வெள்ளி வட்டிலும் விப்ர நாராயணாவும் - 1
'' காவிரி சூழ் சோழநாடு சோறுடைத்து'' என்பதால் எங்கும் வளமை, சுபிட்சமாய் இருந்ததோடு தெய்வீகப் பிறவிகளும் அவதரிக்க காரணமாக இருந்தது தான் ஆச்சர்யம். அந்த சோழநாட்டில் ஒரு கிராமம் திரு மண்டங்குடி. நாலு வேதங்களும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழ்ந்த ஊர். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று சொல்வார்களே, அந்த குடுமி சோழிய பிராமணர் வகுப்புக்கு 'விப்ரா' என்றும் ஒரு பெயர் உண்டு. அவர்கள் வைணவர்கள். நாராயணனையே தொழுது ஜீவிப்பவர்கள்.
இந்த வகுப்பு குடும்பம் ஒன்றில் வேத விசாரதர் என்று ஒரு பிராமணர். அவர் நாள் தோறும் நிறைய புஷ்பங்களை சேகரித்து மாலை கட்டி எம்பெருமானுக்கு சாற்றி மகிழும் வழக்கமும் பழக்கமும் கொண்டவர்.
எம்பெருமான் பிரதியுபகாரம் பண்ணாமலா இருப்பான்? பிராமணருக்கு பிரபவ வருஷம், மார்கழி மாதம் கிருஷ்ண சதுர்த்தி அன்று செவ்வாய் கிழமை, கேட்டை நக்ஷத்ரத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சாதாரண குழந்தை அல்ல, சுவாமி! -- வேத விசாரதர் மலர்மாலை தொடுத்து சாற்றி பெருமாளை மகிழ்வித்ததால் பெருமாள் ஸ்ரீ நாராயணனின் வைஜயந்தி வனமாலையே, மனித குழந்தையாக பிறந்தது. குழந்தைக்கு புன்யாஹவசனம் செய்து விப்ர நாராயணன் என்று பெயர் சூட்டினார் பிராமணர்.
மிக அழகாக பொன் மேனியுடன் வளர்ந்த சிறுவனுக்கு வைணவ சம்ப்ரதாய சாஸ்த்ரங்கள், எல்லாம் கற்றுக் கொடுத்தார்கள். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினான் விப்ர நாராயணன். எல்லோரிடமும் மரியாதை வினயத்தோடு நடந்து நல்ல பெயர் எடுத்தான்.
ஒருநாள் பெருமாளிடமிருந்து சேனை முதலியார் வந்து தரிசனம் கிடைத்ததில் விப்ர நாராயணன் தனது பிறவிக்கான காரணம் புரிந்து கொண்டான். இதை அறிந்தபின் விப்ரநாராயணன் எம்பெருமானிடம் இன்னும் அதிக பக்ஷ பக்தி செலுத்தினார். எம்பெருமான் எங்கெல்லாம் குடிகொண்டிருக்கிறாரோ அங்கெல்லாம் சென்று அந்த க்ஷேத்ரங்களில் அவரை தரிசிக்க ஒரு ஆவல் பிறந்தது விப்ரநாராயணருக்கு.
ஆஹா இதை விட வேறு நல்ல எண்ணம் ஏதேனும் உண்டா? ஆனால், எங்கிருந்து ஆரம்பிப்பது? இப்படிச் செய்தால் என்ன? நல்ல யோசனை. காவேரிக்கரையில் ஸ்ரீரங்கம் மிக உன்னதமான விஷ்ணு ஸ்தலம் ஆயிற்றே. அங்கிருந்தே ஆரம்பிப்போமே! இப்படி தீர்மானித்த விப்ரநாராயணர் நடக்க ஆரம்பித்தார்.
ஸ்ரீரங்கம் அடைந்தவர் பாம்பணை மேல் பள்ளி கொண்ட ரங்கநாதனைக் கண்டவுடன். ''இதுவே போதுமே, வேறெங்குமே போக அவசியமில்லையே '' என்று எண்ணமும் தோன்ற 'இனி இங்கேயே தான் நான். என் ரங்கனுக்கு அன்றாடம் அருமையான மலர்மாலைகளை தொடுத்து சூட்டுவேன்'' என முடிவெடுத்தார்.
ஒரு அழகான நந்தவனம் தயாராயிற்று. நறுமணம் கொண்ட வெவ்வேறு ஜாதி வகை மலர்கள் பூத்துக் குலுங்கின. அந்த அகண்ட நந்தவனத்தின் மையத்திலே ஒரு குடிசை. அதுவே விப்ரநாராயணர் ஆஸ்ரமம். விடிகாலை நாள்தோறும் நாராயணனைத் துதி செய்துகொண்டு நந்தவனத்தில் மலர்களை கொய்து மாலை தொடுப்பார். திருமாலைத் தவிர, அவருக்கென்று தொடுக்கும் பூவைத் தவிர, பூவையர் மேல் புத்தி போகவில்லை, அதற்கு நேரமும் இல்லை.
ஊரே இந்த விப்ரநாராயணன் என்கிற விந்தை மனிதனைக் கவனித்த போது வைகுண்ட நாதனுக்கும் பிராட்டிக்கும் அவனைத் தெரியாமலா இருக்கும்?.
''நாதா, இந்த விப்ர நாராயணன், உங்கள் மேல் உள்ள பக்தியால், அழகிய ஆணாக இருந்தும், ஏன் பெண்கள் மேல் மனம் செலுத்தாமல் அவர்கள் மூலம் பெறும் அன்பு, பாசம், நேசம் எதுவும் அறியாமல் உள்ளானே! அவன் எதிர்காலம் என்ன ஆகுமோ?'' என்று நாராயணனைக் கேட்டாள் திருப் பிராட்டி. .
''என்ன ஆகும் என்றா கேட்டாய், நீதான் பார்க்கப் போகிறாயே'' என்று சிரித்தார் எம்பெருமான்.
என்ன ஆயிற்று என்று தான் இனி பார்க்கப்போகிறோமே!.
No comments:
Post a Comment