கீத கோவிந்தம் - J.K. SIVAN
ஜெயதேவர் கீத கோவிந்தம் எழுத முற்படுகிறார். கிருஷ்ணனை மனதில் துதித்து அந்த ரசானுபவத்தில் திளைப்பவர். கிருஷ்ணன் யார் என்று ஒரு கேள்வி? ஓ அவனா? மஹா விஷ்ணு தானே, பத்து அவதாரத்தில் ஒருவன் தானே கிருஷ்ணன். எப்படி ஆரம்பிக்கலாம் என்று தீர்மானித்தவர் மனதில் அந்த மஹா விஷ்ணுவின் தசாவதாரம் முதல் ஸ்லோகமாக அமைகிறது. வார்த்தை பிரவாகம் பெருகுகிறது.
प्रलय पयोधि जले धृतवान् असि वेदम् विहित वहित्र
चरित्रम् अखेदम् केशव धृत मीन शरीर जय जगत् ईश हरे
pralaya-payodhijale dhṛtavānasi vedaṃ
vihita-vahitra-caritram akhedam |
keśava dhṛta-mīna-śarīra
jaya jagadīśa hare ||dhruvapadaṃ||
ஏழு கடல்களும் கொந்தளித்து குமுறி ஒன்று சேர்ந்து ஓ வென்ற பேரிரைச்சலில் எங்கும் தண்ணீர் தண்ணீர் தண்ணீர் தான். பிரளயம் இது தான். இதிலிருந்து எதுவும் தப்ப முடியாது. ஒன்றே ஒன்று தான் வழி. மீன். அந்த மீனாக தானே நீ சரீரம் கொண்டாய் கேசவா, ஏன் கேசவா என்று சொன்னேன். நீ பிரமனும் சிவனும் சேர்ந்தவன் தானே (க: பிரமன் +ஈஸா : சிவன்). வேதங்களை காப்பாற்றி அடுத்த யுகத்திற்கு கொண்டுவந்து தந்தாயே. அந்த வேதங்கள் தானே எம்மை பிறவிக்கடலிலிருந்து முக்தி அடைய உதவுபவை. மூவுலகும் காப்பவனே,மத்ஸ்ய அவதார ஹரி, ஜெகதீசா உன்னை போற்றுகிறேன்.
क्षितिः अति विपुल तरे तव तिष्ठति पृष्ठे धरणि धरण
किण चक्र गरिष्ठे केशव धृत कच्छप रूप जय जगदीश हरे
kṣitirati-vipulatare tava tiṣṭhati pṛṣṭhe
dharaṇī-dharaṇa-kina-cakra-gariṣṭhe |
keśava dhṛta-kaccapa-rūpa
jaya jagadīśa hare
பாற்கடல் கடைய தேவர்களும் அசுரர்களும் முனைந்தபோது, மந்தர மலை மத்தாகியது. வாசுகி கயிறாகியது. அது சரி மந்தர மலை எதை பீடமாக கொண்டது என்பது நினைவிருக்கிறது? கேசவா நீ ஆமையாக உன் முதுகில் அதை சுமந்தது தெரியும். பூமியை இவ்வாறு சுமந்து இன்றும் நீ தானே காக்கிறாய் கேசவா. ஹரி ஜெகதீசா.உன்னை போற்றுகிறேன்.
केशव धृत सूकर रूप वसति दशन शिखरे धरणी तव लग्ना
शशिनि कलंक कल इव निमग्ना केशव धृत सूकर रूप जय जगदीश हरे
vasati daśana-śikhare dharaṇī tava lagnā
śaśini kalaṅka-kaleva nimagnā |
keśava dhṛta-sūkara-rūpa
jaya jagadīśa hare ||
இது மட்டுமா, கேசவா, நீ வராக அவதாரம் எடுத்ததும் ஒரு காரணமாகத்தானே. இந்த ராக்ஷஸர்கள் செய்த தீங்கு கொஞ்சமா நஞ்சமா. பூமியை பாதாளத்தில் ஒளித்து வைத்து விட்டது உனக்கு தெரியாமலா போகும். மாபெரும் பன்றி அவதாரமாக எடுத்து பூமியைத் தேடி எடுத்து மேலே உன் சக்தி வாய்ந்த முகத்தில் தாங்கி கொண்டுவந்த அதிசயத்தை தான் உன் வராஹ அவதாரம் சொல்கிறது. கருநிற பூமியின் நிழல் தானே கருநிற மானாக சந்திரனில் பிரதிபலிக்கிறது.
तव कर कमल वरे नखम् अद्भुत शृंगम् दलित
हिरण्यकशिपु तनु भृंगम् केशव धृत नर हरि रूप जय जगदीश हरे
tava kara-kamala-vare nakhaṃ adbhuta-śṛṅgaṃ
dalita-hiraṇyakaśipu-tanu-bhṛṅgaṃ |
keśava dhṛta-nara-hari-rūpa
jaya jagadīśa hare ||3||
ரொம்ப சாமர்த்தியக்காரன் அந்த ஹிரண்யகசிபு. எப்படிப்பட்ட வரம் கேட்டு வாங்கினான். மனிதனாலோ, மிருகத்தாலோ, இரவிலோ, பகலிலோ, உள்ளேயுமில்லாமல், வெளியேயுமில்லாமல், எந்த ஆயுதத்தாலும் இல்லாமல் ஒரு சொட்டு ரத்தம் கீழே சிந்தாமல், தரையிலும் எந்த இடத்திலும் இல்லாமல் மரணம் சம்பவிக்கவேண்டுமாம்? முடிகிற காரியமா இது? கேசவா நீ அவனைவிட கெட்டிக்காரன் அல்லவா, முடித்து காட்டினாய், மனிதனும் மிருகமுமில்லாமல் நர ஹரி, நர சிங்கமாய், நகத்தால், ஒரு துளி ரத்தமும் இல்லாமல், இரவும் பகலும் இல்லாத அந்தி வேளையில் உன் மடியில் அவனை போட்டு கிழித்து ரத்தத்தை குடித்து கொன்றாயே. கூரிய நகமா அவை. பூமியில் எங்கள் சகல பாவத்தையும் கிழித்தெறியும் கூர்மையான ஆயுதமல்லவா அவை. நரஹரி ரூபா, கேசவா ஜெகதீசா உன்னை போற்றுகிறேன்.
மற்ற அவதாரங்களை ஜெயதேவர் அடுத்து சொல்லட்டும்.
No comments:
Post a Comment