Tuesday, September 26, 2017

கோண்டுவுக்கு உபதேசம்




கோண்டுவுக்கு உபதேசம் - J.K. SIVAN

கோண்டு என்கிற கோதண்டபாணிக்கு தன் பெயரில் அசாத்திய கோபம். அதைவிட அவன் தந்தை ராமண்ணாவின் மீது நூறு மடங்கு ஜாஸ்தி. ஏன் எனக்கு இப்படி ஒரு பெயர். நல்ல பெயர் வேறு எதுவும் அகப்படலையா உனக்கு ? விஷயம் பின்னால் தெரிந்தபிறகு அவன் கோபம் புயல்களை போல வேறிடத்தில் மையம் கொண்டது. அது அவன் தாத்தா கோதண்டராமய்யர் மேல் தான். இவரால் தானே தனக்கு அவருடைய அந்த பெயர் ஒட்டிக்கொண்டது. இது என்ன அசோக, மௌரிய, குப்த சோழ சாம்ராஜ்ய குடும்பமா பேர் நிலைக்க? நல்லவேளை ''பெரிய கோண்டு'' அவன் கோபமோ சாபமோ பலிக்காமல் ஏற்கனவே பல வருஷங்களுக்கு முன் மோக்ஷத்தையோ நரகத்தையோ சென்றடைந்துவிட்டார்.

கோண்டு அடிக்கடி என்னைப் பார்க்க வருவான். ஒவ்வொருமுறையும் ஜாக்கிரதையாக நான் முழுசாக முனை முறியாமல் ''கோதண்டராமா'' என்று தான் கூப்பிடுவேன். முதல் முறை வாப்பா கோண்டு என்று சொன்னபோது அவன் முகம் சிவந்ததை நான் கவனிக்கவில்லை.

இந்த முறை கோண்டு ''மாமா, எனக்கு மனம் அமைதிபெற, சில சின்ன வழிகளை சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டான்.

''இந்தா கோதண்டராமா இதை எழுதிக்கொள்'' என்று நான் சொன்னது இதுதான்.

1. தப்பு யார் தான் செய்யவில்லை.? தப்பு செய்யாதவன் மனிதனே இல்லை என்பது என் வாதம். ஆகவே மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு கொஞ்சமாவது நம்மை திருத்திக்கொள்வது.

2. குறை என்று எதையும் பிறரிடம் காண வேண்டாம். அவர்கள் நினைத்தது, எண்ணம், செயல் அப்படி, அது உனக்கு பிடிக்காவிட்டால் நீ எப்படி அவர்களை திருத்த முயல முடியும். உனக்கு பாகற் காய் பிடிக்காவிட்டால் அடுத்தவன் ''அடடா இன்று அருமையான பாகற்காய் பிட்லை என் வீட்டில்'' என்று சொன்னால் முகமா சுளிப்பது. பேசாமல் டிவி யை பார்த்து சிரித்து கொண்டு இருப்பது தான் நல்லது.

3. ''நான் இப்படி செய்தேன், ராமசுப்புவுக்கு நல்ல பதிலடி கொடுத்தேன்'' என்று சொன்னால் அது தப்பு என்று வாதாடாமல் அவன் கோணத்தில் அவன் செய்ததோ சொன்னதோ, ஒருவேளை சரியாக இருந்திருக்கலாம் என்று விட்டுவிடு .

4. நான் ஒரு தப்பு செய்ததாக அறிந்தால் அதை விட முயற்சிக்கிறேன். எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல் அவசியம்..

5. எதையாவது எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும் என்று தெரிந்தும் ஏமாற வேண்டாம்.

6. உன் மனதிற்கு இது சரி என்று பட்டால் அந்த காரியத்தை அமைதியாக, பதவிசாக செய்.

7. குப்புராவ் தனக்கு ஏதாவது விஷயம் புதிதாக தெரிந்தால் உடனே சைக்கிளை மிதித்துக் கொண்டு நாலு பேரிடம் போய் அதை சொல்லி நான் கண்டுபிடித்தது என்று பொய் சொல்லி மார் தட்டுவான். அவன் புத்திசாலித்தனம் மூன்று நாள் முந்தியே தந்தி பேப்பரில் வந்தது அவனுக்கு தெரியாது. எனவே நம் கெட்டிக்காரத்தனத்தை தம்பட்டம் அடித்து பிறரிடம் பரப்ப வேண்டாம்.

8. ''நான் சொல்றது தான் சரி'' என்று வறட்டு பிடிவாதம் வேண்டாம். நமது அபிப்ராயத்தை சொல்வதோடு மரியாதையாக நிறுத்திக் கொள்வது சாலச் சிறந்தது. நம் செயல்களை மற்றவர் ஏற்று நடக்கவேண்டும் என்று எந்த கட்டாயமும் யாருக்கும் இல்லை.

9. நாம் அநேகம் பேர் செய்யும் மிகப்பெரிய தப்பு நம்மை மற்றவர்களோடு கம்பேர்பண்ணுவது (ஒப்பிட்டு பார்ப்பது ). நம் விரல்களே ஒன்று போல் இல்லையே.

10.நமக்கு எது அவசியம் வேண்டும் என்று புரிந்து கொண்டு அதை தேடவேண்டும். நாம் அடைய விரும்புவது நமக்கு தேவைக்கு மேம்பட்டதாக இருந்தால் ரொம்ப கஷ்டம். யானை மேல் ஆசைப்பட்டு வாங்கி வளர்க்க முடியுமா. அல்லது யானை சும்மா கிடைத்தாலும் எங்கே கட்டி என்ன தீனி போட முடியும்? அத்தியாவசிய தேவைக்கும் நாம் ஆசைப்படும் வஸ்துவுக்கும் உண்டான தூரத்தை புரிந்து கொள்ளவேண்டும்.
கோதண்டராமா, சந்தோஷமோ அமைதியோ மனதுக்கு கிடைக்க வெளியே எங்கேயும் தேடி பெற முடியாதப்பா, உன்னுள்ளே நீயே கண்டுபிடித்து அனுபவிக்கவேண்டிய சமாச்சாரம் அது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...