சங்கரர் பரிசு - விவேக சூடாமணி - J.K. SIVAN
இன்று மஹாளய அமாவாஸ்யை புண்ய தினத்தன்று ஆதிசங்கரரை வாழ்த்தி வணங்குகிறோம்.
''குழந்தைகளே, உங்களுக்கு நான் எழுதிய ஒரு அற்புதமான ஒரு தத்துவார்த்த போதனையை பரிசாக அளிக்கட்டுமா'' என்று சங்கரர் கேட்கிறார்.
''ஆச்சார்ய புருஷரே, ஆஹா அது எங்கள் பாக்யம், தாராளமாக வழங்குங்கள். என்ன அந்த அற்புதம் என்று சொல்வீர்களா?''
''என்னிடம் வேறு என்ன இருக்கிறது. உங்களுக்கு உதவும்படியான சில தத்துவங்கள் தான். அதற்கு நான் விவேக சூடாமணி என்ற பெயர் வைத்துள்ளேன்.''
வெகுநாளாக அதை படித்து அனுபவிக்க ஒரு அபிலாஷை. இன்று அது நிறைவேறட்டும் ஆச்சர்ய தேவா.''
''ததாஸ்து - அப்படியே ஆகட்டும்..''........
ஆகவே நண்பர்களே, இன்றுமுதல் நான் ஆச்சார்யரின் விவேக சூடாமணி உங்களோடு பகிர்கிறேன். உங்கள் கருத்துகளை அள்ளி வீசுங்கள். ஜே கே.சிவன்.
நமக்கு ஏராளமான சொத்து வைத்து விட்டுப்போன முன்னோருக்கு எப்படி நன்றி சொல்வது?எங்கோ பூர்வீக சொத்து வைத்து விட்டுப்போன பாட்டன் பூட்டனை தெரியாமலேயே நிறைய பேர் ஏழையாக செத்துவிட்டார்கள். சிலர் சொத்து விவரம் தெரியாமல் விழிக்கிறார்கள். சிலர் வேறு எவரோ அந்த சொத்தை அனுபவிக்கிறார்கள் அவர்களை அப்புறப்படுத்த வழி தெரியாமல், சண்டை போட பணமோ பலமோ இல்லாமல் கண் எதிரே தனது சொத்தை மற்றவை அனுபவிப்பதை பார்த்து பொருமுகிறார்கள். சிலர் எனக்கு எவன் சொத்தும் வேண்டாம் நான் சம்பாதித்ததே போதும் எனும் ராசிக்காரர்கள்.
நாம் கேட்காமலேயே எந்த வில்லங்கமும் இல்லாமல் நிறைய சொத்து நம் எல்லோருக்குமே அள்ள அள்ள குறையாமல் நிறைய நிறைய பொதுவில் விட்டு வைத்துவிட்டுப்போன ஒரு முன்னோர் தான் ஆதி சங்கரர்.
அதில் ஒரு விலையுயர்ந்த, விலையில்லாத மாணிக்கம் தான் விவேக சூடாமணி. அதில் சில ஸ்லோகங்களை உங்களோடு பரிமாற ஒரு எண்ணம் எழுந்தது. அதன் விளைவே இது.
நமது புத்தி கூர்மையால் எது நமக்கு உகந்தது, நல்லது, சிறந்தது, பின் பற்ற தக்கது, நல் வழி காட்டுவது என்று பாகுபாடு செயது அதை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொள்ள சில ஸ்லோகங்கள் உள்ளன. மொத்தம் 581 இது புரிந்தால் வேதாந்தம் நன்றாக காக்கா நரி வடை கதை மாதிரி எளிதில் புரியும்.
சின்மயானந்தா ஸ்வாமிகள் அற்புதமாக இதை விளக்கி சொல்வதை கேட்டிருக்கிறேன்.
सर्ववेदान्तसिद्धान्तगोचरं तमगोचरम् ।
गोविन्दं परमानन्दं सद्गुरुं प्रणतोऽस्म्यहम् ॥ १॥
சர்வ வேதாந்த சித்தாந்த கோசரம் தம கோசரம் கோவிந்தம் பரமானந்தம் ஸத் குரும் ப்ரணதோஸ்ம்யஹம்
கோவிந்தா நீ எப்போதும் பரமானந்த ஸ்வரூபன். வேதாந்த சித்தாந்த முடிவானவன். நீ யே நல்ல குருநாதன் எனக்கு. உன்னை வணங்கி இதை சமர்ப்பிக்கிறேன்.
जन्तूनां नरजन्म दुर्लभमतः पुंस्त्वं ततो विप्रता
तस्माद्वैदिकधर्ममार्गपरता विद्वत्त्वमस्मात्परम्।
आत्मानात्मविवेचनं स्वनुभवो ब्रह्मात्मना संस्थितिः
मुक्तिर्नो शतजन्मकोटि सुकृतैः पुण्यैर्विना लभ्यते ॥१॥
ஐந்தூனாம் நரஜன்ம துர்லபமத: புஸ்த்வம் ததோ விப்ரதா
தஸ்மாத்வைதிக தர்மம் மார்க்க பரதா வித்வத்வமஸ்மாத்பரம்
ஆத்மானாத்ம விவேசனம் ஸ்வனுபவோ ப்ரம்மாத்மனா ஸம்ஸ்திதி ;
முக்தினோ சத ஜன்மகோடி சுக்ருதை ; புண்யைர் வினா லப்யதே:
அரிதான நமது இந்த மனிதப் பிறவி எடுக்க எப்போதோ நாம் பாக்கியம் செய்தவர்கள். அரிது அரிது மானுடராகப் பிறத்தல் அரிது அல்லவா?. அப்படி மனிதனாக இருந்தும் அவர்களில் சாத்விக குணம் படைத்தவன் உன்னதமானவன். இதோடு அவனுக்கு பக்தியும் ஆன்மீக சிந்தனையும் வேறு சேர்ந்திருந்தால் வேதவழியில் நடப்பவனாக இருந்தால் அவன் கடவுளே தான். அவனுக்கு எது சாஸ்வதம் அநித்தியம் என்று தெரியும். ஆன்மசக்தி உணர்வு வேறு இருப்பதால் மோக்ஷபாதையில் செல்பவன். ஆயிரங்கோடி பிறவிகளில் கிடைக்கும் புண்யத்தை எளிதில் பெற்றவன்.
दुर्लभं त्रयमेवैतद्देवानुग्रहहेतुकम् ।
मनुष्यत्वं मुमुक्षुत्वं महापुरुषसंश्रयः ॥ ३॥
துர்லபம் த்ரயமேவைத தேவானுக்கிரஹ ஹேதுகம்
மனுஷ்யத்வம் முமுக்ஷுத்வம் மஹா புருஷ ஸம்ஸ்ரயா :
ஐயா சாமி, ஒரு மூன்று முக்கிய அரிய விஷயங்கள் இறைவனருளால் நேர்ந்ததை தெரிந்து கொள்ளுங்கள். ஒன்று இந்த மானுட பிறவி, இரெண்டாவது முக்தியில் நாட்டம், மூன்றாவது மகான்களை போற்றி வணங்கி சேவை செய்தல். இதை மறவாமல் நினைவில் கொள்வோம்.
लब्ध्वा कथंचिन्नरजन्म दुर्लभं
तत्रापि पुंस्त्वं श्रुतिपारदर्शनम्।
यस्त्वात्ममुक्तौ न यतेत मूढधीः
स ह्यात्महा स्वं विनिहन्त्यसद्ग्रहात्॥४॥
லப் த்வா கதச்சிந் நரஜன்ம துர்லபம்
தத்ராபி புஸ்த்வம் ஸ்ருதி பாரதர்சனம்
யஸ்த்வாத்ம முக்தோ ன யதேத மூடதி
ஸ ஹ்யாத்மஹா ஸ்வம் விநிஹந்த்ய ஸத்கிரஹாத்
தம்பி, புரிந்துகொள், உனக்கு கிடைத்த இந்த மனுஷ பிறவி அரிதான அற்புதமான அதிர்ஷ்டம். கிடைத்த்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் அறிந்துகொள்ளவேண்டிய நல்ல விஷயங்களை தேடி பிடித்து கற்றுக்கொள். உன்னையே நீ அறிவாய் என்ற சிறந்த தத்துவத்தை துளியும் லக்ஷியம் பண்ணாமல் கோட்டை விடாமல் ஆத்ம விசாரத்தில் ஈடுபாடு. கோட்டைவிட்டவன் வடிகட்டிய முட்டாள். நிழலை நிஜமென்று தேடி ஓடாதே..
தற்கொலை என்பது கயிற்றில் தொங்குவதோ, விஷத்தை குடிப்பதோ, நீரில் விழுந்து மிதப்பதோ அல்ல. அரிய மானுடப் பிறவி எடுத்தும் அதன் அருமை தெரியாமல், வேத சாஸ்திர ஞானம் இன்றி, ''தான்'' யார் என்றே தெரியாமல் அறியாமல் நிழலை நிஜம் என்று தேடி ஓடி ஆடி மிருகமாக வாழ்வது. நிறைய பேர் நாம் மிருக வாழ்க்கையா, மெஷின் வாழ்க்கையா எதை வாழ்கிறோம்? வேதம் சாஸ்திரம் ஞானம் இதற்கெல்லாம் அர்த்தம் கூட தெரியாத போது அதை எப்போது எப்படி அறிவது? அறியவேண்டும் என்ற எண்ணமாவது மனதில் உண்டாகுமா? அது போதுமே'' என்கிறார் சங்கரர்
No comments:
Post a Comment