஷோடசோபசாரம் செய்விக்க  ஏற்பாடு செய்திருந்தார்.  பிறகு துளசிதாசரிடம்  '' சுவாமி உங்கள் சக்தி பற்றி கேள்விப்பட்டேன். நீங்கள் கடவுளாக மாறி விட்டீர்கள். ஒரு கல்லில் செதுக்கிய மாட்டின் உருவத்தை நிஜ மாடாக்கி  நிற்க வைத்து மூச்சு விடவைத்து, அது புல்லையும் கீரைகளையும்  கடித்து சாப்பிடவைத்தீர்களாம்.  உங்கள் ஆசிர்வாதத்தால் இறந்து போன ஒரு பிணம் மீண்டும் உயிர் பெற்றதாம்.  இதெல்லாம் உலகில் நடக்காத, நடக்க முடியாத காரியங்கள்.  உங்கள் சக்தியை நானும் அறிந்து கொள்ளவேண்டும். எனக்கும்  கற்பிக்க வேண்டும் '

''மஹாராஜா, நீங்கள் சொன்னதெல்லாம் என் தெய்வம் ஸ்ரீ ராமன் கருணை. நான் ஒரு சாதாரண எதற்கும் உதவாத ஒரு ஏழை பக்தன். எனக்கு என்று ஒரு சக்தியும் கிடையாது.  என் இதயம் பூரா ஸ்ரீ ராமனையே வைத்து வழிபடுபவன்.  என்னிடமிருந்து எதிர்பார்ப்பது தவறு '' என்றார்  துளசிதாசர்.

''சரி ஐயா. உங்கள் சக்தியை மறைத்து வைத்துக் கொண்டு   ஏதோ ராமன் என்ற பெயரை சொல்கிறீர்கள்.  அப்படியானால் சக்தியுள்ள அந்த  ராமனை எனக்கு காட்டுங்கள்.   அந்த சக்தியுள்ள  ராமனை எனக்கு நீங்கள் காட்டும் வரை இங்கிருந்து நீங்கள் திரும்ப முடியாது.''

அக்பர் அரண்மனைக்குள் சென்று விட்டார் .மந்திரிகளிடம்  துளசிதாசர் ராமனை எனக்கு காட்டினால் தான் அவர் ஒரு சிறந்த  வைஷ்ணவ பக்தர்  என ஒப்புக் கொள்வேன். அதுவரை அவர் இங்கிருந்து நகரக்கூடாது.

துளசிதாசரிடம்  மந்திரி ப்ரதானிகள் ''ஐயா  உங்களை இங்கிருந்து எங்கும் செல்ல  ராஜா அனுமதிக்கவில்லை. சீக்கிரம்  ராமனை அழைத்து அக்பர் சக்ரவர்த்தியிடம் காட்டி விடுங்கள். நீங்கள் காசிக்கு திரும்பி போகலாம்''
துளசி தாசர் இதைக் கேட்டு அதிர்ச்சியோ கோபமோ, பயமோ கொள்ளவில்லை.  கண்களை மூடி மனதில் ஆஞ்சநேயனை வேண்டினார். எதிரில் மனதில் தோன்றினான் ஹனுமான்.

''துளசிதாசா  எதற்கு என்னை அழைத்தாய்.?''

''எனக்கு எதை எப்படி செய்வது என்றே  புரியவில்லை. என் சித்தத்தை தெளிவித்து என்னை  வழிநடத்த உங்களை கூப்பிட்டேன்''

'ம்ம்ம்..   விஷயத்தை சொல்லுங்கள்?'

''என்னால்  ராமனுக்கு எத்தனை இடையூறுகள் பாருங்கள் என்று  துளசி தாசர் அக்பர் கட்டளையை பற்றி கூறினார். ராமனை எப்படி அவருக்கு நான் காட்டுவது?''

''அவ்வளவு தானே . என்னிடம் பிரச்னையை தள்ளி விட்டு பேசாமல் இருங்கள்.'' என்கிறார் ஹனுமான். தனது  வானர சைன்யத்தை கூப்பிட்டார். 

மழை தூற்றல் நின்றதும்  ஈசல்கள் புறப்படும் அதுபோல்  வானம் முழுவதையும் அடைத்துக் கொண்டு  வானர சேனை வந்து இறங்கிக் கொண்டே இருந்தது.  மழை பெய்து முடிந்ததும் புல்  காளான் எல்லாம்  திடீரென்று முளைக் குமே  அதுபோல் எங்குநோக்கினும் டில்லி முழுதும் வானர வீரர்கள்.  ஆயிரம்  பதினா யிரம்  வானரங்கள்.  எல்லோரும்  ஹனுமனை வணங்கினார்கள். 

அந்த வானரர்களின் வீரன் அனுமனிடம் ''எங்களுக்கு கட்ட ளை இடுங்கள், காத்திருக்கிறோம் என்றான்.

''நீங்கள் சுதந்திரமாக என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று தோன்றுகிறதோ அதை யெல்லாம் திருப்தியாக செய்து மகிழுங்கள். டில்லி ராஜா நீங்கள் எப்படிப் பட்டவர்கள் என்று புரிந்து கொள்ளட்டும்''  என்றார்  ஹனுமான்.  

அப்பறம் நடந்ததை நான் எப்படி எழுதுவேன்? 
அடேயப்பா,  எங்கு நோக்கினும்  கட்டிடங்கள், மாளிகைகள் அரண்மனைகள் எங்கும் வானரங்கள் எல்லாவற்றையும் இழுத்து, இடித்து, கிழித்து, பிளந்து உடைத்து,  மரங்களையெல்லாம் வேரோடு பிடுங்கி கவிழ்த்து, எங்கும்  வீசின. எதிர்ப்பட்டோரின் மூக்கு முகம், தலை காது கை கால் என்று காயப்படுத்தின. பெண்கள்  ஆடைகளை  உருவின. நகைகளை பிடுங்கி வீசின.  எல்லோரையும் தூக்கி வீசின.  வீட்டுக்குள் புகுந்து  பாத்திரங்களை கவிழ்த்து, உடைகளை பற்றவைத்து, பொருள்களை  தெருவில் கொட்டி சேதப்படுத்தின.  ஒருவர் வீடு பாக்கி இல்லை. அரண்மனையிலும் சேர்த்து தான். நிறைய  தாடி மீசைகளை பிடித்து இழுத்து துன்பப்படுத்தின. சொல்ல முடியாத துன்பங்களை கண  நேரத்தில் நிகழ்த்தின.  டில்லி மாநகரம் முழுதும்  களேபரம். அதிர்ச்சி. நடுக்கம்.  கடைகள் சூறையாடப் பட்டன. பால் தயிர் என்று வீட்டுப் பொருள்கள் எல்லாம் தெருவில் கொட்டி கிடந்தன.  எல்லோரும் ஆரண்மனையில் ராஜாவை தேடி வந்து முறையிட்டார்கள்.  ராஜா  அக்பர் யாரிடம் போய் முறையிடுவார்  அவரது  500 மனைவிகளும் அடி உதை பட்டு சித்ரவதைக் குட்பட்டனர்.தண்ணீர் குடங்களை அவர்கள் மேல் சாய்த்து நனைத்தார்கள் வானரர்கள்.
 அக்பர் தறிகெட்டு வெளியே வந்தார்.

'' ராஜா என்ன அக்கிரமம் இது. ஊரெங்கும்  வானரங்கள் அட்டகாசம் பண்ணி பெருத்த நஷ்டம்  பொருட்சேதம், உயிர்ச்தேதம், காயங்கள். ஒருவர் பாக்கி இல்லை.   எங்கும் குரங்குகளாகவே காணப்படுகிறதே   என்ன நடந்தது?  எங்களுக்கு பாதுகாப்பு தாருங்கள்''  என்று கத்தினார்கள்.

சில நல்ல மந்திரிகள் பெரியோர்கள் அக்பரை நெருங்கி ''நம் எல்லோருக்கும்  இது போன்ற துன்பம் வரக்  காரணம் நீங்கள் துளசிதாசர் என்ற ராம பக்தரை கஷ்டப்படுத்தியது தான். உடனே அவரை அணுகி மன்னிப்பு கேட்டு விடுதலை செய்யுங்கள்.  டில்லி தலைகீழாக போய்விடும் போல் இருக்கிறது.  நிலைமை இன்னும் மோசமாவதை தவிர்க்கவேண்டும்.'' என்றார்கள். அக்பர் துளசிதாசரிடம் ஓடினார்.   தான்செய்தது தவறு என உணர்ந்து  இரு கரம் கூப்பி . விஷ்ணு பக்தரே ''இந்த வானரங்களை கொஞ்சம்  தடுத்து  நிறுத்தி  சேதத்தை  குறைக்க வேண்டும்.  என் அறியாமையினால் நான் உங்களை கொடுமைப்  படுத்தினேன்'' என்று கெஞ்சினார்  

துளசிதாசருக்கு  நடந்தது எதுவும் தெரியாது. அவர்  ஹனுமனை வேண்டி எப்படியாவது முடியுமானால் ராமரை அக்பருக்கு காட்டவேண்டும் என்று தான் கேட்டார்.
''அடாடா,   அக்பர் சக்ரவர்த்தி, வானரங்கள் வந்துவிட்டார்களா..  ஓ அப்படியானால் ஸ்ரீ ராமன் வருகிறார் என்று அர்த்தம்.  ஒரு சிறு படை மட்டும் தான் வந்திருக்கிறது. இனி தான் வானர வீரர்கள், தலைவர்கள் எல்லாம் வருவார்கள்.  பொழுது விடிவதற்குள் வரலாம். இப்போது வந்தது ஒரு சிறு கூட்டம். லக்ஷோபலக்ஷம்  வானர தளபதிகள், சேனாபதிகள் வந்தபிறகு ராமன் வருவார். காத்திருங்கள்.


'' ஐயோ இன்னும்  லக்ஷக்கணக்கில்  வானர வீரர்களா. வேண்டவே  வேண்டாம்.இதுவரை ராமர் பராக்கிரமத்தை, சக்தியை நான் உணர்ந்ததே போதும் குருநாதா. தயவு செயது என் தவறை மன்னித்து இந்த வானரங்களை முதலில் விலகச் செய்யுங்கள். பத்தாயிரம் குரங்குகளை எங்களால் சமாளிக்க முடியாதபோது லக்ஷமா..... ஐயோ நினைக்கவே  பயமாக இருக்கிறதே. அப்புறம் ராமர் லக்ஷ்மணர்களா..... '' என்னை மன்னித்து விடுங்கள். உடனே உங்களை மரியாதையோடு காசிக்கு அனுப்பி  வைக்கிறேன் என்று பல்லக்கை தயார்  செய்தார் அக்பர். பல்லக்கு கிளம்பியது.  வானரங்கள் மாயமாக மறைந்தன. 

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...