Saturday, September 30, 2017

முதுகில் கீறல்

முதுகில் கீறல் - J.K. SIVAN

கிருஷ்ணா, உன் சம்பந்தப்பட்ட எதுவுமே எவருமே இனிப்பின் அம்சமாக இருப்பது உன் அன்பின் ஒரு துளி அவர்களிலும் காண்பதால் தானே.

இப்போது நான் கூறும் ஒரு சம்பவம் அதை பூரணமாக நிரூபிக்கிறதே.

அர்ஜுனாசார்யர் கிருஷ்ண பக்தர். அவர் மனைவி அவரையும் மிஞ்சியவள். ஏழ்மையிலும் எளிமையிலும் அவர்கள் சந்தோஷமாக தர்ம தியாக சிந்தனையோடு வாழ்ந்து, உஞ்சவிருத்தியில் அன்றாடம் கிடைப்பதே உணவாக அந்த குடிசையில் வாழ்ந்தனர்.

உஞ்ச வ்ருத்தி என்றால் பெரிய பாத்திரத்தை எடுத்துக் கொண்டு எல்லோர் வீட்டு வாசலிலும் நின்று பிக்ஷை எடுப்பதல்ல. எந்த முதல் மூன்று வீடுகள் கண்ணில் படுகிறதோ அதில் கிடைத்தால் உணவு இல்லையேல் உபவாசம்.
மற்ற நேரத்தில் கீதையை தொடர்ந்து படித்து வருவதும் பகவத் கீதைக்கு உரை எழுதுவதும் தான் அவர் வேலை.

ஒரு நாள் தன்னை மறந்து முழுதும் கீதை படிப்பதில் ஈடுபட்டு உஞ்சவிருத்தி போவது மறந்து போனது. .
பகல் தாண்டியபோது தான் நினைவுக்கு வந்தது.

''அடாடா நேரமாகி விட்டதே'' கீதை ஒன்பதாம் அத்யாயம் 22வது ஸ்லோகம் அன்று படித்துக் கொண்டிருந்தார் அர்ஜுனாசார்யர் உலக ஞாபகம் வந்து விழித்தார். .

ananyaash cintayanto maam ye janaah paryupaasate
teshaam nityaabhiyuktaanaam yoga-kshemam vahaamy aham

அனன்யா சிந்தையந்தோமாம் யே ஜனா பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபியுக்தானாம் யோக க்ஷேமம் வஹாம்யஹம்

''என்னை முழுமனதுடன் தான் வேறு நான் வேறு என்று கருதாமல் உபாசிக்கின்றவர்களை சுமந்து பாதுகாப்பதும் ரக்ஷிப்பதும் எனதுபொறுப்பு''.

அர்ஜுனாசார்யருக்கு இதில் எங்கோ தவறோ என்று பட்டது.

''எதற்கு கிருஷ்ணன் நான் சுமக்கிறேன் என்கிறான்?'' ''யோக க்ஷேமம் வஹாம்யஹம் என்ற வரியை அடித்துவிட்டு ஆற்றங்கரைக்கு ஸ்னானத்துக்கு பசியோடு புறப்பட்டார்.

சற்று நேரம் கழித்து ரெண்டு பையன்கள் அவர் வீட்டுக்கு அப்போது வந்தார்கள். ஒருவன் கையில் கூடையில் நிறைய உணவு பதார்த்தங்கள். மற்றொருவன் கோணி நிறைய காய்கறிகள், பழங்கள், வெண்ணை, பால் செம்பு. அவர் மனைவியிடம் அவற்றை கொடுத்தார்கள்.

''யாரப்பா நீங்கள்?' என்று ஆச்சர்யம் மேலிட்டு ஆச்சாரியார் மனைவி அந்த அழகிய தெய்வீக சிறுவர்களை கேட்டாள்.

'குரு இல்லையா. அவருடைய சிஷ்யர்கள் நாங்கள். அவர் சொல்லி தான் இதெல்லாம் கொண்டுவந்தோம்''

'பகவானே இன்று என் கணவனுக்கு பட்டினி இல்லாமல் ஏதோ உணவு கொடுத்தாயே என்று சொல்லியவாறு பைகளுடன் குடிசைக்குள் போகுமுன்னே திரும்ப அந்த பையன்களை பார்த்தாள் சின்னவன் முதுகில் பெரிய கீறல். ரத்தம் ததும்பியது.

''ஐயோ பாவமே. எங்கே அடிபட்டது குழந்தை உனக்கு. யாராவது அடித்தார்களோ ?. ஏன் இவ்வளவு பெரிய காயம் கீறல் உன் முதுகில் .

''அம்மா உங்களுக்கு தெரியாதா? குரு தான் எங்களை படாத பாடு படுத்தி வேலை வாங்குவார். சொன்னபடி கேட்கவில்லை என்றால் கோபித்து அடிப்பார்''

''நம்ப முடியவில்லையே. அவர் அப்படி எல்லாம் கோபித்து அடிக்க மாட்டாரே!' . அந்த அம்மாள் அதிசயித்தாள் . பாவம் அந்த சின்ன பையன் முதுகில் குளிர்ச்சியாக சந்தனம் அப்பினாள். பையன்கள் சென்றார்கள்.

அர்ஜுனாசார்யர் ஸ்னானம் முடித்து வந்ததும் கோபமாக இருந்த அவர் மனைவி அவரிடம் பேசவில்லை.

''என்ன ஆச்சு உனக்கு. ஏன் ஏதோ கோபமாக இருக்கிறாய். என்னோடு முகம் கொடுத்து கூட சரியாக பேசவில்லை?''

''பின்னே என்ன, சின்ன குழந்தைகளை இப்படியா அடிப்பார்கள்?

''என்ன சொல்றே நீ?

அவள் விவரம் சொல்ல-- பொட்டில் பளீர் என்று அறைந்தாற்போல் இருந்தது அர்ஜுனாசார்யாருக்கு. ரெண்டு பையன்களும் கிருஷ்ணனும் பலராமனுமோ?

உள்ளே ஓடினார். பகவத் கீதை புஸ்தகத்தை புரட்டினார். அவர் அடித்திருந்த இடம் முன்பு போல் இருந்தது. அவர் கீறியதைக் காணோமே.

கதறினார் ஆச்சார்யர். ''ஆமாம் கிருஷ்ணா நீ சொன்னதை நான் தவறு என எண்ணினேனே. நீ சொன்ன அந்த ''யோகக்ஷேமம் வஹாம்யஹம்'' சர்வ நிச்சயம். சாஸ்வதமான உண்மையான உன் வார்த்தையல்லவோ. ஒரு பக்தனைத்தேடி வந்து பாதுகாத்தவனே. என்னை மன்னித்துவிடு. உன்னைச் சரணடைகிறேன்.

'சுவாமி நான் துர்பாக்யசாலி அந்த புருஷோத்தமனையும் பலராமனையும் நேருக்கு நேர் தரிசித்தவள்அவர்களை அறிந்து கொள்ளவில்லையே'' என்று அழுதாள் அவர் மனைவி.

''எனக்கு புத்தி தெரிந்துவிட்டது. கிருஷ்ணன் வேறு கீதை வேறு அல்ல. கீதையில் அவன் வாசகத்தை அடித்தது அவனையே அடித்தது என புரிந்துகொண்டேன்'' அவன் லோக சம்ரக்ஷகன். பக்தவத்சலன்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...