கண்ணா வா. - J.K. SIVAN ..
மனிதர்கள் ஒருவரை ஒருவர் முன் பின் அறியாது இருந்தாலும் எங்கோ எப்போதோ ஒருமுறை சந்தித்தபின் பல யுகங்கள் நெருங்கி மனம் லயித்து ஒன்றிய பரஸ்பர அன்பு கொண்டவர்களாக பழகுவது அரிது. அப்படி அமைந்தால் அது தான் தெய்வ சங்கல்பம். இதற்கு நாடு, மொழி, வயது, ஜாதி, படிப்பு. எதுவுமே சம்பந்தமில்லாதது. ஒரே பிணைப்பு மனம். எதிர்பார்ப்பு இல்லாத உண்மையான பிரேமை. இதை மனைதில் வைத்து தான் ஏதோ ஒரு சினிமாவில் ... ''இது மனித காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது என்கிறானோ...''
அது ஒன்றே தான் விசித்திர உறவு. அதில் மட்டும் மனது லயித்து விட்டால் வேறு எந்த உறவும் இரண்டாம் பக்ஷமாகிவிடும் என்பது உலக அனுபவம். அந்த உறவில் ஈடுபட்ட ஜீவனுக்கு அன்னம் வெறுத்துவிடும், தூக்கம் அகன்று விடும், பித்தம் பிடித்து விடும். கண்கள் காதுகள் , மனம் எல்லாமே அந்த உறவில் ஈடுபட்ட மற்றொரு ஜீவனுக்காகவே தன்னை அர்ப்பணித்து விடும்.
வயதுக் கோளாறில் இந்த உறவு தோன்றினால் அது காலப்போக்கில் மாறிவிடும். நெருக்கம் நீர்த்து விடும். உண்மையான இரு அன்புள்ளங்கள் பிணையும்போது அங்கு வயதில்லை, உருவமில்லை, ஜாதியில்லை, பேதமில்லை, பசியில்லை, தாகமில்லை, ஒன்றில்லையேல் மற்றொன்றில்லை.
மனம் ஒன்று தான் அங்கு தேடும் வஸ்து. ஒரு மனதில் மற்றொன்று பூரணமாக வியாபித்து விட்டால் இரண்டும் ஒன்றாக அல்லவோ ஆகிவிடுகிறது.
மனமானது கொள்ளை பேச்சு பேசும்.அதைப் போல் வாயால் பேசமுடியாது.
கண்கள் ஆயிரம் செய்தி சொல்லும். அதை வாயோ, புத்தகமோ எழுத்தோ, சொல்லவே முடியாது.
பேச்சு ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்ததாக வெளி வரும். அதற்கு எந்த பாஷ்யமும் வியாக்யானமும் சொல்ல இயலாது. சம்பந்தப் பட்ட ஜீவன் ஒன்றே தெளிவாக அறியும்.
மேலே சொன்ன உறவைத் தான் தூய காதல் என்பதே தவிர சினிமாவில் காசு வாங்கிக்கொண்டு இருவர் மரத்தை ச்சுற்றி ஓட்டப் பந்தயம் ஆடுவதில் இதை தேடவேண்டாம். புத்தகங்களில் விரசமாக படித்து தடம் மாற வேண்டாம்.
கண்ணன் ராதையின் உறவு, ஆண்டாள் அரங்கனின் உறவு , மீரா கிரிதாரியின் உறவு, ஆழ்வார்கள் நாராயணன் உறவு, நாயன்மார் சிவனின் உறவு, ரிஷிகள் தேவாதி தேவன் மேல் கொண்ட பக்தி உறவு, இது போன்றவை. இதில் ஆண் என்றும் பெண் என்றும் பால் உணர்வே வேண்டாம்.
ஆணும் பெண்ணாகவும் இருந்தாலும் சரி. ஒரே பாலராக இருப்பினும் சரி, அதன் பண்பு குறையாது.
'' காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி....'' இது ஆண் பெண் உறவு பற்றிய பாலுணர்வு அல்லவே.
ஒரு ஆழ்வார் தன்னை பெண்ணாகவே பாவித்தார். பெயரே திரு மங்கை ஆழ்வார்... பராங்குச நாயகி,
இப்படி காதல் கொள்வது நாயக நாயகி பாவம் எனப்படும் .
''உனக்கே யாம் ஆளாமே...'' என்பது அதீத சரணாகதி நிலை.
மஹா கவிஞர் ஒருவர் பெண்ணாகி விட்டார். போதாததற்கு கண்ணனை தன்னுடைய காதலனாக மனதில் இருத்தி சொல்கிறார் அவர் அனுபவங்களை.
இந்த காதல் மட்டும் ஒருவளை ஆட்கொண்டுவிட்டால் அவள் காதலன் எண்ணமாக மாறி, என்னமாக துடிக்கிறாள்?
''என்னம்மா பெண்ணே ஒரு மாதிரி இருக்கிறாய் . உடல் நலம் சரியில்லையா. ஏன் இப்படி தூண்டிற் புழுவினைப்போல் துடிக்கிறாய்.?''
''ஒன்றுமில்லை அம்மா'' என்று சொல்கிறாளே தவிர சுடர் விட்டு எரியும் ஒரு தீபம் எண்ணையை குடித்து எதிர்பார்த்து காற்றில் அசைந்து அசைந்து எரிவது போலே நீண்ட காலமாகவே மனம் ''அலை பாயுதே கண்ணா''.
யாருடனும் பேசப் பிடிக்கவில்லை, ஏனெனில் பேசும் நிலையில் மனம் இல்லை. தனிமையைத் தேடுகிறது. ஏன்? அப்போது தானே அவனையே பற்றி யார் தொந்தரவும் இல்லாமல் நினைக்கலாம்! கூண்டுக்கிளிக்கு பறக்க ஆர்வம். நிலைமை அதை சிறைப்படுத்தி யிருக்கிறதே.
என்றைக்கு அவனை நினைத்து விட்டாளோ , அவளுக்கு இது நாள் வரை பிடித்த தெல்லாம் ஒரே கணத்தில் பிடிக்கவில்லையே.
தனியே பாய் மீது படுத்தேனே. தூக்கம் வந்ததா? ''பாலிருக்கும் பழமிருக்கும், பசியிருக்காது, பஞ்சணையில் காற்று வரும்.... தூக்கம் ?? புரண்டு புரண்டு தான் படுத்தாள். களைத்து போய் தான் தூக்கம்.
இந்த காதல் வந்த வேளையிலிருந்து அம்மாவைக் கூட பிடிக்கவில்லை. முன்பெல்லாம் என் சினேகிதிகள் வந்தால் ஒரே கும்மாளம். கூடை கூடையாய் பேச்சு. இப்போது அவர்கள் வருகிறார்கள் என்றாலே ஐயோ வந்து விடுவார்களோ என்று அச்சம், அருவருப்பு...ஏன்... காதல் ..!
அம்மா பிடித்த உணவெல்லாம் பண்ணிப் போட்டாளே, உள்ளே போகவில்லையே.. முன்பெல்லாம் வாசல் ரேழியிலிருந்தாலே உள்ளே சமையற்கட்டில் அம்மாவின் நளபாகம் வாசனை மூக்கைத் துளைக்குமே. வாயில் எச்சில் ஊருமே சாப்பிட. இப்போது, ''சீ. இதுவா. வேண்டாம்... காதல்...!!
உனக்கு என்ன பூ பிடிக்கும் ராதை?
''மல்லிகைப் பூ.''
உனக்கு சரம் சரமாக தலையில் வைத்துக் கொள்ள பிடிக்கும். ஏனோ இப்போது மல்லிகையும் அதன் மணமும் கூட அலுத்து விட்டதே... காதல்....!!
''என்னடி பெண்ணே, நான் ஒன்று கேட்டால், நீ ஏதோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் பதில் சொல்கிறாய்?...
குணம் மாறி விட்டதே, எதுவுமே மனதில் ஏறவில்லை, பதில் குழப்பமாகத்தானே வரும்..... காதல்!!
உலகில் எதெல்லாம் எனக்கு சுகத்தை அளித்ததோ அதெல்லாம் இப்போது என்னை நரகத்தில் தள்ளுகிறது. நான் தேடும் சுகம்...
''கண்ணா , நீ எங்கே, கண்ணிலே பட மாட்டேன் என்கிறாயே ?? இதனால் என்ன விளைந்தது உனக்கு தெரியுமா ?
பாலுங் கசந்தடீ தடீ! படுக்கை நொந்த தடீ! கோலக் கிளிமொழியும் - செவியில் குத்த லெடுத்த தடீ!
நாலு வைத்தியர்களைக் கூட்டி வந்தார்கள் என்னைப் பரிசோதிக்க. அவர்கள் கை நாடி பார்த்தார்கள், கழுத்தில் காய் அழுத்தி ஜுரம் பார்த்தார்கள், நாக்கை நீட்டினேன், கண் மேலே பார்க்க சொன்னார்கள், முதுகை தடவினார்கள், எழுந்தேன், நடந்து காண்பித்தேன். வயிற்றை பிசைந்து வியாதி தேடினார்கள்.
நாலு வயித்தியரும் - இனிமேல் நம்புவதற் கில்லை... இனி அவ்வளவு தான்....!! என்கிறார்கள்.
சும்மா இருப்பார்களா என் வீட்டில்? ஆற்றின் பாலத்துக்கு பின்னால் ஒரு ஜோசியன். வீட்டு வாசலில் சூலம் நட்டு வைத்திருப்பான். அவன் வீட்டை சுற்றி வேப்ப மரங்கள், ஒரு அம்மன் சிலை. உடுக்கு சத்தம் சதா கேட்டுக்கொண்டே இருக்கும் அங்கு.
அவன் என்னைப் பார்த்து என்ன சொன்னான் ? பாலத்துச் சோசியனும் - கிரகம் சரியில்லை இப்போது இந்தப் பெண்ணுக்கு, கொஞ்சம் இப்படித்தான் படுத்து மென்று ஒரே போடாக போட்டு விட்டான். ..
தூக்கமில்லாமலேயே கனவு கண்டேன்... என் கண்ணில் படாமலேயே அந்த கண்ணன் என் நெஞ்சைத் தொட்டு என்னைக் கொள்ளை கொண்டு விட்டானே.
இனம் புரியாத இன்பம் அல்லவோ அது. தூங்கியிருந்தால் கண்ணைத் திறந்தேன். அவன் எங்கே காணோமே? மனதில் மட்டும் எப்படி இவ்வளவு பெரிய அளவில்லாத மகிழ்ச்சியை உண்டு பண்ணிவிட்டான் அந்த மாயக் கள்ளன், கண்ணன்.
ஒருவன் பரம சந்தோஷத்தில் இருந்தால் என்ன சொல்கிறோம் கவனம் இருக்கிறதா? ''ஆசாமிக்கு உச்சி குளிர்ந்திருக்கு.''
எனக்கு உச்சி , பனிமலை போல் குளிர்ந்தது. உடம்பு சரியாகி விட்டது. மாடியிலும் வீட்டு எல்லா பகுதிகளிலும் மனது பிடித்து வளைய வந்தேன் . எல்லோருடனும் கல கலவேண்டு பேசினேன். பயம் ஏக்கம் எல்லாம் என்னை விட்டுப் பறந்து போச்சு. என்ன ஆச்சர்யம். திடீரென்று என் மேனியில் ஒரு புது அழகு வந்திருக்கிறதே. நான் தான் ரதியா? ராதாவா? ராதிகாவா... ராதா....ராதா ராதா
அவன் என் நெஞ்சில் தொட்ட அந்தக் கை பட்ட இடம் -- அதை எண்ணும் போதெல்லாம், எப்படி பனிக்கட்டி போல் குளிர்ந்திருக்கது. என் மனதில் எப்படி ஒரு சாந்தி, அமைதி, சந்தோஷம்,
''எண்ணி எண்ணி பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே'' பாட்டு என் நினைவுக்கு வந்து விட்டது. உரக்க பாடுகிறேன்.
யார், எது, எவன் காரணம் இதற்கெல்லாம்?
''நித்திரையில் வந்து தொட்டு எழுப்பின வித்தகன் யாரடி தோழி?'' யோசித்து யோசித்து மண்டை காய்ந்தது.
எதிரேயே நின்றான் நான் கவனிக்க வில்லை. எதிர் சுவரில் புல்லாங்குழல் கொண்டு நின்றான்.......கண்ணா. நீயா. நீயா, நீயா !!!
++
''கண்ணன் என் காதலன்'' என்கிற தொகுப்பில் மகா கவி சுப்ரமணிய பாரதியார் கற்பனயில் வளர்ந்த கண்ணன் தான் மேலே சொல்லப்பட்டவன். அவரது பாடல்களை விரும்பி படிக்க கீழே பார்க்கவும்
கண்ணன்-என் காதலன்
செஞ்சுருட்டி-திஸ்ர ஏக தாளம்
சிருங்கார ரசம்
தூண்டிற் புழுவினைப்போல்-வெளியே
சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக -எனது
நெஞ்சத் துடித்த தடீ!
கூண்டுக் கிளியினைப் போல்-தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம்-மனது
வெறுத்து விட்ட தடீ!
பாயின் மிசை நானும்-தனியே
படுத் திருக்கையி லே,
வாயினில் வந்ததெல்லாம்-சகியே!
தாயினைக் கண்டாலும்-சகியே!
சலிப்பு வந்த தடீ!
வளர்த்துப் பேசிடு வீர்;
நோயினைப் போலஞ்சி னேன்;-சகியே!
நுங்க ளுறவையெல் லாம்.
உணவு செல்லவில்லை;-சகியே!
உறக்கங் கொள்ளவில்லை;
மணம் விரும்பவில்லை;-சகியே!
மலர் பிடிக்கவில்லை;
குண முறுதி யில்லை;-எதிலும்
குழப்பம் வந்த தடீ!
கணமும் உள்ளத்திலே-சுகமே
காணக் கிடைத்த தில்லை.
பாலுங் கசந்ததடீ!-சகியே!
படுக்கை நொந்த தடீ!
நாலு வயித்தியரும்-இனிமேல்
நம்புதற் கில்லை யென்றார்;
பாலந்துச் சோசியனும்-கிரகம்
படுத்து மென்று விட்டான்.
கனவு கண்டதிலே-ஒருநாள்
கண்ணுக்குத் தோன்றா மல்,
இனம் விளங்க வில்லை-எவனோ
என்னகந் தொட்டு விட்டான்,
வினவக் கண் விழித்தேன்;-சகியே!
மேனி மறைந்து விட்டான்;
மனதில மட்டிலுமே -புதிதோர்
மகிழ்ச்சி கண்ட தடீ!
உச்சி குளிர்ந்ததடீ;-சகியே!
உடம்பு நேராச்சு
மச்சிலும் வீடுமெல்லாம்-முன்னைப்போல்
மனத்துக் கொத்த தடீ!
இச்சை பிறந்ததடீ-எதிலும்
இன்பம் விளைந்த தடீ;
அச்ச மொழிந்த தடீ;-சகியே!
அழகு வந்த தடீ!
எண்ணும் பொழுதி லெல்லாம்-அவன்கை
இட்ட விடத்தினி லே
தண்ணென் றிருந்ததடீ!-புதிதோர்
சாந்தி பிறந்ததடீ!
எண்ணி யெண்ணிப் பார்த்தேன்;-அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் -அங்ஙனே
கண்ணின் முன் நின்ற தடீ!
No comments:
Post a Comment