யாத்ரா விபரம் - J.K. SIVAN
நரமுக விநாயகர்
கல்வி ஸ்தலமாகிய கூத்தனுரில் சரஸ்வதி ஆலய தரிசனம் செய்து விட்டு ரெண்டே கி.மீ. தூரத்தில் இருக்கும் தில தர்ப்பண பூரி என்றும் திலதை பதி என்றும் சிதலபதி என்றும் அவரவர் விருப்பப்படி காட்சி தரும் ராமர் வழிபட்ட ஸ்தலம் சென்றேன்.
யாரையாவது வழிகேட்டால் செதலபதி எங்கே? என்றால் தான் புரியும். இல்லாவிட்டால் அமெரிக்கா பக்கம் கை காட்டுவார்கள்.
அருமையான கிராமம். அரிசிலாறு வளம் கொழிக்கும் பூமி..இது மயிலாடுதுறை - திருவாரூர் மார்கத்தில் உள்ள ஸ்தலம். இங்கே விசேஷம் விநாயகர் யானைமுகனாக இல்லாமல் ஆதி விநாயகராக நரமுகத்தோடு அருள்பாலிக்கிறார் கணேசனை பார்த்தாலே என்னவோ போல் இருக்கிறது. .கணபதியை யானை முகம் இன்றி நினைத்து பார்க்க முடியவில்லை. விநாயகர் யானை முகம் பெறுவதற்கு முன் வந்து அப்பா முக்தீஸ்வரரை வழிபட்ட சம்பந்தர் பாடல் பெற்ற ஸ்தலம்.
காவிரி தென்கரை சிவ ஸ்தலங்களில் இது 58வது. மந்தாரவனேஸ்வரர் என்றும் சிவனுக்கு இங்கே பெயர். அம்பாள் ஸ்வர்ணவல்லி எனும் பொற்கொடி நாயகி. ஸ்தல விருக்ஷம் - மந்தாரை. தீர்த்தம் அரிசிலாறு.
இந்த க்ஷேத்ரம் நித்ய அமாவாசை தர்ப்பண ஸ்தலம். பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய சிரார்த்தம் , தர்ப்பணம் முதலியவை செய்வதற்க்குரிய தலம்
ராம-லட்சுமணர் தம் தந்தையான தசரதருக்கும் , பட்சி ராஜாவான ஜடாயுவிற்க்கும் திலதர்ப்பணம் செய்த தலம் . இது தொடர்பான சிற்பம் கோயில் பிரகாரத்தில் உள்ளது. முன்பு கோயிலின் வெளியே தனியாக இருந்த மனித முக ஆதி விநாயகர் இப்போது அம்பாள் சந்நிதி அருகில். மூலவர் கிழக்கு நோக்கியும் , அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கிறார்கள்.
பிரகாரத்தில் விநாயகர் , ராம-லட்சுமணர் திருமேனிகள் , ராம-லட்சுமணர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கங்கள் , பைரவர் , சூரிய - சந்திரர் , தேவியருடன் பெருமாள் ஆகியோரும் கோஷ்டத்தில் மகாவிஷ்ணு
.
"விண்ணர் வேதம் விரித்தோத வல்லார் ஒருபாகமும்
பெண்ணர் எண்ணார் எயில் செற்றுகந்த பெருமானிடம் தெண்ணிலா வின்ஒளி தீண்டு சோலைத் திலதைப்பதி மண்ணுளார் வந்தருள் பேண நின்றம்மதி முத்தமே." (சம்பந்தர்)
நாடுந் திலத நயப்புலவர் நாடோறும்பாடுந் திலதைப் பதி நிதியே." (அருட்பா)
தசரதர் இறந்தபோது அருகே இல்லாத ஜேஷ்ட புத்திரன் ராமன் லக்ஷ்மணனோடு இந்த தில தர்ப்பண புரிக்கு வந்து எள்ளும் நீரும் இறைத்து காசி கயா ராமேஸ்வரத்தில் செய்வதைப்போல தந்தைக்கும், தந்தைக்கு சமமான ஜடாயுவுக்கும் ஸ்ரார்த்த கிரியைகளை செய்தனர் என்று வரலாறு. ராமர் வைத்த பிண்டங்கள் சிவலிங்கங்களாக மாறியதாக இந்த ஆலயத்தில் வழிபடு கிறார்கள்.
தர்ப்பண ஸ்ரார்த்தம் முன்னோருக்கு செய்ய விருப்பமானவர்கள் முன்கூட்டியே இந்த ஆலயத்தை அணுகினால் ஏற்பாடுகள் செயது உதவுவார்கள்.
இங்கு ஒரு பாடசாலை நடக்கிறது. அழகிய இளம் பிள்ளைகள் தலையில் சிகையுடன் மார்பில் ஒற்றைப் பூணலுடன் சிரித்த முகத்தோடு அங்கும் இங்கும் ஓடி விளையாடுகிறார்கள். ஓடியாடும் வயது. இங்கே வேதங்கள் கற்றுக்கொண்டு வருகிறார்கள். அதிலிருந்த ஒரு இளைஞன் எங்களுக்கு ஆதிவிநாயகர் மற்றும் பல சந்நிதிகளில் மந்திரங்கள் சொல்லி அர்ச்சனை ஆரத்தி செயது பிரசாதம் அளித்தது மனதுக்கு நிறைவை கொடுத்தது.
No comments:
Post a Comment