Saturday, January 5, 2013

kutti kadhai 71 ஆண்டாளும் தோழியரும் (3)




Kutti kadhai 71        ஆண்டாளும்  தோழியரும் (3)

ஆயர்பாடி எப்போதும் கோலாகலமான  ஒரு பூலோக வைகுண்டம் அல்லவா?  ஒரு சிறு நிகழ்ச்சியும்  அனைவரும் பங்குகொள்ளும்  வைபவமாக  ஆகி விடுவதில் என்ன அதிசயம்? ஆயர்பாடி சிறுமிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த ஆண்டாளோடு மார்கழி முப்பது நாளும் பாவை நோன்பு நோற்கிறார்கள் என்பது ஆயர்பாடி மக்களுக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுத்தது.  அனைவரும் அந்த  சிறுமிகளுக்கு  நல்ல ஆதரவு கொடுத்தார்கள்

இன்று மார்கழி 11ம்  நாளை  அவர்கள்   ஆவலாக எதிர் கொண்டார்கள். ஆண்டாள் தலைமையில் அனைத்து சிறுமிகளும் சேர்ந்து  தினமும்  காலை நாராயணனின்  அவதாரமான  கிருஷ்ணனை  போற்றி ராக  பாவங்களோடு பாடி ஆடி பரவசமாக வீடு வீடாக சென்று பெண்களை எழுப்பி நோன்பில்  பங்கு கொள்ள செய்வதல்லவோ வழக்கம்  கடந்த பத்து நாட்களாக.  இன்று  ஒரு செல்வ மிக்க கோபனின் பெண் வீட்டு வாசலில்  ஆண்டாள் மற்றவர்களோடு நின்று குரல் கொடுத்தாள்.   
"உன்னைத்தானடி அழகிய  பெண்ணே,  தங்க கொடியே,  படிப்படியாய் கறக்கும்  எண்ணற்ற ஆனிரை செல்வன் மகளே, எதிரிகளை பொடிக்கும்  வீரன் மகளே, எழுந்து வாடி,  உனக்காக உன் வீட்டு  முன்  வாயிலில்  நின்று  அனைத்து பெண்களும்  அந்த  கார்மேக வண்ண கண்ணன், மாதவன் கேசவன் மேல்  வாயினிக்க செவியினிக்க  பாடுகிறோமே  உன் குரலும்  இதில்  சேர வேண்டாமா?  இன்னும் என்னடி  தூக்கம்? வா வெளியே".
அந்த பெண்  மெதுவாக வெளி வந்தாள்.  அனைவரும்  வழக்கம்போல  நீராடி  விரதமிருந்து  அன்றைய நோன்பை  ஸ்ரீ கிருஷ்ணனுக்கே  அர்ப்பணித்து வேண்டி சந்தோஷத்தோடு  வீடு திரும்பினர்.

“ஆண்டாள்  என்னடி இன்று ஒருமாதிரி  இருக்கிறாய்?”
“ஒண்ணுமில்லை.  தினமும்  இவர்களை  நாம்  போய்  எழுப்பி,  கிளப்பி  நோன்பில்  பங்கேற்க  வைக்க வேண்டியிருக்கிறதே. அப்படி என்ன  தினமும்  நாம்  அவர்களை  எழுப்பும்  கடிகாரம் போல் ஆகி விட்டோமே என்று யோசித்தேன். ஆனால்  இப்படி இவர்களை  துயிலெழுப்பும் போதும்  அந்த  மாய கிருஷ்ணனின்  நினைவோடும் அவன் பெருமை பாடும்  பாசுரங்களை பாடிக்கொண்டும்  செய்வது  மனதிற்கு  இனிக்கிறது. வேடிக்கை  பார்த்தாயா இன்று  மார்கழி 12  
 இதோ அந்த  கோபாலன் வீட்டு வாசலில் (இந்த  வீட்டுக்கும்  நம்பர் 12, என்ன பொருத்தம்) நிற்கிறோம்.  இந்த வாசல் முன்புறத்தில்  மேலே கூரையில்லை.   மார்கழி பனி நம் தலை பூரா  மழையென  நனைத்து குளிர் காற்றில்  நம்மை  எங்கோ  கொண்டு செல்கிறது.  கீழே பார்த்தால்  இதென்ன அதிசயம். கோபாலன்  வீட்டு செழுமையான  எருமைகளில் ஒன்று என்ன செய்கிறது பாருங்கள் பெண்களே!  அதன் கன்று மெதுவாக அருகில் வர  பரம ஆனந்தத்தோடு அந்த தாய்  எருமை  அதன்  மடியில்  வெள்ளம் போல் தானாகவே சுரக்கும்  பாலை எல்லாம்  கீழே விழ வைத்து  இங்கு  நிற்கும் நம் கால்களை  நனைத்து  நம் கால்களுக்கு பால் அபிஷேகம்  நடக்கிறதே! மேலே பனிநீர் பன்னீருக்கு பதிலாக, கீழே பால் இரண்டு அபிஷேகம் ஒரே சமயத்தில்!! ஏன் தெரியுமா அந்த  கிருஷ்ணனை  நாம்  பாடிக்கொண்டே நிற்பதால் தான்.  கோபாலனின்   தங்கையே, உன்னைத்தாண்டி, நாங்கள் வாசலில் பாடி நிற்பது தெரிந்துமா இன்னும்  கதவு தாள் திறக்கவில்லை நீ.  எங்கள் பாட்டை கேட்டு  அண்டை அசல்  வீட்டு  வாசலில்  எல்லாரும்  எங்களை  வரவேற்று பால், பூ, பழங்களோடு நிற்க நீ என்னடி இன்னும் படுக்கையில்கிடக்கிறாய்  சீக்கிரம்  வந்து சேர்ந்துகொள்  இன்று உனக்கு பிடித்த ராவண சம்ஹார மூர்த்தி ராமனைத்தான் போற்றி  பாடுகின்றோம்.  வா சீக்கிரம் வெளியே”.

“இன்று  என்ன கிழமை ஆண்டாள்?”
“எல்லா  நாளும் கிருஷ்ணன்  நாள் தான் எனக்கு. இதோ மேலே பார். வெள்ளி முளைத்து விட்டது. அப்படியென்றால் வியாழன் முடிந்து விட்டது,  மார்கழி 13வது நாள்  என்று எடுத்து கொள்ளேன்?  சரி சரி, வாருங்கள். இன்று வராதவள் யார்? அவள் வீட்டுக்கு போய் எழுப்பி  கூப்பிட்டு கூட்டி செல்வோம். நல்லவேளை, இந்த பெண் வீடு  நம் வழிபடும்  நதிக்கரை அருகிலேயே இருக்கிறதே. வெள்ளியை பற்றி சொன்னபோதே அந்த வெள்ளை நிற  கொக்கு  பகாசூரன்  கிருஷ்ணனை மோதி  வாய் கிழிந்து  வசமாக மாட்டிகொண்டு வதமானதையே  பாடுவோம். தூங்கு மூஞ்சி பெண்ணே, சீக்கிரம் வெளியே வா,  அற்புதமாக  பறவைகளின்  கானம்  மரங்களில் கேட்க,  குளிர் நீரில்  சுகமாக  முகம் கை கால் உடம்பு  பூரா சில்லென்று  புத்துணர்ச்சி அளிக்க  எங்களுடன் சேர்ந்து  வந்து  நீராடு, நமது பாவை நோன்பு இன்று  நன்றாக நடக்கட்டும் . 
ஒரு சிறுமி மற்றோருவளிடம் சொல்கிறாள்:“ஆனாலும்  இந்த ஆண்டாள்  ஒரு ராணி தான்டீ.  என்னமா  நம் எல்லோரையும் கவர்ந்து நோன்பை  நடத்த  செய்கிறாள்.    

மார்கழி 13வது நாள்  நகர்ந்து  மார்கழி 14வதுக்கு  வழி விட்டது. .
ஆண்டாள்  இதை பார்த்தாயா  இந்த  கோமளா வீட்டு புழக்கடையில்  இதோ  தெரிகிறது பார் இந்த அல்லிக்குளத்தில் நேற்று  ராத்திரி பூத்த  ஆம்பல்  தூக்கம் வந்து  மெதுவாக  கூம்பிவிட்டது. பக்கத்தில் இருக்கும் அல்லி எல்லாமே   ஜோராக மொட்டவிழ்ந்து  மெதுவாக  மலர்கிறதே.  " அடியே  கோமளா,  உன் வீட்டு பின்புறம்  குளத்துக்கு அப்பால்  இருக்கும்  கிருஷ்ணன்  கோவிலுக்கு   சில துறவிகள்  செல்வதை  வெளியே வந்து பாரேண்டி?  வெள்ளையாக தாடி மீசை  பல்,  உடலில்  செங்கல் நிற  காவி உடை, கையில்  ள்ளை  சங்கு  பெருமாள் முன் நின்று  பரவசத்தோடு ஊத. வா,  அவர்களை  பார்த்துக்கொண்டே நாம்  நதிக்கு சென்று பிறகு கோவிலுக்கும்  போவோம்!”      

வைதேகி வீட்டு வாசலில் ஆண்டாள் நின்ற அன்று மார்கழி 15ம் நாள். வைதேகி பொல்லாத வாயாடி!”
“வைதேகி,  வாடி வெளியே, நேரமாச்சு!” 
“ஆண்டாள்  உன்னை பத்தி நிறைய தெரியும்,  உன் அழகு,  பேச்சு, பாட்டு,  சாமர்த்தியம்,  பக்தி எல்லாமே.  இவ்வளவு  சீக்கிரமே ஏண்டி வந்து எழுப்பறே,  எல்லாரும்  வந்துட்டாளா? எத்தனை பேர்?  என்னை இன்னும்  கொஞ்சம் தூங்க விடேன்”,
“எல்லாருமே வந்தாச்சு நதிக்கு போயாச்சு.இன்னிக்கு அந்த குவலயாபீடம் யானை சம்ஹாரம் பண்ணின கிருஷ்ணனை பத்தி நீ  அடிக்கடி  பாடுவியே அதை  பாட சீக்கிரமா எழுந்து வாடி”.

ஆண்டாளின்  16வது  நாள்  நோன்பு  பற்றிய நிகழ்சிகளை  கேட்க படிக்க  அடுத்த கதைக்கு  காத்திருப்போம் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...